78: காலத்தூண்
விண்மீன்களின் முதல் விழிகள் ஒரு இமைப்பிற்குள் பல்லாயிரமென வானைச் சுடர்த்தன. விண்யாழி ஒவ்வொரு விண்மீனும் விழிப்பதைக் குழந்தைக் கண்களால் நோக்குபவளென வியப்புக் கொண்டிருந்தாள். முதல் நாள் களிவிழவை செருக்களத்தில் வித்தான மாவீரர்கள் விண்மீன்களாய் விழிகொண்டு நோக்குவர் என்பது குடி நம்பிக்கை. அன்று வானில் கோடிகோடியாய் விண்மீன்கள் துள்ளிப் பெருகும் என்பதை சிற்றிளமை முதலே அறிவாள் விண்யாழி.
நீலழகனை நேர்நோக்கிக் காண்பதென்பது ஒவ்வொரு புலி வீரருக்கும் மீண்டும் மண்ணில் பிறப்பதென்றாகும் என்பது இளவீரர்கள் சொல். விண்யாழி நினைவாலய வாயிலை நோக்கி நிற்க மெளனம் ஒரு காற்றுத் திரையென உயர்ந்து பரந்து விரிந்து தொங்குவதைப் போல் தோன்றியது. எரிவிறகுகள் குவிக்கப்பட்டுத் தீவெளிச்சம் வனத்தைத் தழல்வண்ணம் கொண்டு மினுக்கியது. இலைகளும் மலர்களும் கரும்பாறைகளால் ஆன நடுகற்களும் தீவண்ணத்தை மேனிகளில் பூசிக் கொண்டு அனலுற்றன. அகல்கள் நடுங்கி முகிழ்த்திருந்தன. மூதன்னையொருத்தி நினைவாலய வாயிலின் அருகிருந்த நடுக்கல்லின் முன் உறைந்த மெழுகுச் சிலையெனத் தன் மகவின் பெயர் வடுவை அக்கருங்கல்லில் நோக்கியிருந்தாள்.
நீலழகன் வனத்தின் இருளிடை ஓசையற்று நகர்ந்திறங்கிய கரும்புலியென மேனி குவித்து விழியைத் தீச்சுடர் யானத்தை நோக்கி உறுத்து நடந்து வந்தான். நீலனின் காலடியின் பஞ்சடி ஓசை கேட்டு மூதன்னை விழியரண்டு தலை தூக்கி அவனை நோக்கினார். முற்றணிக்குள் மேனியை ஒடுக்கி விதிர்ப்பை அடக்கி விசைகொண்ட இளங்காற்றென நடந்தான் நீலன். அவனது மார்பில் குலைந்த ஆரங்கள் உரசுமொலி காற்றில் கேட்குமளவு அமைதி நினைவாலயத்தில் படர்ந்திருந்தது. நூற்றியெட்டு இசைக்கிண்ணங்கள் நினைவாலயத்தைச் சுற்றிலும் இசைப்பவர்களுடன் அமர்ந்திருந்தன. இரவையும் பகலையும் நெடுவாளால் கீறும் நாழிகை பிரிகணத்தில் மெல்லிய சுழல் வெண்நாதம் நினைவுச் சுழலுக்குள் இழுத்துச் செல்வதைப் போல் எழத் தொடங்கியது. மூதன்னை மேனியதிர மூச்செழுந்தாள். விழிகள் கொதியலைகளால் வழிந்தன. அவளருகில் நின்ற இளம் வீரன் அவள் எக்கணமும் எழுந்து விடக் கூடுமென உடலை ஒருக்கி அவளை நோக்கிக் குவித்தான். ஒவ்வொருமுறையும் நினைவு நாளில் எவரோ சிலர் தாங்கொணாச் சினத்துடன் வஞ்சமுற்ற நாகங்களெனச் சீறியெழுந்து நீலனை நோக்கிச் செல்வதுண்டு. அவனது தேகத்தை அங்கனம் எவரேனும் பற்றிக்கொண்டால் புலியின் வேட்டைப் பற்களில் சிக்கிய இரையெனப் பிடியை விலக்குவது கடினம். அதிலும் மூதன்னையர் அளவுக்குக் கொல்வெறியுடன் எழுபவர்களைத் தடுப்பதும் இயல்வதல்ல.
குங்கிலியம் எரிதழலின் மேல் இறைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
தீச்சுடர் யானத்தின் முன்னின்ற நீலனின் மேனியில் அவன் கையில் ஏந்தியிருந்த தீப்பந்தம் ஒரு மெய்ச்சொல் என மூசியெரிந்தது. மாண்டவர் ஒவ்வொருவரும் அவன் தேகத்தின் குருதியில் விளைந்தவர்கள். அவனது கனவால் விழி கொண்டவர்கள். அவனது சொல்லுக்கு வாழ்வை அளித்தவர்கள். மானுடரில் அன்னைக்கும் காதலிக்கும் மேலாக நீலனைக் காலத்தின் பொற்தேரில் தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கியக்கி அமர்த்தியவர்கள். துணியில் நெய்யூற்றி எரிவிறகுகள் துண்டங்களாக்கப்பட்டுக் குவிக்கப்பட்டிருந்த யானை வயிறு போன்ற விரிந்த யானத்தில் காற்று அறைந்து விலகியது. சுற்றிலும் நின்றிருப்பவர்களின் விழிகள் அவன் ஏற்றப் போகும் தீயின் துளிக்கணத் தொடுகைக்கென இமையாது திறந்திருந்தன. அவன் பொருட்டு நீத்தவர்களுக்கென அவன் தொட்டு அளிக்கும் தீ அவன் அவர்களுக்குச் சொல்லும் அவனது மறுசொல். எதன் பொருட்டு அவர்கள் உயிரீந்தார்களோ அதன் பொருட்டு ஓயாது போரிட்டுத் தீயில் தீயெனச் சேரும் வரை நிகழும் சடங்கு. இசைக்கிண்ணக் கோல் உருளும் ஒலி யானத்தைச் சுற்றுவது போல் உற்று நின்றான் நீலன்.
ஆடற் சித்தர் அங்கனம் அங்கு நின்றிருந்தவனில் அவர் மாசெனவும் குற்றமெனவும் சாற்றியவை அனைத்தும் உதிர எளிய மேனியுடன் எளியவன் ஒருவன் தாங்கமுடியாத பேரறச் சுமையுடன் வரலாற்றின் திரிகளை முற்றொருக்க முடியாத மானுடரின் பிழைகளுடன் பதைப்புடன் குற்ற உணர்வுடன் பரிவுடன் கண்ணீரும் சிந்த அனுமதியற்ற விழிகளுடன் கையில் தீப்பந்ததுடன் நிற்பதைக் கண்டார். அவரது அகம் இளம் புண்ணை நக்கும் நாயின் நா ஈரமெனக் கனிவு கொண்டிருந்தது.
எவரும் தன்னை நோக்கவில்லை என விழி கூர்ந்த பின் நிலவை நீலனின் கரத்திலிருந்த தீப்பந்தம் அவனது அகத்தைப் போலவே நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். எவருமறியா இரவுகளில் அவள் மட்டுமே அறிந்த நீலன் “எனது கனவென்பது எனது மட்டுமேயல்ல நிலவை. அது மாபெருங் குடிக்கனவு. ஆனால் என் சொல்கேட்டு எழுந்த ஒவ்வொருவருக்கும் என் முழுக் குருதியும் கொடுத்தாலும் தகும். எதன் பொருட்டு ஒருவர் இன்னொருவருக்கென இறத்தல் கூடும். நான் முறைமையான அரசனல்ல. ஊதியம் கொடுத்துப் பேணுபவனுமல்ல. கலகம் செய்பவன். எண்ணற்ற எதிரிகளின் முன் பலியாடுகளென அவர்களை இழுத்துச் செல்பவன். மடிவோம் எனத் தெரிந்தே நுழையும் போரில் எதன் பொருட்டு அவர்கள் நின்றார்களே ஆனாலும் அதன் ஒரு நுனி என்னையும் தொட்டுக்
கொண்டிருப்பதை அறிவேன். ஒவ்வொரு மரணமும் நான் அறியாத புதிய துக்கங்களை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி இன்று அரக்கு மலையடுக்கென எழுந்து நிற்கிறேன். குடிகளின் உளத்தில் நான் நின்றிருக்கும் உச்சியென்பது ஒவ்வொரு மாவீரரும் அளித்த தேகக்கொடையால் உண்டாகியது. என் வாழ்வில் பெருங்கொடையென நிகழ்ந்தது மானுட விடுதலை எனும் மாபெரும் அறைகூவலுக்குச் செவிகொடுக்கும் இதயங் கொண்ட இளையவர்களின் தோழமையே. போர் வென்று நாம் திரும்பிய நாளொன்றில் இரவில் புரவிகள் தளர்நடையுடன் சென்று கொண்டிருந்த வேளை ஒரு இளம் புலிவீரன் தோழர்களுடன் பாடிக்கொண்டிருந்த பாடலொன்று என்னில் அதுவரை இருந்த விலக்கத்தை அழித்து அவர்கள் நானே என உணர்த்தின. அவனது நாவில் அச்சொற்கள் அவ்வண்ணம் எழுந்தது காவியமானவர்கள் எங்கிருந்தோ எனக்குச் சொல்லிய சொற்கள் எனவே பொருளாகின.
‘மண்ணுக்கென்றா போனாய் சோதரனே.
இம்மண்ணுக்குள் நாம் உறங்கும் வரை நம் கனவுகள் துயிலாதே.
எங்கள் கதிரவன் மண்வந்த போதினில் துயர் நதிகள் வற்றின வற்றின காண்
எங்கள் பகலவன் பார்வந்த காற்றினில் மின்னல்கள் மின்னிய பொன்னொளி காண்
எங்கும் அவன் திருப்பெயர் சொல்லியழைத்திட
களக் கூற்றர்கள் ஆனோம் நாமே காண்
எங்கென்றும் உரை நம் அண்ணன் அவனென
எவருக்கும் உரை நம் தாதை அவனென
எண்ணும் பொழுதினில் தோன்றிடு தெய்வம்
கேட்ட கணத்தினில் அருளிடும்
தெய்வம்
வானில் நமக்கென மண்வந்த தெய்வம்
மானுடர் போற்றிடும் பேரறச் செல்வம்
பற்றிடு அவன் கழல் பற்றிடு தோழனே
முற்றிய வினைகள் அறுத்திடும் காலனை
காலத்தை வென்றிடும் கரிகால வேழனை”
அவனது சொல் பாணர்களின் மிகைச் சொற்கள் போலத் தோன்றுபவையே. எனினும் அவன் குரலில் துடித்த நம்பிக்கைக்கு ஈடாக என் சிரசைக் கொய்து அவன் பாதத்தில் வைக்க விழைந்தேன். நான் எளியவன் தோழனே. உன்னைப் போலவே சிறியவன். காலங்களை அளக்கும் விழிகள் எனக்கு அருளப்படவில்லை. தெய்வங்கள் எதுவும் என்னை மண் அனுப்பவில்லை. தெய்வமென்று எதுவும் இல்லையென்றான பின்னர் வாளெடுத்துப் போர்தொடுக்க விழைந்தவன் நான். காற்றில் அவன் சொற்கள் அலையலையாய் என்னைத் தொட்டன. வேறு எவரையோ பாடுகிறான் என எண்ணிக் கொண்டேன். நம் மீது சாற்றப்படும் புகழ்மொழியளவு நம் சித்தத்தை அழிக்கும் போதை எதுவுமில்லை என்பதை அறிவேன். அவனிடம் கூவிட எண்ணிய விழைவினை என்னுள் இருந்து எது தடுத்தது என அறியேன். பின்னர் என்னைப் புகழ்வதை நிறுத்துவதை வீரர்களுக்குக் கட்டாயமாக்கினேன். பாடல்களில் போர் வெற்றிகளையும் மடிந்த மாவீரர்களின் ஆற்றல்களையும் சொல்லாக்கச் சொன்னேன். ஆனாலும் என்னைக் குறித்து எழும் சொற்கள் குழந்தை மண்ணில் ஒழித்து வைக்கும் சிப்பிகளெனக் கரையெங்கும் என் பாதங்களைத் தொடுகின்றன. அவற்றை அள்ளியெடுத்து நான் சிறியோன் சிறியோன் எனக் கூவி அலைகளில் எறிந்திட விழைகிறேன். நானும் மடிந்து அவர்களுடன் நின்றிருக்கும் போதிலும் தோழனெனவே நின்றிருப்பேன். புன்னகைப்பேன். பாடல் பாடுவேன். நடனமாடுவேன். களிச்சிரிப்பில் மூழ்குவேன். மரணமே என்னை இச்சொற்களிலிருந்து என்னை விடுவித்து என் தோழர்களிடம் என்னைச் சேர்க்கும்” எனச் சொல்லிடும் சொற்கள் அவள் நினைவில் வரிவரியாய் ஓடின.
நீலன் களிகொண்டு பாடியோ ஆடியோ நிலவை கண்டதில்லை. நாணங் கொண்டவெனத் தோன்றிய நீலன் மெய்யிலேயே அகம் ஒடுங்கி ஒன்றென ஆகும் யோகம் கொள்பவன். அவன் எதனை மெய்யென்று எண்ணினானோ அது மட்டுமே அவனது யோகம். பாடல். ஆடல். களி. அனைத்தும். காதல் கூட அவனைத் தீண்ட முடியாத தொலைவில் நின்றிருப்பவன். நிலவை சிறு மூச்சசைவுகள் எழ நிலத்தை இருளில் நோக்கி நின்றாள்.
தமிழ்ச்செல்வன் மெல்ல நீலனின் அருகு சென்று “காலம்” என்றான். அச்சொல் நீலனில் எரிந்த நெருப்பில் பனிக்கட்டியென வீழ்ந்து கரைந்தது. ஒருகுளிர் அவனைத் தொட்டதென எண்ணியவன் கரங்கள் உணர்ச்சியற்றுத் தீச்சுடர் யானத்தில் தொட்டு எழுந்தது. மதர்த்து மூண்டது தீ. யானம் நீலனின் அடிவயிறென எரிந்தது. நினைவாலயத்தில் இரும்பாலான பனியெனப் படிந்திருந்த மெளனம் தீச்சுடர் ஒலியால் இளகியது. பெருகிய ஓலத்தால் உடைவுண்டது. சிந்திய கண்ணீரால் கருகிச் சாம்பலாகியது. விண்யாழி தீச்சுடர் யானத்தின் முன் கேவல்களும் ஒப்பாரிகளும் நினைவில் புரண்டெழுந்த பிலாக்கணங்களும் இசைக்கிண்ணங்கள் தலைசுற்றுமளவு சுற்றிச் சுழலப் பெருகிய உருகுகணத்தில் மேனியில் ஒரு இழை கூட அசையாது விழிவிரிந்த ஒற்றை நோக்கென நின்ற நீலழகனை நோக்கினாள். அத்தனையும் சென்று மோதும் காலத்தூண் என எண்ணினாள்.
அகம் அவனை மோதியது. பின் திரும்பியது. அவன் அவனல்ல எனக் கண்டு வந்து சொல்லியது. அவன் காலம். காலங்கள் தங்களைக் கரந்து வைத்துக் கொள்ளும் மானுடன். அறங்கள் தங்களை எரித்து மீண்டும் ஆக்கிக் கொள்ளும் சுடுகாடு. குடிகள் தோறும் நிகழும் காலன் எங்களில் நீலன் என எண்ணியவள் அவரை மட்டுமே நோக்கிய விழிகள் தீச்சுடர் நாவுகள் காற்றில் கலைவதென இருளிலும் நடுகல்லிலும் சக உடல்களிலும் பரவி நோக்கின. ஒன்றையொன்று ஆடிகளெனவும் நிலமெனவும் குகையெனவும் காட்டின. மானுடர் துயரங்கள் கூடிச் சேர்ந்து உருக்கொண்டு மாபெரும் சிதையாய் எரியும் போது துயரங்கள் தீவிழை பூச்சிகளெனவே அத்தீயுள் சென்று மடிய நேரும். விலக்கின்றி அனைத்துத் துயரும் விழுந்த பின்னரும் தழலில் ஆடிடும் தவிப்பே விடுதலை என எண்ணிக் கொண்டாள் இளம் புலி விண்யாழி. துருவீரனின் பெயர் செதுக்கியிருந்த நடுக்கல்லை மீள ஒருமுறை நோக்கினாள்.
இன்மணம் கொண்ட புகை காற்றை நிறைத்தது. மின்னல் விலகும் விரைவுடன் நினைவாலய வாயிலுக்குச் சென்ற நீலழகன் வெறித்த விழியுடன் அகல் நோக்கி நின்ற மூதன்னையின் முன் சென்று அவர் கால்களில் பெருமரம் வீழ்வது போல் சரிந்து விழுந்தான். எண்ணியிராச் செயலால் சுற்றி நின்றவர்கள் ஓரடி பின்னாலும் சிலர் ஈரடி முன்னாலும் வைத்து ஏது செய்வதென்றறியாது திகைத்தனர். தமிழ்ச்செல்வன் ஐந்தடி முன்வைத்து நீலனின் மேலே நிழல் விழும் தொலைவில் அவன் எழுவதற்காகக் காத்து நின்றான். மூதன்னை அவன் சிரசைத் தொட்டு “எழுக நீலா” என்றார். எழுந்தவன் முகத்தில் உணர்ச்சியென எதுவும் சிறுநெளிவெனவும் தோன்றவில்லை. மூதன்னை அவன் அகத்தில் நெளியும் ஆயிரமாயிரம் நெளிவுகளைக் கண்டவள் போல் அவன் தோளில் இருமுறை மெல்லத் தட்டி “எனக்கு ஒரு மகவு இன்னும் இருக்கிறான் என்பதை அறிவேன். நீ இங்கிருக்கிறாய் என்பதன் பொருட்டே அவன் என்னை நீங்கிப் போர் புகுந்தான். அத்தனை அன்னையருக்கும் ஒரு மகன் நீ. அத்தனை பேரும் உனக்குக் காவலாக இருப்போம். அஞ்சாதே மகனே. செல். சென்று பணி முற்றுக” என்றார். அங்கு நிகழ்வது எதுவென அறியாத விழிகளிடன் நின்றிருந்தவர்கள் பலரும் அதுவோர் நாடகத்தின் ஒத்திகையென எண்ணினர். அறிந்தவர்களென நின்றிருந்த சிலர் நீலன் விழுந்தது எவரிடம் என்பதையும் நீலனை எழுப்பியது எவரென்பதையும் அறிந்து அவனை அகலாதிருந்தனர். நீலன் எழுந்து எவரையும் நோக்காது பெருவீதியை நோக்கி நடந்தான். நினைவாலயம் கடந்து பெருவீதியை நெருங்கிக் கொண்டிருந்த போது குடித்திரளின் களியொலிகள் இருட்டை ஆர்த்தன. நீலனின் மார்பிலிருந்த நெடும்புண் இக்கணம் விழுந்த இளங் காயமென வலியற்றுத் தோன்றியது.