95: தணல் மலர்

95: தணல் மலர்

விழைவுகளில் நான் பெருங்களி எனச் சொல்லி குயில் போலச் சிரித்த விருபாசிகையில் புலரியின் பனி மேகத்தில் ஊறும் நீரெனத் திரண்டிருந்தது. கூந்தலின் இழைகள் மஞ்சம் போல மலர்கள் உதிர்ந்து தூங்கியது. இரவு எழுந்து மனை சென்று நடுநிசியின் பின்னர் திரும்பியிருந்தாள். தேகத்தில் களிமினுக்கு ஏறி முகத்தில் பிரகாசம் கூடியிருந்தாள். வேறுகாடருடனான பித்தாக்கும் புணர்ச்சிக்குப் பின் அவளது உடலில் ஒருமை கூடியிருந்தது. புலரி வரை பொன்னனுடன் சொல்லாடியும் துயின்றும் அயர்ந்திருந்தாள்.

வனப்பாதையின் ஊசி வழியெங்கும் பூக்களில் நீரிதழ்கள் விரிந்தவை போலத் தோன்றின. பொன்னன் தனது இருகரங்களுக்குள்ளும் அள்ள முடியாமல் திகைக்கும் செல்வத்தைப் போல அவள் முகத்தைப் பிடித்துக் கொண்டிருந்தான். “என் செல்வமே” என முனகினான். அவனது உதடுகளில் சொற்கள் மலரிதழ்ப் பனிபோல வழிவதைக் கண்ட விருபாசிகை சிரித்தாள். பற்கள் விரிந்த போது அதன் பளபளக்கும் கூர்மையை எண்ணியெண்ணி வியந்து கொண்டான். உறிஞ்சி முத்தமிட்டு “அமுதம்” என்றான்.

சொல்லாடி விவாதித்து தருக்கி வெறுத்து விரும்பி துயில் சேர்ந்து இருவரும் கிளைந்து கிடந்த பொற்தேரை விட்டு முற்புலரியில் இறங்கியவர்கள் பிரிய விரும்பாத காதலரைப் போல ஊசி வழிமுனையில் குத்தி நின்றார்கள். மரங்கள் ஒன்றையொன்று துன்னிய மாபெரும் தழையாடையென முன்நீண்டிருந்தன. விருபாசிகை நெடுந்தேக்கில் சாய்ந்து கொண்டாள்.

“உன்னை மீளவும் காண்பேனா யட்சியே” என்றான் பொன்னன். “பொன்னா. தெய்வம் அன்றாடம் தோன்றினால் பக்தர்கள் மதிப்பதில்லை” என்றாள் விருபாசிகை. அவளது முலைகள் கருந்துணியில் கிளர்ச்சி கொண்டு விரிந்திருந்ததை அவளே வியந்து கொண்டாள். பொன்னனின் தளிர்க்கருமை முகம் ஏங்குவது போல சோர்ந்திருந்தது. “நீ மெய்யாகவே எனைக் காண விழைகிறாயா பொன்னா. ஆடவர்கள் களிக்கும் கலவிக்குமே பெண்ணை நெருங்குகிறார்கள். காதல் ஒரு பொய்க் காரணம். நீ அஞ்சாது பகர்க. நான் ஆணை அறிவேன். அவனின் ஆழத்திருகள்களை அறிவேன்” என்றாள்.

“கலவி தான் வேண்டுமெனில் களிபெருக்கில் நான் ஏன் பொற்தேரில் துயில்கிறேன் தேவி. கலவி ஒரு மாயை. உடல்கள் ஆடிக் கொள்ளும் விளையாட்டு. ஆனால் மெய்யானது.

உன்னில் நான் காண்பது புதிரளிக்கும் கிளர்ச்சியை. அகம் தானாகவே கொள்ளும் பரவசத்தை. ஆழத்திருளை அறிபவள் முன் ஆண் ஒரு பாவை அல்லவா. உன் கரங்களில் பாவையென என்னை ஏந்திக் கொள்வாயா” என்றான். காட்டின் பறவைகள் குரலெழுப்பி ஏற்றுக் கொள் ஏற்றுக் கொள் எனக் கூவுவதாய் மெய்ப்புக் கொண்டாள் விருபாசிகை. உந்திய சொல்லை உதட்டில் கரந்து கொண்டு “மெய்யாகவே நீ என்னை விழைகிறாய் எனில் இப்பொழுதே என்னுடன் என் மனைக்கு வரலாம். உன் பொழுதை என்னுடன் களிக்கலாம். அங்கிருக்கும் பேரழகிகளின் முன் நீ என்னை எப்படி நோக்குகிறாய் எனத் தான் பார்ப்போமே” என்றாள். சொல்லிய பின் மெல்லிய பதைபதைப்பு நெஞ்சில் எழுவதையும் அவனைப் பிறருக்குப் பகிர்வதில் எழுந்த வெறுப்பையும் கண்டு திகைத்தாள். அது அவள் முன்னறியாத கரத்தல். ஆடவரைப் பொருளெனவே எண்ணாத தன் அகம் அவனை ஒரு மந்தணமெனவும் தனக்கேயானவன் எனவும் சூடிக் கொள்வதை எண்ணிய போது அவளை அறியாத விசைகள் இழுத்துச் செல்வதைக் கண்டு சினந்தாள்.

“உன்னுடன் உடன் நடப்பதும் பொழுது வாழ்வதையும் அன்றிப் பொருள் கொண்ட செயலெதும் புடவியிலில்லை தேவி. உன் பாதங்களில் மலர்களாய் விழுவேன்” என்றான். “உணர்ச்சி மிகும் சொற்களால் பயனில்லை பொன்னா. உன் மெய்யை நானறிந்ததும் நீ சுருங்கி விடுவாய். புதிரை வெல்ல ஒரே வழி அவிழ்க்கவே முடியாத பெரும் புதிராய் நீ எழுவது மட்டுமே” எனச் சொல்லி உதடுகள் மேகங்களெனப் பிரியச் சிரித்தாள்.

மரங்களில் பசுமை பச்சைப் படிகமணிக்காடு என வனத்தை தோற்றியது. இளங் காலையொளி மேல் மரங்களில் செம்மஞ்சள் பூசியது. வானில் விரிந்தெழுந்த கிளைகள் வனத்தை ஒரு குகையென மாற்றியிருந்தது. பரத்தையர் இல்லம் செல்ல காட்டுக்குள் இப்படியொரு வழியிருப்பதை பொன்னன் வியந்து கொண்டான். மண்பாதை காலடித்தடங்கள் கலைந்து போய் கூந்தலெனக் கிடந்தது. விருபாசிகை காலில் அளையும் புற்களின் குளிர்முத்தங்களுக்குப் பாதத்தைக் கொடுத்தபடி இளம் மான்குட்டியின் ஆடலைப் போன்ற நடையில் முன் சென்றாள். விளை பிருஷ்டங்கள் பெரும் பாலச் சதைகள் போல விம்மின. சதையைக் கடித்து விழுங்கி நாவால் அளைவதை எண்ணிய பொன்னன் மேனியில் மின்னல்களின் சிரிப்பொலிகள் கேட்டு அதை நோக்கியிருந்தான்.

விருபாசிகை திரும்பி அவனை நோக்கவேயில்லை. பின்வருபவனின் காலடி ஓசைகள் மட்டுமே அவன் இருப்பு என எண்ணியவள் போல விரைந்தாள். மனையின் பின்வாசலில் நீர்க்கலயங்கள் முழுது நிறைந்திருந்தன. விருபாசிகை ஆடையைக் கொடிபோன்ற நீண்ட கயிற்றில் போட்டுக் கொண்டு மெய்மேனியுடன் நீரை அள்ளி ஊற்றி மேனியில் சிலிர்ப்பெழ நீர்வடியும் முகத்துடன் பொன்னனை நோக்கினாள். பொன்னன் அருகிருந்த வேப்பமரத்தில் தூங்கிய கிளையொன்றிலிருந்து வேப்பங்கழியொன்றை முறித்து பல்துலக்கினான். விருபாசிகை ஆடையைச் சுற்றியபடி மனைக்குள் செல்ல தானும் நீராடிய பின் ஆடையால் உடலைத் துடைத்து மீண்டும் அணிந்து கொண்டான். அவனது செவிக்குண்டலங்களில் நீர்வழிந்து குமிழ்ந்திருந்தது. தலையைப் பறவைச் சிறகென உதறிக் கொண்டு உள்ளே நுழைந்தான் பொன்னன்.

வேறுகாடார் மஞ்சமொன்றில் பாறையில் அகப்பட்டவர் போல விரிந்த கைகளுடன் மார்புகள் அழுத்தி விரிந்து கொள்ள துயின்றிருந்தார். அவரின் அருகில் முத்தினியும் செழியையும் அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தனர். முத்தினியின் முகம் எவருடனோ சினப்பதைப் போன்று சுருங்கி நீண்டிருந்தது. அவளின் மேலுதட்டு மயிர்கள் மினுக்குடன் ஒளிர்ந்தன. செழியை தலையணையை மார்புகளால் அணைத்தபடி இனிய முத்தம் பெறப்போகும் முன்கணம் போல முகத்தில் தவிப்புடன் துயின்று கொண்டிருந்தாள்.

பதும்மை தனது அறையில் மஞ்சத்தில் விரிந்த மலர்போல கைகளையும் கால்களையும் விரித்தபடி மெய்மேனியில் அயர்ந்திருந்தாள். சற்றைக்கு முன் எரிந்த தீயிலையின் புகை அறையில் கமழ்ந்து கொண்டிருந்தது. அங்கினி அன்னக் கொத்து விளக்குகள் எரியும் மஞ்சத்தில் மேனியை இடப்புறம் சாய்த்து சுவரை நோக்கி அழுத்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். விருபாசிகை யானைத் துதியில் தேவ இலை மலர்களை அடைந்து கொண்டு அன்னக் கொத்தில் எரிந்த சுடரில் எரியேற்றிக் கொண்டு நடந்து சென்று வடக்கு மூலையில் அமைந்த சிற்றறை மஞ்சத்தின் குலைவுகளில் படுத்தாள். பொன்னன் அவளருகே சென்று அமர்ந்தபடி இல்லத்தை நோக்கினான். முதிய பெண்கள் இருவர் ஓலைப் பாய்களில் துயிலிலிருந்தனர். முன் திண்ணையில் சிலர் சொல்லாடும் ஒலி மெல்லிய ஓசையில் கேட்டது. அவர்கள் வேறு மொழியில் பேசும் ஒலிகள் நிலக்கிளிகள் பேசிக்கொள்வதைப் போல என எண்ணினான் பொன்னன். சாளரத்தினாள் ஒளித்தண்டுகள் நீண்டபடியிருந்தன.

இளம் பாணன் தேகத்தில் வியர்வை ததும்ப வாயிலில் நுழந்து நடுமுற்றத்தை நோக்கினான். நூர்ந்த விளக்குளின் புகையிடை தீயிலைத் துதிப்புகை வரும் திசை கண்டான். விருபாசிகையின் கரத்திலிருப்பது யானைத் துதியென நோக்கியவன் அவளிடம் சென்று அதைக் கொடுக்குமாறு கேட்டான். விருபாசிகை அருகமரச் சொல்லிய பின் “நீங்கள் யார்” எனக் கேட்டாள். “நான் தென்னகத்துப் பாணன். வேறுகாடாரின் நண்பன். பதும்மையை அறிவேன்” என்றான். அவனது குரலிலிருந்த களைப்பை நோக்கியவள் நீர்க்குவளையை நீட்டினாள். விடாய் தீரும் வரை நீரை அருந்திய பின் இளம் பாணனின் முகத்தில் புன்னகை விரிந்தது. விருபாசிகை அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

“தென்னகத்திலிருந்தா வருகிறீர்கள்” என்றான் பொன்னன். “ஓம். இருதினங்கள் ஆகின்றது. நான் ஒரு பரதேசி” என்றான் இளம் பாணன். விருபாசிகையின் கருந்துணியில் ஈரம் படர்ந்து முலைகள் வெண்ணையால் மூடிய குவிமாடம் எனத் தோன்றியது. இளம் பாணனின் புன்னகை ஒளியுடன் இருப்பதாய் எண்ணிய விருபாசிகை “பதும்மையை நீங்கள் எங்கனம் அறிவீர்கள் பாணரே” என்றாள். “நேற்றைய தினம் அவரை நான் சந்தித்து சிறுபொழுது உரையாடினேன். இனியவர்” என்றான். “ஓம். அவள் இனியவள் தான். களியை நன்கு நோக்கினீர்களா. இளம் மீன்கள் எதுவும் உங்கள் சொல் வலையில் அகப்பட்டதா” எனச் சொல்லி கண்சிமிட்டிச் சிரித்தாள். அவளின் தேகத்தில் சுடரும் எழிலாட்டத்தை விழிமலர்ந்து நோக்கிய இளம் பாணன் “நான் எளியவன். எனது வலைகளில் பாசிகளே சிக்கும். எனது சொற்கள் புடவியில் பேரழகு கொண்டிருக்கும் பெண்ணின் முன்னேயே தங்களைத் தாங்களே படைக்கலனென ஏந்தி வெளிவரும்” என்றான்.

இளம் பாணனின் சொல்லாடல் வல்லமையை நோக்கிய பொன்னனின் அகத்தில் மெல்லிய பொறாமையின் நகங்கள் விறாண்டும் வலியெழுந்தது. காதல் கொண்ட பெண்ணின் முன் தோன்றும் நுண்மை கொண்ட ஆடவர்களை அஞ்சாத வெறுக்காத ஆண்கள் உண்டா என எண்ணிக் கொண்டான் பொன்னன். அவர்களிருவரின் நோக்கொருமையைச் சொல்லெறிந்து குழப்ப எண்ணியவன் “நான் ஒரு சிற்பி. படினத்தின் மூத்த சிற்பாசிரியர் மங்கலச் செல்வரின் கல்விச்சாலையைச் சேர்ந்தவன்” என அறிமுகம் செய்து கொண்டான் பொன்னன். விருபாசிகை உள்ளில் அவன் எண்ணத்தில் கால்பட்டவள் போல சிரித்துக் கொண்டு இளம் பாணனின் அருகுக்கு அசைந்து நகர்ந்து அமர்ந்து கொண்டு துதியை நீட்டினாள். இளம் பாணன் உளம் வேய்குழலின் இனிமையென உருக அவளது விரல்கள் ஏந்திய தணல் மலரை வாங்கினான். இழுத்துப் புகையை ஊதிய போது குங்கிலியத்தில் புகைந்து கரையும் தெய்வச் சிலையென அமர்ந்து புகையிருந்தாள் விருபாசிகை. பொன்னன் தானும் என கையை நீட்டினான். இளம் பாணன் விருபாசிகையை நோக்கியபடி துதியை பொன்னனிடம் நீட்டினான். அவன் அங்கு ஒரு பொருட்டே இல்லையா என எண்ணிய போது சிறுமை கொண்டு உளக்குளம் கலங்கி விம்மல் கொண்டது. மெல்லிய இழப்பின் வலி எத்தனை இனியது என எண்ணிக் கொண்டான்.

அவளை அங்கேயே விட்டுவிட்டு எழுந்து சென்று விட வேண்டுமென எண்ணினான். அவளின் முன் வேறொரு பெண்ணை மடியிருத்தி அவளை எரிதீயில் கனன்றெரியக் கைவிடுவதாக கற்பனை செய்தான். அவளின் முன்னே இருபெண்களிடம் மடியில் தலையையும் மார்பில் கால்களையும் வைத்துத் துயில வேண்டும் எனச் சொல்லிக் கொண்டான். இளம் பாணனும் அவளும் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போது விழிகளில் நீர்பெருக மேனி நடுங்கி அவள் முன்னேயே மயங்கி விழ எண்ணினான். அவளது முலைகளை அருந்தும் போது இளம் பாணன் வெறிகொண்டு கடித்து அவள் அவனை எண்ணியதற்காக கசந்து கொண்டு தன்னை நோக்கி இறைஞ்சுவதாக எண்ணினான். அவனுள் வெறுப்பின் காட்டெரி மூண்டு தழன்றது.

விருபாசிகை “இவரும் கவிபோலத் தான் பாணரே. நிறையச் சொல்லாடுவார்” என பொன்னனைக் காட்டினாள் விருபாசிகை. அவனது முகத்தைப் பார்த்த இளம் பாணன் எளிய பூச்சியைப் பார்ப்பது போல நோக்குகிறான் என எண்ணினான். எத்தனை இருளிலிருந்து ஒலியெழுப்பினாலும் தன் இருப்பை அதிர்வால் காட்டும் பெருங்கல மணியென இருவருக்கிடையிலும் அமர்ந்திருந்தாள் விருபாசிகை. அவளது இருப்பில் இரண்டு துலாத் தட்டுகளென அமர்ந்திருந்தார்கள் பொன்னனும் இளம் பாணனும்.

பொன்னன் தனது முகத்தை இரக்கத்திற்குரியவன் போல அமைத்துக் கொண்டான். மிகைத் துயரில் கைவிடப்பட்ட எளிய ஆடவனெனத் தன்னைத் தானே எண்ணிக் கொண்டு சோகத்தை விரித்துக் கொண்டான். அவனது சொற்கள் தத்துவச் சொல்லாடலின் பாவனையுடன் ஒலிகொண்டிருந்தது. தருக்கங்கள் வாழ்வின் இன்மை குறித்தும் இருப்பினால் உண்டாகும் துயர் பற்றியும் மோதிக் கொண்டன. புத்த துறவிகளின் இனிய சாந்தமான புன்னகையை உதட்டில் அணிந்து கொண்டான்.

இளம் பாணன் ஒவ்வொரு கணமும் அழல் பொலியும் தேகம் கொண்டு விரிந்து கொண்டிருப்பவன் போலத் தோன்றினான். கருமை இங்கனம் சுடர்ந்து அழகொருமை கொள்ளுமா என அவனுக்குள் எழுந்த சிற்பியொருவன் கூவினான். எந்த உலகோத்தில் வார்க்கப்பட்ட கருமை அவன். எந்தக் குழைவில் அவன் வார்க்கப்பட்டான். எந்தத் தொல் ஆலயத்தில் உறைந்திருந்தவன் மானுடனென எழுந்து வந்தான். அவன் சொல்லெடுக்காத போதும் முகம் சோதியுற்றிருபது ஏன். அவன் அகம் எதைக் கொண்டு தன்னை மலர்த்துகிறது. சூர்ப்பனகையென அமர்ந்திருக்கும் விருபாசிகை தேகமென விழைவு கொண்டால் தேர்ந்து கொள்ளும் சிலை அவனே. அவள் அணிந்து கொள்ள இழைத்த ஆபரணம்.

விருபாசிகை இளம் பாணனுடன் சொல்லாடத் தொடங்கிய போது பொன்னன் மஞ்சத்தின் விளிம்பு வரை உடல் சாய்த்து படுத்துக் கொண்டான். ஒருபக்கம் எடை குவிந்த துலாக்கம்பென விழுந்திருந்தது அவனது மேனி. இளம் பாணன் கூர்மையான அம்பு நுனிகளை நோக்குவது போல விழிகொண்டு அவளை நோக்கியிருந்தான். விருபாசிகை கனவில் திளைப்பவளென முகம் நிறைய மகிழ்ச்சி பரவச் சொல்லாடினாள். பொன்னனுடன் உரையாடிய போது அவளிலிருந்த விலக்கமும் தொலைவும் கால் நாழிகையில் எப்படி தென்னகப் பாணனிடம் கரைந்தது. எந்தக் கரவு வழியால் அவளை நெருங்கினான். ஒரு கதையிருந்தால் அவன் தலையை அறைந்தே கொல்ல வேண்டுமென எண்ணிக் கொண்டான் பொன்னன். தன்னுள் எரியும் கனல் விழிகளில் தெரிகிறதென எண்ணியவன் விருபாசிகை சிறு அசைவும் திரும்பாமல் இளம் பாணனது இருப்பில் வேர்கொண்ட செடியென விழியூன்றியிருந்தாள். அவளை நொறுக்கும் ஒரு சொல்லைச் சொல்லி தென்னகப் பாணன் அங்கிருந்து சென்று விட வேண்டும். அவள் அழுது புலம்புவதை. சினம் கொண்டு விழி தாழ்த்துவதை. தன்னை நோக்க அஞ்சி விலகிக் கொள்வதை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இளம் பாணன் தனது பயணங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான். வேறுகாடரைச் சந்தித்த முதல் நிகழ்வை உணர்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டிருந்தான். அன்று நிகழவிருந்த கொலை வேறுகாடாராலேயே தடைப்பட்டது என்றான். சினமென்று வந்து விட்டால் நான் அடங்காத புலியெனச் சொல்லிச் சிரித்தான். விருபாசிகை கெஞ்சல் குரலில் “களியிரவைச் சொல்லால் பாடுவீரா” எனக் கேட்டாள்.

“தெய்வம் வரங் கேட்டால் பக்தன் என்ன செய்வான்” எனச் சொல்லி நாணமுற்றவன் போல பாவனை காட்டினான். இருவரது கொஞ்சல்களும் உலவிய காற்றை நச்சுப் பரவுகிறதென எண்ணி சுவாசிக்காது மூச்சை அடக்கிக் கொண்டான் பொன்னன். இளம் பாணன் எழுந்து நடந்து காட்டி வேடிக்கைக் கதை சொல்லிச் சிரித்தான். எழுந்து அவனை உதைந்தால் என்ன என எண்ணிய பொன்னன் எழுந்தமர்ந்தான். விருபாசிகை இளம் பாணனை நோக்கியபடி பொன்னனிடம் கை நீட்டினாள். எதற்கென்று அறியாமல் அசையாதிருந்தவனைத் திரும்பி நோக்கி துதியை விழியால் காட்டினாள். துதியை நீட்டியவன் வஞ்சமுள்ள புன்னகையொன்றை வீசிய போது அதை நோக்காமலேயே துதியை வாங்கிக் கொண்டு திரும்பினாள் விருபாசிகை. வலி மேல் வலியெழ எழுந்து ஊழ்கத்தில் அமர்பவன் போல உடலொருக்கி அமைந்து கொண்டான். புருவங்களில் இழுத்துக் கட்டிய ஊஞ்சலென விழிகள் ஆடிக்கொண்டிருந்தன. முன்னும் பின்னுமென.

விருபாசிகை இளம் பாணனை நோக்கிச் சொல்லிய சொற்கள் அழையாத விருந்தாளிகளென பொன்னனின் காதுகளில் நுழைந்தன. இளம் பாணனின் மறுமொழிகள் கூத்தின் நடுவில் கேளிக்கைப் பாத்திரமொன்று அவையைச் சிரிக்க வைக்கவென எடுத்திடும் நுண்பாவனைகள் கொண்டிருந்தது. இரண்டு தேர்ந்த கூத்தர்களின் ஆடலின் முன் செய்வதறியாது விழிதிறந்திருக்கும் மழலையெனத் தன்னை எண்ணிக் கொண்டான்.

ஆண் இன்னொரு ஆணை இவ்வளவு வெறுத்துக் கொள்வதுண்டா. வஞ்சமும் வெறுப்பும் பெண்ணின் அணிகலன்களென்றே பொன்னன் எண்ணியிருந்தான். இளம் பாணன் புன்னகை மாறாத உதடுகளில் ஓங்கிக் குத்தி குருதி சீறுவதைப் பார்க்க எண்ணினான். புலிப்படை வீரர்கள் வந்து இளம் பாணனைப் பிடிகாப்பிட்டுக் கழுவேற்ற இழுத்துச் செல்கிறார்கள் எனக் கற்பனையில் கண்ட போது உளம் ஆறுதலடைந்து வந்தது. கனவில் கொல்லப்படும் எதிரியின் குருதி கால்களில் வழிந்து மன்னிப்புக் கேட்பதென.

விருபாசிகை எதிர்க்காற்றில் ஊதிய படகின் பாயென வளைந்து படபடத்துக் கொண்டிருந்தாள். பொன்னன் எழுந்து நடந்து தீயிலையை வாங்கிக் கொண்டு இளம் பாணனை நோக்கிச் சொல்லெடுத்தான். “பாணரே. நீங்கள் காவியங்கள் கற்றவரா” என்றான். போரில் நுழைந்த ஆட்டக்கரானென எண்ணிய விருபாசிகை அவனை நோக்கிச் சிரித்தாள். இளம் பாணன் தோழமையான குரலுடன் “ஓம். சிற்பியே. ஆனால் காவியங்களை முறையாகப் பயின்று முடிக்கவில்லை. கல்விச் சாலைகளில் ஆசிரியர்களுடன் மற்போர் புரிந்தே என் காலங்கள் ஓடிவிட்டன. தெருக்களே எனது கல்விச்சாலை. மானுடரே நான் வாசிக்கும் காவியத்தின் வரிகள்” என்றான். “நல்லது. பல களங்கள் கண்டவராயிருப்பீர்கள்”எனச் சொல்லிக் குறும்பான புன்னகையை விரித்தான். அவன் நாவில் ஒரு நச்சுப் புழு துடித்தெழுந்தது.

“களங்கள் பலதுண்டல்லவா சிற்பி. அனைத்திலும் கொஞ்சமேனும் வெல்லாதவன் பாணனாக இயலுமா. ஒவ்வொரு ஆற்றிலும் கால் நனைக்கும் துறவியென வாழ வேண்டியவர்கள். சிற்பிகளைப் போல கல்லுடன் அல்ல. சொல்லுடன் வாழ்கிறோம். சொல்லென்பது எழுந்து விட்ட தெய்வம். அதை ஆடியே அடக்க வேண்டும். கல்லென்பது ஒழிந்திருக்கும் அறியாததொன்று. அது எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். பிறந்திருக்காத தெய்வமொன்றைக் கனவு காண்பதைப் போல” என்றான் இளம் பாணன்.

சிறுமை எந்த கலைஞரிலும் உண்டாக்கும் அழலெழுந்த பொன்னன் தன் வஞ்சத்தைக் கலைக்கெனத் திரட்டிக் கொண்டு எழுந்தான். “பாணர்கள் போல நெறியற்ற பரதேசிகள் அல்ல சிற்பிகள். அவர்கள் நெறியின் ஒவ்வொரு உளியாலும் ஒருக்கப்பட்டவர்கள். பாணர்கள் கள்ளும் தீயிலையும் கொண்டு செல்லும் ஊரெல்லாம் பெண்டிருடன் களியாடி புகழ்ச்சொற்கள் பேசி மயக்கி இனிய வகைப் பிச்சை எடுத்து வாழ்பவர்கள். பொய்க்கு அளிக்கும் தானத்தை நம்பி வாழ்பவர்கள் நெறியில் முளைத்துத் தழைத்து விரிந்திருக்கும் பெருங்கல் மரமென நின்றிருக்கும் சிற்பியர் குடியை அறிய இயலாது. போதையுற்றவனின் விழிகளுக்கு சேறும் தேனும் ஒன்று” எனச் சொன்னான் பொன்னன். சினம் பொறியெழுந்த இளம் பாணன் “நாங்கள் பிச்சைக்காரர்கள் தான். துறவியைப் போல. நாங்கள் பரதேசிகள் தான் காற்றைப் போல. நாங்கள் நெறியற்றவர்கள் தான் தெய்வங்களைப் போல” எனக் கூவினான். சொற்களின் ஒலிகள் தீயுருட்டும் கற்களென மோதிக்கொள்ள வேறுகாடார் துயில் நீத்தார்.

பொன்னனையும் இளம் பாணனையும் எதிரெதிர் கண்ட போது விழிகள் கலங்கிக் கொள்ளச் சிரிக்கத் தொடங்கினார். முரசுக்குள் இடியோசையென மனைச்சுவர்களில் புரண்டு எழுந்தது வேறுகாடாரின் சிரிப்பொலிகள். இருவரும் அவரை நோக்கினர். கலைந்த குழலை அள்ளிப் பின்னிட்டபடி முகத்தை வெறுங்கையால் துடைத்துக் கொண்டு எழுந்தார் வேறுகாடார். விருபாசிகை பின் சாய்ந்து கொண்டு தீயிலை புகைக்கத் தொடங்கினாள்.

“கலைஞர்களுக்கிடையில் புலரியிலேயே போரா” என உரக்கச் சொன்னார். இளம் பாணன் வெறுப்புடன் கரங்களை உதறிக்கொண்டு “இவன் தான் என்னுடன் சண்டைக்கு வருகிறான்” என முறையிடுபவன் போலச் சொன்னான். பொன்னன் வேறுகாடரை நோக்கி “இல்லை மூத்தவரே. சிற்பிகளை இழிவாகப் பேசியவன் இவன் தான். பாணர்களே உயர்ந்தவர்கள் என்ற மிதப்புக் கொண்டிருக்கிறான். உளியால் இவன் நாவில் ஒரு சொல்லைக் குற்றாமல் நான் இங்கிருந்து செல்லப் போவதில்லை” என்றான் பொன்னன். இளம் பாணன் தனது தோள்களை அசைத்துக் கொண்டு மற்போருக்குத் தயாராகும் இளவீரனென முறுக்கிக் கொண்டான்

வேறுகாடார் எழுந்து தன் இடையாடையைக் காற்றில் ஒருமுறை சிலுப்பி கட்டிக் கொண்டார். அவரது ஆண்குறி செவ்வாழைப் பழமென நீண்டிருந்து திரைச்சீலைக்கு அப்பால் எரியும் அகலொளியென மின்னி மறைந்தது. சிரித்துக் கொண்டே தன் குழலை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டார். வெண்பந்தெனப் பின்சிரசில் கொண்டை அமைந்து கொண்ட போது அவரது தேகம் புலரியில் அவிழ்ந்த முதற் தழலென ஒளிவீசியது. கூகை விழிகளில் கனலும் வேட்கை எப்பொழுதுமென விரிந்து கொண்டிருந்தது. இருவருக்குமிடையில் நுழைந்து விருபாசிகையின் அருகில் ஒட்டிக் கொண்டு அமர்ந்த வேறுகாடார் அவளின் தோளில் கரத்தை தலையெணப் பின்வைக்க அவரில் சாய்ந்து கொண்டாள். இளம் பாணனும் பொன்னனும் தொடங்கிய போரில் பிறிதொரு நாட்டு மன்னன் நுழைந்து அரசியை மடியில் சாய்த்துக் கொண்டு இருவரின் போரையும் நோக்குகிறான் என்பது போல சினம் கொண்டார்கள். பொன்னன் சொற்களை ஏரியில் எறிந்த கல்லென அமிழ்த்திக் கொண்டான். இளம் பாணன் நாகமொன்று அவனிடையை வளைத்து ஏறி முதுகில் ஊர்ந்து கழுத்தில் நாவுகளால் தொட்டு நக்குகிறதென எண்ணிக் கொண்டான்.

வேறுகாடார் புகையை இழுத்து ஊதிக்கொண்டு விருபாசிகை சாய்ந்த கரத்தில் துதியை வைத்தபடி இருவரையும் நோக்கிப் புன்னகைத்தார். வஞ்சம் கொண்ட ஆண்களை வெல்பவன் சூடுவது மிதப்பின் கர்வமென எண்ணிக் கொண்டான் பொன்னன். ஆசிரியரிடம் தோல்வியுற்ற மாணவனென அவனது அகம் சுண்டியது. மறுகணம் அவரை அறிந்த அவனது அகம் வெல்வது இயலாதென்றறிந்து தணிந்து கொண்டது.

இளம் பாணன் இடையில் கையூன்றியபடி நடந்து சென்று பொன்னனின் அருகில் அமர்ந்து கொண்டான். புயல் வந்த போது கிளையில் ஒண்டிய இருபறவைகளென காற்றின் விசையில் உள்ளாடிக் கொண்டிருந்தனர். விருபாசிகை வேறுகாடாரின் தோளில் தோகையென விரிந்து துயில்வது போல விழிமூடிக் கொண்டாள். மூச்சில் நறுமணம் எழும் தேவி.

TAGS
Share This