தடங்கல்

தடங்கல்

எனது இணையத்தளம் சில நாட்களாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இயங்கவில்லை. இந்த நாட்களில் எழுதுவதும் நாளொன்றுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. எழுதியதைத் திரும்பத் திரும்பச் செப்பனிட்டுக் கொண்டிருந்தன விரல்கள். அம்பலம் ஏற முடியாத கூத்தனைப் போல தனித்து நடித்துக் கொண்டு ஆடியில் தன்னுருவைத் தானே அழிப்பது போலிருந்தது. மேலும் தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் எவர் என்பதும் அறியக் கிடைத்தது. மொத்தமாகவே மூவரே தளமின்மையைக் கண்டு மடல் அனுப்பினார்கள். அவர்கள் என்னுடைய  நெருங்கிய நண்பர்கள். அது ஒரு வகை அயர்ச்சியையும் பின்னர் எண்ணிப் பார்க்கையில் எவரை எண்ணி எழுதுவது என்ற வியப்பையும் உண்டாக்கியது. மெய்யாகவே இங்கு வாசகர்கள் இல்லை என்பதை மாதமொருமுறை தவறாது நம் சூழல் விளக்கினாலும் நிரூபித்தாலும் ஆழத்தகத்தில் நலுங்கும் நீர்க்குழியொன்று அப்படி அல்ல. எங்கோ எவரோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என அசரீரி போல ஒலிக்கும். அந்த அசரீரியை எப்பொழுதும் நம்பும் எளிய உளம் வாய்ப்பதாக.

தற்போது மீளவும் தளம் சரிசெய்யப்பட்டிருக்கிறது. குலைந்த நூல்களைக் கையில் ஏந்தியிருக்கும் குழந்தையென அகம் சொற்களை வைத்திருக்கிறது. நாளை முதல் தொடரும் ஊழ்கம் அங்கனமே நிகழும். இக்காலத்தை ஊழ் அளித்த ஓய்வும் குலைவுமாக எண்ணிக் கொள்கிறேன். தொடர்ந்து நாவலை வாசித்து உங்கள் அபிப்பிராயங்களை எழுதி மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

பிழையுறாத நோன்பு முனிவர்களுக்கு மட்டுமே. கலைஞர்களுக்கு அல்ல. பிழையின் மூலம் கற்பதே கலைப் பயிற்சி. நோன்பு தொடரும். வழமை போல ஆசிரியரின் அகம் பணிந்து செயல் திகழ்க.

மின்னஞ்சல் : kirishanth300@gmail.com

TAGS
Share This