113: ஒருகணம் : 02

113: ஒருகணம் : 02

அக்கணத்தில் விழி திறந்திட்ட உருக்கு வாள் முனை போன்ற விழிகளால் சுழல் விழி இளம் பாணனை எண்ணிக் கொண்டாள். அவனது இளம் புரவிக் குழலும் சிறுவனின் அகங்காரம் கொண்ட விழிமணிகளும் அகன்ற மார்புகளில் தேக்கின் மதர்ப்பும் கூடியிருந்தது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அலைந்தபடி அங்கு இங்கென்றில்லாது நாகங்கள் தன்னை நோக்கிக் கல்லுறை பிரிந்து எழ முயற்சிப்பவை போல அசைகின்றன என மயக்குக் கொண்டாள். முன்னை நாளிரவில் அவள் நோக்கிய ஆணுடல்கள் துண்டு துண்டுகளாகக் கழன்று ஒரு பேருருவென வெளியை நிறைத்து எழுந்து நிற்கிறதென உளமயக்குக் கொண்டாள். அந்தப் பேருருவிற்கு இளம் பாணனின் முகமிருந்தது. அதன் நிழலுக்கு காலங்களை அளக்கும் துணியின் நீளமிருந்தது. அவளது சுழல் விழிகளும் அலைக் கூந்தலும் அவன் அவன் என விம்மின. இளமழையின் காற்று ஆடையைத் தொட்டு தீயில் உரசுவது போல நெளிந்து விலகியது. அவளது அகம் இன்னதென்று பிடிபடாத கனவில் துயில் நீங்க மறுத்து அடங் கொண்டதென காலத்திற்கும் காலமின்மைக்கும் இடையில் சுழற் கூந்தலில் ஒரு மலரென ஆடியது.

தங்கிட தத்தர் வாயில் சொற்களை முணுமுணுத்துக் கொண்டு பணிச்சிறுவர்களுக்கு ஆலயத்தை ஒருக்கும் முறைகளைக் கூவிக்கொண்டிருந்தார். அலைதிரும்பிய மணற் கரையென ஆலயம் தூய்மையாகிக் கொண்டிருந்தது. காரின் இருள் மயக்கில் அகற் சுடர்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தன. புதிய நறுமலர்களும் குங்கிலியப் புகையும் காற்றில் மசமசப்பூட்டித் தத்தரின் வெண்மயிர் மார்புகளைச் சிலிர்க்க வைத்தன. நாகதேவியின் முன்னே நின்ற தங்கிட தத்தர் அவளின் நுதலில் எரிந்தணைந்த ஊதா நிற ஒளியின் மினுக்கு கருவறையில் தளிரின் மென்னுடலில் ஒளியென வீசிக்கொண்டிருந்ததை நோக்கினார். ஒரு கணம் அவளில் மேல் வட்ட இடைவெளியின் ஊடாக வீழ்ந்த மழைச் சில்லுகள் வதனத்தில் ஒற்றி வழியத் தொடங்கிய போது அவ்வழகு கருங்கல்லில் மட்டுமே தோன்றும் நீரழகு என எண்ணிக் கொண்டார். அன்னையின் விழியில் நோக்கின்மையில் ஒளிரும் உவகையும் கசப்புமற்ற ஒன்று அவரின் அகத்தில் ஒரு ஊசியின் பின் இன்னொரு ஊசி இறங்குவதென நுழைந்து உறுத்தியது. ஆடற் சித்தர் சொன்ன சொற்களை அவரது செவிகள் மீண்டுமொருமுறை அச்சத்துடன் ஒலித்து மீட்டுக் கொண்டன.

*

மயக்குடன் நோக்கினால் மயக்கென்றும் மயக்கின்றி நோக்கினால் வெறுமையென்றும் தோன்றுவது மானுட தேகம் என எண்ணினார் ஆடற் சித்தர். ஆற்றின் தீரத்தில் பாறையில் அமர்ந்து ஊழ்கத்தில் அகத்தை ஒருக்க இயலாமல் இரவின் எண்ணங்கள் திரண்டு விரட்ட அகம் தீயில் அமர முடியாத ஈயென அலைவதை நோக்கியிருந்தார். எண்ணியெண்ணிப் பெருக்குவது காமம். எண்ணுவதின் ஊற்றும் அதுவே. இயல்வதும் இயலாததும் அதற்கு பொருட்டில்லை. இத்தனை காலம் ஊழ்கத்திலும் யோகத்திலும் போரிலும் உணர்ச்சிகளின் பேராழியிலும் மூழ்கடித்த தேகம் ஒருகணம் அங்கினியைத் தொட்ட போது உருகும் மின்னலின் தொடுகீற்றென ஒளிர்ந்து பரவியதை எதனைக் கொண்டு விளக்குவது. அகம் என்பது மறைக்கும் வரை நல்லதென்றும் துலங்குகையில் எத்திசையும் சுழலும் படையாழியென்றும் ஆகுவதா. மானுடக் காமம் அளிக்கப்பட்டவற்றுள் நஞ்சும் அமுதுமானதென உள்ளுறையும் கடலா தேகம். எம்மேதமையும் சென்று தொட்டுத் திரும்பும் எளிய மண் செடியா காமம். குனிந்து அதை நோக்கிப் புன்னகைக்கும் பேருருக் கொண்ட அகங்காரத்தைச் சின்னஞ் சிறு பூநுனியால் வெட்டித் துளைத்து உரக்கச் சிரிப்பது யார். அச்செடியின் சிறுமை அதை நோக்கி வரும் எப்பெரும் மேதமையையும் ஞானத்தையும் தன் சிறுமையால் அறிந்து கொள்கிறது. சிறுமைகளுக்குள்ள ஞானம் அதுவென எண்ணினார் ஆடற் சித்தர்.

*

இளமழை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருந்த புரவியின் மேல் பெய்து கொண்டிருந்தது. அதன் வெண்ணிறத் தோல் பட்டுத்துணியென உருகி ஊனில் வழிந்து தீயில் ஒழுகிக் கொண்டிருந்தது. விழிகள் மூடியபடி குழந்தையைப் போன்று துயின்றிருக்க கனவென நிகழ்ந்து கொண்டிருந்த யாக்கை எரிவை நோக்கியிருந்தார் கம்பளி வரைவச் சித்தர். சொல் அவரது அகத்தைத் தீண்டி நெடுநாளாயிற்று. சொல்லப்படுகையில் வாக்கென மட்டுமே ஒலிக்கும் குரலை அவர் கேட்கத் தொடங்கிய பின்னர் மேலகம் சொல்லை ஒழிந்து விட்டது. காவியத்தில் எழும் சொல்லை நோக்கி விழிகூர்ந்திருக்கும் கவிஞரைப் போல. அவரது நீண்ட தூங்கு சடையின் திரிகள் அசைவின்றி மழையை ஏந்தியது. முகம் ஊழ்கத்தில் விலகாமல் புரவியின் ஒவ்வொரு அணுவும் பிரிந்து தீக்குள் சென்று விழுவதை ஒரு வாழ்க்கை தொடங்கி முடியும் இருநுண் கணங்களுக்கிடை தானாய் அழியும் தீயின் வெம்மையென ஆவதை அவர் அறிந்து நெடுங்காலம். எல்லாம் திரும்பத் திரும்ப நடப்பதை நோக்கியிருக்கும் பழங்காலச் சிலையென அவர் அங்கு அமர்ந்திருந்தார். ஒரு நோக்கு.

*

ஏழிசைக் கூத்தர் திண்ணையில் படுத்திருப்பதை நோக்கிய வாகை சூடன் இளமழையின் மெல்லிய நடையோசையைக் கேட்டவாறிருந்தான். அவை பொருளின்மையின் ஒலிகள் என எண்ணினான். புடவியில் எதற்கேனும் பொருளிருக்குமென்றால் விழையும் உயிரில் நிறையும் தீமைக்கே என எண்ணிக் கொண்டான். தீமை மெய்யானது. நன்மை நிகழ்த்திய பின்னர் அழியக் கூடியது. முடிவேயில்லாமல் நிகழ்த்திக் கொண்டேயிருக்க வேண்டியது. தீமை ஒரு பேராறு. ஒரு துளிக்குள் ஓடிக் கொண்டிருப்பது. திரும்பத் திரும்ப அதற்குள்ளே சுழன்று கொண்டிருப்பது. ஒருகணமும் மீள முடியாதது. எந்தத் தீமையையும் மெய்யில் சென்று தொடும் முன்னரான கணம் வரை இருக்கும் நிச்சயமின்மை ஒன்று தொடுங் கணத்தில் முழுமை எய்துகிறது. காலம் பழியை மறப்பதில்லை. நல்லவை இயல்பாய் அதன் வேருக்குள் மடிந்திறங்கிச் சென்று அகன்று விடுகின்றன. சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்குள்ளிருந்தும் நன்மை வெளியேறிய பின் தீமை எனும் பேரிருட்டின் நீங்காமையை அணைத்துக் கொள்வதே வாழ்க்கை என எண்ணினான் வாகை சூடன். திண்ணையில் இளமழையின் காற்று உடனில்லை என்பது போல் வீசியது.

*

மாதுளன் தன் இருகரத்தையும் நீட்டி இனிய மழையை வரவேற்றுக் கொண்டிருந்தான். பெய்யினியின் நுதலென விரிந்த ஆகாயத்திலிருந்து பொழியும் காதலென எண்ணிக் கொண்டான் மழையை. மழை அவனை நீராடு மரச்சிற்பமென ஊறச் செய்தது. முன்னை நாளிரவில் அவன் களித்தெருவில் அலைந்து கண்டதெல்லாம் பெய்யினியின் மாயரூபங்கள். இடைகளில் தழுவிய விரல்களில் நோக்கியது அவள் கணையாழிகளில் மின்னிடும் ஒளிர்க்குலைவை. மார்புகளில் அணைந்தது காதலின் மூச்சு. கூந்தல்களில் குழைந்தது அழகு எனும் தெய்வம். அவன் நோக்கிய ஒவ்வொரு பெண்ணிலும் அவன் ஒரு சிற்ப நெளிவைத் தேடினான். ஈற்றில் அது பெய்யினி எனும் யட்சியின் தேகத்தின் எதுவோ ஓர் வளைவில் முடிந்தது. காதல் பித்தென ஆகும் ஆண் நோக்கும் ஆடியில் காண்பது அவளை என எண்ணினான். அவளை எண்ணாத கணத்திற்குக் காலம் எனப் பெயரிட்டான். அவனது அகம் ஒரு திரண்ட கரும்பாறை மலையென ஆகிக் கொண்டிருந்தது. உளிநோக்கால் தொடப்பட.

*

கனியிழையன் விழித்த போது எவரென்று முன்னறியாதவர் வீட்டின் மஞ்சத்தில் குலைந்திருந்தான். குளிர் காற்று நெடுநேரம் கூரையின் ஓடைவழி பெருகி அவனை வருடியபடியிருந்தது. அவனது கரத்தில் ஒரு கருமை வண்ணங் கொண்ட பெண்ணின் கூந்தல் படர்ந்திருந்தது. மார்பில் ஒரு மாந்தளிர் வர்ணி. இருவரிடமும் எழுந்த நறுமணம் அவனது நாசியை மயக்கிய வாசனை எனக் கண்டான். முன்னை நாளிரவில் கள்மயக்கில் பற்றிய முதல் முலையாள் எவள் எனத் தயங்கி நோக்கினான். இருவரின் முகமும் ஒன்று போலத் தோன்றி மயக்குக் காட்டின. இருவரின் முலைகளும் மயக்கில் பற்றும் அழைப்புள்ளவை என எண்ணினான். மார்பில் கிடந்தவள் விழிதிறந்து கூரையை நோக்கியிருப்பதைக் கண்டான் கனியிழையன். அவன் மேனி அசைவதைக் கண்டவள் எழுந்து திரும்பி அவனை நோக்கினாள். ஒரு மாயப்புன்னகை வீசி அவன் மார்பில் முத்தமிட்டாள். முள்ளை உறிவது போல மார்பு வலித்த போது முன்னை இரவு கனவென அவனுக்குள் நடக்கத் தொடங்கியது. அவன் அவளை நோக்கிச் சிரித்தான். உன் பெயர் என்னவெனக் கேட்டான். கேட்க மாட்டேன் என நீங்கள் வாக்குரைத்த பின்னரே முதல் முத்தம் அளித்தேன் எனச் சிணுங்கினாள் மாந்தளிர் வர்ணி. அவளது உதடுகள் விரிந்து மலர்ந்த போது பெயரென்ற ஒன்று அவனுக்குத் தேவையிருக்கவில்லை. அவள் மார்பில் கடித்தாள். துடித்த கனியிழையன் எழுந்தமர்ந்த போது அவன் குறி தடித்த உளிபோல வீங்கியிருந்ததைக் கண்டு நாணினான். அவள் சிரித்துக் கொண்டே அவன் குறியை உறிந்தாள். வலியில் திகைக்கும் இன்பம் கொண்டான் கனி.

*

சூர்ப்பனகர் தீயிலைத் துதியை மூட்டிக் கொண்டு யாழிசைத்த விறலியரை நோக்கினார். இசையென்பது விரல்களும் நரம்புகளும் அறிந்து கொள்ளும் ஒரு மீட்டல் என எண்ணினார். குழுவாக அமர்ந்திருந்த விறலியர் துயில் விழுபவர்களென அவரை நோக்கியிருந்து இசைத்தனர். முதியவளாயிருந்த ஒருத்தி அவரை நோக்கி மெல்ல விழிதாழ்த்தினாள். போதும் என விரலசைத்தவர் எஞ்சிய காற்றில் படர்ந்த இசையில் ஏறி பிறிதொரு காலத்தில் நீந்தும் அன்னமென ஆகினார். விழிகள் துயில் மயக்குக் கொண்டவையெனத் தழைந்தன. விரல்கள் காற்றை மீட்டின. ஒவ்வொன்றுக்கும் ஒரு கணக்கை எழுதும் விரல் காற்றில் சுழன்றது. இனிது இனிதென. அவரது மனை முற்றத்தில் நின்றிருந்த புலிவீரர்கள் விறலியர் வெளியேறிய பின்னர் அரசரின் அழைப்பை அறிவித்தார்கள். அவரது அகம் எதையும் கேட்காது விலகியிருக்கிறது என எண்ணிய முதுவீரர் ஒருவர் அவரது விரல்கள் அச்சொற்களைப் பற்றித் தாளம் மாறுபட்டு சுழல்வதைக் கண்டு அவர் கேட்டுக் கொண்டார் என விழியால் மற்றைய வீரனுக்கு தழைத்துக் காட்டி வெளியேறியனர்.

*

சத்தகன் நீலனின் முகத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தான். மெல்லிய கொடியொன்று சாய்ந்து அமர்வது போல நீலன் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனது முகத்தில் ஊறிப் பரவிய உவகையைக் கண்டு தானும் மகிழ்ச்சியை பெருக்கிக் கொண்டான். சிரிக்கும் நீலனின் முகமே காதலின் முகமென சத்தகன் எண்ணிக் கொண்டான். இருவரும் அரசு சூழ்தல் அறையின் சாளரங்களுக்கு வெளியே பட்டினம் இளமழையில் நனைவதை வேடிக்கை பார்த்தனர். சத்தகனின் உள்ளம் நடைக்கொருமுறை சுவடிகையை எண்ணியது. அவளது நினைவு தனக்குள் பரவிச் சிலிர்ப்பதைக் கண்டு உடல் தாவினான். அவனது உறுதியான தேகத்தை எவரோ மயிற் பீலியால் வருடிப் பின் அடிப்பது போல மெய்ப்புக் கொண்டான். நீலன் பொருள் பிடிபடமுடியாத இருவெள்ளி மீன்கள் போன்ற விழியால் பட்டினத்தை நோக்கி நின்றான். அவனது குழல் நதிச்சுருளென அமைந்திருந்தது.

*

மாகதா மடாலயத்தின் வாயிலில் அமர்ந்து புரவியில் திரும்பிய கிரியவெல்லவை நோக்கினார். அவன் அங்கனம் தனித்துச் செல்லும் பொழுதுகளில் மெல்லிய துணுக்குறல் அவரில் எழுவதுண்டு. தாளம் பிசிறும் இசையால் சினம் கொள்பவரென அவரது அகம் விலகுவதுண்டு. அவனது விழியின் ஆழத்தில் உள்ள நலுக்கமின்மை இளந்துறவிக்கு உரியதல்ல என எண்ணினார். அவன் மாறாத சிரிப்பை அளித்துக் கொண்டு மகாசோதியரை நோக்கிச் சென்றான். வண்டிலோட்டிகளும் வணிகர்களும் காலை உணவை உண்ட பின்னர் சொல்லாடிக் கொண்டு கரகரத்துக் கொண்டிருந்தனர். அவர்களது உருவங்கள் அங்காடிகளில் விற்கும் வினோதப் பாவைகள் போன்றிருப்பதை எண்ணிச் சிரித்தார் மாகதா. ஒவ்வொரு உடலும் சுமக்கும் பாவையை மானுடர் கழற்ற ஒண்ணாது. தரிக்கும் வேடங்கள் ஒவ்வொன்றும் ஒரு அகழியென விரிந்த மாபெருங் கோட்டையே மானுட தேகம் என எண்ணிக் கொண்டார். பேரரச மரம் இலைகளில் நீர் தூங்கும் பெரும்பறவை போல இலைதுடித்துக் கொண்டிருந்தது. ஈரமூறிய மண் புத்திரரை இழந்த தாயின் அகமெனக் கிடந்து கரைந்தது.

TAGS
Share This