அறமும் கல்வியும் – வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

அறமும் கல்வியும் – வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. இவ்வளவு காலம் நான் பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றினால் குறிப்பிடும்படியான  மாற்றம் கூட ஏற்படவில்லை.

பல்வேறு காரணங்களின் தொடர்ச்சியும் நீட்சியுமாகவே இந்தப் போராட்டம் இன்றுவரை கவனிப்புக் குறைந்த போராட்டமாகவும் அழுத்தத்தை உருவாக்க மிகவும் கஷ்டப் படவேண்டியுமிருக்கிறது என்று கருதுகிறேன்.

நான் இதற்கு முன் வைத்த விமர்சனங்கள் யாவும் இதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்களின் தவறல்ல, அவர்கள் பல்கலைக் கழகத்திலும் புறச் சூழலிலும் உருவாகியிருக்கும் தொடரான மாற்றங்களினால் உருவாக்கப் பட்டவர்களே என்ற புரிதலிலிருந்து இந்தப் போராட்டம் தொடர்பில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.  

ஆயுத வழியில் இடம்பெற்ற விடுதலைப் போர் பல்வேறு சரி பிழைகளுடன் முடிவுக்கு வந்ததன் பின்னர் கடந்த ஏழரை வருடங்களில் இடம்பெற்ற சமூக மாற்றம் மிக அடிப்படையான சமூக ஒருங்கிணைவை குலைத்துள்ளது. பல்கலைக் கழக நிர்வாகத்தில் அரசியற் தேர்வுகள், மற்றும் மாணவர்கள் அரசியல் பேசக் கூடாதென்ற வாதம் பொதுப்புத்தியாக மாறியமை. கடந்த காலத்தில் பல்கலைக் கழகம் மிக மிக குறைத்த அளவிலேயே மாற்றுக் கருத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் மதிப்பளித்தமை போன்றன இப்பொழுதுள்ள பலவீனமான மாணவர் கூட்டத்தை வெளித்தள்ளியிருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

இதனால், மாணவர்கள் தமிழ்த்தேசியத்தை வெறும் கோஷமாகப் புரிந்து கொண்டு, மஞ்சள் சிவப்புக் கொடி கட்டி மாவீரர் தினத்துக்கு விளக்கு ஏற்றுவதும் தலைவன் பிரபாகரன் என்று சொல்வதோடு அவர்களது அரசியல் செல்பாடுகளையும் புரிதல்களையும் நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் பல்கலைக் கழக மாணவர்களுக்கென்று இருந்த பெருமதிப்பை சரியச் செய்தது இந்த வகையான மேம்போக்கு அரசியலே. தமிழ்த்தேசியத்தைப் பற்றியோ  பெருந்தேசியவாதத்தை பற்றியோ இன்ன பிற தேசிய இனங்களின்  கோரிக்கைகள் பற்றியோ அல்லது குறைந்த பட்சம் தமிழ் மக்களிடம் உள்ள அரசியல் விருப்பங்களின் பன்மைத்துவம் பற்றியோ இவர்களில் பெரும்பாலனவர்கள் அக்கறை கொள்வதில்லை. பல்கலைக் கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான எந்தப் பெருவிவாதங்களையும் நடத்தியதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் போய் நின்று விட்டு அறிக்கைகளை வாசித்து விட்டு திரும்புவது தான் பெரும்பாலான பல்கலைக் கழக போராட்டம் என்கிற மரபை உருவாக்கி வருகிறார்கள் தற்போதைய மாணவர்கள்.

இன்னும் மோசமாக, தமது தவறான நடத்தைகளை நிர்வாகமோ அல்லது ஒழுக்காற்று சபையோ தண்டனை வழங்கினால் அதனை எதிர்த்து அற வழிப் போராட்டங்களை எடுத்து நடாத்துவது அதன் மூலம் தவறு செய்தவர்களை தப்பிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளில் கூட்டாக இயங்குவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் நாளைக்கு என்ன வகையான சமூகத்தை உருவாக்கப் போகிறோம். இதில் இன்னும் கவலையான விடயம் இதற்கெதிராக மாணவர்களின் தார்மீகமான அறம் எழுச்சி கொள்ளவில்லை என்பது தான். தமது தவறுகளை மறைக்க நிர்வாகத்தை குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு மோசமான முன்னுதாரணம். இவ்வளவு காலமும் தெரியாதா நிர்வாகம் இவ்வளவு குறைபாடுகளுடன் இயங்குகிறது என்று.

எவ்வளவு பிரச்சினைகள் வந்து போயின. எதற்காகவாவது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இடம்பெற்றதுண்டா? வெறும் சண்டித்தனம் ஒரு நாளும் மாணவர் இயல்பாயியிருக்காது. அதனை வைத்துக் கொண்டு மாணவர் சக்தியென்று பேரம் பேச முடியாது. செயல்வாதம் என்பது தொடர்ச்சியானது. அதற்கு மாணவர்கள் மத்தியில் அரசியல் பற்றிய புரிதல் உருவாக வேண்டும். அது வரைக்கும் சண்டியர்களின் பெயரிலும் வெற்று கோஷங்களை முன்வைத்து உரையாடுவார்கள் பெயரிலும் பலஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வியும் ஆன்மாவும்  ஒடுக்கப்படும்.

உண்மையில் இந்த விவாதங்களின் போதெல்லாம் நான் அவதானித்த ஒரு வார்த்தையை கண்டு அயர்ச்சி தான் மிஞ்சியது. அது, குறித்த குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை வகுப்பு செல்ல அனுமதிக்காதவிடத்து “மாணவர் புரட்சி” வெடிக்குமென்று. இவர்களை வைத்து ஒரு சீனா வெடி கூட வெடிக்க வைக்க முடியாது.

மாணவர் ஒன்றியம் தமக்கு கீழுள்ள வகுப்புகளை மந்தையாடுகள் போல பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டம் ஒன்றில் கூட முதல் வகுப்பு மாணவர்களை முன்வரிசையில் இருக்க வைத்து நிர்வாகத்தை எதிர்ப்பதாக பதாகைகளையும் கொடுத்திருந்தார்கள். இப்படியா அவர்களைப் பயன்படுத்துவது? இவர்களுக்கும் அடிமைகளுக்கும் என்ன வித்தியாசம் ?. அந்த முதல் வருட மாணவிகள் இருக்கும் படத்தைப் பார்த்தேன், பாவாடை சட்டை, இரட்டைப் பின்னல், முழிக்கும் விழிகள் என்று தேமே என்று இருந்தார்கள். இவர்களையெல்லாம் பயன்படுத்தும் போதும் இவர்களை இப்படியெல்லாம் அடக்கும் போதும் மூத்த மாணவர்களுக்கு உறுத்தவில்லையென்றால் நிர்வாகம் அடக்கும் போது திருப்பிக் கேள்வி கேட்க என்ன தகுதியிருக்கிறது?

இவ்வளவு விரிவாக இதனைப் பற்றி எழுதுவதற்கு காரணம், பெரும்பாலான பல்கலைக் கழக மாணவர்களுக்கு விளங்கி கொள்ளும் தன்மை மிகவும்  குறைவு, தங்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தவும் தங்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவுமே  இப்படியான வாதங்கள் வைக்கப்படுவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற தவறுகளை நிறுத்திக்கொள்ளாமல் நம்மால் கொஞ்சம் கூட, ஒரு சமூகமாக முன்னகர முடியாது.

மாணவர்கள் இந்த வெறும் கோஷங்களிடமிருந்து தப்பித்து தமக்கான அரசியல் புரிதலை ஏற்படுத்த வேண்டும், பொது வேலைத் திட்டங்களை அல்லது பொது நியாயங்களை முன்வைத்து நடக்கும் போராட்டங்களை ஆழமாக கற்க வேண்டும். அவற்றிலிருந்து தான் மாற்றம் நிகழும். பந்தலைப் போட்டுவிட்டு ஆயிரம் பேர் அதிலிருப்பதென்பதும், ஆயிரம் பட்டதாரிகள் இருப்பதென்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

– இரண்டு வருடங்களுக்கு முன் இதே போல இதே இடத்தில் நடந்த பட்டதாரிகள் போராட்ட நேரத்தில் சதீஷ் ஒரு முக்கியமான கோரிக்கையை முன் வைத்தார், அந்தக் கேள்வி வந்திருந்த அரசியல் பிரமுகர்களை முகம் சுளிக்க வைத்தது, அல்லது அது தொடர்பில் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.

அதாவது பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக  “பொதுப்பொறிமுறை” ஒன்றை உருவாக்க ஏதாவது வேலைத் திட்டம் வடமாகாண சபையிடமோ அரசிடமோ இருக்கிறதா? அப்படியென்றால் அது என்ன ?

அதற்கு இன்றுவரை எந்த பதிலுமில்லை.

மேலும் பட்டதாரி மாணவர்கள் உரையாடும் போதும் சரி தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போதும் சரி இதனை ஒரு குறித்த பகுதிக்குரிய பிரச்சினையாக சுருக்கிக் கொள்கிறார்கள். அதாவது பல்கலைக் கழக மாணவர்கள், அரசாங்க வேலைக்ககாகத் தான் நாங்கள் கஷ்டப்பட்டுப் படித்தோம். அதனை மறுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அது அப்படியல்ல என்பதே எனது புரிதல். அரச உத்தியோகம் தான் புருஷ லட்க்ஷணம் பெண்ணுக்கு சீதனத்தை குறைக்கவும் மாப்பிளைக்கு அதைக் கூட்டவும் உதவும்.

நாங்கள் இந்த மக்களின் காசில் படித்தோம் இந்த மக்களிற்காக உழைப்பதற்குத் தான் நாங்கள் படித்தோம், அதனை நாங்கள் செய்யப் போகிறோம், திற கதவை. என்று அங்கிருந்த ஒருவரும் சொல்லி நான் கேட்கவில்லை. முழுக்க முழுக்க எங்களுக்கு வேலையில்லை நாங்கள் இன்னும் கல்யாணம் கட்டவில்லை  என்ற பல்லவி தான் சுற்றிச் சுற்றி வருகிறது.

படிக்கும் போதே இனிவரும் தலைமுறைகளாவது யாரின் காசில் படிக்கிறோம் யாருக்காகப் படிக்கிறோம் அரச உத்தியோகம் என்பது கதிரையில் குந்திப்பிடிச்ச்சுக் கொண்டிருப்பதல்ல என்பதை உணர வேண்டும்.

இதில் சில மாணவர்கள் அரசை மிரட்டிய விதத்தை பார்த்து நானே பயந்து போனேன். அதாவது ” நாங்கள் வீட்டில இத்தின பேர் இருக்கிறம் எல்லாரும் ஓட்டுப் போடுறனாங்கள் வாற முறை போட மாட்டம்”. இதெல்லாம் ஒரு பேரமா ? முதலில் பட்டதாரிகள் கெஞ்சுவதை நிறுத்த வேண்டும். தங்களின் பிரச்சினையை விளக்கி ஒழுங்குபடுத்தப் பட்ட முறையில் எந்தவிதமான எழுத்துக்களையும் நான் படிக்கவில்லை, எழுதிய பெரும்பாலானவர்கள் ஊடகவியலாளர்களும் கட்டுரையாளர்களும். ஏன் இந்தப் பெரிய பட்டதாரி சமூகத்தால் தன் பிரச்சினைகளை தெளிவாக முன்வைக்க முடியவில்லை. அவர்களால் மக்களை பிரச்சினையை நோக்கி திரும்பச் செய்ய முடியவில்லை, ஏனென்றால்  அவர்களே இதனை ஒரு மக்கள் பிரச்சினையாக பார்க்கவில்லை, எதிர்காலத்தின் பிரச்சினையாகப் பார்க்கவில்லை, சமூகத்தின் கூட்டு மனத்தில் இந்த அரச உத்தியோகம் என்ற கருத்தியலும் அதனுடன் இணைந்த பிற விடயங்களும் என்ன பாதிப்பைச் செலுத்துகின்றன என்பது தொடர்பில் சிந்திக்கவில்லை. வேலை வேண்டும். அவ்வளவு தான்.

நமது சமூகத்தில் எத்தனையோ சுய முயற்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுபகுதியினரே படித்த என்று சொல்லப்படுகிற மக்கள், மிகுதி எல்லோருமே சாதாரண மக்களே. அவர்களிடமிருக்கும் புத்துருவாக்கும் தன்மையை, அந்த இயல்பை இந்த மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அரச வேலை கேட்கக் கூடாதென்று சொல்லவில்லை. அதனை ஏன் கேட்க்கிறீர்கள் என்பது தொடர்பில் உங்களை நீங்களே கேள்வி கேட்டுப் பாருங்கள் என்று சொல்கிறேன். மகத்தான நியாயங்களுக்காக  மட்டுமே மக்கள் வீதிக்கு வருவார்கள். அப்படியொரு நியாயமான மாணவர் காலத்தையும் அப்படியொரு நீதியான சேவையையும் எதிர்காலத்தில் அரசின் இருக்கையிலிருந்து நீங்கள் கொடுத்தால் மட்டுமே மக்கள் உங்களை நம்புவார்கள்.

இப்பொழுது நிறைய நேரமிருக்கும், இவை தொடர்பில் சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் எதிர்பார்க்கும் மாற்றமென்பது பெரியது. அதனை செய்வதற்கான செயல்வாதமென்பது மிகப் பெரியது, நமது காலத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பில் கொஞ்சம் யோசியுங்கள், அதனை மக்களுக்குச் சொல்லுங்கள்.

அடிப்படையான மாற்றமே அரசியல் மாற்றம். அரசியல் மாற்றமே எங்கள் வாழ்க்கையை மாற்றும். அது வெறும் கட்சி மாற்றமல்ல, அது அரசியலுணர்வுள்ள ஒரு சமூக நிகழ்வு.  

ஏற்கனவே இடம்பெற்ற ஒரு பிரச்சினையான காலத்தில் எழுதிய கட்டுரையின் இணைப்பை தருகிறேன், அதில் ” பல்கலைக் கழக மாணவர்கள் தமது பொறுப்புக்களை எப்பொழுது எடுக்கப் போகிறார்கள்? என்று எழுதியிருந்தேன். அந்த நம்பிக்கை தேய்ந்து மறைந்து கொண்டு வரும் இக்காலத்தில் சில விடயங்களை சிந்திக்கவாவது முடியுமா என்று இதனை எழுதுகிறேன்.

(2017)

TAGS
Share This