122: ஆழிசூடிகை : 02

122: ஆழிசூடிகை : 02

ஆழிவெண் சங்குகளின் பளபளப்புடன் மேனியுருகிக் கருஞ்சங்கென மினுக்குக் கொண்டிருந்த இருதியாளை இமை சிதறாது நோக்கியிருந்த வேறுகாடார் அவளின் அருகில் சென்று சலனமின்றி கடலை நோக்கினார். கடல் மாபெரும் கரும் போர்வையால் மூடப்பட்டு அதனுள் எஞ்சிய ஒளிகொண்டு நோக்குபவர் எனத் தன்னை உணர்ந்தார். போர்வைக்குள் என எண்ணமெழுந்த போது அவரது பெருமேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. நிலத்தினடியில் ஓடும் நீர் ஒவ்வொரு வேரையும் தொட்டு எழும் புற்காடென அவர் தன்னுள் ஓடும் குருதியை உணர்ந்து கொண்டிருந்தார். நீராலானது போலத் தோன்றும் ஒவ்வொன்றும் உவகைக்குரியது என எண்ணினார். கண்ணீர். மது. குருதி. ஆழிநீர். சுக்கிலம். மதனம். வியர்வை. தண்ணீர். ஒவ்வொரு நீர்மையினதும் சுவை கொள்ளும் நிகழ்கணங்கள் முழுமையாக வாய்க்கும் மானுடர் அறியும் பூரணம் ஒன்றுண்டு. இருதியாளின் பின்னே எரிந்த தீப்பந்தங்களின் ஒளியில் அவளின் மேனி உருகுவது போலத் தோன்றியது.

நாகங்களின் சொல் கொண்டவரென அறியப்பட்ட வேறுகாடார் நஞ்சில் இனிக்கும் ஒரு துளியே காதல் என்பதை அறிந்தவர். மானுட உணர்வுகளில் காதல் அளவுக்கு நஞ்சை அமுதென்றாக்குவது பிறிதொன்றில்லை என எண்ணினார். பெண்ணில் மிடுக்கென எழும் வல்லமையை ஆண் அஞ்சிக் கொண்டே காதலிக்கிறான். அச்சத்துடன் காதலிக்கப்படுபவள் எக்களத்திலும் அவனை ஒருபடி கீழிறக்குபவளே. அவனுள் உள்ளூர ஒரு வஞ்சமும் இணை பிறப்பென நிகழும்.

இருதியாள் வேறுகாடாரை நோக்கி இளஞ் சின்ன மின்மினியெனப் புன்னகைத்தாள். அவருள் ஓடிய எண்ணங்களை நெடுநேரம் கேட்டிருந்தவளென.

வேறுகாடாரின் தேகம் மீண்டும் மீண்டும் மெய்ப்புக் கொண்டு நாணேறிக் களமெழுந்த வில்லென்று முறுகியது. இருதியாள் நாணில் நடுக்கென அவரது உதடுகளில் சொற்கள் ஒலியாகமை கண்டு சிரித்தாள். “தோழர். நீங்கள் இங்கில்லை என்பது போலிருக்கிறது. நாம் சென்று கொண்டிருப்பது போர்முனைக்கெனும் போதமாவது எஞ்சியிருக்கிறதா. விழிகளில் பொருளற்ற உவகையொன்று நீரில் மீனென ஓடுகின்றது. தனியனாக வாழ்பவர் உவகை கொள்வது ஒன்றை எண்ணியே என முதுபெண்கள் சுட்டுவதுண்டு” எனச் சொல்லி நகைத்தாள் இருதியாள். வேறுகாடார் சிறுமகிழ்ச்சி கொண்டு முகத் தசைகள் குவிய “எதனால்” என்றார். “அதை அறிந்த ஆண் நீங்கள் ஒருவர் தான் என்றார்கள் இளம் பெண்கள்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தாள்.

“அங்கனம் சில புரட்டுகளை என்பொருட்டு உலவ விடுவது எதிரிகளின் சூழ்ச்சி. அவ்வலையில் மாமகள் நீங்களும் சிக்கிக் கொள்ளலாமா” என்றார்.

“இதோ. வரவேண்டிய இடத்திற்குள் கரவு வழிகளால் வந்து சேர்ந்து விட்டீர்கள். என்னை மாமகள் என்றா சொன்னீர்கள்” எனச் சொல்லி மேனியதிரச் சிரித்தாள்.

“நான் பொய்யுரைப்பது அரிது எனும் மெய்யை ஒரு பெண்ணுமா உங்களுக்குச் சொல்லவில்லை” என்றார். இருவருக்கிடையிலும் ஆழியின் மேனி மினுக்கென சொற்கள் ஒளிகொண்டு ததும்பின. “நித்திய காதலரே. உங்களுடன் சொல்லாடும் பெண் விழைந்தே தன் தெய்வத்திடம் தலை கொடுப்பவளென அறியப்படுவதுண்டு. நான் அப்படி ஆக விழையவில்லை. கதைகளின் வழி ஒருவருக்கு அளிக்கப்படும் மயக்குகள் யாவும் மானுட விழைவுகளின் ஆடிப்பெருக்குகளே. நான் மெய் விழைபவள். அதையே நாடவும் செய்பவள்” என்றாள்.

“நானும் ஓர் மெய்தேடியே ஆழி சூடிகையே. முதற் சூடிகை என நின்றிருப்பவரின் மேல் காதல் கொள்ளாதவன் ஒரு ஆண்மகனா. அந்த ஆயிரமாயிரம் காதலர்கள் இடையே ஒரு எளிய சேவகன் நான்” என்றார். அச்சொற்களால் நகையாட்டு எழுந்த தெய்வம் போல இருதியாள் சிரித்துக் கொண்டே “ஆக நான் உங்களின் கதைகளில் வந்துசெல்லும் ஒருத்தியென ஆகிக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்களா” என்றாள். வேறுகாடார் ஆழ்ந்து சிந்திப்பவர் போல முகத்தைத் தோற்றி திரும்பி இருதியாளின் விழிநோக்கி “கடற் கன்னிகள் பாடுவதுண்டா சூடிகையே” என்றார். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்குத் தாவுவது அவரின் இயற்கை மட்டுமல்ல. படைக்கலமும் தான் என எண்ணினாள் இருதியாள்.

“நான் கண்டதில்லை தோழரே. எனக்கு அலையோசைகள் இசைக்கருவி. இடிகளின் முழக்கே என் முரசுகள். மின்னல்களே எனது தந்திகள்” என்றாள். வேறுகாடார் நகை கொண்டு உதடு குவித்துச் சீழ்க்கையடித்தார். ஒற்றை ஓசை உதட்டில் முழுமையடைந்த போது இருளில் இரு வேங்கையின் விழிகளென இருட்டிலிருந்து இரு எரியம்புகள் புலிப்படை நோக்கி விரைந்து இருதியாளின் கலனான உப்பினியின் பாய்மரத்தில் தைத்தது. பாய்மரம் பற்றியெரிவது பனைமரத்தின் தலைகள் எரிவன போலத் தோன்றியது. புலிவீரனொருவன் பாய்மரத்தைச் சுருக்க பீப்பாய்களிலிருந்த நீரை அள்ளி பாய்மரத் துணியில் வீசினார்கள். கருகும் புகை வாசனை எழ நூற்றுக்கணக்கில் எரிமீன்கள் விழுவது போல சிங்கை புரிப்படையின் எரியம்புகள் ஆழியிலும் நீந்துவது போலத் தோற்றியபடி புலிப்படையைத் தாக்கின. வாகை சூடனின் சங்கொலி முழங்க சங்கேதங்கள் காற்றில் முழக்கமெனப் பரவின. யானையை தீப்பந்தத்தால் துதியில் குற்றியதால் சினங் கொண்டது போல மாபெரும் துதிக்கையால் வீசிறப்படும் தீநீரென எரியம்புகள் கலன்களிலிருந்து விண்ணிலெழுந்தன. விண்ணெழும் ஆயிரம் பொன்னம்புகளென அவை ஒளிகொட்டின. காட்சித் துண்டுகளாகத் தோன்றிக் கொண்டே அசைவது போலச் சென்று சிங்கை புரியின் கலன்களைத் தாக்கின புலியம்புகள்.

காற்று புலிப்படைக்கு ஏற்ற வண்ணம் வீசியது. வேறுகாடாரின் அம்புகள் கூரொலி கொண்டு விண்ணெழுந்து கலன்களை நோக்கி விரைந்தது. பாய்மரங்களில் பிசகாது எய்யப்பட்டன அவரது அம்புகள். இருதியாள் ஒருகணம் அவரது விழிகளை நோக்கினாள். கருஞ்சிலையில் நெருப்பொளியென எரியம்புகளின் தீக்கொதிப்பு அவர் விழிகளில் தழலாடி விம்மியது. இருதியாள் அதாகத்தைக் கையிலேந்தி கலனின் முன்முகப்பில் சென்று நின்றாள். அவளது கரத்தில் அதாகம் அன்னையின் கழுத்தில் மகவென அணைந்திருந்தது. எரியெண்ணைச் சட்டிகளில் அம்பைத் தொட்டுத் திரும்பிய கணத்தில் தீயை எக்கணம் தொட்டாள் என அறியவியலா விரைவுடன் அம்புகளைச் செலுத்தியதை வேறுகாடார் நோக்கினார். அம்புகளை ஒவ்வொன்றாய் தொடுத்துக் கொண்டே இருதியாளின் அருகில் சென்றணைந்து கொண்டு கணைகளை எய்தார்.

ஒவ்வொரு தீக்கணையும் காற்றில் உரசிக் கொண்டு பறக்குமொலியில் வேறுகாடார் மீண்டும் மெய்ப்புக் கொண்டார். அம்பு நுனி நெருப்பின் சுவாலையில் இருதியாள் பொன்நாகமென மினுங்கினாள். கருமையில் வீழும் பொன்னொளியே அழகு என்றாவது என எண்ணினார் வேறுகாடார். அவளது முலைகள் விம்மித் தெறித்தன. எரியெண்ணைச் சட்டியில் தொட்டுத் திரும்பும் கணம் இரு கொங்கைகளும் ஆலயத் தேர்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்கின்றன என்பவை போலத் தோன்றும். விழிகள் வானை நோக்கி எழுந்து தொடும் ஒவ்வொன்றையும் தொட்டுத் தொட்டு அகலும். அணுவிடைக் கணங்களில் வேறுகாடாரின் அம்புகளையும் தொட்டுத் திரும்பும்.

வில்லின் தொழில் தேர்ந்த நிபுணன் என வேறுகாடார் கணைப்பெருக்காடினார். அவரது கரத்திலிருந்த வில்லிற்கு எப்பெயரும் இல்லை. படைக்கலச் சாலையிலிருந்து வரும் வழியில் இருளுள் கைதுழாவிய போது கிடைத்ததை எடுத்துக் கொண்டார். அவர் வில்லினை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எவ்வில்லாயினும் அவரேந்தும் பொழுது அவர் எண்ணும் வடிவங் கொள்ளும். பெருவிற்களின் மாய வித்தைகளின் விந்தையை கையளவு விற்களில் புரிபவர் அவர். அவரது விற் தொழில் படையினர் மத்தியில் புகழ் பெற்றிருந்தது. இருதியாளும் அதை அறிவாள். விண்ணெழுந்த கதிரவன் என ஒளிகொண்டு நெருப்புக் கதிர்களை வீசுபவரென அவரிலிருந்து அம்புகள் எறித்தபடியிருந்தன. அவர் அம்பை எய்து திரும்புகையில் அவரது கருங்குழல் சுற்றிச் சுழன்றமைந்து துள்ளிக் கொண்டிருந்தது. அதன் ஆடலை நோக்கிய போது அவரது அகம் காதலில் களிகொண்ட இளையவன் என வில்லை எடுக்கிறது என்பதை நோக்கத் தொடங்கினாள் இருதியாள். காதல் கொண்ட இளையவர்களின் விழிகளில் மட்டுமே தோன்றும் அறியாமையின் மயக்கழகும் வியக்க வைக்கவெனவே எழும் துடிப்பும் அவரில் வீசியது.

சிங்கை புரியின் கலன்கள் மெல்ல மெல்ல வாத்துகளென ஒன்றன் பின் ஒன்றென பின் நிரை கொள்ளத் தொடங்கிய போது வாகை சூடனின் சங்கொலி இடித் தொடர்களென சங்கேதங்களை ஒலித்ததெழுந்தது. அரைப் பிறை வடிவில் கலன்கள் உருக்கொண்டு ஒரு முனை கூர்ந்து சிங்கை புரியின் கலன்களைப் பிறை முனையால் வாத்தின் கழுத்தையென அறுக்கத் தொடங்கியது. இருதியாள் அதாகத்தின் மூச்சு நாகங்களின் சீறலெனக் காற்றில் அதிர வெறியாட்டு ஆடினாள். வியர்வை படிந்து மேனியில் துளிகளாக மினுங்க வேறுகாடாரின் விழிகள் நாக்கொண்டு அதைத் தொட்டன. கலவியின் போதே போர் புரிபவரெனத் தன்னை அகம் கற்பனை செய்யச் சிரித்தபடியே அம்புகளைப் பொழிந்தார்.

சிங்கைப் புரிக் கலன்கள் திரும்பின. இருபது வீரர்கள் புலிப்படையில் களம் பட்டனர். வாகை சூடனின் சங்கொலி நிலைகொள்க என ஆணையிட்ட பொழுது சூரியனின் புலரியொளி வானின் திரையை விரித்து எழுந்தது. ஆழியின் நீலவண்ணம் பெருநீலப் பட்டாடையெனச் சுடர்ந்தது. காற்றில் எரியும் எண்ணை மணம் வீசியது. வேறுகாடார் தனது வில்லை நிலத்தில் போட்ட பின்னர் எரிந்தழியாமல் புகைந்து கொண்டிருந்த சிங்கை புரிக் கலன்களையும் புலிகளின் கலன்களில் பன்னிரண்டு முற்றழிந்து கிடப்பதையும் நோக்கினார். இருதியாள் பீப்பாயொன்றின் மேல் அமர்ந்து கொண்டு மேனியைத் தளர்த்தி கலனின் முகப்பில் படுத்திருந்தாள். சிலகணம் மெய்த்துயில் கொண்டு கனவில் எழுந்த வேறுகாடாரின் தீவாளியால் நுண்ணகம் அதிர விழித்துக் கொண்டாள். இருதியாள் விழித்த மெய்நிகர்க் கணத்தில் வேறுகாடார் அவளையே நோக்கியிருந்தார்.

அத்தனை கதவங்களையும் ஒற்றைத் துகிலை உரிபவனென வீசியெறிந்து நிகழ்ந்த அந் நோக்கில் இருதியாளின் வதனம் காலையொளியில் ஆழியின் முகமென விரிந்தது. ஒருகணமும் தயக்கமின்றி உள் நுழைந்த வேறுகாடாரின் நோக்கு அவளை மீன்குஞ்சுகள் மேனியை முத்தங்களையிடுவது போல கூசச் செய்தது. பிறகு அம்பு நுனியில் தீயெனச் சுடர்ந்தது அவள் முகத்தில் ஒரு புன்னகை. வேறுகாடார் கால்களை மடக்கிக் கோர்த்துக் கொண்டு விரல்களால் தாளமிட்டார். இளங் கதிரவனின் பொன்னொளி உலர்ந்த பறைத்தோலில் தீயலைகள் என பாய்மரங்களை முறுக்கின. கடற் பறவைகள் ஒலியெழுப்பியபடி பாய்மரச் சட்டகங்களில் வந்தமர்ந்தபடியும் சென்று கொண்டுமிருந்தன. வேறுகாடார் எழுந்து நின்று கரையை நோக்கினார். தமிழ்ச்செல்வனின் புரவி கால் மாற்றியபடி துயில்வது தொலைகாண் கருவியில் தோன்றியது.

*

இருதியாளை திண்ணைச் சுவரில் ஒரு ஓவியமென எண்ணிய வேறுகாடார் அவளது விழிகளை திரும்பவும் நோக்கிப் புன்னகைத்தார். தொல் ஆலயத்தின் கரவு வழிகளை அறிந்த பூசாரி எவருமறியாத அவ் ஆலயத்தின் புதையலை அள்ளிச் செல்வதைப் போல அவர் இருதியாளை நோக்கிக் கொண்டிருந்தார். ஆழி சூடிகையே என அகத்திற்குள் அழைத்தார். கர்ணிகையிடம் திரும்பிச் சில சொற்களைப் பேசிய இருதியாள் வேறுகாடாரை நோக்கித் திரும்பிய போது இருபெருந்தேர்களென மோதிக் கொள்ளும் முலைகளை அவர் நோக்கியிருந்தார். கொல்கிறானே என எண்ணினாள் இருதியாள். இளமழைத் தூவல் வானெனும் பெருயோனியின் மதனமெனத் தூறியது. அதை அவள் எண்ணிச் சிரித்தாள். வேறுகாடார் இளமழையை நோக்கிய பின்னர் வாகை சூடனுடன் சொல்லாடிக் கொண்டு எழுந்து கூத்தர்களின் மனைக்குள் நுழைந்த இளம் பாணனை நோக்கினார். ஒருகணம் உளம் கூர்ந்தவர் பிறகு மெல்லச் சிரித்து “அவன் காவியன். காவியன் அனைத்தையும் ஒருமுறையேனும் அடைந்தே ஆக வேண்டியவன். குருதியைக் குருதியென்றே கைகளில் பூசிக் கொள்ள வேண்டியவன். தீமையைத் தீமையென்றே அறிந்து புரிபவனே பெருங்காவியங்களை இயற்றுகிறான்” என எண்ணினார். அவரது தோளில் தூங்கிய வெண் நரைக் குழலின் மெல்லிய பிரகாசத்தை இருதியாள் நோக்கியிருந்தாள்.

TAGS
Share This