130: செண்டுவெளியாட்டம் : 02
“மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.
அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ஆகவே அரசர்கள் அதை அஞ்சுகிறார்கள். காவியர்கள் அதை வணங்கி பிறிதொரு அறத் தெய்வத்தில் அதை நிலை நிறுத்துகிறார்கள். வீரர்கள் அதைக் காக்கும் மானுடக் கவசங்கள் மட்டுமே” என உரத்த குரலில் சொல் பிளிறிக் கொண்டிருந்தான் உலகளந்தோன்.
மாலதி செண்டு வெளியில் ஒலிக்கும் குரல்களைக் கேட்டபடி துயில் அமையாமல் விழிமடல்களுக்குள் கண்கள் அலைந்தலைந்து மீள இருக்கையில் அசையாது உடலை ஒருக்கியிருந்தாள். புலரி முதலே செண்டுவெளி நிறைந்து ததும்பும் நீர்க்கலம் போல வழிந்தும் மெல்ல ஆடுகையில் தெறித்துக் கொப்பளிப்பது போலவும் தோற்றம் கொள்ளத் தொடங்கியது. பெண் புலிகளை அனைத்து திசைகளிலும் அமைக்கப்பட்ட தெய்வக் குறிகளுக்கு அருகில் நிலையமைத்திருந்தாள் மாலதி.
ஒவ்வொரு பெண்புலியும் தனக்கு மகவென எண்ணிக் கொள்பவள். ஒவ்வொருவருக்கும் ஒரு அணைப்பும் புன்னகையும் கண்டிப்பும் உடனே அமைந்திருக்கும். வெளிவாயிலில் அமர்ந்து உலகளந்தோன் கூவிக்கொண்டிருந்த கேலிப்பேச்சுகளால் துயில்முகம் கலைக்காது உதடுகள் விரியவும் பற்கள் தெரியவும் சிரித்துக் கொண்டாள். வெள்ளிக் குறுநெற்கள் எனப் பற்கள் மினுங்கின. ஒளிக்கு அவ்வளவு மந்தணம் சூடியது போல.
அவள் புலிப்படையின் முதற் போராளிகள் குழுவைச் சேர்ந்தவள். ஈச்சியின் அணுக்கத் தோழியாக இருந்து பின்னர் தனிப்பிரிவுக்கு தலைமையாக்கப்பட்டாள். நீலழகரின் நம்பிக்கைக்குரியவள். அவரின் கனவையே தனதென்று ஒவ்வொரு சொல்லாகப் பொறுக்கி எடுத்து தன் கூட்டுக்குள் சேகரித்துக் கொண்டவள்.
மாலதியின் அன்னை சிங்கை புரிப் படையால் கொல்லப்பட்டவள். அவளுக்கு இரு இளையவள்களும் உடனிருந்தார்கள். அவர்களை மூதன்னையிடம் ஒப்படைத்து விட்டுக் களம் ஏகியவள். நீலழகரின் நிழலில் அவள் வளர்க்கப்பட்டாள். வனக்குடிலில் அவள் சோர்வுற்று திசையெங்கும் விரிந்து ஒளிதூங்கும் விண்மீன்களை நோக்கியிருப்பாள். ஓடும் ஆற்றின் கரைநுரைகளில் சிதறும் குமிழிகளை பார்த்துக் கொண்டிருப்பாள். அவளை அறியாது அவளுள் வாழும் பெண் ஒருத்தி உலகின் ஒவ்வொரு அழகையும் நுண்மையையும் சிறகுரசும் அலகெனக் கோதிக்கொண்டே இருப்பாள். தனிமை எனும் விரட்டக் கடினமான நிச்சயமான ஒன்றை அவள் ஓயாது போக்குவது படைக்கலப் பயிற்சிகளிலேயே. சொற்களை விட எண்ணிச் செருமித் துயருற்று மாய்வதை விட படைக்கலங்கள் சொல்லும் மெய்மை தெளிவானது. அவை உரையாடும் மொழி அவற்றின் இலக்குகளைப் போலவே நிச்சயமானது. கூழாங்கல்லின் மேல் நிலை கொள்ளத் தவிக்கும் வண்டெனத் தன்னை எண்ணிக் கொள்வாள் மாலதி. எதையும் பற்ற முடியாத வழுக்குக் கல்லென வாழ்க்கை அவள் முன் அமர்ந்திருக்கிறது. சொல்லற்ற மெளனத்துடன். அதன் மேல் அவள் அத்தனை பற்றுடன் பிடித்துக் கொண்டிருப்பது எதையென அவள் எண்ணிக் கொள்வதுண்டு.
தன் கனவுக்குள் நுழையமுடியாதபடி தன்னைத் தான் போருக்குள் நுழைத்துக் கொண்ட விந்தையை எப்பொழுதேனும் அரிய நினைவொன்றை நெடுங்காலம் கழித்து எண்ணிக் கொள்வது போல சிந்திப்பாள். உணர்ச்சிகளின் உலைக்கொதிப்பில் அவள் முன் இருந்தது போரா வாழ்வா எனும் இருபாதைகள். வாழ்க்கையில் அவள் முன்வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவள் பிறவற்றுடன் பிணைப்புக் கொண்டிருப்பாள். அவற்றையும் கோர்த்தே அவள் இழுத்துச் செல்ல வேண்டும். ஆனால் போர் அவளைச் சுற்றியிருந்த அனைத்துக் கொடிகளையும் அறுக்கும் படைக்கலத்தை அவளுக்குக் கொடுத்தது. அதைப்போலவே நிச்சயமான ஒரு மரணத்தையும் கனவையும் பரிசளித்தது. அவள் ஒவ்வொரு வரியிலும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்காமல் போரை விழைந்ததற்கான காரணத்தை பிறருக்குச் சொல்வது போல தனக்குத் தானேயும் சொல்லிக் கொள்வாள். அவளது உரைகள் தங்கள் உளத்தின் ஆழங்களிலிருந்து பிறக்கின்றது எனப் பெண்புலிகள் சொல்வது அதனாற்தான். அவளே கூட அங்கு ஆயிரமாய் கூந்தல் முடிந்து கட்டி அமர்ந்திருக்கும் பெண் தோழியர் அனைவரும் என அவள் சிலபோதுகளில் காட்சி மயக்குக் கொள்வதுண்டு. ஆயிரமாயிரம் ஆடிகளுக்கும் முன்னர் தன்னை ஒருத்தியாய் உணர்ந்தவளின் சொற்கள் அவை. தனித்த பெண்ணுள் ஒலிக்கும் ஆயிரமாயிரம் குரல்களின் கார்வை அவளில் ஒலிப்பதும் அங்கனமே.
செண்டுவெளியை நோக்கி காவல் மேற்பார்வைக்கென அவள் கவசங்கள் பூணவேண்டிய நேரம் நெருங்கியதை உளத்தால் உணர்ந்து விழி திறந்தாள். மென்மஞ்சள் நாக்கென நீண்டிருந்த அகற் சுடர் மேல் மேல் என எரிந்து கொண்டிருந்தது. தீக்குத் தாழ்வில்லை என எண்ணிக் கொண்டவள் தன் நெற்றியைச் சற்றுக் குவிமையத்தில் அழுத்தி காயம் போன்று வலிக்கும் தலைவலியை உணர்ந்து கொண்டாள். உடலை எழுப்பும் ஆலய மணி போல.
எழுந்து கவசங்கள் பூண்ட பின்னர் அவ்வறையில் ஆடியில்லை என எண்ணிக் கொண்டாள். அவள் எங்கனம் பிறர் முன் தோன்ற விழைகிறாளோ அதுவாகவே அவள் தன்னைக் கற்பனை செய்து கொள்வாள். நிமிர்ந்த செங்கோலென முதுகுத்தண்டும் இரண்டு கூர் வாள்களெனக் கரங்களும் அரச வேழமென நடையும் தொல் தெய்வங்களின் நோக்கின்மையென விழிகளும் கொள்வது அவள் வழமை. உடல் தானாகவே அவள் அமைவை இருளிலும் பூண்டு கொள்ளும். கனவுக்குள் இருந்து விழித்துக் கொள்பவளின் அன்றாடமென அது அங்கேயே அவ்வுருவிலேயே காத்துக் கொண்டிருக்கும். அவள் தன் விரல்களால் அனைத்தையும் தொட்டு அறிந்தாள். அகவிழிகளால் தன்னைத் தான் நோக்கிக் கொண்டாள். முகத்தை குளிர்நீரால் விசிறித் துலக்கினாள். குளிர் முகத்தை வந்தறைந்த சிலகணங்கள் தலைவலி ஆடும் திரைச்சீலையென விலகிச் சேர்ந்ததைக் கண்டு கொண்டாள்.
இளமழைக் குளிர் காற்று நீர்க்குமிழ்களின் முத்தங்களெனச் சிலிர்த்துக் கொண்டிருந்தது. தளபதி மாலதி வெளியில் வந்து தன் உடைவாளில் இடக்கையை சிலைப்பிடியைப் போல வைத்துக் கொண்டு உலகளந்தோனைச் சுற்றியிருந்த இளையவர்களை நோக்கினாள். மீசைகள் பூனைக்குட்டிகளின் மேனிமயிர்கள் போல மெதுமையாகத் தோன்றும் அறியா இளம் பிள்ளைகள். உலகளந்தோன் அவள் அங்கிருப்பதையே அறியாதவெனன நோக்கை அமைத்துக் கொண்டு இளையவர்களின் ஆவல் கொழிக்கும் வதனங்களை உற்று சொல்லெடுத்தான்.
“இளையோரே. மானுடம் எனும் பெருவேழத்தின் இயல்பை அறியாதவர் அதன் மேல் அமர முடியாது. வெறும் பாகனெனவும் நின்றிருக்க இயலாது. ஒவ்வொரு குழவிக்கும் ஒரு வினா. ஒரு ஊழ் அமைக்கப்படுகிறது. அந்த வினாவை வென்றமைபவர் அவ்வேழத்தின் மேல் மழலையெனத் தாவி அதை அன்னையெனத் தழுவக் கூடியவர். மானுடரில் அத்தையோர் அரியர். அவர்களே மானுடத்தின் கனவெல்லையை விரிப்பவர்கள். ஒரு போர் வீரன் அவனது உயிரைப் படைக்கலமென ஏந்தி அதற்கெனப் போரிடுகிறான். ஒரு அரசன் தன் நெறிகளால் அறிதலால் கனவால் அதை தலைமை ஏற்கிறான். குடிகளால் அவை கற்கப்பட்டு விவாதிக்கப்பட்டு பண்பாடென நிலைகொள்கிறது. ஒவ்வொரு அரசும் பல்லாயிரங் குடிகளின் பொதுக்கனவு. அதை எங்கனம் காண வேண்டுமென அவர்களே உரித்துடையவர்கள். அதன் முதன்மைக் காவல் வீரமே. அச்சமற்ற அகமே வீரம். அன்னையிடம் தன் குழவிக்கென எழும் சீற்றத்தின் தூய்மையே வீரம். மானுடத்திற்கெனத் தன் நெஞ்சைப் பிளந்து குருதியளிப்பதுவும் அதுவே. அன்னையே இங்கு எழும் முதல் தெய்வம். அவள் ஒரு கனவு. அதைக் காண்பவர்களின் அகத்தின் ஒரு சொல்” என்றான் உலகளந்தோன்.
தளபதி மாலதி இளமழைக்குள் இறங்கி இளம் சிம்மத்தின் செருக்கு மிக்க நடையுடன் உலகை நோக்கியபடி நோக்கு அகன்று சென்றாள். இளம் பெண்களின் குறுநகைகளும் புன்னகைகளும் அவளைத் தொட்டுத் தொட்டு உதிர்ந்தன. அனைத்துக்குமென ஒரு முகம் கொண்டவள் போல.
விண்யாழி தன் தோழர்களுடன் சொல்லாடிச் செல்வதைக் கண்டு திசை பெயர்த்து நோக்கினாள். அவள் தன்னைப் பிறருலகின் எதுவாகவும் எண்ணிக் கொள்வதை சித்தத்தால் மறுப்பவள். ஆனால் எளிய அகமோ அன்னை அன்னை எனக் கூவுவது. மாலதியின் சீர்மையான பொலிகதிர் கருமுகம் வசீகரம் கொண்டது. நோக்குபவர்களை ஆழியென்றும் தன்னை அதை ஆர்க்கும் விசையென்றும் அறிந்து கொண்டு எவரோ ஆக்கிய முகம் அது. அதில் விழிகள் மாயமின்மையின் பேரழகு கொண்டது. பல்லாயிரம் நுண் ஆபரணங்களால் நெய்யப்பட்ட ஒரு மேனிக்கும் எளிய மெல்லாடை கொண்ட மேனிக்கும் உள்ள பிறிதொன்றாகி நிற்றலின் அழகு. தளபதி மாலதியின் தேகத்தில் உறுமும் புலியொன்றின் விதிர்ப்பு நீர்த்தடாகத்தைத் தடவிச் செல்லும் காற்றலைகளென ஓடிக்கொண்டிருக்கும். இருகைகளால் அவள் தன் இரட்டைப் புரிப்பின்னல்களை சுழற்றிக் கட்டிக்கொண்டு வில்லை எடுத்து நாணை ஒரு விசிறல் ஒலித்து அம்பைப் பொருத்தி களம் நின்றாளென்றால் தெய்வங்களுடன் பொருதும் மூர்க்கம் கொண்டவள். குழவியொன்று தன் கனவில் தன்னைப் பெருங்களப் புலியெனக் கண்டு கனவுக்குள் விழித்துக் கொண்டதைப் போல அவள் உருமாறுவாள்.
அவளின் போர்க்கதைகள் பாணர்களுக்கு தெய்வத்தின் உருவாட்டு. நாக்கில் குறுவாளால் கீறிக் கொண்டு குருதி படர ஓநாய்களென நக்கிக் கொண்டே மாகளச்சூரி. வில்லேந்திய இடும்பி. தாயன்னை எழுந்தவள் எனக் கூவுவார்கள். பெண்கள் மேனியதிர உடல் விதிர்த்து அம்புநுனியால் அறியாக் கணம் முத்தமிட்டதைப் போலத் தொடங்கி. உடுக்கின் திசைதிகை ஆட்டம் போல் எழுந்து மகுடியெனச் சரிந்து நீண்டு. பறையும் முரசும் சங்கும் முழங்கும் போர்க்களம் நடுவே குருதியாட்டு எழுந்த தொல்பெண் தெய்வங்களென விரிந்து வெறியடங்கா நாகமெனச் சரிந்து சீறல் கொண்டு மஞ்சள் நீர்தெளித்து எழுந்து அன்னையே எனக் எண்ணச் செய்பவள். அத்தகைய விழவுகளை மாலதி கேள்வியுற்ற போது முதலில் புன்னகைத்தாள். பிறகு அது எவருக்கோ என எழும் தெய்வத்தின் கதையென எண்ணி அதிலிருந்து விலகினாள்.