கருணையான பைத்தியம்
எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவி
அந்தப் பைத்தியம் தனக்குத் தானே
சட்டையைக் கிழித்துக் கொண்டது
ஒரு பைத்தியத்துக்கான
சர்வ லட்சணங்களும் பொருந்தி வர
ஏதாவது ஒன்று குறையும் பொழுது
கருணை அதை நிகர்த்த உதவுகிறது
குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்க
கொடி படரத் தேரைக் கொடுத்து விட்டு
நடந்து செல்ல
மகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாக
வலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்தி
இங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக
நண்பர்களே
கடைசி மோதகத்தில் ஒரு தங்கக் காசெனக் கருணை அளிக்கப்பட்டிருக்கிறது
காத்திருக்கும் எவரோ ஒருவர் அந்த வரிசையில் கடைசியில் நிற்கிறார்
அந்த நாணயத்தின்
புழக்கமில்லாத சந்தையில்
அதை நீட்ட முடியாமல் அவரது கரம் தயங்கித் தயங்கி ஒளிந்து கொள்கிறது
கருணையோடு இருக்கும் பைத்தியத்தின் முன்
ஒரு நாய்க்குட்டியென.