ராஷ்மோன் மனநிலை

ராஷ்மோன் மனநிலை

ஆம், அப்படித் தான் சொல்ல முடியும் எளிமையான ஒரு கதை. விசாரணையின் பின் அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது கைவிடப்பட்ட கோயிலின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்கும் துறவிக்கும் கிழவனுக்கும் வழிப்போக்கன் ஒருவனுக்குமிடையில் இடம்பெறும் உரையாடலாகவே காட்சிகள் அகல்கின்றன. காட்டு வழியால் செல்லும் போது ஒரு திருடனால் தனது கணவன் தோற்கடிக்கப்பட்டு கட்டப்பட்ட பின்னர் மனைவி பாலியல் உறவுக்கு உட் படுத்தப்படுகிறாள். அதற்கான விசாரணை இடம்பெறுகிறது அதன் போது குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்டவர்கள், அதன் பிறகான சாட்சிகள் ஆகியன விசாரிக்கப்படுகின்றன. அவற்றில் எது நியாயம் எது உண்மை ஏன் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற தரப்புக்களை பற்றிய விவாதம் தான் படம்.

படத்தின் சில காட்சிகளையும், அதனூடாக சித்தரிக்கப்படும் மனித அக நிலையும் மிக விரிவான ஒன்று. முதல் குறிப்பிட்ட ‘ஞான்’ சமீபத்திய காலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம், ‘ ராஷ்மோன்’ 1950 களில் வந்த படம் இரண்டுக்குமிடையில் ஏராளமான கால இடைவெளி உண்டு. ஆனாலும் இரண்டுக்குமிடையில் ஒரு தொடர்ச்சி உண்டு. அது உரையாடும் மனநிலை காலங்களுக்கிடையில் வேறுபடவில்லை. இங்கு பாத்திரங்களும் சூழலும் தான் வேறுபடுகின்றது. ராஷ்மோனினதும் சில பகுதிகளை எடுத்து உரையாடுவது மேற்சொன்ன மனநிலைகளுடனான தொடர்ச்சி பற்றி சிந்திக்க உதவும்.

ராஷ்மோனின் பிரச்சினை அந்த வழக்கு. அந்த வழக்கில் ஒரு திருடன், ஒரு பெண், அவள் கணவன் ஆகியோரின் கதைகள். மூன்றும் மூன்றுவகையான கதைகள். இவற்றை ஏன் இவர்கள் சொல்கிறார்கள். ஒரே வழக்குத் தொடர்பில் ஏன் இப்படி ஒரு நிலை. ஒவ்வொருவரும் தனக்கான நியாயங்களை எப்படி உருவாக்கிக் கொள்கிறார்கள். எதை நம்ப விரும்புகிறார்களோ அதுவே நடந்ததாக தங்களையும் நம்ப வைத்துக்கொள்கிறார்கள். அதற்குள்ளிருக்கும் ஆழமான மனித உறவுகளுக்கிடையிலான சிக்கல் தன்மையும், பாவம், நியாயம் ஆகியன பற்றிய விவாதங்களும் ராஷ்மோனின் மனநிலையாக உள்ளது. ஆழமான பாவம் ஒரு தீராத தொடர்ச்சி. மனிதர்கள் பாவங்களுக்கிடையில் முடிவற்று ஒன்று மாறி ஒன்றுக்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு உயிர்த் தொகுதி.

ஆக இந்த மூன்று கதைகளின் பின்னர், அந்த சாட்சியான கிழவனும் ஒரு கதையைச் சொல்வார். இது தான் நடந்தது. நான் எனது கண்களால் பார்த்தேன் என்று. அது இன்னொரு கதை. யாருடைய கதையுமே ஒன்று இன்னொன்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக இந்த நான்கு கதைகளிலும் வெளித்தெரியும் மனித மனத்தின் பாவத்தின் நிழல் விழுந்த பக்கங்களை துறவி பார்க்க முடியாமல் தவிர்த்து ஓடுகிறார். அவர் மனிதர் மீது நம்பிக்கை கொண்டவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.

“மனிதர்கள் சக மனிதர் மேல் நம்பிக்கை வைக்கவில்லையென்றால் உலகம் நரகமாகிவிடும்” என்பார்.

அந்த வழிப்போக்கன், ” ஆம் உண்மை தான் இந்த உலகம் நரகம் தான்”

“இல்லை, நான் மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்”

“இந்த இடம் நரகமாகுவதற்கு நான் விரும்பவில்லை”

” நீங்கள் சத்தமிடுவது உதவாது, சிந்தியுங்கள் இந்த மூன்று கதைகளில் எது நம்பத்தக்கது.’

இவ்வாறு இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது அந்தக் கிழவன். ” ஒன்றும் தெரியவில்லை” என்று சொல்வார். அதன் போது வழிப்போக்கன், “முடிவில், மனிதர்களின் செயல்களை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை”

அதன் பின், அந்தக் கைவிடப்பட்ட கோயிலின் இன்னொரு பகுதியிலிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கும், சென்று பார்ப்பார்கள். வழிப்போக்கன் குழந்தையை மூடியிருந்த துணிகளை எடுக்க, கிழவன் அவரைத் தடுத்தபடி என்ன செய்கிறாய் நீ என்று கேட்பர். துறவி அந்தக் குழந்தையை எடுத்துக் கொள்வார். “உனக்கென்ன ?” என்பார் வழிப்போக்கன்.

கிழவர், “அது பயங்கரம் “.

வழிப்போக்கன், “பயங்கரம் ?, யாரோ ஒருவர் இந்தத் துணியை எடுக்கப்போகின்றார், நான் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது.”

கிழவர்,”இது மிருகத்தனமானது “

வழிப்போக்கன், ” மிருகத்தனமானது?, இந்தக் குழந்தையின் பெற்றோரைப் பாருங்கள். அவர்கள் சந்தோசமாக இருந்து விட்டு, இப்பொழுது போய் விட்டார்கள். அவர்கள் தான் மிருகத்தனமானவர்கள்.”

கிழவர், “இல்லை, நீ தவறு. இந்தத் துணியைப் பார். இந்தக் குழந்தையைப் பாதுகாக்கவே அவர்கள் இந்தத் துணியை விட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசித்துப் பார், அவர்கள் எந்தமாதிரியான நிலவரத்தில் இந்தக் குழந்தையை விட்டுச் சென்றிருப்பார்கள்.”

வழிப்போக்கன், “எல்லோருடைய உணர்வுகளையும் விளங்கிக்கொள்ள எனக்கு நேரமில்லை.”

கிழவர், ” நீ சுயநலவாதி”

வழிப்போக்கன்,” அதில் என்ன தவறிருக்கிறது?, நீங்கள் சுயநலவாதியாக இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ முடியாது”

கிழவர், “எல்லோருமே சுயநலவாதிகள் நேர்மையற்றவர்கள், தமக்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்பவர்கள், அந்த திருடன், பெண், ஆண், நீ ” என்று கோபத்தில் அந்த வழிப்போக்கனுடன் சண்டை பிடிப்பார். அப்பொழுது,” அத்துடன் நீயுமில்லையா. இது வேடிக்கையாக இருக்கிறது. நீ தான் நீதிமன்றத்தை ஏமாற்றினாய். நான் இல்லை.’ என்றபடி வழிப்போக்கன் கதைப்பான். இறுதியில் அந்த குற்றச் சம்பவ நேரம் தொலைத்து போன முத்துப்பதித்த கத்தியை நீ தான் எடுத்திருக்க வேண்டும். அதை யார் திருடினார் என்று வழிப்போக்கன் கேட்டு சிரிப்பார். சிரித்துவிட்டு, அப்படியென்றால் நான் செய்வது சரி என்று சொல்லிவிட்டு, “ஒரு திருடன் இன்னொருவரனைத் திருடன் என்கிறான். சுயநலவாதியா!” என்று சொல்லிவிட்டு கிழவனை அடித்துவிட்டு சென்றுவிடுவான்.

துறவி விம்மியபடி இதனைப் பார்த்துக்கொண்டிருப்பார். மழையில் நனைந்தபடி வழிப்போக்கன் பெருத்த சிரிப்புடன் செல்வார்.

மழை ஓயும் வரை கிழவரும் துறவியும் பேசிக்கொள்ளவில்லை. அப்படியே நின்று கொண்டிருப்பார்கள். குழந்தை அழ ஆரம்பித்ததும் துறவி கொஞ்சம் நடக்க குழந்தையை வாங்குவது போல் கிழவர் தொட ஆரம்பிக்க,” என்ன செய்கிறாய் நீ ” என்றபடி குழந்தையை அவரிடம் கொடுக்காமல் விலத்துவார். அதில் ஒரு கொடியவனிடமிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் வேகம், ஒரு தடவை கூட அவர் அந்தக் குழந்தையை தொட்டுவிடக் கூடாதென்ற தவிப்பும் இருக்கும், ஆனால் ” எனக்கு ஆறு குழந்தைகள். இன்னொரு குழந்தை எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.” கண்களில் நீர் தளும்பியபடி உருக்கமான முகபாவத்துடன் கிழவர் நிற்பார். ” நான் அப்படிச் சொன்னதற்காக வெட்கப்படுகிறேன்” என்று துறவி சொல்லும்பொழுது “இது தவிர்க்க முடியாதது, இந்த நாட்களில் ஒருவரையொருவர் நம்புவது கடினம், நான் தான் வெட்கப்பட வேண்டியவன். நான் என்னுடைய சொந்த ஆன்மாவை புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேன் ” என்று தலையைக் குனிவார் கிழவர். அதற்கு, தாங்க முடியாத பாவத்துடன், “இல்லை, நான் உங்களை மதிக்கிறேன். உங்களுக்கு நன்றி. நான் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை தொடர முடியும் என்று நினைக்கிறேன்” என்று சொல்லியபடி துறவி அந்தக் குழந்தையை கிழவரிடம் கொடுப்பார்.

ஞான் கதையிலும் ராஷ்மோன் கதையிலும் ஏதோ ஒரு அக இணைப்பு நிகழ்கிறது அது மானுட மனத்தின் இரண்டு பக்கங்களை விவாதிக்கிறது. இதனாலேயே ஒன்றை ஒன்று நிரப்பும் படங்களாக ஏதொவொருவகையில் மனத்தின் ஆழமான பகுதிகளை விவாதிப்பதாக அமைந்து விடுகிறது.

அறம் தான் இரண்டின் மையமும். நாம் தேர்ந்தெடுக்கும் அறம் என்பது என்ன? நாம் நம்பும் அறத்திற்கு நாம் எவ்வளவு தூரம் நேர்மையாக இருக்கிறோம். ராஷ்மோனில் வரும் துறவியாக எங்களை கற்பனை செய்துகொண்டிருப்போம். ஆனால் தனது சொந்த ஆன்மாவை புரிந்துகொள்ள முடியாத கிழவனாகவே எஞ்சுகிறோம். ஆகவே இந்த அகச்சிக்கல்கள் சம காலத்தை பொறுத்தவரையில் முக்கியமானவையே. இந்தக் காலத்தில் யாரை நம்ப முடியும், நான் ஏன் சுயநலவாதியாக இருக்கக் கூடாது என்ற ஐம்பதுகளின் குரலும், நீ இன்னொன்றின் தொடர்ச்சி. தொடர்ச்சி மட்டும் தான் என்ற அதற்குப் பின்னரான ஞானின் குரலும் இன்னும் செவிப்பறைகளை மோதிப்பிளந்து உள் நுழையும் வசனங்கள் தான். இரண்டு படமும் இயங்கும் காலகட்டம் ஒன்று தான். ஆனால் அந்தக் குரல்களை சினிமா வெளிப்படுத்தும் காலங்கள் வேறு. அதற்கான தேவையின் அவசியமாகத் தான் இந்தக் காலத்திலும் ஒரு ஞான் தேவைப்படுகிறது.

குழந்தை ஒரு மகத்தான படிமம். மனித குலத்தின் மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை தொடர முடியும் என்பதை இன்னொருவருக்கு கையளிக்கும் துறவியின் படிமம் அது. குழந்தை மானுட குலத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. சக மனிதனே நரகம் என்ற இருத்தலியத்தின் குரல் எங்கு திரும்படினும் மோதும் போதும், குழந்தைகள் மனிதர்கள் இல்லை என்பது போன்ற ஒரு பாவனை நமக்குத் தேவையாக இருக்கிறது. ஒட்டுமொத்த நம்பிக்கையையுமே குழந்தைகளிடம் கொடுக்கவேண்டியிருக்கிறது, ஏனென்றால் அது மனிதரல்ல. குழந்தை. அப்பழுக்கற்றது. ஆக ஏதோ ஒன்றை அதன் காலத்தில் மாற்றி விடலாம். இந்த அகச் சிக்கல்களைக் கடந்த மானுட அறம் ஒன்றை உருவாக்கி விடலாம் எனும் மாபெரும் இலட்சியவாதத்தின் படிமம் தான் குழந்தை.

அந்தக் குழந்தைகளின் காலத்திற்கான எளிமையான கேள்வி தான் நாம் எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம் என்பது, “வாழ்க்கைக்கான ஏதோ ஒரு நியாயத்தையா அல்லது
நியாயத்திற்காகத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையையா?”.

(2017)

(கரவொலி)

TAGS
Share This