பவளக்கொடி
வாழ்க்கையைப் போல இவ்வளவு பின்னல்கள் கொண்ட கதையை எந்த எழுத்தாளராலும் எழுத முடியாது என்ற உண்மையைச் சந்திரன் டெய்லருக்கு நான் நூற்றியெட்டாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கூர்மையில் கிளி போன்றதும் அகலத்தில் கறி மிளகாய் போன்றதுமான அவரது மூக்கில் மூக்குக் கண்ணாடி அரைவாசிக்கும் கீழே வழுக்கியிருந்தது. இடையிலிருந்த யன்னல் அளவு இடைவெளியால் சந்திரன் டெய்லர் என்னை நிமிர்ந்து பார்த்த பின்னர் நூற்றியெட்டு முறையும் அளித்த அதே பதிலை தையல் மெசினைக் காலால் உதைத்துத் தாளமிட்டபடி ஊசி தைத்திறங்கித் திரும்ப ஏறும் வேகத்தில் சொன்னார். “எல்லாப் பின்னலும் பவளமக்கா தைக்கிற பிளவுஸ் பின்னல் மாதிரி வராது எழுத்தாளரே. பிரம்மனுக்கே பின்னல் பிரிஞ்சிரும். அப்பிடியொரு பின்னல். அவா சொல்லுவா. நான் தைப்பன். இந்த ஊசி முனையும் ஒரு எழுத்தாணி தான்” என்று சொல்லிய பின்னர் உதடுகளை றப்பர் போல விரித்துச் சிரித்து விட்டு முதுகை நேராக்கி பின்னர் துணியின் விளிம்பை விழியிழந்தவர் பெண் தேகத்தைத் தொடுவதைப் போல தடவினார். சந்திரன் டெய்லர் மென்மையான கருதேகங் கொண்டவர். இடதுகால் தையல் மிசினை மிதித்து மிதித்து இறுகியிருந்தது. தைக்கும் பொழுது இடக்காலையே மிதிபலகையில் வைத்திருப்பார். முழங்கால் வரை ஜீன்சை மடித்து விட்டிருப்பார். இடது காலும் வலது காலும் அண்ணன் தம்பி போலவிருக்கும். கைகளோ நூலைப் போல மென்மையானவை.
தையல் கடையின் முன்னால் தூங்கிய வெள்ளை மின்குமிழில் சிலந்தி வலையொன்று பின்னல்கள் போல ஆடிக்கொண்டிருந்தது. மழையின் மெல்லிய சிலம்பற் தூறல் கொட்டிக் கொண்டிருந்தது. எனது மோட்டார் சைக்கிள் எருமை போல நனைந்து கொண்டே என்னைப் பார்ப்பதை உணர்ந்தேன். “அப்பச் சரி. நான் வரட்டே” என்றேன். கத்தரிக்கோலால் மூலைத் துண்டொன்றை பற்களைக் கூச வைக்கும் ஒலியுடன் வெட்டியபடியே “அப்ப உங்கட அடுத்த புத்தகம் எப்ப” என்றார். “உங்களுக்கு அடுத்த சாறிய பவளமக்கா எப்ப தைக்கத் தருவாவோ. அப்ப தானே எனக்கு நீங்கள் கதை சொல்லுவியள்” என்றேன். எனது நக்கலைக் கேட்காதவரைப் போல மூக்கில் வழுக்கி விளையாடிக் கொண்டிருந்த கண்ணாடியை யன்னலைச் சாத்துவதைப் போல வேகமாக இழுத்து விழிகளுக்கு நேராக விட்டபடி “எழுத்தாளரே. மனுசருக்கு கதை கேக்க இப்ப எங்க நேரமிருக்கு. நீங்கள் பவளமக்கா தைக்கிறது போல எழுதினால் வரிசத்துக்கு பத்திருபது புத்தகம் போட்டிருக்கலாம். என்ன சிக்கலெண்டால். அவாவையெண்டாலும் கோயில்லையோ விசேசங்களிலையோ ஆரும் பாத்து சாறி வடிவா இருக்கெண்டாவது சொல்லுவினம். ஒரு சில ஆக்களாவது பிளவுஸ் எங்க தைச்சதெண்டு கேப்பினம்.
உங்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. ஒருத்தரும் வாசிக்கப் போறதில்ல. சனமெல்லாம் பேஸ் புக்கில தான் கிடக்குது. நான் கூட பவளக்கொடி சுந்தரமூர்த்திக்கு ரிக்குவெஸ்ட் குடுத்திருக்கிறன். இன்னும் அக்சப்ட் பண்ணேல்ல. அதில பாருங்க. அந்த பேஸ்புக்கில அவா சின்ன வயசுப் படம் தான் போட்டிருக்கிறா. அவா ஒரு படம் போட்டால் எத்தினை லைக் வரும் தெரியுமே. நானே வெக்கத்த விட்டு லைக் போடுறனான். மனுசி இன்னும் என்னை அக்சப்ட் பண்ணேல்ல. அப்பிடி ஒரு மார்க்கெட் உங்களுக்கு இருக்கோணும்” என்றார்.
அவரது மெய்யான ஏக்கத்தைக் கண்டு எனக்குச் சிரிப்பு வர அடக்கிக் கொண்டே “நான் வேணுமெண்டால் அவாவோட கதைச்சுப் பார்க்கட்டே. ஏன் சந்திரன் அண்ணையை இன்னும் அக்சப்ட் பண்ணேல்ல எண்டு” என்றேன். தாளமிட்ட கால்களை நிறுத்திய சந்திரன் டெய்லர் “எழுத்தாளரே. நாங்கள் பழைய ஆக்கள். ஒரு ரிக்குவஸ்ட்டை அக்சப்ட் பண்ணுறதெண்டா. லவ் லெட்டர் குடுத்த ஆளுக்குத் திருப்பி றோசாப்பூத் தாற மாதிரி. அதெல்லாம் உங்களுக்கு விளங்காது. நடக்கிற நேரத்தில அதுவா நடக்கட்டும்” எனச் சீரியஸாகச் சொல்லிக் கொண்டிருந்தார். “எனக்கு நேரம் போட்டுதண்ணை. மழையும் பிடிச்சால் விடாது. வாறன்” எனச் சொல்லிய பின்னர் மோட்டர் சைக்கிளைத் திருப்பி கருந்தங்கமென மினுங்கிக் கொண்டிருந்த மெயின் றோட்டில் ஏறினேன். திரும்பி சந்திரன் டெய்லரின் கடை முகப்பைப் பார்த்தேன். “பூரணி தையலகம்” என்ற வண்ண எழுத்துகளுக்கு அருகில் ஒரு ஆண் ஜீன்சும் சேர்ட்டும் போட்டபடியும் ஒரு பெண் கட்டை கவுண் போட்டபடியும் ஸ்ரைலாக நடந்து வரும் சித்திரம் மழையில் கழுவப்பட்டுக் கொண்டிருந்தது. சந்திரன் அண்ணையும் பவளக்கொடி அக்காவும் என நினைத்துச் சிரித்த பின்னர் மோட்டர் சைக்கிளை முறுக்கினேன்.
மழைக்காலத்தில் குருவிக்காட்டு வீதியால் வீட்டுக்குச் செல்வது காட்டை வழி மறித்து ஓடிக்கொண்டிருக்கும் முதலைகள் அசமந்தமாய் அரைந்து செல்லும் கறுப்பு நதியால் போவது போன்றது. இரண்டு பக்கமும் கண்டல் காடுகள். பச்சை இருளில் மழையில் நனைந்து சிலிர்த்துக் கொண்டிருக்கும். தேங்கியிருக்கும் நீர்த்தரைகளில் மழைத்துளிகள் பட்டுப் பல்லாயிரம் வட்டக் குமிழ்கள் விரிந்து இரைந்தபடி குருவிக்காடு ஒலியெழும்பிக் கொண்டிருக்கும். வீதியை மேவிப் பாயும் சிற்றோடைகளில் மோட்டார் சைக்கிள் போகும் பொழுது இரண்டு பக்கமும் நீராலான சிறகுகள் முளைப்பது போன்றிருக்கும். கால்களை உயர்த்தி நீர்ச்சிறகுகளுக்கு மேலே அந்தரத்தில் கால்களை பிடித்திருப்பது ஒரு இன்பம் தான்.
சந்திரன் டெய்லரின் காதல் கதையைச் சொல்வதில் சில அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன. இந்தக் காதல் கதைக்கும் தமிழீழத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. அவரது உலகம் தையல் மெசினை மிதிக்கும் பொழுது பறந்து செல்வதாய் இருக்கிறது. தமிழீழம் மண்ணிலிருக்கும் ஒரு அரசென்பதால் அங்கு அவரால் நிலை கொள்ள முடியவில்லை. ஆகவே இந்தக் காதல் கதைக்கு சர்வதேச அரசியல் முக்கியத்துவங்களோ மொழிபெயர்ப்போ நிகழப் போவதில்லை.
இரண்டாவது, இந்தக் காதல் கதை சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கதையுமில்லை. சந்திரன் டெய்லரும் பவளக்கொடி அக்காவும் ஒரே சாதி தான். சந்திரன் டெய்லர் பவளக்கொடி அக்காவை விட சாதி மான் வேறு. ஆனால் பின்னேரங்களில் வயல் வேலை முடிந்து செல்லும் பெண்களுடன் சில வார்த்தைகள் சொல்லாமல் அவர் அவர்களைக் கைவிடுவதில்லை.
மூன்றாவது முக்கியமான சிக்கல், இந்தக் காதல் கதை பெண்ணியப் புரட்சியும் அல்ல. பவளக்கொடி அக்கா சுந்தரமூர்த்தி மாஸ்ட்டரின் மீது கட்டுக்கடங்காத புருச பக்தியும் கற்பினால் கயவர்களை எரிக்கும் நோன்பும் கொண்டவர். ஆகவே சந்திரன் டெய்லரின் காதல் ஆணாதிக்க ஒழுங்கின் சிறப்பான தருணங்களில் ஒன்றாகவும் பவளக்கொடி அக்கா இமை தாழ்த்தாமல் ஒரு சொல்லும் பறைவதில்லை என்ற கடுநோன்பையும் கொண்டிருந்தார்.
நான்காவது சிக்கல் இந்தக் காதல் கதையை மானுடத்தை முன்னகர்த்தும் தேராக ஆக்கிக் கொள்ள முடியாமை. இந்தக் காதல் கதை படு பிற்போக்கானது என்பதை முன்னரே சொல்லிவிடுவது இதை வாசிக்கும் புரட்சியாளர்களுக்கு முன்னரேயே நேரத்தை மிச்சப்படுத்தி புரட்சிகர வசனங்களை மனப்பாடம் செய்ய நேரமளிக்கும்.
மேற்கொண்டு சாமானிய வாசகர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் தமிழிலக்கியத்தின் நூறு சிறந்த சிறுகதைகளின் பட்டியலில் உள்ளடக்க முடியாத இந்தக் கதையை ஏன் நான் எழுத வேண்டியிருக்கிறது என்பதைச் சற்று விளக்கியாக வேண்டும். காதல் விந்தையானது. அதற்கு நேரங்காலமில்லை. வயசு பேதமில்லை. ஆண் பெண் இல்லை. கனவும் நனவும் இல்லை போன்ற பல செய்திகளைச் சொல்லும் பலநூறு கதைகளை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். அது மெய் தான். சந்திரன் டெய்லரின் கதை மானுடர்களில் இதற்கு முன் நிகழாத பெரிய அதிசயமொன்றுமில்லை. எப்போதும் இங்கு இருந்து கொண்டுமிருக்கும் ஒன்று. ஆகவே நம் இலக்கியப் பேராசான்களின் கருத்துகளின் படி ஒரு இலக்கியம் என்பது என்றைக்குமுள்ள பிரச்சினையைத் தொட்டாலே அது சாஸ்வதமாகும். அந்த வகையில் சந்திரன் டெய்லரும் பவளக்கொடி அக்காவும் சாஸ்வதமான ஒரு கதையின் இரண்டு மையப் பாத்திரங்கள். சாஸ்வதமான எந்தக் கதையினதும் மையப் பாத்திரங்கள் துயரமானவை. வாழ்வின் அலகிலா ஆட்டத்தில் ஆடப்படுபவை. அவை அங்கனம் ஆட நோக்குவதை பொழுதுபோக்காகக் கொள்ளும் தெய்வங்களின் கைப்பாவைகள்.
அடுத்து சந்திரன் டெய்லர் ஒரு கடுமையான ஒழுக்கவாதி. அவரது ஒழுக்கம் தான் அவரை இங்கு வரை கொண்டு சேர்த்திருக்கிறது. சந்திரன் டெய்லருக்கு அவர் மாணவனாக இருந்த காலத்திலேயே பவளக்கொடி என்கிற பவளத்தை நன்கு தெரியும். ஒரே பாடசாலையில் தான் படித்தனர். பவளக்கொடியை பார்த்த சில நாட்களில் சந்திரன் பவளத்தின் சிட்டுக்குருவிக் குரல் போல ஒலிக்கும் பேச்சை விரும்பினான். ஆனால் சற்றே வளர்ந்ததும் பவளக்கொடி அவரை விட்டு விலகினார். சந்திரன் டெய்லர் கத்தரிக்கோலைக் கையில் எடுத்ததும் பவளக்கொடி அக்கா டெய்லரிங் படிக்கப் போனதும் ஒரே நாளில் என்பது எந்த ஆச்சரியத்திற்கும் உரிய தகவல் அல்ல.
சந்திரன் டெய்லர் முதலில் காதலர். பிறகு டெய்லர். மூன்றாவதாகக் கவிஞருங் கூட. பூரணி என்பது சந்திரன் டெய்லர் பவளக்கொடி அக்காவுக்கெனப் பார்த்துப் பார்த்து வைத்த ரகசியப் பெயர். அவர் எழுதிய முதற் கவிதை அந்தப் பெயர் தான் எனச் சொல்லுவார். கவிதையில் அமையும் சொல்லுக்கு அர்த்தமும் அர்த்த விரிவும் அதற்கு அளிக்கப்படும் பொருளால் கவித்துவமாகுவது. பவளக்கொடி எனும் பொருளுக்குக் கவிதைப் பெயர் பூரணி என விளக்குவார். நான் ஒரு புனைவெழுத்தாளன் ஆயினும் எல்லா ஈழத்து புனைவெழுத்தாளர்களைப் போலவும் கவிதை தெரியாதவன்.
சந்திரன் டெய்லர் பவளக்கொடி அக்காவுக்கென எழுதிய நூற்றுக் கணக்கான கவிதை வரிகளை இரண்டு ஸ்ரோங் பியர்களின் பின்னர் அவரது குரலிலேயே கேட்கலாம். றேடியோவில் மிகத் துல்லியமாக அலைவரிசை ஒலிப்பது போல சந்திரன் டெய்லருக்குள்ளிருந்து கவிஞன் வெளியே வருவான். முதலில் அமைதியான கரடிக்குட்டியொன்றைப் போல தையலகத்தின் சுவரில் சாய்ந்திருப்பார். அவரது விழிகள் பொன்னிற மினுக்கம் கொண்டு மூக்குக் கண்ணாடிக்குள்ளால் மின்னத் தொடங்கிய பின்னர் காற்று சோலையை தலை கிளைவதைப் போலப் பாடத் தொடங்குவார். பெரும்பாலும் இளையராஜோவோ கங்கை அமரனோ தான். பாடிக்கொண்டே துண்டு துண்டாய் எழும் நினைவுகளைச் சொல்லுவார். சொல்லி முடிக்கும் கணத்திற்கு அருகில் சில வரிகளைச் சொல்லி அதைக் கவிதையென அவரே சொல்லுவார். “எழுத்தாளரே. கவிதை தெரியாதவன் கதை எழுத முடியாது. கவிதை தான் ஒவ்வொரு கதை முட்டைக்குள்ளையும் இருக்கிற குஞ்சு” என்பார். பிறகு தொடர்ந்து பாடி இடைக்கிடை கதை சொல்லி அதைக் கவிதையில் முடித்து ஏவறை விடுவார். பசிக்கத் தொடங்கியதும் தன் மனைவியைப் பற்றிப் புகார் சொல்லத் தொடங்குவார்.
ஒருமுறை புணர்ச்சிக் கலக்கத்தில் அவரது மனைவியைப் பார்த்து பூரணி எனக் கூப்பிட்டு விட்டார். அன்று முதல் தன்னை அவர் பூரணி என அழைப்பது காதலால் என்றும் அப்பெயராலேயே தன்னை அழைக்கும் படியும் சந்திரன் டெய்லரின் மனைவி சொல்லியிருக்கிறார். புணர்ச்சியின் உச்சத்தில் பூரணி என விளிப்பதை தேவாரத்திற்கு முன்னரும் பின்னரும் திருச்சிற்றம்பலம் சொல்வது போலத் தான் பாடி வருவதாகச் சொல்லுவார்.
அவரது ஒரே மகளையும் அவர் ஏசுவதற்குத் தயங்குவதில்லை. இப்பொழுது உயர்தரம் கணிதப் பிரிவில் படிக்கிறாள். பவளக்கொடி அக்காவின் மூத்த மகனும் அதே தான் படிக்கிறான். அவன் சந்திரன் டெய்லரின் மகளுக்குக் காதல் கடிதத்தை வட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறான். ஆனால் அது சந்திரன் டெய்லரின் தொலைபேசி என அவனுக்குத் தெரியாது. அதுகூடப் பரவாயில்லை. சந்திரன் டெய்லரின் நம்பரிலிருந்து எவரோ அந்தக் கடிதத்துக்கு சிவப்பு இதயக்குறி அனுப்பியிருக்கிறார்கள். சந்திரன் டெய்லர் அந்தக் கடிதத்தை எனக்கு வாசித்துக் காட்டினார். சந்திரன் டெய்லரின் கவிதைகளை விட அந்தக் கடிதம் மேலானதாகவே தோன்றியது. ஆனால் சந்திரன் டெய்லர் அந்தக் கடிதத்தில் உள்ள நல்ல சொற்களை எடுத்து விட்டு அவைக்குப் பதிலாக ஒரு தூசணத்தைச் சொல்லி வாசிப்பார். ஒரு முறை போதை மயக்கில் பத்தாவது தடவையாக அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டி “கடிதம் எழுதிறானாம் கடிதம். போய் அவன்ர கொம்மாவுக்கு எழுதச் சொல்லு” என என் மூக்கைக் குறிவைத்துச் சுட்டு விரலை நீட்டியபடி பொம்மை போல நின்றார். “அது நீங்கள் தானே அண்ணை எழுத வேணும்” எனச் சொன்ன போது என்னை அடிக்கப் பாய்ந்து எழுந்து வந்து என் கொலரைப் பிடித்தபடி “டேய் எழுத்தாளரே. இது என்ன நீ எழுதிற அற்பக் கதையெண்டு நினைச்சியோடா. அவன் இவளுக்கு அண்ணை முறையல்லோ வருவான். அண்ணன் தங்கச்சிய லவ் பண்ணலாமே” என்றார். நானும் சற்றும் யோசிக்காமல் “ஓம்” எனத் தலையசைத்ததால் தப்பித்தேன். பார்ப்பதற்கு விறகுக் கட்டைகள் போலிருக்கும் அவரது கை கால்களுக்குள் இரண்டு பியர்களை ஊற்றுவது விறகுகளை எரிப்பது போன்றது. கொழுந்து விட்டு எரிவார்.
சந்திரன் டெய்லரிடம் பவளக்கொடி அக்கா ஆடைகளைக் கொணர்ந்து தைக்கச் சொல்லும் பொழுது நிலத்தை மட்டுமே நோக்கியபடி பதில் பேசுவார். அவரை ஒருக்கலும் நிமிர்ந்து நோக்கேன் என விரதம் பூண்டிருந்தார். ஆனால் ஒருதடவை இரண்டு ஸ்ரோங் உள்ளே சென்ற சந்திரன் டெய்லர் கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சும் ட்ராகுலா போல என் கழுத்திற்குப் பக்கம் வந்து “டேய் எழுத்தாளரே. அவளின்ர நிழலே கவிதை தானடா” என்றார். பியர் வாசம் மூக்கைத் துளைத்து அருவெருக்க வைக்கும் அவரின் வாய் நாற்றத்தைத் தாங்க முடியாமல் “நீங்கள் எதைப் பார்த்தாலும் சரிதான் அண்ணை” எனச் சொன்னேன். அவர் மெல்லச் சிரித்தபடி “குட் போய்” எனச் சொல்லியபடி ஏவறை விட்டார்.
பவளக்கொடி அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் கணக்கையும் டெய்லரின் மகளையும் பின்னிக் கொண்டிருந்தான். இளையவள் கதை பேச்சில்லாத ஆள். அமைதியே உருவானவள் போலத் திரிவாள். சந்திரன் டெய்லர் அவளையும் ஏசுவதற்குப் பின்நிற்பதில்லை. “அவளுக்கு தான் பெரிய வடிவெண்டு திமிர். உப்பிடித் தான் உவளின்ர அம்மாவும் சிலுப்பிக் கொண்டு திரிஞ்சவள். அமசடக்கி” என்பார். சொல்லிய பின்னர் “எழுத்தாளரே. குசுவடக்கியக் கூட நம்பலாம் அமசடக்கியள நம்ப ஏலாது” என்பார். அவரது சித்தாந்தங்களுடன் மோதுவது ஆபத்தானது எனத் தெரிந்த நானும் ஓம் என்பது போலத் தலையசைப்பேன்.
மழை சற்றுப் பலக்கத் தொடங்கவும் குருவிக்காட்டின் இடையிலுள்ள சுடலைக் கட்டடத்திற்குள் ஒதுங்கிக் கொண்டேன். சுற்றிலும் தாகமெடுப்பவை போல தவளைகள் கத்தின. இரையுமொலியால் ஆன கண்டல் காடுகள் மின்னல் வெட்டும் ஒளித்தெறிப்புகளில் பற்றியெரிபவை போலத் தோன்றின.
காதல் விந்தையானது என்பதை பல கதைகளிலும் அறிந்திருக்கிறேன். கதைகளில் வரும் காதல்களில் இரண்டே வகை தான் பிரதானமானவைகள். ஒன்று, உச்சபட்ச ஒழுக்கமுள்ள உக்கிரமான கனவுகளும் முடிவுகளும் கொண்டவை. ரோமியோ ஜூலியட், வெண்ணிற இரவுகள், ராமாயணம் கூட அப்படித் தான். காதல் என்பது உக்கிரமானது என எண்ணும் கதைகள். இரண்டாவது வகையானவை பிறழ்வுகளின் காதல்கள். பிறழ்வுகள் ஒழுக்கத்தை மீறுவதனாலேயே அப்படிப் பெயர் பெறுகின்றன. காதலை ஒழுக்கம் எனும் கத்தரிக்கோல் வெட்டிச் செல்வது இரண்டே துண்டுகளாக அவற்றை ஆக்குவதற்காக என எண்ணினேன்.
சந்திரன் டெய்லர் ஒரு அப்பழுக்கற்ற ஒழுக்கவாதி. அவரது ஒழுக்கத்தில் மாம்பழத்தில் வண்டென வாழ்வது அவருக்கும் பவளக் கொடி அக்காவுக்குமான காதலே. அவரை அந்த வண்டு கேட்கவுமில்லை. மன்றாடவுமில்லை. எளிமையாகத் துளைத்து உள்ளே சென்று அரிக்கத் தொடங்கி விட்டது. சந்திரன் டெய்லர் அந்த வகையில் மட்டும் பாவம் என்றாலும் ஏனைய அனைத்து இடங்களிலும் அவர் கடுமையான ஒழுக்கசீலர். அவரது ஒழுக்கம் சின்னப் பிள்ளையும் அறியுமளவு புகழ் பெற்றது. சந்திரன் மாமாவிடம் சென்று உடுப்புத் தைக்கக் கொடுக்க இளம் பெண்களும் தயக்கமின்றிச் செல்ல முடியும். எவரையும் எள்ளவோ கிள்ளவோ மாட்டார். வாழ்க்கையில் மேம்பட சில தத்துவங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டே தைத்துக் கொடுப்பார். இளம் பெண்களிடம் “இந்த வயசில காதலிச்சால் பிள்ளை வாழ்க்கை கெட்டுப் போயிடும். அப்பா அம்மா பார்க்கிறவன் தான் நிலைப்பான். அரசல்புரசலாக் கேக்கிற கதையளைக் கதைக்கிற ஆளில்லை நான் எண்டு உமக்குத் தெரியும். ஆளப் பார்த்தே சொல்லிப் போடுவன். கண்ணாலேயே அளவெடுக்கிற ஆள்” என்று அவர் போடும் பீடிகைகளைக் கேட்பவர் காதலனே இல்லையென்றால் கூட தான் காதலிக்கிறேனா என ஐயங் கொண்டு அவர் கதையைக் கேட்குமளவு சந்திரன் டெய்லர் சொல்ஜாலக்காரனும் கூட.
பெடிப்பிள்ளைகளுக்கு அவரின் டெக்னிக் சற்று மாறுபட்டது. “அவளின்ர கொண்ணன் மாருக்குத் தெரிஞ்சா உடும்ப தோலுரிக்கிறதப் போல உரிச்சுப் போடுவாங்களடா. அவளின்ர அப்பாவை எனக்குத் தெரியும். மனுசன் கொல்லிப் போடும். பார்க்கத் தான் சேங்கு மாதிரி இருப்பான். ஆள் கடுமாள்” என அச்சமூட்டுவார். பயப்படாமல் நெஞ்சை நிமிர்த்தும் இளைஞர்களுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கி “அவள் சரியில்லையடா. நானே கண்டிருக்கிறன்” என அந்தப் பெண்ணைப் பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி விடுவார். இறுதியிலும் இறுதியாக அனைத்து வாதங்களையும் மறுத்து நிற்பவனுக்கு “அவள் ஒரு மாஞ்சானடா” என்று சொல்லுவார். அது ஓர் மல்டி பரல் போல அந்தப் பெடியனுக்குள்ளே இருந்து வெடித்துக் கொட்டுமென அவர் அறிந்திருந்தார்.
இப்படிக் காதல்களைப் பிரிப்பதால் அவரின் மேல் பெற்றோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயர்ந்திருந்தது. யாருக்கு எதை வெட்டி எதைத் தைச்சால் சரியா வரும் என்று சந்திரன் டெய்லருக்குத் தெரியும் என ஊர்வழக்கு ஒன்று நடைமுறையிலிருந்தது. ஆனால் ஊரே அறியாத அவரின் பரம ரகசியம் தான் பவளக்கொடி அக்கா. அவரைப் பற்றி என்னையன்றிப் பிறருடன் பகிரும் பழக்கமற்றவர். அந்த அளவில் ஏனைய ஆண்களை விட சந்திரன் டெய்லர் சற்று ஒழுக்கம் கூடியவர் என்பதை மறுப்பதற்கில்லை.
சந்திரன் டெய்லரின் கடையில் அவர் மட்டுமே பணியாள். இரண்டு மெசின்களும். குப்பை குப்பையாகத் துணிக் குவியல்களும் மூலைக்கு மூலை குவிந்திருக்கும். ஒரேயொரு மஞ்சள் வண்ண பையொன்று கண்ணாடிக்கு அருகில் ஆணியடிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் பவளக்கொடி அக்காவிற்கென அவர் தைத்த துணிகளிலிருந்து வெட்டிச் சேர்த்த துணிகள் நிரப்பப்பட்டிருக்கும். அது தன்னுடைய இதயம் என அவர் சொல்லிச் சிரித்தபடி “எழுத்தாளரே. ஞாபகத்தைச் சேகரிக்கத் தெரியாதவன் காதலிக்கிறதில்லை” எனச் சொல்லுவார்.
மழை சற்று அடங்கி மின்னல்கள் மட்டும் வெளித்து வெளித்துக் காட்ட தூவல்களாகக் கொட்டிய மழைக்குள் இறங்கி மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு பவளக்கொடி அக்காவின் ஒழுங்கையால் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். பவளக்கொடி அக்காவின் வீட்டு வாசலில் சிலர் அங்குமிங்கும் பரபரவென ஓடித் திரிந்தனர். ஒழுங்கையின் ஈரமணலின் மேல் மோட்டர் சைக்கிள் தடமிட்டபடி நகர்ந்து அவரின் வீட்டுக்கருகில் நின்றது. “என்ன நடந்தது” என்று இருளுக்குள் தட்டுப்பட்ட ஒருவரிடம் கேட்டேன். “சுந்தரம் மாஸ்ட்டர் மோசம் போய்ட்டார். ஸ்ரோக் ஆம்” என்றார். நான் மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனேன். பவளக்கொடி அக்காவின் சிரித்த முகம் நினைவில் எழுந்து எழுந்து அணைந்தது. மறுகணம் சந்திரன் டெய்லரின் சிரித்த முகம் குறும்புச் சிரிப்புடன் தோன்றியது. கூர்மையான கத்தரிக்கோல் நுனியில் வெளிச்சம் போல ஒரு சிரிப்பு.
*
ஒரு வருடமும் எட்டு மாதங்களும் கழிந்தன. நீண்ட காலங்களின் பின்னர் பவளக்கொடி அக்கா அருகிலிருந்த கோயில் திருவிழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அவரின் மகனது மோட்டர் சைக்கிளின் பின்னிருந்த படி றோட்டுப்பக்கம் தலையைப் போட்டு உலகை நோக்கியபடி வந்தார். விதி முடிந்து வைத்ததைப் போல சந்திரன் டெய்லரின் கடையை அவர்கள் கடக்கும் பொழுதே நான் அவர்களைக் கண்டேன். பவளக்கொடி அக்கா பூரணி கடையை ஒருகணம் திரும்பி நோக்குவார் என எதிர்பார்த்தேன். அவர் இருளில் எனக்குப் பின்னால் வெளித்தமடித்தபடி வந்த வாகனங்களைப் பார்த்துக் கொண்டே இமைத்துப் பூஞ்சியபடி கடந்து சென்றார். எனக்கு மனம் கேட்காது சந்திரன் டெய்லரின் கடை வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினேன்.
முன் வாசலின் நான்கு மடிப்புக் கதவுகளில் ஒன்று மட்டும் திறந்திருந்தது. அருகில் அவரது சைக்கிள் சரித்து வைக்கப்பட்டிருந்தது. வெள்ளை மின்குமிழ் ஒளிர்ந்தது. உள்ளே ஒரு பாதை போல இருளில் வெளிச்சத்துண்டு விழுந்திருந்தது. உள்ளே போனேன். சந்திரன் டெய்லர் மண்ணிறச் செக் போட்ட சேர்ட்டு இரண்டு பட்டின்கள் திறந்திருக்க அவரின் முன்னிருந்த இரண்டு பியர்களில் ஒன்றின் தோள்கள் வரை குடித்திருந்தார். அவரின் முன்னால் மஞ்சள் பை கிழிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து சந்திரன் டெய்லரின் காதல் துண்டுகள் வெளிச்சத்திலும் இருளிலும் இறைந்து கிடந்தன.
என்னை நிமிர்ந்து பார்த்தார். அந்த விழிகள் மங்கிய வெள்ளை வெளிச்சத்தில் அச்சமூட்டின. என்ன ஆயிற்று இவருக்கு என மெல்லத் தயங்கிக் கொண்டு அருகிருந்த கதிரையை இழுத்துப் போட்டேன். காலால் கீழிருந்த துணித் துண்டுகளை ஒதுக்கிய போது உறுமல் போன்ற ஒலியொன்று அவரது தொண்டைக்குள்ளிருந்து எழுந்தது. நீண்ட காலம் குகையிலிருந்த ஒளிக்கு அஞ்சும் மிருகமொன்றின் குரல் என்னை மெல்ல நடுக்குறச் செய்தது.
“அதைக் காலால தொட வேண்டாம்” என்று உறுத்துச் சொன்னார். நான் காலை ஒருக்கிக் கொண்டு அமர்ந்தேன். “எழுத்தாளரே. அவள் ஒரு தோறை” என்றார். அது அவரது குரலா என அதிர்ந்தேன். ஒரு மெல்லிய ரகசியத்தை சொல்பவர் போல அவரது முகம் கூர்மை கொண்டிருந்தது. “என்ன நடந்தது” எனக் கேட்டேன். கடகடவெனக் கீழிருந்த துணிகளையெல்லாம் கைகளால் கோதி எட்டுத் திசைக்கும் கழிப்புக் கழிப்பவர் போல வீசி எறிந்தபடி “இத்தனை வரிசமா என்னை அக்சப்ட் பண்ணாமல் விட்டவள். இண்டைக்குக் காலமை என்னை அக்சப்ட் பண்ணிட்டாள். தோறை. மாஞ்சான். இவ்வளவு காலம் மனுசனிருக்கேக்க என்ன நடிப்பு விட்டவா. இப்ப பார். இப்பிடியொருத்தியை லவ் பண்ணத நினைக்க உடம்பெல்லாம் கூசுது” என மேனியில் குத்திக் கொண்டு நின்ற மயிர்களைக் காட்டிச் சொன்னார்.
பிறகு விறுவிறுவென்று நிலத்தில் சிந்தியிருந்த துணித்துண்டுகளை அள்ளிக் கிழிந்து போயிருந்த மஞ்சள் பையில் திணித்தார். புதிய வெள்ளை பாக் ஒன்றில் அதை வைத்து கண்ணாடிக்கு அருகில் தொங்க விட்டுவிட்டு மூச்சு வாங்கினார். “நீங்கள் சொன்னது சரிதான் எழுத்தாளரே. நான் எத்தினை துணியை வெட்டியிருப்பன். எத்தினை துணியத் தைச்சிருப்பன். அதுக்கு முடிவேயில்லை. ஆனா சின்னச் சின்னனா நான் வெட்டிச் சேர்த்த துண்டுகளை என்னால எறிய ஏலா. அது தான் அவள் எனக்குத் தந்த உண்மையான காதல் பரிசு” என்று சொல்லிவிட்டு கடகடவென பியரைக் குடித்தார். போத்தலின் கணுக்கால் வரை குடித்து விட்டு எழுந்து நின்று கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தார். சற்றுத் தாடி வளர்ந்து வாடிப்போனவர் போலிருந்தார். கொஞ்சம் வயதானதைப் போலவும். நான் எழுந்து வெளியே வந்தேன். கை கால்கள் மெல்ல இயல்புக்குத் திரும்பின. அவரை நோக்காது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன். திறந்திருந்த ஒற்றைக் கதவை உட்பக்கமாக அடைத்துத் தாழிடும் ஒலி பின்னால் கேட்டது.