அகவிழி : ஆவணப்படம்
![அகவிழி : ஆவணப்படம் அகவிழி : ஆவணப்படம்](https://kirishanth.com/wp-content/uploads/2025/01/Screenshot_20250107_084255.jpg)
அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி ஆசிரியை இவர்.
தன் வாழ்வில் இதுகாறும் தான் கடந்தவந்த வாழ்வுச்சூழ்நிலைகள் குறித்தும், தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவு குறித்தும் அவர் பேசுவதனைத்தும் நம்மை நெகிழ்வில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் நிச்சயம் காணவேண்டிய காணொளி இது. காரணம், அதற்கான அர்த்தப்பொதிவை தன்னுள் கொண்டுள்ளது.
சுயகல்வியைத் தேடி… எனும் கல்வி ஆவணப்பயணம் வழியாக வெவ்வேறு சாட்சிமனிதர்கள் தொடர்ந்து நம் வாழ்வுக்கு அறிமுகமாகிக் கொண்டே வருகிறார்கள். சத்தமின்றி சாதித்த நூற்றுக்கணக்கான லட்சியவாதிகள் இச்சமூகத்தில் எச்சிறு புகழடைவுமின்றி செயல்பட்டு வருகிறார்கள். அத்தகைய நல்மனிதர்களை இத்தகைய காணொளிப் பதிவுகளின் வழியாக இணையவெளிக்குள் ஆவணப்படுத்துவதை சமகாலத்தில் இன்றியமையாத செயற்கடமையாகக் கருதுகிறோம்.
தோழமை பாரதி கோபாலின் இயக்கத்தில் இப்பெருங்கனவு தொடர்ந்து நிஜமாகி வருகிறது. இம்முயற்சியை சாத்தியமாக்கும் நண்பர்கள் வினோத் பாலுச்சாமி, அய்யலு குமரன், அங்கமுத்து, விமல், கோகுல், மோகன் தனிஷ்க் ஆகியோர் அனைவருக்கும் இருதயத்து நன்றிகள்!
![](https://kirishanth.com/wp-content/uploads/2025/01/fb_img_17362196325454450620584232308040-650x652.jpg)
தும்பி சிறாரிதழின் சில கதைகளடங்கிய பிரெய்ல் நூலை, அகவிழி ஆசிரியை சரஸ்வதி அவர்களிடம் ஒப்படைத்த தருணம் காலந்தோறும் மறக்கவியலாத ஒன்று. ஏனெனில், கண்பார்வையற்ற ஆயிரமாயிரம் குழந்தைகளுக்கு தும்பியின் கதைகளை இந்த ஒற்றையாசிரியை, தனது குரலொலி வழியாக நிச்சயம் கொண்டுசேர்த்து விடுவார். இவருடைய குரலில் தும்பி இதழ்கள் பகிர்வடைவது காலத்தின் நல்லூழ்.
கண்ணொளி அணைந்து ஆரிருள் சூழ்ந்தபோதினும், தன்னுள் சுடரும் உள்ளொளியால் உயர்வடைகிற மனிதர்களால் புண்ணியமடைகிறது இம்மானுடம். அகவிழி ஆசிரியை சரஸ்வதியின் இத்தன்னனுபவப் பகிர்தல் நமக்கான ஆசிச்சொற்கள் என்றாகுக!
குக்கூ காட்டுப்பள்ளி