பிணமெரியும் வாசல்

பிணமெரியும் வாசல்

புத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக்கு சென்றோம். தேநீர் தந்தார்கள். ஆற வைத்துவிட்டு, அங்கிருந்த தோழர்களோடு கதைத்தோம். ”இரவு பகலாக சுழற்சி முறையில் இருக்கின்றோம். ஒரு நேரத்தில் ஐம்பது தொடக்கம் அதிகம் ஐநூறு பேர்வரை வந்து செல்வார்கள். எல்லாருக்கும் வேலை உண்டு. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உதவிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது எவ்வளவு விலை கொடுத்தும் கிடைக்கமுடியாத அனுபவம். இங்கே உள்ள ஆட்டோக்காரர்கள் போராட்டத்திற்கு வருபவர்களை இலவசமாக ஏற்றி இறக்குகிறார்கள், ஒவ்வொருவரும் சாப்பிட்டுவிட்டு வரும்போது இன்னொருவருக்குச் சாப்பாடு கொண்டுவருகின்றனர். கடைக்காரர்களும் உதவுகிறார்கள் சீவல் தொழிலாளிகளும் உதவுகிறார்கள். மாலையில் பெண்களை வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டால், நாங்கள் ஏன் பின்னேரம் போக வேண்டும், இரவு பத்துமணிக்கு நித்திரைக்குப் போகும்போது வீட்டுக்குப் போகிறோம் என்று சொல்கிறார்கள். மாணவர்கள் படிக்கிறார்கள், இளைஞர்கள் விளையாடுவதை நிறுத்திவிட்டுப் போராடும் இடத்தில் நிற்கிறார்கள். இரவில் தொலைக்காட்சி பார்ப்பதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து விட்டார்கள், ஒவ்வொருவரும் சேர்ந்து நடத்தும் ஒரு போராட்டத்தின் பந்தலில் நாம் இப்போது இருக்கிறோம்” என்று தோழர்கள் சொன்னார்கள்.

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானங்களை அகற்றக்கோரும் அந்தப் போராட்டப் பந்தலிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் கிந்துசிட்டி மயானத்தைப் பார்க்கச் சென்றோம். இது பாதையா? இதற்குள்ளால் மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள் என்றே தெரியாதளவுக்கு அவ்வளவு மோசமான பாதை. பெரிய பாளமான கற்கள் வீதியைப் புடைத்துக்கொண்டு நிற்கும் மண்பாதைகள் அவை. வழியெங்கும் வீடுகளை கவனித்துக்கொண்டு வந்தோம். சின்னச் சின்னக் காணிகளில் குருவி வீடுகள். கிடுகும் ஓலையும் போட்டுக் கட்டி வைத்திருக்கும் தகர வீடுகளின் வாசலில் புழுதி தோய அலையும் சிறுவர்கள்.

இந்த வீதிகளையெல்லாம் எப்பொழுது தான் மனிதர்கள் திரியும் இடங்களாக கணக்கிலெடுத்து சீரமைத்துக் கொடுக்கப்போகின்றார்களோ தெரியவில்லை. உள்ளே சென்றால், பிரதேச மக்களில் சிலரால் உடைத்தெறியப்பட்ட மதிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். மயானத்தின் சுவர் விளிம்பில் வீடுகளின் வேலிகள், அதன் வாசலுக்கு நேரேயும் வீடுகள் வரிசையாக இருந்தன. ஒரு நான்கு பரப்புக்காணி வருமென்று மட்டம் தட்டினோம். பிணமெரியும் வாசல்களில் வாழ்ந்து வருமவர்கள் இப்பொழுது அந்த மயானத்தை அங்கிருந்து அகற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

வரலாற்றில் எப்பொழுதும் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களின் குரல்களால் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அலைகளை ஏற்படுத்த முடிவதில்லை. பெரும்பாலானவர்களால் இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உணரவே முடிவதில்லை. தாத்தாமார்களின் சொகுசுத்தனங்களையும் அவர்கள் மற்றவர்களை உறிஞ்சி உருவாக்கிவைத்திருக்கும் வாழ்க்கை முறையையும் கைவிடமுடியாத பேரர்கள் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாயே மதிக்க மாட்டார்கள்.

திருநெல்வேலியில் உள்ள பாற்பண்ணையிலும் மயானப் பிரச்சினை உள்ளது. இங்கேயும் கூலித்தொழிலாளிகளும் அன்றாடம் உழைத்து வாழ்பவர்களுமே அதிகம். இது எந்தவகையிலான ஒத்தத்தன்மை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சிறுநகரங்களில் ஆதிக்க சாதியினரை மையமாகக் கொண்டு வெவ்வேறு சாதியினர் அடுக்கடுக்காக இருப்பர். உதாரணத்திற்கு திருநெல்வேலியை எடுத்துக்கொண்டால், அதன் மையமான சந்தியில் வெள்ளாளர்கள் உள்ளனர். மையத்திலிருந்து வெளிநோக்கிச் சென்றால் தச்சர்கள், கொல்லர்கள் மற்றும் இன்ன பிற இடைநிலைச்சாதியினர் உள்ளனர். அதனைத்தாண்டி அதன் மையமான இடத்திலிருந்தொரு மூலையில் பாற்பண்ணையில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த அடுக்கின் அமைவுகள் தற்செயலானவையல்ல. இது சாதி அடிப்படையிலேயே உருவாகிய நகரம். இதன் இறுக்கங்களும் பழைய நடைமுறைகளும் குறைந்திருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் இன்னும் வாழ்கின்றன.

பாற்பண்ணையிலிருக்கும் அதிகமான இளைஞர்கள் திருநெல்வேலிச் சந்தியில் மூட்டை தூக்குகிறார்கள், ஆட்டோ ஓட்டுகிறார்கள், கூலித்தொழில் செய்கிறார்கள், சைக்கிள் கடையில் வேலை செய்கிறார்கள், சீவல் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். இவை எல்லாம் ஏதோ இயல்பாக நடப்பதென்று நாம் சொல்லிக் கடந்து விட முடியாது. நமது மக்களின் இந்த நிலைக்கு வலுவான வரலாற்றுக்கு காரணங்கள் உள்ளன. அவற்றை நாம் அறிந்து கொள்வதன் மூலம் அவர்களின் வாழ்க்கை முறையில் இன்று பாதிப்பை நிகழ்த்திக்கொண்டிருக்கும் விடயங்கள் எவையும் தானாய் நிகழ்ந்தவையில்லை என்றும் இந்த நிலை மாறவேண்டுமானால் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். தாத்தாமார்களின் பாவக்கணக்குகளை பேரர்கள் தீர்த்துவைக்கும் காலமிது.

இந்த மயானப் பிரச்சினையில் பிரதானமாக வைக்கப்பட்ட வாதம் ஒன்றுண்டு. அதாவது, “மயானம் முதலில் வந்ததா மக்கள் முதலில் வந்தார்களா?” கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்ற பழையை கேள்வியைப் பிரதிபண்ணி இந்த மாபெரும் கேள்வியைக் கேட்ட மனிதர்களுக்கு “மக்கள் முக்கியமா? மயானம் முக்கியமா?” என்ற பதில் தர்க்கத்தினை ஒரு நண்பர் முன்வைத்தார்.

சாதாரண மக்கள், தமது வாழ்க்கையை ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியில் வளர்ந்து இன்று நிலத்தை வாங்கிச் சொந்தமாக்கியிருக்கிறார்கள். மயானத்துக்குப் அருகாமையிலான காணிகள் குறைவான விலைக்கு விற்கப்பட்டிருக்கலாம், மக்களும் தமது பொருளாதர நிலைமைகளினால் அவற்றை வாங்கி இருப்பார்கள். இப்படி அருகில் காணிகள் வாங்கும் போதோ மக்கள் குடியமரும் போதோ அதனை உடனடியாக அவதானித்துக் குறித்த பிரதேச அதிகாரிகள் அது தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டியும், நடவடிக்கை எடுத்தும் இருக்கவேண்டும். ஆனால் அவற்றை செய்யாமல் விட்டு மக்கள் காணிகளை வாங்கி, குடியேறி அங்கே வாழவும் ஆரம்பித்துவிட்ட நிலையில் மக்கள் நலனை முன்னிறுத்தி மயானங்களைத்தான் இடம் மாற்றவேண்டும் என்கிற வாதத்தினையே நாம் முன்வைக்கவேண்டி இருக்கின்றது. இனிமேல் இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டுவரலாமே தவிர ஏற்கனவே உள்ள இந்தப் பிரச்சினைக்கு மக்களின் பக்கமே நாம் நிற்க முடியும்.

இத்தகைய மயானப் பிரச்சினையானது உரும்பிராய் மேற்கு, ஈவினை வடக்கு – திடற்புலம், புத்தூர் மேற்கு – கிந்துசிட்டி, திருநெல்வேலி – பாற்பண்னை, மல்லாகம் போன்ற பல இடங்களில் நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. இவை தொடர்பில் மாகாணசபை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறித்த பிரதேசங்களையும் இதனை ஒத்த நிலைமைகள் நிலவுக்கூடிய ஏனைய இடங்களையும் அடையாளங்கண்டு அங்கிருந்து மயானங்களை எங்கு இடம் மாற்றுவது, அதற்கான பொறிமுறை என்ன, எதிர்காலத்தில் மயானத்திலிருந்து எவ்வளவு தூரத்திற்கு அப்பால் மக்கள் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்பன தொடர்பில் வரையறைகளைத் தெளிவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உறுதியாகச் செயற்படவேண்டும்.

இந்தப் பிரச்சினை தொடர்பில், மக்களை ஒருங்கிணைத்ததும் அவர்களை வெகுஜனப் போராட்டம் நோக்கி நகர்த்தியதும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு. அவர்களின் மீதும், இந்தப் பிரச்சினையின் போது நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் மேலும் பல விமர்சனங்கள் எழுந்தன. அவற்றையும் கவனத்திலெடுக்க வேண்டும். இது தொடர்பில் கட்சியின் அறிக்கையொன்றினையும், உதயன் பத்திரிகை அதற்கான தனது பதிலையும் கேள்விகளையும் முன்வைத்தமையையும் நாம் வாசிப்பது முக்கியமானது. அவற்றுக்கான இணைப்புகளை கீழே வழங்கியிருக்கிறோம்.

இவற்றுக்குமப்பால் ஒரு பொதுவான அம்சத்தினை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நடைபெறும் பெரும்பாலான மக்கள் போராட்டங்களுக்கு அவை திசை திரும்பிப் போகும், அல்லது ஒரு சிலரின்( நல்லவர்களா / தீயாவார்களோ) போராட்டங்களாக சுருங்கிப் போகும் தன்மையுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெறும் பல போராட்டங்களில் இது தான் நிலைமை. அதற்கு காரணம் நாம் அரசியலற்ற அரசியல் செய்ய நினைக்கும் ஒரு சமூகமாக எங்களை காட்டிக்கொள்வது தான். அது ஒரு தவறான அணுகுமுறை. நாம் அரசியல் தான் பேசுகிறோம். அரசியலில் ஈடுபடுவதென்பது தனியே கட்சி சார்ந்தது அல்ல, அமைப்புகளோ, தனிநபர்களோ கூட அல்ல. அரசியல் ஒரு கூட்டு நிகழ்வு. போராட்டங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் சென்று மக்களுடன் உரையாடி அவர்களின் நிலைப்பாடுகளில் ஆக்கபூர்வமான வகையில் செயலூக்கம் கொண்ட கருத்துக்களை வழங்குவது தான், இது போன்ற அச்சங்களுக்குத் தீர்வு. இது இந்தப் பிரச்சினைக்கு மட்டுமல்ல. இனி வருகின்ற எல்லாப் போராட்டங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், அரசியல் தரப்புகள், செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகள் என்பன செயலூக்கம் மிக்க வகையில் பங்கேற்பினை நிகழ்த்துவத்தினூடாக தனிநபர் அல்லது அமைப்புகளின் அடையாளங்களைக்கடந்து பொதுப்பிரச்சினைகளை அதற்கேயான தளத்தில் வைத்து உரையாடும், கவனயீர்ப்பை ஏற்படுத்தும் போக்கு உருவாகும்.

இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் மாகாணசபையிலிருந்து உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாண ஆளுநர் மட்டுமே அந்தப் போராடும் மக்களை சென்று சந்தித்திருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்கள் தமது பிரச்சனைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றபோது நேரடியாகச் சென்று சந்திப்பதைத் தடுப்பது எது? இரவு பகலாக ஒரு கிராமமே விழித்திருந்து போராடும் பந்தலுக்கு மாகாணசபையினரின் கார்கள் செல்வது கொஞ்சம் கஷ்டம் தான். அந்தப் பாதைகள் நிறைய வளைவு நெளிவுகள் உள்ளவை, சீரற்றவை, குடிசை வீடுகள் அடர்ந்த காணிகள், குழந்தைகள் பாதைகளைக்கடந்து ஓடிக்கொண்டேயிருப்பார்கள்… இதையெல்லாம் கடந்து கோயிலின் வாசலொன்றில் குந்தியிருக்கும் இந்த நிலத்தின் மக்களை சென்று சந்திப்பது கடினம் தான்.

  • போராடும் மக்களுக்கு ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்கள் தொடர்பான ஆவணப் படங்கள் முதல் நாள் இரவு காண்பிக்கப்பட்டது.

பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கும் இளைஞர்கள் இந்த மக்களையும் சென்று சந்திக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை நேரில் பார்க்க வேண்டும். அதற்காகத் தங்கள் வாழ்நாளின் ஒரு நாளையேனும் கொடுக்குமளவுக்கு இதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும் சாதிகளை, வர்க்கங்களைக் கடந்து சிந்திக்குமொரு தலைமுறைக்காகவே எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

இளைஞர்களாகவும் போராடும் குணமுள்ளவர்களாகவும் உள்ள பலருக்கும் தெரிந்த பெயர் தான் சேகுவாரா. சே, தனது இளம் வயதில் மேற்கொண்ட பயணங்களும் சந்தித்த மனிதர்களும் தான் அவருடைய அரசியல் எது என்பதை தீர்மானிக்க வைத்தது. ஏன் அவர் மக்களை சந்தித்தார் அவர்களுடைய வித்தியாசமான பிரச்சினைனைகளை தொகுத்துப் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்தார் என்பது பற்றியெல்லாம் அவரே நிறைய எழுதியிருக்கிறார். மக்களுக்கான அரசியல் என்றும் உரிமைகள் என்றும் பேசுகின்ற இன்றைய இளைஞர்களுக்கான எளிமைனயா தொடக்கமாக சேகுவாராவை கொள்ளலாம். அவரிலிருந்து தொடங்கி இன்னும் விரிவான அரசியல் சிந்தனையாளர்களையும் போராளிகளையும் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாச் சிந்தனையாளர்களிடமும் போராளிகளிடமுமிருந்த அடிப்படையான பழக்கம், அவர்கள் மக்களைச் சந்தித்தார்கள், மக்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள், மக்களின் பிரச்சினைகளை மக்களின் மொழியில் வெளிக்கொண்டு வந்தார்கள் அவர்களுக்கான சிந்தனையை, அரசியலை அவர்களை நேரடியாகச் சந்திப்பதன் மூலமே உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்துவதென்பது அதன் உருவத்தையே கலைத்துக்கலைத்து புதிய வடிவங்களை உருவாக்குவது போன்றது. அதனை நிகழ்த்த நினைப்பவர்கள் கொடுக்க வேண்டிய உழைப்பென்பது பெரியது. அவ்வாறான நோக்கத்துடன் இருப்பவர்கள் இதுபோன்ற போராட்டக்களங்களில் இருக்கின்ற மக்களையும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்ற மக்களையும் சந்திக்க வேண்டும். அவர்களின் குரலாகவும் தோளாகவும் மாற விரும்புகின்றவர்கள் அவர்களுடையவர்களாயிருப்பார்கள். அவர்கள் தான், பேதங்களைக் கடந்த, வித்தியாசங்களை விளங்கிக் கொண்ட, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் பொருந்திய தலைமுறையாய் மாறுவார்கள்.

TAGS
Share This