அழகற்ற கேள்வி

அழகற்ற கேள்வி

உறுமிச் செல்லும் அம்மாவின் மோட்டார் சைக்கிளின் பின்னிருந்து அவளது செல்லத் தொப்பையில்
கைகளை வைத்து
மேளமடித்தபடி செல்லும் சிறுமியின் விரல்களில் வழிவது
அழகு

வீதியின் இரண்டு கரைகளிலும் நுரைத்திருக்கும் சரக்கொன்றைகளின் கீழ் காத்திருக்கும் பெண்ணின் கொட்டாவியில் விரிவது
அழகு

கைக்குழந்தையைத் தோளில் வைத்தபடி அனுமார் போல அவனை அள்ளியெடுக்கும் அந்த மனிதனின் கற்பனையில் ஒளிர்வது
அழகு

ஒரு பச்சிலையை ஆய்ந்து நாய்க்கு நீட்டும் குழந்தையின் கண்களில் துடிப்பது
அழகு

மனிதர்களுக்கிடையில் நகரும் வாகனங்களின் புகைத்திரையை விரித்தபடி விரையும் முகங்களின் நீட்டல்களும் இளகல்களும்
அழகு

அந்திச்சூரியனின் ஒளிபட்டு எரியும் ஆலம் விழுதுகளின் முனை வெண்மையை முறித்து
அருகில் செல்லும் தோழிக்கு நீட்டும் தோழனில் படரும் கூச்சம்
அழகு

பொம்மை மிருகங்களில் அமர்ந்து உலகை வெல்லச் செல்லும் சிறுவர்கள் கூச்சலிடும் பூங்காவின் அருகில்
காத்திருக்கும் முதியவளின் சுருக்கங்களில் ததும்பும் ஒளிமஞ்சள் அழகு

மனைவியின் முகத்தைக் காற்றில் கோலி நெட்டி முறிக்கும் கணவனின் கால்களில் துள்ளும் வியப்பு
அழகு

கண்ணுக்கு அழகை அளிப்பது எதுவோ
அது எதிலும் இருப்பதாக
எதிலும் கனல்வதாக
எதிலும் தோன்றுவதாக.

அழகற்றது எதுவென்று உளம் கேட்கவில்லை.
அதுவொரு அழகற்ற கேள்வி.
சொல்லிக் கொள்ளாமல் வரும் மழை வீட்டை நிறைத்துப் பெய்வதைப் போல.
ஒரு மாபெரும் போர்க்களத்தின் குருதிக்கு வெளியே முழு உலகமும்
பொருட்டின்றி அழகாய் இருப்பதைப் போல.

TAGS
Share This