அசையும் நூலகங்களை உருவாக்குதல்

அசையும் நூலகங்களை உருவாக்குதல்

அசையும் நூலகங்களை உருவாக்குதல்

நீண்டகாலமாகவே நூலகங்களை உருவாக்குதலும் அவற்றை மக்களின் பயன்பாடுள்ள வெளியாகவும் மாற்றவும் பல்வேறுபட்ட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மைக்காலமாக இளம் தலைமுறையினரும் இச் செயற்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். புத்தக சேகரிப்பு நிலையங்களை உருவாக்குதல், புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நேரடியாகச் சேமித்தல், நூலக உருவாக்கம் சார்ந்து இயங்குகின்ற அமைப்புகளுடன் உரையாடிப் புத்தங்களைப் பெறுதல், பின்னர் அவற்றைக் கொண்டு கிராம மட்ட அல்லது பாடசாலை நூலகங்களை உருவாக்குதல் என்பதாக அவர்களின் முயற்சிகள் தீவிரமாக சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

நூலகங்களை உருவாக்கும் போது அதனை ஒரு அமைப்பாக அல்லது ஒரு நிறுவனமாக மட்டும் யாரும் கருத்தில் கொள்வதில்லை. அவை பள்ளிக்கூடங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களுக்கு இணையானவை. அங்கு தமக்கேயான சுய கல்வியைத் தேர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விதை குழுமம் என்ற செயற்பாட்டியக்கத்தில் இணைந்து நான் செயற்பட்டு வருகிறேன், எமது அமைப்பின் செயற்திட்டங்களில் ஒன்றாக நூலகங்களை உருவாக்குதலும் உள்ளது. எமது அமைப்பின் நூலகம் தொடர்பான எண்ணக்கரு எனக்கு உடன்பாடானது. மல்லாவியில் உள்ள பாலிநகர் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கென உண்டாக்கிய ஒரு வீட்டு நூலகத்தின் திறப்பின் போது எழுதப்பட்ட குறிப்பின் சில பகுதிகளை இங்கே தருகிறேன். குறிப்பாகப் பாடசாலை நூலகங்களை அணுகுவதில் சிறுவர்களுக்கு உள்ள நடைமுறைச் சாத்தியங்களைப் பார்த்த பின்னரும், அவற்றின் புதிய புத்தகங்களைக் கொள்வனவு செய்யும் ஆற்றலைப் பார்த்த பின்னருமே இத்தகைய முயற்சிகளின் தேவையை இன்னமும் நன்குணர்ந்தோம்.

” நூலகங்கள் என்பவை அலுவலகர்களால் பாதுகாக்கப்படுபவையோ, கட்டடங்களோ, பிரமாண்டமான றாக்கைகளால் நிரப்பப்பட்டிருப்பவையோ அல்ல. நூலகங்கள் புத்தகங்களிற்கும் வாசிப்பவர்களுக்குமிடையிலான உறவின் எண்ணக்கரு. நூலகமொன்றை உருவாக்குவதற்கான வெளி நம் ஒவ்வொருவர் வீட்டினுள்ளும் இருக்கிறது. நம் பள்ளிக்கூட நூலகங்கள் சிறுவர்களிடமிருந்து அந்நியப்பட்டுக்கொண்டே செல்கின்றன. அவை கண்ணாடி அலமாரிகளுக்குள் இருக்கும் காட்சிப்பொருட்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் அதைத் தூக்கி, பக்கங்களைப் புரட்டி, வாசனையை நுகர்ந்து, அதன் வண்ணத் தாள்களைத் தொடும்போதே அவை உயிர்பெறுகின்றன. இல்லையென்றால் நூலகங்கள் வெறும் தொல்பொருட் காட்சிச்சாலைகளாகவே எஞ்சும். புத்தகங்களிற்குள் இருக்கும் விலங்குகளும் பறவைகளும் தாவரங்களும் மனிதர்களும் விலங்குக் காட்சிச்சாலையின் கூட்டிற்குள் நிற்பதை சிறுவர்கள் பார்க்கிறார்கள். அவற்றைத் திறக்கும் திறப்பை அவர்களிடமே கொடுக்கும் ஒரு முயற்சி தான் விதை குழுமத்தின் கிராம நூலகங்கள் என்ற செயற்திட்டம்.

எமது முதற் திறப்பாக, பாலிநகர் என்ற கிராமத்தில் உள்ள இரண்டு சிறுவர்களின் வீட்டின் ஒரு பகுதியை விதை குழும சிறுவர் நூலகமாக்கியிருக்கிறோம். புத்தகங்களின் காப்பாளர்கள் அவர்கள் தான். தங்களது நண்பர்களையும் இதில் இணைத்து அவர்கள் கற்கும் பள்ளிக்கூடத்திலும் தனியார் கல்வி நிலையங்களிலும் புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். கொரோனா நோய்த் தொற்றுக் காலத்திற்கு முன் அவர்களுக்கான புத்தகங்களை சேர்த்திருந்தாலும், ஓரளவு இயல்பு நிலை திரும்பிய பின்னரே புத்தகங்களைப் பரிமாற முடிந்தது. வாசித்த புத்தகங்கள் தொடர்பில் குறிப்புகள் எழுதி வைக்கும் பழக்கத்தையும் சில சிறுவர்கள் ஆர்வத்துடன் செய்கிறார்கள். புத்தகங்கள் பற்றிய அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களது அன்றாடத்திற்குள் நுழையும் புத்தகங்கள் அவர்களின் கற்பனை உலகை விரித்துச் செல்கின்றன.

இன்றைய தினம் 23. 08. 2020, காலை பத்து மணிக்கு அவர்களது வீட்டில், புத்தகங்களை வாசிக்கும் அவர்களது நண்பர்களை அழைத்து நூலகத்தினை வீட்டினுள்ளும் பயன்படுத்த அழைத்திருந்தார்கள். இந்த அழைப்பே முதற் திறப்பு. பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. என்ன வகையான புத்தகங்களை அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள், அவர்களது தேவைகள் எவை, தொடர்ச்சியாகக் கதை சொல்லல், திரையிடல், கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் கதைத்தார்கள்.”

*

மேலே குறிப்பிட்டுள்ள நூலக உருவாக்கம் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, எப்பொழுது எங்கள் வீடுகளுக்குள் மற்றைய அறைகளை போல புத்தகங்களிற்கும் இடம் ஒதுக்குகிறோமோ, அதுவே நாம் முன்னேறிய சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதற்கான குறிகாட்டி. ஏற்கனவே உள்ள நூலகங்களையும் நாம் பயன்படும் வெளியாக மாற்ற வேண்டும். முக்கியமான நூலகங்களில் கூட வாசகர்கள் என்பவர்கள் குறைவு தான். நூலகத்திற்கு அவருக்குமான உறவென்பது மட்டுப்பட்டது தான். இவற்றை மாற்றாமல் இருப்பதுவும் வளங்களை வீணடிப்பதற்குச் சமம்.

நூலகத்திற்கு வாசகருக்குமான உறவை மேம்படுத்துவதற்கு நாம் என்ன செய்யலாம்?

முதலாவது விடயம், புத்தகங்கள் தொடர்பான உரையாடல்கள் நம் அன்றாடத்திற்குள் நிகழவில்லையென்றால் அதன் வடிவம் மதிப்பிழந்து போகும், உதாரணத்திற்கு நாம் ஒரு சினிமாவைப் பார்க்கிறோம் என்றால் அதனைப் பற்றிக் கருத்துக்களைச் சொல்கிறோம், அதனை விமர்சிக்கிறோம் அல்லது அபிப்பிராயங்கள் சொல்லுகிறோம். யோசித்துப் பாருங்கள், அப்படியான உரையாடல்கள் சமூகத்தில் நிலவவில்லையென்றால் சினிமா எப்படிப் பரவலடைய முடியும்? இது தான் புத்தகங்கள் விடயத்திலும் நடக்கின்றது. நாம் வாசிக்கின்ற புத்தகங்கள் தொடர்பில் எந்தக் கருத்தையும் நாம் வெளிப்படுத்தவில்லையென்றால், அது சார்ந்த உரையாடல் நிகழவில்லையென்றால் புத்தகம் என்ற வடிவம் உண்டாக்க விரும்பும் விளைவுகளை சமூகத்தில் நாம் உருவாக்க முடியாது.

புத்தகங்கள் குறித்து ஒவ்வொரு பாடசாலை நூலகங்களும், பொது நூலகங்களும் செய்ய வேண்டியது, உரையாடல் கழகங்களை அல்லது வெளியை உருவாக்க வேண்டும். சிறுவர்களை வாசித்த புத்தகங்கள் தொடர்பில் அபிப்பிராயங்களைச் சொல்லத் தூண்ட வேண்டும், அதன் வழி அபிப்பிராயங்களைச் சொல்லும் துணிச்சலையும் பழக்கத்தையும் நாம் ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் அவற்றை வெளிப்படுத்த உதவ வேண்டுமே தவிர அவர்களைக் கட்டுப்படுத்தவோ, அவர்கள் சொல்லும் அபிப்பிராயங்களைக் கேலி செய்யவோ கூடாது. உரையாடல் கழகங்களின் அடிப்படை வழிமுறைகளை உண்டாக்குவதன் மூலமே அவற்றை வினைத்திறனாக உருவாக்க முடியும்.

பாடசாலைகளில் உள்ள விவாத மன்றங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றின் வழிமுறைகள் மூலம் உண்டாகும் திறன் மற்றும் அறிவு தொடர்பில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அவை தாம் நிற்கும் தரப்பை நியாயப்படுத்தும் எல்லைகளைக் கொண்டவை, அவற்றின் மூலமே தர்க்கங்களை உருவாக்குபவை. ஆகவே அவற்றின் விளைவும் பயன்பெறுமதித் தன்மையும் சுவாரசியம் மற்றும் கெட்டிக்காரத்தனம் என்பவற்றோடு மட்டுப்பட்டது. ஆனால் உரையாடல் கழகங்களோ, புத்தகங்கள் தொடர்பிலும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாடும் வாய்ப்பை வழங்குகின்றன. அங்கு எதிர்த்தரப்பென்று யாருமில்லை. முக்கியமாக உரையாடலின் அடிப்படை போட்டியில்லை. உரையாடலின் அடிப்படை மேம்பட்ட தீர்வுகளை நோக்கி நகர்வதே.

உதாரணத்திற்கு, கிழமைக்கு இரண்டு பாட வேளைகள் நூலகம் செல்வது இலங்கையில் வழங்கப்பட்டிருக்கும் பாடசாலை நேரங்கள், பல பள்ளிக்கூடங்கள் மாணவர்களுக்கு அவற்றைத் தாம் தவறவிட்ட பாடங்களை எடுக்கும் நேரமாகவே சிந்திக்கின்றன. அல்லது அதை ஒரு ஓய்வுப் பாடநேரமாகவே கவனம் கொள்கின்றன. இவற்றையும் மீறி மாணவர்கள் நூலகம் சென்றால் வருடக்கணக்காக ஒரே புத்தகங்களைக் கொண்ட அதன் நூலகங்களில் வாசிப்பதற்கான நூல்கள் இருக்காது. இப்படியிருக்கும் சூழலில் வாசிப்பை மேம்படுத்த விரும்பும் பாடசாலைகள் செய்ய வேண்டியது உரையாடல் கழகங்களை உருவாக்கி, ஓவ்வொரு கிழமையும் ஒரு புத்தகத்தை எடுத்து அவற்றைப் பற்றிய வேறு வேறு மாணவர்களின் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தும் இடத்தை வழங்க வேண்டும், மாதத்தில் நான்கு கிழமைகளென்பதால் இரண்டு கிழமை புத்தகங்கள் தொடர்பாகவும் இரண்டும் கிழமை சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் உரையாடும் வாய்ப்பு வழங்கப் பட வேண்டும். இங்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கவனிக்க வேண்டியது உரையாடல் கழகம் வரையறைகளால் மட்டுப்படுத்த வேண்டியதல்ல, வழிமுறைகளால் உருவாக வேண்டியவை. ஒவ்வொருவரின் பார்வைக்கும் சம மதிப்பு அளிக்கப் பட வேண்டும். மாற்று அபிப்பிராயங்களைக் கேட்கும் பழக்கம் வளர்க்கப்பட வேண்டும். தமது தீர்மானிக்கப்பட்ட நம்பிக்கைகளிலிருந்து மாறும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் சிறுவர்களுக்குப் பழக்க வேண்டும். அந்த மாறுதல் வாசிப்பின் மூலமும் சமூகப் பிரச்சினைகளை அறிவதன் மூலமும் இவற்றின் வழி உருவாகும் உரையாடல் மூலமும் நிகழ வேண்டும்.

மேலும் ஒவ்வொரு உரையாடலின் வழியும் ஒரு செயலுக்குச் செல்வதென்பது முக்கியம். இல்லையென்றால் உரையாடலின் வழி என்ன பயன் என்ற கேள்வியெழும். உதாரணத்திற்குப் பாடசாலை நூலகத்தை விரிவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் அல்லது புதிய புத்தகங்களைக் கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றிய உரையாடல் நிகழ்கிறது என்றால், அதன் வழி ஒரு சிறிய செயலுக்காவது போக வேண்டும். உதாரணத்திற்கு, பாடசாலை நூலகத்தில் ஒரு உண்டியலை வைப்பது, மாணவர்கள் கிழமையொன்றில் நூலகத்திற்குச் செல்லும் போது தம்மால் இயன்ற பணத்தைப் போடுவது அல்லது தமது பிறந்த நாளின் போது சிறியளவு பணத்தையாவது உண்டியலில் போடும் பழக்கத்தை உண்டாக்குவது என்பவற்றை செய்ய ஆரம்பிப்பது. பின்னர் மாத முடிவில் உண்டியலில் உள்ள பணத்தைக் கணக்கெடுத்து அவற்றில் புத்தகங்களைக் கொள்வனவு செய்வது. ஆனால் இதில் கவனமாக இருக்க வேண்டிய இடம், இதை ஒரு கட்டளையாகவோ கட்டாயமாகவோ செய்யும் ஒன்றாக ஆக்கவே கூடாது, பின்னர் அது வெறுப்பாக மாறி விடும். உரையாடலை வழி நடத்துபவர் மாணவர்களைச் சிறிய முடிவுகளை நோக்கி நகர்த்துவதற்கு அவர்களைத் தூண்ட வேண்டும், சில கருத்துக்களை பரிந்துரைகளாகச் செய்ய வேண்டும், மாணவர்கள் தாங்களாகவே எடுக்கும் முடிவாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே நாம் அவர்களை நூலகங்களை நோக்கித் திருப்ப முடியும்.

இவற்றை நாம் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம். அவற்றின் அனுபவங்களைக் கொண்டு இந்த எண்ணக்கருவை மேம்படுத்தலாம். இவை உரையாடல் வெளியொன்றிற்கான தொடக்க எண்ணக்கருக்கள் மட்டும் தான். இன்னமும் இவற்றை ஆழப்படுத்த முடியும். ஆர்வமுள்ள பாடசாலைகள் இவற்றைச் செய்ய முன்வந்தால் எங்களால் செய்யக் கூடிய உதவிகளைச் செய்வோம். இந்த இதழ் வழி எம்மைத் தொடர்பு கொள்ள முடியும்.

*
நூலகங்களை உறைந்து நிற்கும் ஒரு அமைப்பாக மட்டுமே நாம் முன்வைப்பதால் தான் அவை தேங்கி விடுகின்றன. அவற்றை அசையக் கூடியவையாக நாம் மாற்றுவதன் மூலமே அவற்றின் எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த முடியும், மவுன வாசிப்பென்பது வாசிப்பின் ஒரு வகை, வாசிப்பதை உரையாடுவதன் மூலமே வாசிப்பின் பல்வேறு சாத்தியங்கள் விரிவடைகின்றன. அதன் வழி கற்பனை பெருக்கெடுக்கின்றது. எதிர்காலத்தைக் கற்பனையின் மூலம் விரித்து அதனை உருவாக்கும் வாய்ப்பை நாம் அனைவரும் பழக, உரையாடல் வெளிகளே நம் காலத்தின் தேவை. உரையாடல் இல்லையென்றால் புத்தகங்கள் சமூகத்தால் உள் வாங்கப்பட மாட்டாது. புத்தகங்கள் தேங்கி விட்டால் நூலகங்கள் நூதனசாலைகளாகவே மாறும். ஆகவே நூலக உருவாக்கங்களில் ஈடுபடும் தோழர்கள், அவற்றைத் தொடர்ந்து உரையாடும் வெளியையும் தாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு நூலகத்திலும் உருவாக்கினால் அவை நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களை உருவாக்கும் உயிருள்ள வெளியாக மாற்றம் பெறும்.

(2020)

TAGS
Share This