ஒளியுள்ள இருட்டு – 1

ஒளியுள்ள இருட்டு – 1

1

எங்கிருந்து தொடங்குவதென்று தெரியவில்லை. எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் மரணம் குறித்து பலரும் கேட்டபடி இருக்கின்றனர். இதை எழுதத் தொடங்குவதற்கு முன்னர் நான்கைந்து குறிப்புகளை மனதில் எழுதி எழுதிக் கரைத்துக் கொண்டிருந்தேன். கடந்த ஐந்து நாட்களில் ஒரு கொஞ்ச நேரம் கூட எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால் அவனையும் அவன் மரணத்தையும் சொல்லியும் எழுதியும் அளிக்க வேண்டியிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரசாந்தின் இடக்காலின் முழங்காலிற்கு கீழ் உள்ள எலும்பில் கான்சர் இருப்பது பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது எங்களால் அதை நம்பவே முடியவில்லை. கால் அகற்றப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அறிந்த போது அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் சிகிச்சைகளின் மூலம் அவன் மீண்டு வந்து விட முடியும் என எல்லோரையும் போல அவனும் நாங்களும் உளப் பூர்வமாக நம்பினோம்.

தொடர்ந்து பின் கதையைச் சொல்வதற்கு முன்னர்
பிரசாந்தைப் பற்றி சுருக்கமாகச் சிலதைச் சொல்லி விடுகிறேன். அவன் 1996 ஆம் அண்டு தை மாதம் 31 ஆம் திகதி இடப்பெயர்வின் போது சாவகச்சேரி வைத்தியசாலையில் பிறந்தான். அவன் பிறந்த போது எனக்கு இரண்டு வயது. நான் நேர்சரிக்கு போகும் வயதிலேயே அவனைப் பற்றிய முதல் நினைவுகள் எஞ்சியிருக்கின்றன.

அவனுக்கு இடக்கை தான் வலம்.
உருவமும் குணமும் அப்பா. அப்பாவின் குழந்தைப் பருவம் அவனில் மீண்டும் பிறந்து வளர்ந்தது என எல்லோரும் சொல்வார்கள். கொவ்வைப் பழம் போன்ற கீழ்ச் சொண்டை பிதுக்கி இறக்கி முகத்தை கோர்த்தபடியிருக்கும் அவனது சின்ன வயதுக் கோபங்களை நினைத்தால் இப்போது புன்னகை வருகிறது. அவனைச் சின்ன வயதிலிருந்தே ‘கட்டை’ எனத் தான் சகோதரர்களும் நண்பர்களும் ஊராரும் கூப்பிடுவோம். அப்பாவும் அம்மாவும் அவனைப் ‘பிரசு’ என செல்லம் கொஞ்சி அழைப்பார்கள். வளர்ந்த பின்னரும் கூட அப்பாவின் வாயில் பிரசு என்று தடுக்கி வரும் சொற்களில் அவன் சிறுவனாகித் திரும்புவதுண்டு. பெரிதாக அலட்டல் இல்லாதவன். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித் தான். கொஞ்சம் அலட்டிக் கொள்பவர்களைப் பார்த்தால் விலகிப் போய் விடுவான். பில்டப் விடுகிறார்கள் என்று சொல்வான். ஓவராக பில்டப் விடுபவர்களில் தனக்கு நெருக்கமாக அவன் இருக்க விட்ட கடைசியும் முதலுமான ஆள் நான் மட்டும் தான் என நினைக்கிறேன். இயல்பாய் இருப்பது தான் அவனுக்குப் பிடிக்கும். சடங்கான மரியாதை நிமிர்த்தமான விசயங்கள் ஒவ்வாது.

அப்பா ஒரு வியாபாரி. எங்களது சிறு வயதில் திருநெல்வேலிச் சந்தையில் கடை வைத்திருந்தார். பின்னர் இடைப்பட்ட காலங்களில் பல தொழில்கள். பிறகு திரும்பவும் இப்பொழுதும் கடை. நான் மூத்த பிள்ளை. இரண்டாவது கட்டை. மூன்றாவது சுகிர்தா. அம்மாவுடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேர். அம்மா 2009 ஆண்டு பங்குனி மாதம் மரணமடைந்தார். அவருக்கு முள்ளந்தண்டில் குலைவு ஏற்பட்டிருந்தது. ஒரு சில மாதங்களில் மரணம். அப்போது கட்டை ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மரண வீட்டின் அன்று நான் குசினிக்குள் நுழைந்து வெளியால் பார்த்த போது அம்மாவுக்கு அவன் சம்பல் இடித்துக் கொடுக்கும் இடத்தில் அங்கும் இங்கும் நடந்தபடி அழத்தெரியாமல் அழுது கொண்டிருந்தான். அத்தனை சோகத்தை அவனுக்கு அப்போது உணரத் தெரியவில்லை. பள்ளிக்கூட நீலக் காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும் அந்த உரலின் மீது அமர்ந்திருந்தவன் இருண்டு போயிருந்தான்.

அம்மாவுக்கு சம்பல் இடித்துக் கொடுப்பது அவன் தான். நான் தேங்காய் திருவுவேன். அம்மா செத்தல் மிளகாயை பொரித்து உரலில் கொட்டி விட்டு கொஞ்சம் கட்டி உப்பையும் போட்டு விடுவார். இடிப்பதற்கு கட்டையைத் தான் கூப்பிடுவார். ‘பிரசுசுசு..’ என அவனை நீட்டி இழுத்து கூப்பிடும் பொழுது சோம்பலுடன் வந்து நின்று “என்னம்மா” எனக் கேட்பான். அவன் பெரும்பாலும் அம்மா சொல் தட்டாத குழந்தை. “சம்பல இடியடா” என்றால் டொக் டொக்கென்று மர உரலில் இடிப்பான். உரித்த சின்ன வெங்காயத்தையும் போட்டு இடிக்கும் போது எழும் வாசனையை முகர்ந்தபடி நிற்பேன். “இடியடா” என அவன் என்னிடம் உலக்கையை நீட்டினால் “நான் தேங்காய் திருவினன்” என்று வேலைப் பகிர்வைப் பற்றி விளக்கம் சொல்வேன். ஆனால் அம்மா சொல்வது போல அவன் இடிக்கும் சம்பலுக்கு ரேஸ்ற் கூடத் தான்.

கட்டைக்கு எப்படி அப்பாவின் புறவுடம்போ அப்படியே அப்பாவின் சுவை நாக்கும் முளைத்திருந்தது. சாப்பாட்டின் சுவையில் நுணுக்கம் கூடியவன். அம்மாவின் சமையல் மட்டும் தான் அப்பாவும் கட்டையும் சலிப்பேயில்லாமல் குற்றம் குறை இல்லாமல் உண்பது. அவனது இறுதி நேரப் பிரிய உணவுகளின் பட்டியலில் பெரும்பாலானவை சிறு வயதுச் சாப்பாடுகள். நல்ல உணவை சீராக வேறு யாரேனும் சமைத்தால் அவனது பாராட்டின் எல்லை என்பது குறை சொல்லாமல் அமைதியாகச் சாப்பிட்டு விட்டுச் செல்வதே.

யாழ்ப்பாணத்து வீடுகளில் மூன்று பிள்ளை பெற்றால் அதில் ஒன்று கரப்பாண் சாப்பிடுவதற்கென்று இருப்பது வழமை. சம்பலையும் கரப் பாணையும் சேர்த்து விரும்பிச் சாப்பிடுவான். மூக்கில் சளி ஒழுக ஒழுக உறைப்புச் சாப்பாடுகளை தின்பான். அவனுக்கு சிறு வயதிலிருந்தே அதிகமாகச் சளி வருவதுண்டு. காதிலும் சளி வருவதுண்டு எனச் சொல்லி கையில் இயர் பட்டுடன் திரிவான். காதுக் குத்தும் எப்பொழுதாவது வருவதுண்டு. அடுப்பில் உள்ளியைச் சுட்டு அம்மா கொடுப்பார். காதில் வைத்துக் கொள்வான். வளர்ந்து பெரியவனாகும் வரை கூட அவனுக்குக் குளிப்பதற்கு கள்ளம். பள்ளிக்கூடம் வெளிக்கிடும் பொழுது அவனை குளிக்கச் சொல்லி விட்டு அம்மா எட்டி எட்டி பார்ப்பார். அவன் நிலத்திற்கு தண்ணியை அள்ளி ஊற்றி விட்டு முகத்தையும் கையையும் காலையும் நனைப்பான். கட்டை ஒரு குளிப்புக் கள்ளன் என்பது ஊரறிந்த உண்மை.

அவனுக்கு விளையாட்டு உயிர். கிரிக்கெட் அதிகமாக விளையாடுவான். வீட்டுக்கு முன்னிருந்த வெறுங்காணியை நாங்கள் மைதானமாகப் பாவித்து வந்தோம். விடுமுறைக் காலங்களில் அதைத் துப்பரவாக்கி ஒழுங்கையின் பெடியள் எல்லோரும் விளையாடுவோம். என் காலுக்குள்ளும் கைக்குள்ளும் தட்டுப்பட திரிவான். விளையாடும் பெடியளுடன் அவன் சிறு வயதில் வம்பு வழக்குகளில் ஈடுபடுவது சற்று அதிகம். ஆனால் அவன் இடக்கை துடுப்பாட்ட வீரன் என்பதால் அவனுக்கான இடம் அவனுக்கு இருந்தது. நாள் முழுவதும் வெய்யிலில் விளையாடி கரிக்கட்டையாய் இருவரும் திரும்புவோம். சுகிர்தா அம்மாவுடன் இருப்பாள். அல்லது தடி எடுத்து மரங்களுக்கு அடித்து படிப்பித்துக் கொண்டிருப்பாள்.

ஒருமுறை எங்கள் வீட்டிலிருந்து சில தொலைவிருந்த ஒரு மரவள்ளித் தோட்டத்திற்கு சாம்பல் நிற முயலொன்றை நாங்கள் துரத்திச் சென்றோம். நானும் கட்டையும் வேறு சில சிறுவர்களும் இருந்தனர். பின்னேரம் சரிந்து இருட்டு நெருங்கத் தொடங்கியது. எங்களுக்கு உச்சிக் கொண்டு முயல் இருட்டுப் படிந்த பொந்துகளுக்குள் மறைந்தது. எங்களது ஒழுங்கைப் பெடியன் ஒருவன் மரவள்ளி தடியை பிடுங்கி எடுத்து கிழங்கை பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டு விட்டு தடியை மீண்டும் ஊன்றத் தொடங்கினான். நீரோடிய வாய்க்காலின் செம்மண் குழைவில் முழங்கால்களை ஊன்றி அமர்ந்து குட்டிகள் போல கிழங்குகள் தூங்கும் மரவள்ளிகளை நானும் கட்டையும் பிடுங்கினோம். பச்சையாகச் சாப்பிட்டோம். அதன் பசுஞ்சுவை இன்னும் நாவில் இருக்கிறது. கிழங்கைச் சாப்பிட்டு நானும் கட்டையும் வீடு திரும்பிய பின்னர் அம்மாவுக்கு தகவல் வந்து சேர்ந்தது. அம்மா இருவரையும் ஏசி விட்டு போனார். நாங்கள் செய்தது திருட்டு என அம்மா சொல்லித் தான் தெரிந்தது.

கட்டையும் நானும் வீட்டிலும் விளையாடுவதுண்டு. விடுமுறைக் கால விளையாட்டுகளுக்கு வேறு சிறுவர்களும் வருவதுண்டு. கட்டை என் கையருகில் இருப்பான். தனியாகச் செல்ல அவன் தொடங்கிய பிறகு அவனுக்கென புதிய நண்பர்கள் உருவாகினர். நாங்கள் மூவரும் சென். ஜோன்ஸ் பொஸ்கோவில் படித்தோம். யாழ்ப்பாணத்தின் உயர் வர்க்க பிள்ளைகள் படிக்கும் அந்தப் பாடசாலையில் யாரையோ எவரையோ எல்லாம் பிடித்து முதலில் என்னை அப்பா சேர்த்தார். பிறகு இருவருக்கும் அனுமதி தொடர்ந்து கிடைத்தது. கட்டைக்கு ஸ்கொலர்ஷிப்பில் சில புள்ளிகள் காணாது. அவனை கொக்குவில் இந்துக்கல்லூரியில் அப்பா சேர்த்தார். நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. அதிலிருந்து அவனுக்கும் எனக்குமான தூரங்கள் கூடிவிட்டன. ஒரே பாடசாலையில் படித்திருந்தால் அவனுக்கும் எனக்கும் இன்னும் நினைவுகள் கூடியிருக்கும் என இப்போது நினைக்கிறேன்.

சுகிர்தா லேடிஸ் கொலிஜில் படித்தாள். ஆகவே அவளை நான் ஏற்றிக் கொண்டு செல்வேன். எனக்கும் அவளுக்குமான நெருக்கம் அதிகமாய் இருந்ததற்கு அது ஒரு காரணம். கட்டையின் ஊர் நண்பர்கள் வித்தியாசமானவர்கள். அவனுக்கு பாற்பண்ணை முதல் திருநெல்வேலி ஈறாக விதம் விதமான நண்பர்கள். பாற்பண்ணை பக்கமிருக்கும் நண்பர்களுடன் அவர்களது லாண்ட் மாஸ்ட்டர்களில் அவன் திரிகிறான் என்ற செய்தி வீட்டின் காதுகளுக்கு வந்த போது அவனைக் கட்டுப்படுத்த நினைத்தார்கள். அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது எனச் சொன்னார்கள். அப்போது அவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இப்படி வீட்டில் சொன்ன அடுத்த நாள் அவனது நண்பன் வீட்டில் அவன் சாப்பிட்டு விட்டு வந்து “நான் சாப்பிட்டன், இப்ப என்ன செய்வியள்” என்று சொன்னான்.

பலதரப்பட்ட சாதிகளைச் சேர்ந்த நண்பர்கள் வீடுகளுக்கு கட்டையும் நானும் செல்வோம். எங்களை ஓரளவுக்கு மேல் யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் எங்கள் மூவருக்கும் அப்பாவென்றால் பயம். அப்பா தன் உறுமலினால் எங்களை அடக்கக் கூடியவர். ஆகவே அம்மா தான் எங்களின் சரணாலயம். அம்மாவுக்கு கட்டை தான் செல்லப் பிள்ளை. கடைசிப் பிள்ளையின் செல்லம் சுகிர்தாவை விட கட்டைக்குக் கிடைத்தது. அப்பாவே மீண்டும் பிறந்து வளரும் போது அம்மாவின் காதல் அன்பாக மாறி ஒரு சிட்டிகை அவன் மீது கவிழ்ந்ததும் அழகு தான் இல்லையா?

கட்டைக்கு இன்னொரு பட்டப் பெயர் இருந்தது. வானில் செல்லும் ரொக்கெட்டுகளையோ விமானங்களையோ ஹெலிகளையோ கட்டை ஆவண்ட படி பார்த்துக் கொண்டிருப்பான். அதனால் அவனை ஏரோப்பிளேன் ஆவெண்டான் என அழைப்போம். அவனது கீழ்ச்சொண்டு கொவ்வைப் பழம் போல பெரியது. பட்டங்களை பறக்க விட்டபடி ஆவெண்டு பார்த்துக் கொண்டிருப்பான். சிக்சரை அடித்து விட்டு ஆவென்று பார்ப்பான். எதையேனும் கொஞ்சம் ஊன்றி தலையை உயர்த்தி பார்க்கும் பொழுது அவன் வாய் திறந்திருக்கும்.
அப்பாவின் அடிகளுக்கு நான் வீட்டைச் சுற்றி ஓடும் பொழுதில் கூட ஆவெண்டு வாயை வைத்தபடி சிரித்துக் கொண்டிருப்பான்.

குட்டிகளை நாய்கள் தூக்கிக் கொண்டு போவது போல நாங்கள் இன்று வரை சாமான்களைத் தூக்கிக் கொண்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வாடகை வீடு தேடி அலைபவர்கள். சொந்தமாக நிலமும் வீடும் அற்றவர்கள். ஆனால் அப்பா அனைத்தையும் பார்த்துக் கொண்டார். அம்மா இறக்கும் வரை நாங்கள் ஒரே வீட்டில் வளர்ந்தோம். பிறகு கட்டை என்னுடனும் பிரிந்தாவுடனும் வந்து வசிக்கத் தொடங்கினான். திருநெல்வேலியில் பிரிந்தா பராமரித்த வீட்டில் நானும் சுகிர்தாவும் தங்கியிருந்தோம். பிறகு கட்டையும் வந்தான். அது அவன் தனது ஒளிப்படக் கலை மீதான ஆர்வத்தை கூடுதலாகக் கொண்டிருந்த காலம். பரிசோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஓர் இளம் ஆய்வாளனைப் போல இருட்டையும் ஒளியையும் அளைந்து கொண்டிருப்பான். கட்டையுடன் பழகிய அனைவருக்கும் அவன் எப்பேர்க்கொத்த சோம்பேறி என்பது தெரியும். ஆனால் அவன் ஒளிப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது மட்டும் முழு ஆன்மாவும் கூடி சலிப்பேயின்றி இருப்பான். பிரிந்தா அவனது ஒளிப்படங்களின் கோர்வையைப் பார்த்து விட்டுச் சொன்னார், “அது தான் அவன்ர தியானம்” என்று.

கட்டையின் பிறந்த தின வாழ்த்து ஒன்றில் ஒளிப்படக் கலைஞர் சன்சிகன் ஒரு சிறு குறிப்பை எழுதியிருந்தார். அதில் கட்டையின் வாழ்க்கை முறையை “பட்டினத்தாருக்கு பைத்தியம் பிடித்தது போல” எனச் சொல்லியிருப்பார். அது கட்டையின் அக்காலத்து வாழ்க்கை பற்றிய துல்லியமான மதிப்பீடு. கட்டையிடம் துறவிகளைப் போன்ற அசாத்தியமான எளிமை இருக்கிறது. அதேநேரம் மாளிகைக்குச் சென்றால் அதை முழுதும் அனுபவிக்கும் நுணுக்கமான ரசனையும் உண்டு. அவனிடம் கூடியிருந்த பித்து ஒளிப்படக் கருவிகளின் ஒற்றைப் பார்வைக்குள் குவிந்திருந்தது. முறையான கல்வியில் கட்டைக்கு சலிப்பு இருக்கிறது. ஒளிப்படக் கலை பற்றிய கல்வியிலும் மந்தமாகவே இருந்தான். ஆனால் கருவியை ஒரு தியானமாக்கிக் கொண்டு அவன் அதைப் பயின்று கொண்டிருந்தான். ஒரு காட்டில் ஒரேயொரு ஆயுதத்தை மட்டுமே சலிப்பேயின்றிப் பயின்று கொண்டிருக்கும் ஒரு வீரனைப் போல.

நான் அவனைக் கட்டை அல்லது பிரசாந் என கூப்பிடுவேன். அவனும் சுகிர்தாவும் கூட பெயர் சொல்லியே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வோம். அண்ணாவோ தம்பியோ தங்கச்சியோ என்று நாங்கள் சொல்லிக் கொண்டதில்லை, இப்போது வரை. வேறு யாரேனும் இது யார் என்று கேட்டால் தான் உறவைச் சொல்வோம். எங்களுக்குள் இருந்ததும் இருப்பதும் நண்பர்கள் எனும் உறவே. அது நாங்கள் போர்த்திக் கொண்டிருந்த ஒரு போர்வை என்பதை இப்போது உணராத நாளில்லை. ஆனால் அதுவே எங்களுக்குப் பிடித்திருக்கிறது.

குருதி உறவுகளுக்குள் இருக்கும் ஆழமான நாமறியாத பிணைப்பை பகுத்தறிவால் விளக்க முடியவில்லை. அது நினைவுகளின் பெருந்தொகை. மனிதர்கள் குடும்பம் எனும் அலகை உண்டாக்கியது எத்தனை பெரியது என எண்ணுகிறேன். அவனது நோய் என்னைப் பாதித்ததைப் போல இதுவரை வேறு ஏதாவது ஒரு துயரம் உச்சமாக இருந்ததா என நினைத்துப் பார்க்கிறேன். இல்லை, நிச்சயமாக எதுவும் அதனருகில் நெருங்கிக் கூடச் செல்ல முடியாது என்பதை உணர்கிறேன். குருதி என்பதால் மட்டுமல்ல, குருதி உண்டாக்கிய உறவை நாம் எப்படி பொருள் கொள்கிறோம். காலத்தை எப்படிக் கழிக்கிறோம், அவர்கள் நம் வாழ்வின் எதை நிரப்புகிறார்கள் என்பதை அவர்களை முற்றிலுமாக இழக்கும் வரை நாம் உணர்வதே இல்லையோ எனத் தோன்றுகிறது. கட்டை இருப்பதென்பது இந்த உலகில் எவர் கைவிட்ட பின்னும் அவன் இருப்பான் எனும் எந்தத் தயக்கமும் இல்லாத நிலை. அதை என்றைக்குமாக இழந்திருக்கிறேன். இட்டு நிரப்பவே முடியாதது அது. அதுவே அவன் எனக்கு. ஒரு உச்சியிலிருந்து இன்னொரு பெரிய உச்சிக்கு ஒரு நத்தை நகர்வது போல துயரம் ஊர்ந்து கொண்டிருக்கிறது.

கட்டையின் கொன்னைப் பேச்சுகளை வீட்டில் பகிடி செய்வார்கள். எங்கிட என்று சொல்வற்கு இங்கிட எனத் தான் அவனுக்கு வரும். அதன் ஆனால் அவனது குறும்புகள் எல்லை மீறுவதில்லை. பெரிய தலையிடிகளை வீட்டுக்கு கொண்டு வருபவனில்லை. இப்பொழுது தொகுத்து யோசித்தால் அவன் எல்லாக் காலங்களிலும் “இதெல்லாம் ஒரு பிரச்சினையா!” என்று சொல்வது கேட்கிறது. அவன் பென்னம் பெரிய பிரச்சினை ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் பூமியில் நிகழும் மிச்சமெல்லாம் சிறியதென்றும் எண்ணக் கூடியவன். பெரிய பிரச்சினை என்று அவன் சொல்லியது எதை என்று நினைவு மீட்க முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை எல்லாம் சிறியது.

அம்மாவின் மரணத்தின் பின் நன்றாகத் தெறித்து விட்டோம். அந்த வீட்டினை நான் வெறுத்தேன். அங்கிருந்து எவ்வளவு தொலைவு ஓட முடியுமோ ஓடினேன். அவனும் என்னுடன் ஓடிவரக்கூடிய தூரம் வரை வந்தான். அம்மாவின் மறைவிற்கு பின்னர் குடும்பம் குலைந்ததை நான் உணரவில்லை. வேட்டி நூல் முள்ளில் சிக்கியதை அறியாமல் விலகி நடப்பது போல வேகமாக வெளியேறினேன். நூல் இழுபட்டு இழுபட்டுக் குலைந்தது.

எங்கள் மிக்சர் கொம்பனிக்கு இடம் காணாமல் இருபாலையில் ஒரு வீட்டில் இருந்தோம். எனக்கும் சுகிர்தாவுக்கும் அப்போது சமைக்கத் தெரியாது. கடைச் சாப்பாடுகளுக்காக காத்திருப்போம். பெரும்பாலான இரவு நேரச் சாப்பாடுகளை அப்பா வாங்கி வர பத்து மணி ஆகிவிடும். பசி தெரியாமல் கதைத்துக் கொண்டிருப்போம். கட்டைக்கு மட்டும் ரொட்டி சுடத் தெரியும். அவன் சுடும் ரொட்டிகளைச் சாப்பிடுவோம். அந்த நேரம் நட் ஹம்சன் எழுதிய பசி எனும் நாவலை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். பிறகு சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் டயரிக் குறிப்புகள். இரண்டு புத்தகங்களிலும் பசியும் சாப்பாடும் மையச் சரடுகளாக ஓடிக் கொண்டிருக்கும். இருவருக்கும் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பேன்.

அவனுக்கு ஒரு வகையில் எதைக் குறித்தும் பெரிய அபிப்பிராயங்கள் இருப்பதில்லை. ஆனால் ஒவ்வொரு சிறியதையும் அவன் பொருள் கொண்டான். நான் பெரியதை எடுத்துக் கொண்டேன். கைவிடப்படுபவை, எவரும் கண் கொள்ளாதவை, அனுதாபத்திற்கு உரியவை மீது அவனுக்கு தீராத பார்வை சிறு வயது முதல் இருந்தது. அது அம்மாவிடமிருந்து அவனுக்கு வந்தது. அதை அவன் இன்னும் நீட்டிக் கொண்டான்.

ஓர் இளம் ஒளிப்படக் கலைஞனாக அவனது பார்வை குவிந்திருந்தது மேலே குறிப்பிட்ட அநாதரவான ஒற்றைச் சிறு உயிர்கள் மீதே. சித்தம் பிறழ்ந்தவர்கள், வீட்டு உயிரிகள், மூட்டை தூக்குபவர்கள், குழந்தைகள், எளியவர்கள் எல்லாம் தான் கட்டையின் பார்வையில் பொருள் கொண்டவர்கள். இப்போது அவனது ஒளிப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரியது எதுவும் அவனுக்கு முக்கியமே இல்லை. சிறியது மட்டும் தான் அவனுக்கு உரியது. சிறிதினும் சிறிதை நோக்குவது.

(மேலும்)

TAGS
Share This