ஒளியுள்ள இருட்டு – 2

2
அவனுடைய ஒளிப்படங்கள் 2018 இற்குப் பின் வளர்ச்சியடைந்து கொண்டே இருந்தன. அவனும் தொடர்ந்து பயணங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் அதிகமும் பிரயாணி அல்ல. மெல்ல அப்போது தான் செல்லத் தொடங்கியிருந்தான். முதலில் பண்ணைக் கடற்கரைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் படங்களை எடுப்பான். பிறகு நெடுந்தீவுக்குச் சென்றான். பின்னர் கிளிநொச்சி. கட்டை சில காலம் மல்லாவியில் பிரிந்தாவின் வீட்டில் நின்றான். அங்கு பிரிந்தாவின் அண்ணாவின் போட்டோ ஸ்டூடியோவில் வேலை செய்தான். என்னைப் போலவே அவனுக்கும் குளங்களையும் காடுகளையும் அறிமுகப்படுத்தியது மல்லாவியில் உள்ள பாலிநகரமே. வவுனிக்குளத்தை அண்டிய குடியிருப்புகள் இயற்கை அளிகொடுத்த நிலம். எருமைகள் பட்டிகளாக மேயும். சிறு குளங்களில் தாமரைகள் செறிந்திருக்கும். வாய்க்கால்களில் குளித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் குடிகளையும் கொண்ட நிலம். அங்கும் அவன் ஒளிப்படங்களை எடுத்துப் பயின்று கொண்டிருந்தான்.
ஒரு தனிநபர் கண்காட்சியை அவனுக்கென நடத்துவது குறித்து நானும் அவனும் கதைத்துக் கொண்டிருந்தோம். அவனது படங்களைத் தேர்வு செய்து தலைப்புகள் வைத்தோம். பின்னர் காலம் குழம்பியது. அந்தத் திட்டத்தைக் கைவிட்டோம். இப்போது அவனது ஒளிப்படக் கண்காட்சியை நண்பர்களுடன் குடும்பமும் இணைந்து நடத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.
அவனது ஒளிப்படங்களை இப்போது தேர்வு செய்து தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அவனை ஓர் இளம் ஒளிப்படக் கலைஞன் என முன்வைக்கக் கூடிய தகுதிகள் எவையென எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இலக்கியமானாலும் இன்ன பிற கலைகளானாலும் முதலில் செய்ய வேண்டியது கருவியை அறிதல். இலக்கியத்தில் ஒருவர் சொல்லை அறிவது போல பிரசாந் ஒளிப்படக்கருவியின் ஒற்றைக் கண்ணை அறிந்து கொண்டிருந்தான். ஒளிப்படக் கலை தன் கருவியின் இயல்பால் ஒருமை நோக்குக் கொண்டது. பிரசாந்தின் கண்கள் தொடர்ந்து அந்த நோக்கினால் பார்த்துக் கொண்டேயிருந்தது எதை என்பது அவனது பார்வையின் கோணத்தை காட்டியது. எந்த ஒரு கலைஞருக்கும் அடிப்படையில் உருவாகி வர வேண்டிய வாழ்க்கைப் பார்வை குறித்த அம்சம் அது.

கொஞ்சம் நம் காலத்தை உறுத்துப் பார்த்தால் தெரிவது என்ன? பல்லாயிரம் பேரின் கைகளில் ஒளிப்படக் கருவிகள் வந்து விட்டன. ஒவ்வொரு தொலைபேசியும் ஓயாது படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் காட்சிகளும் உருவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. அதற்குள் ஒருவரை கலைஞர் என்றும் அவர் செய்வது கலை என்றும் பிறிதுபடுத்திப் பார்ப்பதற்கு நாம் அடிப்படைகளை விளக்கியாக வேண்டும்.
நாம் தினமும் பல்லாயிரம் கவிதை வரிகளை சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலுமாகப் பார்க்கிறோம். அனைத்தும் கவிதையா? அனைவரும் கவிஞர்களா? இல்லை. நாம் கலை பற்றிய அடிப்படைகள் மூலம் அதை பிறிதுபடுத்திப் பார்க்கிறோம். ஓர் இளங் கவிஞன் எழுதிப் பழகும் கொப்பியின் வரிகளைப் போல பிரசாந் ஒரு காட்சித் துண்டை நூற்றுக்கணக்கான ஒளிப்படங்களாக சேகரித்திருக்கிறான். அந்த தியானம் ஒரு கலைஞருக்கு நிகழ வேண்டும். அது நிகழ்ந்தால் மட்டுமே தீவிரமான தன் உச்ச தருணத்தை ஒரு கலைஞர் கண்டடைய முடியும். கலையென்பது தீவிரத்தால் பணியும் தெய்வம்.
இரண்டாவது அம்சம் கலைஞரின் வாழ்க்கை சார்ந்து அவரின் கலை வெளிப்பாடு அடையும் அர்த்தங்களின் தொடர்பு. கலையையும் கலைஞரின் வாழ்வையும் பிறிதுபடுத்தி நோக்குவதில் எனக்கு இப்போது உடன்பாடில்லை. முழுவதும் இணைந்தது தான் கலை எனும் அனுபவம். பிரசாந்தின் படங்கள் அனைத்தையும் தொகுக்கும் பொழுது அவனது வாழ்க்கை முன்னரேயே எதிர்வுகூறப்பட்டதைப் போன்ற ஒரு உணர்வை அடைகிறேன். அவனது இடக்காலை ஒரு நாய்க்குட்டி நக்கும், கடிக்கும், அணைக்கும் படங்களை எடுத்திருக்கிறான். பல்வேறு வகையான கால்களையும் செருப்புகளையும் எடுத்திருக்கிறான். கைகளை நீரில் நனையவிட்டு அவன் எடுத்திருந்த ஒளிப்படங்கள் பின்னர் அவனது நோய்க்காலத்தில் அவனுடலில் இருந்து பெருகிய வியர்வையைப் போலிருக்கின்றது. ஒரு மாட்டின் இறந்த கண்ணை நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்திருக்கிறான். நோயில் மெலிந்திருக்கும் குதிரையின் உடலை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்திருக்கிறான். இப்படி அவனது பல படங்களின் அர்த்தத்தை அவனது வாழ்க்கை மாற்றியிருக்கிறது.

அவனது நோய் கான்சர் தான் என உறுதி செய்யப்பட்ட பின்னர் அவன் ஒளிப்படங்களை எடுத்தது மிகவும் குறைவு. காலில் கான்சர் வளரும் பகுதியை வெட்டி அகற்றி அதற்கு பதிலீடான எலும்புகளை பொருத்தும் சத்திரசிகிச்சை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தெல்லிப்பளை கான்சர் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவன் காலின் எலும்பு மாற்று சிகிச்சைக்கென யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இருந்தான். எலும்பு பொருந்தவில்லை. அதற்கென பெருந்தொகையை உறவினர்களும் அப்பாவும் திரட்டியிருந்தனர். ஆனால் பலனில்லை. காலை அகற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது. கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று இடக்காலை தொடையின் அரைப்பகுதி மட்டும் எஞ்ச அகற்றினார்கள். சில காலங்களின் பிறகு செயற்கைக் காலை அப்பா வாங்கிக் கொடுத்தார்.
காலை அணிந்து பயிற்சி செய்வதற்கு தொடங்கியிருந்தான். போன வருட ஆரம்பத்தில் அவனுக்கு மீண்டும் பரிசோதனைகள் செய்தபோது நுரையீரலின் பின்னால் கட்டிகள் வளர்ந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. வெலிசரவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அதற்கான சத்திரசிகிச்சை நடந்தது. அக்காலத்தில் அவன் கடைசியாக வாசித்த சிறுகதையை வாசித்திருந்தான். திலீபனைப் பற்றி ஷோபா சக்தி எழுதிய சிறுகதையான ‘மெய்யெழுத்து’ வாசித்தான். நான் அக்கதையை வாசித்து விட்டு ஒரு குறிப்பினை எனது இணையத்தளத்தில் எழுதியிருந்தேன். வாயூறும்படி அக்கதையை அவனுக்கு விபரித்தேன். “சரி, கொண்டு வா” எனச் சொல்லி வாசித்தான். ஷோபா என்பதால் மட்டும் தான் வாசிக்க ஒத்துக் கொண்டான். அவன் வாசிக்க விரும்பியது பெரும்பாலும் ஷோபாவைத் தான். ஜெயமோகனின் கதைகளை நான் சொல்லச் சொல்லக் கேட்பான். எனக்கும் அவருடைய கதைகளே சொல்லக் கூடியவையாய் இருந்தன. அப்போது வெண்முரசு வாசித்துக் கொண்டிருந்தேன். அதன் உக்கிரமான வாழ்க்கைத் தருணங்களை விளக்கிச் சொல்வேன். நோயிலிருந்து மீண்ட பின்னரான வாழ்வில் அவன் ஒரே ஒரு புத்தகம் வாசிக்க வேண்டுமென்றால் அது வெண்முரசு தான் எனச் சொல்லியிருந்தேன். சிரித்தான்.
கட்டைக்கு திரைப்பட ஆர்வம் இருந்தது. ‘Don’t judge too quick’ என்றொரு குறும்படத்தினை எடுத்திருந்தான். எஸ்கேப் எனும் குறும்படத்திற்கு ஒளிப்படக் கலைஞராக பணியாற்றியிருக்கிறான். அவனுக்கு பிடித்த இயக்குனர்கள் மூவர். றஞ்சித், மாரிசெல்வராஜ், தியாகராஜன் குமாரராஜா ஆகியோரை அவன் ஒவ்வொரு அடியிலும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கான மணித்தியாலங்கள் அவர்களின் திரைப்படங்கள் குறித்தும் நேர்காணல்கள் பற்றியும் உரையாடியிருக்கிறோம். றஞ்சித்தினதும் மாரிசெல்வராஜினதும் அரசியல் சரிநிலைகள் மீது கடுமையான விவாதங்கள் உருவாகும் பொழுது தியாகராஜன் குமாரராஜாவுக்கு நகர்வோம். வாழ்க்கை பற்றிய அடிப்படைக் கேள்விகளை அணுகுவதே கலையெனும் தெளிவை நாங்கள் உரையாடி வந்து சேர்ந்திருந்தோம்.

சகோதரர்கள் மூவரும் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வமற்றிருந்தோம். வீட்டில் அப்பா நாய்களை வளர்ப்பார். ஒரு பருவத்தில் நான் வீட்டில் மீன்களை வளர்த்தேன். அவை இறப்பது பொறுக்காது நான் அதைக் கைவிட்டேன். பரியேறும் பெருமாள் படத்தின் பின்னர் பிரசாந் கறுப்பி எனும் நாய்க்குட்டியை வளர்த்தான். அது தான் அவன் காலை நக்கும் நாய். அது இளவயதில் இறந்தது அவனை மிகவும் பாதித்தது. எந்த நேரமும் கறுப்பி பாடலை கேட்டுக் கொண்டிருப்பான். அவன் அவ்வளவு கலங்கி நாங்கள் பார்த்ததில்லை. அதன் பின்னர் அவன் வழக்கம் போல வீட்டு விலங்குகளையும் தெருவிலங்குகளையும் தொலைவில் இருந்து பார்க்கத் தொடங்கினான். ஒரு உறவை உலகில் உண்டாக்கிக் கொள்வது எத்தகையது என்பது கலையில் முக்கியமான கேள்வி. அது விலகும் பொழுதோ பிரியும் பொழுதோ உண்டாகும் உணர்வு நிலைகள் கலைஞருக்கு முக்கியமானது.
வெலிசரவுக்கு பின்னர் சில காலங்கள் கீமோ நடந்தது. அவன் மகரகமவில் ஜெயக்குமார் வைத்தியரிடம் சிகிச்சை பெறத் தொடங்கியது முதல் அவனது இறுதி மூச்சு வரை அவன் நம்பியது அவரை மட்டும் தான். அவரைத் தெய்வம் என்று சொல்வான். ஒரு நோயாளி அவரிடம் செல்லும் பொழுது அவர் கதைக்கும் முறையை ஆர்வத்துடன் விபரிப்பான். எங்கிருந்து வருகிறீர்கள்? எப்படி வந்தீர்கள்? எங்கு தங்கியிருக்கிறீர்கள்? குடும்ப நிலை என்ன? என்பது முதல் அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வார். எளிமையான வழிகளை நோயாளிக்குச் சொல்வார். அவரது பாரத்தை இணைந்து சுமப்பார். எந்த நேரத்திலும் அழைக்கக் கூடியவர். இரவு ஒரு மணி இரண்டு மணிக்கெல்லாம் நாங்களே கூட அவரை பலமுறை அழைத்திருக்கிறோம். அவர் பதிலளிப்பார், தன்னால் ஆனதிற்கும் மிஞ்சிய அனைத்தையும் தேடித் தேடிச் செய்வார். ஜெயக்குமாரின் அப்பாவும் கான்சரினால் இறந்தாராம். அதனால் அவர் தீவிரமாக படித்து கான்சருக்கான விசேட வைத்தியராக ஆனார். சிங்களச் சனமும் முஸ்லிம்களும் அவரின் காலில் விழுந்து வணங்கிச் செல்வார்கள் என கண்களில் தீவிரத்துடன் சொல்வான்.
நோய் வருவதற்கு முந்தியிருந்த பிரசாந் அதிகம் கதைப்பவனோ அலைபவனோ அல்ல. ஆனால் நோய் அவனுக்கு பக்கத்து கட்டில்களின் மனிதர்களை உரையாட வைத்தது. சிங்கள நோயாளிகளுடன் சைகைகளிலும் சிறிய சிங்களச் சொற்களிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் கலந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். மனிதர்களைக் குறித்த அவனுடைய முழுப்பார்வையையும் நோய்க்காலம் மாற்றியது. எனக்கும் அப்படித் தான்.

துப்பரவு செய்யும் பணியாளர்களின் கரிசனம், உணவின்றி இருக்கும் ஏழை நோயாளிகள், மருந்து வாங்க கடினப்படுபவர்களின் நிலை, நோய்களின் தீவிரங்கள், இறப்பின் பலதரப்பட்ட வயதுகள் என்று அவன் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கைகள் அவனைப் பாதித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் மீது பெருங்கனிவையும் அன்பையும் பெற்றான். அந்த மனிதர்களைப் பற்றி நான் எழுதுவேன் என அவனுக்கு வாக்களித்திருக்கிறேன். அரண்மனையை விட்டு வீதிக்கு இறங்கிய புத்தருக்கு நோயும் மூப்பும் சாவும் அளித்த அலைக்கழிவை அவன் உணர்ந்து கொண்டிருந்ததை அவனுடைய சொற்கள் சொல்லிக் கொண்டிருந்தன. இத்தனை எளிய பிரச்சினைகளுக்கு மனிதர்கள் ஏன் இவ்வளவு சண்டை பிடிக்கிறார்கள், வஞ்சம் வளர்க்கிறார்கள் என எரிந்து கொண்டிருப்பான். வாழ்க்கையை வீணாக்குபவர்கள் குறித்து அவனிடம் கோபம் மிகுந்திருந்தது.

அவனுக்கு வரும் பழங்களையும் இனிப்புகளையும் பக்கத்துக் கட்டில்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருப்பான். உறவுகள் குறித்த பார்வையும் அவனுக்கு மாறியிருந்தது. ஒருவனுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டு செல்ல எத்தனை நூறு கரங்களின் உழைப்பு செலவாகிறது என்பது விளங்கியது. சிறிய கோபதாபங்கள் எப்படிக் கரைந்தன என்பதைக் கண்களால் பார்த்தோம். அண்ணன்களும் அக்காக்களும் நண்பர்களும் சொந்தங்களும் உறுதுணையாய் இருந்தார்கள். அனைவர் குறித்தும் அக்கறை பொங்கக் கதைத்துக் கொண்டிருப்பான். முன்னரான காலங்களில் கொண்டாட்டங்களுக்கு அவன் செல்வது குறைவு. அவனை எழுப்பிக் கொண்டு செல்வது கல்லில் நாருரிக்கும் வேலை. அவனுக்கு கிடைத்த நேரமெல்லாம் அவன் உலகை அறிந்து கொண்டிருந்தான்.

இனி அவனிருந்து ஒளிப்படங்கள் எடுத்திருந்தாலோ வாழ்ந்திருந்தாலோ அவன் முற்றிலும் வேறொருவனாக இருந்திருப்பான். வாழ்க்கை குறித்தும் மனிதர்கள் பற்றியும் அவனது பார்வையை நோய்க்காலம் தலைகீழாக்கி புதிய வெளிச்சத்தில் காட்டியிருந்தது. ஒரு மாதம் முன்னர் வரை கடைக்குச் சென்று கொண்டிருந்தான். செயற்கைக் காலை அணிந்து விளையாடச் செல்வான். கடைக்குச் சென்றான். இடுப்பிற்கு கீழே திடீரென்று செயலிழந்தது. தெல்லிப்பளைக்கு கொண்டு சென்று கரண்ட் பிடித்தார்கள். நோய் முற்றியிருக்கிறது என பரிசோதனை அறிக்கைகள் சொல்லின. ஆறுமாதமோ ஒருவருடமோ தாங்கலாம் என நினைத்தோம். இரண்டு கிழமைகள் கூடத் தாங்கவில்லை. நுரையீரலில் வளர்ந்த கட்டிகள் மூச்சைத் திணற வைக்கத் தொடங்கியது.
தெல்லிப்பளையிலிருந்து புறப்படும் முன்னர் அப்பாவுடன் கேணியடியில் இருக்கும் வீட்டில் இருக்கலாம் என முடிவெடுத்தான். அதுவரையான மூன்று வருட காலமும் அவனது குடும்பமாகவும் முழுதான உறுதுணையாகவும் இருந்தது சுகிர்தாவின் மாமியார் வீடு. மாமியின் பெயர் அன்னலட்சுமி. பாக்கியலட்சுமி பெற்று வளர்த்தவனை அன்னலட்சுமி இறுதி வரை மகனாக வளர்த்தார். சுகிர்தாவின் கணவர் ஹரி அவனைச் சகோதரனாகப் பாவித்தார். மாமா அவனுடன் தோழனாக இருந்தார். அவர்களது உறவுகளும் அவனை அணைத்துக் கொண்டன. சுகிர்தாவின் நண்பிகள் அவனைக் கட்டை அண்ணாவாக ஏற்றுக் கொண்டனர். நான் மல்லாவியிலும் பிரிந்தா டெல்லியிலும் இருந்தார். கட்டையில் அப்பா கனிந்து வளர்ந்ததைப் போல சுகிர்தாவில் அம்மா வளர்ந்து நிறைந்தார். சுகிர்தா தான் அவனது வாழும் காலத்தை தன் ஆன்ம பலத்தால் நீட்டித்தாள். யாரை விடவும் அவனையே விடவும் அவனைக் காப்பாற்ற முடியும் என நம்பிக் கொண்டிருந்தாள். நான் குரூரமான உண்மையை ஏற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் அவளால் அதன் மென்மையான இருப்பைக் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவனது இறுதி இரண்டு நாட்களும் உத்தரிப்பாய் இருந்தது. ஒரு கிழமைக்கு மேலாக அவனது உடல் ஒரு கணம் ஓயாத வியர்வையில் ஊறிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மூச்சும் கடினமாகிக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் பாதி நாளிருந்தான். ஏசியில் அவனுக்கு வியர்வை நின்றிருந்தது. அவனது உடலைத் தொட்டுப் பார்த்தேன். கைவிரல்களை இறுக்கிப் பிடித்தான். அவனது உடலின் குளிர் எனக்கு மரணத்தைக் காட்டியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவான் போலத் தெரிந்தது. வெளியே இருந்த வாங்கில் சுகிர்தாவும் ஹரியும் அமர்ந்திருந்தனர். நான் சென்று அமர்ந்திருந்தேன். நண்பர்களுக்கு எடுத்து தகவலைச் சொன்னேன். சுகிர்தா எழுந்து சென்று வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கவிதையை எழுதினேன். அந்தக் கணம் வரையான இறுக்கத்தை கடந்தேன்.
மெளனமான ஒரு கல்லிலிருந்து
பெருகும் ஒரு நீர் போல
இந்த நாளிலிருந்து கசிகிறது காற்று
மூச்சில் சிக்கியிருக்கும் ஒரு பார்வையைப் போல
இந்த நாளிலிருந்து கசிகிறது தேகக் குளிர்
என்றோ கட்டிலிருந்த பேயொன்று
அறுந்து விலகுகிறது
மூச்சை இழுத்துப் பிடிக்கிறது
நழுவி விழுகிறது
கண்ணீரை மொய்க்கின்றன இலையான்கள்.
(கட்டைக்கு)
16.10.2025

அப்பா வந்து நின்றார். இரவு அவனை அனுமதித்து விட்டு வீட்டுக்குச் சென்றவர் கொஞ்ச நேரத்திலேயே திரும்பி வந்தார். சுகிர்தாவின் மாமியும் வந்தார். மதியத்திற்கு பின்னர் அவனை 35 ஆம் வார்ட்டிற்கு மாற்றினார்கள். அங்கு மீண்டும் வியர்வை பெருகியது. அவனுக்கு அருகிலமர்ந்து துடைத்துக் கொண்டும் விசிறிக் கொண்டுமிருந்தோம். பிரிந்தாவும் சுகிர்தாவும் ஹரியும் நானும் மாறி மாறி அமர்ந்திருந்தோம். சுகிர்தாவை மீறி வழிந்து கொண்டிருந்த கண்ணீரைப் பார்த்து கட்டை அழத் தொடங்கவும் சுகிர்தா எழுந்து சென்றாள். அக்கணம் உணர்ந்தேன், தெல்லிப்பளையில் அவனிருந்த போது “எனக்கு இரண்டு விடயங்களால் சாவதற்கு தடையில்லை. ஒன்று, எனக்கு வாழ்க்கையில் எந்த நோக்கங்களும் இல்லை. இரண்டாவது எனக்கு காதலியோ மனைவியோ இல்லை. இப்பொழுது நிம்மதியாக விடைபெறலாம். இங்கு எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை” எனச் சொல்லியிருந்தான். ஆனால் அக்கணத்தில் அவன் உலகிலிருந்து பிரியும் வேளையில் யாரின் தியாகத்திற்கும் கண்ணீருக்கும் அவன் உரித்துடையவனாய் இருந்தானோ அவள் அழுவதைத் தான் அவனால் பார்க்க முடியவில்லை. அது சரியானது தான். நானும் அவனும் அன்று இரவு தனித்திருந்தோம். அப்படியொரு வேளை அமையுமென்பதை முன்னரே அறிந்துமிருந்தோம்.
செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணம் பட்டினத்தை அண்டி மழை பெய்தது என நினைக்கிறேன். நள்ளிரவு ஒரு மணிக்கு பின் குளிரான காலநிலை நிலவியது. அவனுக்கு வியர்வை நின்றிருந்தது. மாலையில் பூட்டியிருந்த செயற்கை சுவாசக் குழாயை சிறியதாக மாற்றியிருந்தார்கள். பெரிய குழாயில் சென்ற ஒக்சிசனின் வேகம் அவனுக்கு மூச்சை அதிகமாக திணற வைத்தது. சுவாசத்தின் அளவை 98/99 இல் வைத்துக் கொண்டிருந்தார்கள். முகட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். வாசலைப் பார்ப்பான். சுகிர்தாவை வெளியே செல்லச் சொல்லி சைகை காட்டினான். அவள் வெளியே செல்வதைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்து “என்னை வந்து பார்த்த அனைவருக்கும் உனக்கு கடனிருக்கு. எல்லாருக்கும் ஏதாவதெண்டால் போய் நில்” என்றான். பிறகு மூச்சை இழுத்தபடி “எனது கமராவை யாராவது கஷ்டப்படுற படமெடுக்க விரும்பிற சின்னப் பிள்ளையக் கண்டுபிடிச்சுக் குடு” என்றான். பிறகு அமைதியாகப் படுத்து தாதியரையும் சுற்றையும் நோக்கி விட்டு ஒக்சிசன் குழாயை கழற்றி விடச் சொல்லிக் கேட்டான். இரத்தம் குளிர்ந்து என் கைகள் நடுங்கி விட்டன. அவனும் நானும் எக்கணமும் அப்படியொரு உறவிலேயே இருந்து கொண்டிருந்தோம். எதையும் கேட்டுக் கொள்ளும் ஒரு உறவு. அவன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கேட்டாலும் செய்வேன் எனும் எல்லைக்கு என்னை நம்பியிருந்தான். ஆனால் இப்பொழுது நினைத்துப் பார்த்தால் அப்படியொரு தருணத்தில் நானும் அவனைத் தான் கேட்டிருப்பேன் என்று தோன்றுகிறது. ஆனால் என்னால் அவன் சுவாசக் குழாயை தொடக் கூட முடியவில்லை. உடலின் சதைகள் தன்னால் ஆடத் தொடங்கின.
குழப்படி விட்டால் கையைக் கட்டி வைப்பார்களடா என்று எச்சரித்தேன். வேண்டாம் போகாதே, இதை இன்னும் கொஞ்சம் பொறு என்று சொன்னேன். ஆனால் அவனது உடல் நோவில் நெளிந்து தெறித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் என்னால் அவனை செயற்கையாச் செல் எனச் சொல்ல முடியவில்லை. ஒரு குழாயை அறுத்து முடிந்து விடுவது போல இல்லை அவனது மரணம். அவன் தானாகக் குழாய்களை அகற்றத் தொடங்க நான் தாதியரையும் வைத்தியரையும் அழைத்துக் கத்தினேன். அவர்கள் நெருங்கி வரும் பொழுது தன் முழுதாற்றலையும் குவித்து எழுந்து செயற்கை சுவாசக் குழாயை பிடுங்கி வீசினான். இரண்டு நிமிடங்கள் மூச்சுத் திணறத் அவர்களது சிகிச்சைகளை தட்டி விட்டுக் கொண்டிருந்தான். அவனது கைகளில் முரட்டு பலமிருந்தது. அழுது கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுகிர்தாவின் தோள்களைப் பிடித்தபடி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்கள் நினைவின்றி ஓடிக் கொண்டிருந்தன. இரண்டு நாட்களாக துயிலின்மை உடலைச் சோர்வாக்கியிருந்தது. மிக மிக மெலிதாக உடலை உணரும் பொழுது நிகழும் சோகமென்று சிலது உலகில் உண்டு. அதுவே மெய்யானது. அதுவரை நாமறிந்த அனைத்துத் துயரங்களிலும் பெரியது.

சுவாசக் குழாயை மீண்டும் பொருத்தி சுவாசத்தைச் சீராக்கினார்கள். அதன் பின்னர் சில மணி நேரங்கள் அவனுக்கு நினைவுகள் குழம்பத் தொடங்கி விட்டன. நானும் சுகிர்தாவும் பிரிந்தாவும் நின்றோம். ஹரியும் அப்பாவும் பிரிந்தாவின் அம்மாவும் வெளியே அமர்ந்திருந்தார்கள். ஹரியின் அம்மா உடல் இயலாத நிலையிலும் வீட்டிற்கும் வார்ட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவனது காலுக்கு என்ன நடந்தது எனக் கேட்டான். எங்கே இருக்கிறோம் எனக் கேட்டான். சுகிர்தாவும் பிரிந்தாவும் அது சின்னக் காயம், விபத்து என பொய்களைச் சொல்லி அவனை ஆற்றினார்கள். இடையில் சொன்னான், “எல்லாம் வினை” என்றான். ஒரு சின்ன வேலை பார்க்கப் போய் இவ்வளவு பிரச்சினை என்றான். என்னடா செய்தனி. ஒண்டுமில்லை என்றேன். சுவாசக் குழாயை கழட்டினது தான் இதுக்குக் காரணம் என்றான். பிறகு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது.
நான் வெளியே மாமரத்தின் கீழே அமர்ந்திருந்தேன். அப்பாவுடனும் பிரிந்தாவுடனும் சுகிர்தாவுடனும் இருந்து கதைத்துக் கொண்டிருந்தான். அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “இனியும் யாருக்காக உழைக்கப் போறியள். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. கடையில வேலை செய்யிற பெடியளைப் பேசாதீங்கோ” எனச் சொன்னான். சுகிர்தாவைப் பார்த்து நீ நல்லாயிரு என்றான். பிரிந்தாவைப் பார்த்து பிரிந்தாவும் கிரிசாந்தும் நல்லாயிருங்கோ என்றான். கட்டை அருள்வாக்கு கொடுக்கிறான் எனச் சொல்லி பகடி செய்து வெளியிலிருந்தவர்களையும் அழைக்க வந்தார்கள். வெளியிலிருந்தவர்கள் செல்லும் பொழுது அவனிலிருந்த வாக்கின் தெய்வம் இறங்கிச் சென்றிருந்தது. முகட்டையே ஓயாது பார்த்துக் கொண்டிருந்தான். வாசலைச் சிலவேளை பார்த்தவனிடம் என்னடா பார்க்கிறாய் என பிரிந்தாவும் சுகிர்தாவும் கேட்டிருக்கிறார்கள். என்னைத் தான் தேடுறன் எனச் சொன்னான்.

ஹரியையும் பிரிந்தாவையும் வீட்டுக்கு அனுப்பினோம். ஒன்றரை மணிக்கு இருவரும் சென்றார்கள். பக்கத்துக் கட்டிலில் அப்பா படுக்க முடியும் என வைத்தியசாலையில் சொன்னார்கள். வைத்தியரின் அறையில் சுகிர்தா தங்கலாம் எனச் சொன்னார்கள். இருவரும் அவனுக்குப் பக்கத்துக் கட்டிலில் படுத்து கடுமையான நித்திரைக்குள் சென்றார்கள். அப்பாவும் மகளும் கட்டிப் பிடித்து உருண்டு விளையாடியதையும் காலையும் கையையும் எறிந்து அடிபட்டுக் கொண்டதையும் நானும் கட்டையும் பார்த்துச் சிரித்துக் கேலி பேசினோம். கட்டையிடம் அவனது சிறுவயது பட்டப்பெயர்களைக் கேட்டேன். கட்டை என்றான், வேற ஒண்டிருக்கு எனக் கேட்டேன். ஆவண்ட வாயன் எனச் சொல்லிச் சிரித்தான். வியர்வை நின்று மிகவும் உற்சாகமாக இருந்தான். என் தோளில் விரல்களால் தாளமிட்டு தட்டி என்ன பாட்டு எனக் கேட்டான். நான் சும்மா ஒரு பாடலைச் சொன்னேன், குட் போய் எனக் கன்னத்தில் தட்டினான்.
ஐந்து மணிவரை இருவரும் கதைத்தும் சிரித்தும் முன்னெப்போதுமில்லாத களிப்பில் இருந்தோம். கடைசியான ஒரு கொண்டாட்டம் போல.
அப்பப்பாவும் இறப்பதற்கு முன்னர் படுக்கையிலிருந்து எழுந்து பாடல் பாடி மழையை ரசித்திருக்கிறார். இது இரத்தத்தில இருக்கடா என்று சொன்னேன். சிரித்தான். அடுத்த நாள் பகலில் உத்தரிப்பு அதிகமாகியது. மாலை வரை நிற்காத மூச்சுத் திணறல். ஒரு நூல் நுனி ஆடுவது போன்ற மூச்சே அவனுக்கு எஞ்சியிருந்தது. பின்னேரம் ஆறுமணிக்கு மருந்து போட்டார்கள். கண்கள் சொருகிக் கொண்டு சென்றன. எழுந்து வெளியே வந்து நான் போய் கொஞ்ச நேரம் படுத்திட்டு வாறன் என்று சொன்னேன். சுகிர்தாவையும் ஹரியையும் உள்ளே நிற்கச் சொன்னேன். வெளியே பிரிந்தாவின் அம்மாவும் எங்களது அப்பாவும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரு தேங்காயை துணியில் சுற்றி அவனுடலை முழுதாக மும்முறை வருடி உடைத்து விட்டு வந்திருந்தார் அப்பா.
நான் சென்று படுத்திருந்தேன். இரண்டு நாள் துயிலின்மை கனவுக்கும் நனவுக்கும் உடலை கசக்கியபடி இருந்தது. உத்தரிக்கும் உடலை ஏன் பார்க்கக் கூடாதெனச் சொல்வார்கள் என்பதை இப்போது நன்கறிவேன். படுத்திருந்த என்னுடம்பு அவனுடையது போலத் துடித்தது. தலை விறைத்து கைகளால் அவனைப் போலவே தடவிக் கொண்டேன். அவன் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல எனது விரல்களை நானே பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். அவனுக்கு உடலில் நடப்பதெல்லாம் எனக்கு உடலில் நடப்பது போன்ற தோற்ற மயக்கிலிருந்தேன். அவனைப் போலவே மூச்சும் மெலிதாய் எழுந்தணைய கொஞ்ச நேரம் இருண்டு நித்திரைக்குள் சென்றேன். கண்கள் இயல்பாய் திறக்கும் பொழுது பிரிந்தா காதில் போனை வைத்தபடி என்னைப் பார்த்து அவன் மரணத்தைச் சொன்னார். அக்கணம் இருந்தது போன்ற நிம்மதி உணர்வை நான் என்றும் அடைந்ததில்லை. விடுதலை எனக் கூச்சல் கொண்டது மனம். அவனது உத்தரிப்பை பார்க்கவே முடியவில்லை. அந்த ஒவ்வொரு கணமும் அழுதழுது முடித்தாகி விட்டது. அவனது இந்த நெடுங்கால நோய்க்காலத்தின் உத்தரிப்பையும் வலியையும் அறிந்த ஒருவருக்கு அதன் விடுதலை விளங்கும். சென்று வா எனச் சொல்லி விடை கொடுக்கலாம்.
சென்று அவனது உடலைப் பார்த்தேன். அதே கட்டிலில் சிரித்த முகமாக ஒளியுடன் படுத்திருந்தான். உடலில் சூடு இருந்தது. ஏனடா சென்றாய் என இருகைகளையும் அவன் உடல் மேல் நீட்டியபடி சுகிர்தா கொஞ்ச நேரம் நின்றாள். அவனது உடலை எடுத்துச் சென்றோம். இன்போம் பண்ணுமிடத்தில் அவனுக்கு வைக்கோலால் ஒரு பொய்க்கால் செய்து வைத்தார்கள். அவனது உடலை கேணியடி வீட்டுக்குக் கொண்டு வந்தோம். விடியும் வரை கதைத்துக் கொண்டிருந்தோம். இடையில் சென்று தேவாரம் பாடினோம்.

மரண வீட்டை அடுத்த நாளே நடத்தினோம். துயிலின்மையால் என்னால் அங்கு நிகழ்ந்தவற்றை முழுதாக கிரகிக்க முடியவில்லை. கண்ணிமைகள் மூடிக் கொண்டேயிருந்தன. சடங்குகள் முடிந்து அவனுடலை அவனது நண்பர்கள் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அம்மாவை எரித்த அதே சுடலையை நோக்கி மீண்டுமொரு நடை. கருமேகங்கள் திரண்டு வந்திருந்தன. அவனது உடலைக் கொணர்ந்து வீட்டில் வைத்த அடுத்த கணத்தில் மழை பெய்யத் தொடங்கியிருந்தது. நல்லவர்கள் இறந்தால் மழை பெய்யும் என்பது கட்டையின் நம்பிக்கை. நான் இவ்வளவு ரசித்த ஒரு மழை இதற்கு முன்னில்லை. தெவிட்டத் தெவிட்ட அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடலைக் கொண்டு சென்று எரிமேடையில் வைக்கும் பொழுது மழை வருமென்பதை ஒரு சிறு ஐயமும் இன்றி உள்ளுணர்ந்தேன்.
ஒரு குடையைப் போல மழை மேகங்கள் எங்களுக்கு மேலே கவிழ்ந்திருந்தது. ஒவ்வொரு சந்தியாக வைத்துப் பறையடித்தார்கள். அவன் விளையாடிய மைதான முற்றங்களில் பறையிசைத்தார்கள். துடுப்பாட்ட மட்டைகளை அசைத்தார்கள். அவனது மரணத்தை அவனது நண்பர்கள் அவன் விரும்பியது போலவே கொண்டாடினார்கள். எரிமேடையில் அவன் உடல் வைக்கப்பட்ட சில கணத்தில் குளிர்ந்த காற்று வருடி வீசி இலைகளும் மலர்களும் மரங்களிலிருந்து உதிர்ந்து அவன் உடல் மேல் வீழ்ந்தன. அம்மா வந்திருந்தார் என்பதை முழுவதுமாக ஒரு இருப்பாக உணர்ந்தேன். மெல்லிய தூறலுடன் மழை பெய்தது. அவனது இளம் நெற்றியை வருடிச் செல்லும் அம்மாவின் விரல்களைப் போன்ற மழை பெய்தது. அவனுக்கு கொள்ளி வைத்தார் அப்பா.
தலையில் முக்காடிட்டு சுடலை வாசலில் நின்றபடி வந்தவர்களுக்கு விடை கொடுத்தோம். அடுத்த நாள் காலையில் காடாற்றுக்குச் சென்றிருந்தேன். நானும் அப்பாவும் சொந்தக்கார இளைஞன் ஒருவரின் ஆட்டோவில் சென்றோம். அப்பாவினதும் கட்டையினதும் கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் கண்ணா அண்ணா அப்பாவுக்கு உறுதுணையானவர். அவரும் வந்திருந்தார். சடங்குகளைச் செய்து அவனது எலும்புகளை அள்ளி முட்டியில் சேர்த்தோம். பஞ்சாமிர்தம் குழைத்து விட்டு மாம்பழத்தை கரிக்குவியல் ஒன்றின் மீது எறிந்திருந்தோம். ஒரு காகம் வந்தமர்ந்து தலை சாய்த்துக் கொத்தியது. அது அவன் தான். நுணுக்கமான ஒரு கொத்தல். அவனுக்கென படைக்கப்பட்டிருந்த தேன் தடவிய ரொட்டிகள் மீது எறும்புகள் மொய்யக்கத் தொடங்கின. ஆடுகள் நெருங்கி வந்தன. எல்லாச் சிற்றுயிரும் அவன் தான் என எண்ணிக் கொண்டேன்.
கீரிமலை நோக்கி ஆட்டோவில் போகும் பொழுது அவனைப் பற்றிய நினைவுகளை அப்பாவும் நானும் கதைத்துக் கொண்டிருந்தோம். கமலாபரன் எழுதிய கவிதையை அவருக்கு வாசித்துக் காட்டினேன். மெளனமாக கேட்டுக் கொண்டிருந்தார். நானே எழுதியது போன்ற கவிதை.
எழுதுவதும் அழிப்பதுமாய்
நினைவுகள்,
பிடாரி கோயில்
கோபுரத்தைச் சுற்றுகிறது பருந்து
ஒரே வேம்பின் கீழ்
உதிர்ந்தன எங்கள் குரல்கள்,
ஒரே சொரூபத்தின் முன்னால்
எத்தனை முறை நனைந்தன எங்கள் கால்கள்,
எத்தனை முறை தளைந்தன
ஒரே துயரில்
ஒரு நாள் கழிந்தது
நீ உதிர்ந்துபட்டு
போ வராதே
அதிகமாகவே படுத்திவிட்டது வாழ்வு
அத்தனை சின்ன ஆயுளுக்குள்,
அதிகமாகவே
உன்னை வைத்திருந்திருக்க வேணும்
அதற்காகவேனும்.
இல்லையினி நோவுகள்
இல்லையினி காயங்கள்
இல்லையினி விசும்பல்கள்
இல்லையினி அம்மாவிடம் சொல்லவென்று ஓடி விழுங்கிச் செரித்த சொற்கள்
இனி அந்தச் சிரிப்பும் குரலும் மட்டும்
எப்படிப் பார்த்தாலும்
இன்னும்
நீண்டிருந்திருக்க வேண்டியதுன் வெளிச்சம்
காயங்களின் நீளத்திற்கேனும் பறந்துவிட்டுப்போ என்பதற்குள்
சிரிப்பின் அகலத்திற்கு மட்டும்
திரிந்துவிட்டுப் போகிறாய் தீர்மானமாய்..
கோவர்த்தனகிரியிலிருந்து ~
முதலில் யசோதை இறங்கினாள்;
மழைக்குள்,
இப்பொழுது நீ!

அஸ்த்தியை கரைப்பதற்கென கடலின் கரையில் நடக்கத் தொடங்கிய பொழுது மழை பொழியத் தொடங்கியது. மூன்றடிகள் நடந்து கடலுக்கு முதுகைக் காட்டி அவன் அஸ்த்தி இருந்த முட்டியை அப்பா போட்டார். திரும்பிப் பார்க்காது நடந்து வந்து மீண்டும் கடலில் இறங்கித் தலை முழுகினோம். கடலின் உப்பு நாவில் படிந்தது. ஆயிரமாயிரம் சாம்பல் கரைந்திருக்கும் கடல். அலைகள் கொந்தளித்துக் கரையை நோக்கித் தள்ளின. திரும்பி வந்தேன்.
கட்டையின் ஒளிப்படக் கண்காட்சியை செய்வோம் என ஒளிப்படக் கலைஞரும் ஊடகவியாலாளருமான நண்பன் குமணன் கேட்டான். சன்சிகனும் சொன்னதாகச் சொன்னான். செய்வோம் என முடிவெடுத்திருக்கிறோம். தொகுப்பு வேலைகள் முடிந்ததும் அது பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவோம்.
ஒருவர் நம்மை நீங்கிச் செல்லும் பொழுது அவரைத் தொகுத்துக் கொள்கிறோம். மரணத்தின் பின்னர் அவர் பற்றிய முழுதாளுமை விராட ரூபத்துடன் நம்முன் எழுகிறது. சந்தையில் மூட்டை தூக்கும் நாட்டாமைகளுக்கும் கட்டையுடன் நட்பிருக்கிறது. பலரும் வந்திருந்தனர். முஸ்லீம் வியாபாரிகள் பலரும் வந்திருந்தனர். முதிய முஸ்லீம் வணிகர் ஒருவர் அவனது உடலைப் பார்த்து விட்டு திரும்பி என்னிடம் சொன்னார் “தேடினாலும் இப்பிடியொரு நல்ல பிள்ளை கிடைக்காது” என்று. அடிப்பாதங்கள் குளிர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் பொலிய ஒரு நிறை வாழ்வு வாழ்ந்தவனைப் போல அவன் சென்றிருக்கிறான். அவனது பார்வையைப் போல எல்லாச் சிற்றுயிருக்கும் இந்த பூமியில் சுரக்கும் கருணையினைக் கண்டு கண்கள் நிறைய அதை அனுபவித்தபடி பேறுடன் சென்றான். போய் வா கட்டை. பார்வைக்குத் தெரியும் எல்லா இருட்டிலும் ஒரு சிட்டிகை ஒளியுண்டு. ஒளியுள்ள இருட்டின் பார்வையால் உலகை நோக்குபவனுக்கு அஞ்சலிகள்!

