சிறிதினும் சிறிது : அழைப்பிதழ்

எனது தம்பி பிரசாந் சிவசுப்பிரமணியத்தின் நினைவாக அவரது தனியாள் ஒளிப்படக் காட்சி 14. 11. 2025 அன்று தொடக்கம் 16 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலுள்ள சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள ‘கலம்’ கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. 14 ஆம் திகதி அவரது 31 ஆம் நாள் சடங்குகளும் மதிய போசனமும் திருநெல்வேலியில் உள்ள அப்பா வசிக்கும் இல்லத்தில் இடம்பெறும். கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடு அது.
பிரசாந்தின் ஒளிப்படங்களைப் பற்றியும் வாழ்க்கைப் பின்னணி பற்றியும் ஒளியுள்ள இருட்டு எனும் கட்டுரையில் நண்பர்கள் வாசிக்கலாம். காட்சித் திறப்பு வெள்ளிக்கிழமை மாலை 4.15 க்கு தொடங்கும். சிறிய அஞ்சலி நிகழ்வும் இடம்பெறும்.
ஒருவரது நினைவை மரணம் பிறிதொரு வகையில் நமக்குத் தொகுத்தளிக்கிறது. அவரே அறியாத அவரின் ஆளுமையின் கீற்றுகளை கூட்டமாக மனிதர்களின் சொற்கள் ஒட்டி, ஒட்டி உண்டாக்குகின்றன. பிறருக்கும் தமக்குமெனச் சொல்லிச் சொல்லி அவர்களின் நல்லியல்புகளும் தீவிரங்களும் குறைபாடுகளும் மேன்மைகளும் உரையாடப்படுகின்றன. கடலில் சாம்பல் கரைவது போல மரணமடைந்தவர்கள் மனிதர்களுக்குள் கரையத் தொடங்குகிறார்கள். சொல்லியும் தொகுத்தும் பகிர்ந்தும் பிரசாந்தின் நினைவைக் கரைத்துக் கொள்ள சிறிதினும் சிறிதான ஓர் அழைப்பு.


