கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது ஒரு தகுதி அல்ல. அதேநேரம் இதில் முன்னோடிகளும் வாசகர்களும் இடைவினை புரியும் பொழுது கவிதையை மேலும் நெருங்கி அறிந்தேன்.
கவிதை தொடர்பில் என் சமகாலத்தவர்களில் தனித்த மொழியை அடைந்தவர்கள் பலர் உண்டு. அது சதீஷ்குமார் சீனிவாசன், ஆதி பார்த்திபன், வசிகரன், றஜிதா போன்ற இளையவர்கள் முதல் சபரிநாதன், பொன்முகலி, வே. நி. சூர்யா போன்றே சற்றே மூத்தவர்களும் சரி தமக்கான மொழியை அடைந்திருக்கிறார்கள். எல்லோருடைய எழுத்துகள் மீதும் கவனம் உண்டாகியிருக்கிறது. உரையாடலிலும் வாசிப்பிலும் தீவிரமாக இருப்பது மட்டுமே ஒருவரை கலையில் வளர்க்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.
கவிதையாயினும் நாவலாயினும் நாம் கலையைப் பயிலும் முறைமை ஒன்று தான். கலை பற்றிய அடிப்படைக் கேள்விகளை அணுகி அறிய வேண்டும். கருவியைத் தொடர்ந்து பயில வேண்டும். தினமும் ராட்டை சுற்றி நூல் நூர்ப்பது போல மொழியில் அளைதல் வேண்டும். செவ்வியல் படைப்புகளையும் வரலாற்றையும் தத்துவத்தையும் தொடர்ந்து பயில வேண்டும், விவாதிக்க வேண்டும். இலக்கியத்தை தன் முதன்மையான வழியெனக் கொள்பவர் மட்டுமே அந்த தெய்வத்தைக் காண முடியும். அதனுடன் அமர்ந்து உரையாட முடியும். தெய்வம் கேட்டதோ இல்லையோ தினம்தோறும் மலரளிக்கும் பூசாரியைப் போல சென்று கொண்டேயிருக்க வேண்டும். முயன்று கொண்டேயிருக்க வேண்டும். உழைப்பும் தீவிரமும் இணையும் பொழுது கனியும் தெய்வம் அது.
நம் ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் பலரும் தம் சமகால எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் கூர்மையான மதிப்பீடுகளை அழகியல் நோக்கில் வைக்கவில்லை. கலையென்பது அழகியல் தேவைக்காக மலர்வது. அதன் முதன்மைத் தேவையே இலக்கியத்தில் விவாதிக்கப்பட வேண்டியது. தமது மதிப்பீடுகளை அவர்கள் முன்வைப்பதில்லை. தமது சிந்தனை வரைபடத்தை தொடர்ந்து விரித்துக்கொள்ளும் படி ஒன்றும் சொல்வதில்லை. ஜெயமோகன் போன்ற மகத்தான முன்னுதாரணம் தமிழில் நிகழ்ந்த பின்னரும் எதையும் பார்த்து, வாசித்துக் கற்றுக் கொள்வதில்லை. அவரது இருப்பே ஒரு சதி நிகழ்வு என நினைப்பவர்கள் உளர். அது ஒரு பாவனை. இலக்கியம் எனும் தெய்வம் அவர் முன் துதி தாழ்த்தி விளையாடும் பொழுது எழும் வெப்பிசாரம்.
இலக்கியமும் பிறிதைப் போலவே சமதையான அறிவுத்துறை எனும் நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் இல்லை. விமர்சனங்களும் ஒருவகையான எடிட்டிங்களே. நாவல் வெளிவந்த பின்னர் நிகழ்பவை. அவற்றைக் கொண்டு நாம் அடுத்த படைப்பை மேலும் கூர்மையாகச் செய்து கொள்ளலாம். விமர்சனங்களின் கூர்மையான பகுதியென்பது அதன் அரசியல் தகுதியை மதிப்பிடுவது அல்ல. கலைத் தகுதியே முதன்மையானது. அதை நோக்கி விரியும் பார்வைகளை நாம் முன்வைக்க வேண்டும். தகவல் பிழை பார்த்துக் கொண்டிருப்பது வீண் வேலை. அது ஒரு புனைவு உண்மை மட்டும் தான். அப்பால் நிகர்வரலாறாகப் பொருள் கொள்ளத் தேவையில்லை. நிகர்வரலாற்றின் செறிவாக்கப்பட்ட உண்மைகள் கதைத் தேவைக்காக புனையப்படலாம், உருமாறலாம், குறியீடாகலாம். ஆனால் ஒருபோதும் புறயதார்த்தத்துடன் அதை ஒப்பிடக் கூடாது.
கவிதைகள் பற்றிய அவதானிப்பு இளம் எழுத்தாளர்களிடம் அரிது. வெகுசிலரே கவிஞர்களைப் பின் தொடர்கிறார்கள். ஒரு புனைவெழுத்தாளர் தன் மொழியைக் கண்டடையப் பயில்வதற்கு கவிதையை வாசித்தலும் அறிதலும் மிக மிக அவசியமானவை. நகுலனைப் போலவோ சுந்தர ராமசாமியைப் போலவோ கவிதையும் நாவலும் எழுதும் நல்லூழ் எனக்கும் வாய்த்திருக்கிறது. ஒரு அசலான கவிஞன் நாவலாசிரியனாகவும் வர முடியும். வடிவங்களுக்குள் சிறைப்படத் தேவையில்லை. இரண்டு வருடங்கள் முன்னர் வரை என் முதல் கவிதைத் தொகுப்பிற்கான வேலை முடிந்து வெளியிட்ட பின்னரே என்னில் கவிதை பற்றிய புரிதல்கள் மாறின.
ஒரு அருங்கணத்தில் உண்டாவது கவிதை. அதை தினமும் பயில முடியாது. பிரிந்தா என்னை நாவல்களையோ கதைகளையோ எழுது, உன்னால் இயலும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதெல்லாம் கூட நான் ஒரு கவிஞன், கவிதை தான் வடிவம் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் மனம் மொழியால் கொதித்துக் கொண்டிருந்தது. “அழிகளம்” எனும் பெயரில் ஒவ்வொரு நாளும் எழுதி அடுத்த நாளே இணையத்தளத்தில் வெளியிட்டேன். செவ்வியலுக்குரிய கவித்துவ மொழியும் மிக விரிவான புனைவு நிலமும் கொண்ட ஆக்கம். அதனை நடுவழியில் நிறுத்தினேன். சொற்பெருக்கு நிற்க நூற்றி முப்பது நாட்களுக்கு மேல் ஆனது. ஒன்றரை லட்சம் சொற்கள் எழுதினேன். பயில்வுக்காக நாம் செய்து கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் முக்கியமானவையே.
கவிதைகள் மீதான வாசிப்பு எனக்கு இருந்திருக்கவில்லை என்றால் என்னால் அந்த மொழியின் ஒரு வரியைக் கூட எழுதியிருக்க முடியாது. கவிஞர்களைப் பார்ப்பது பறவை பார்ப்பதைப் போன்றது. ஒவ்வொரு பறவையும் தன்னளவில் ஒரு புதுக்குரல் கொண்டது. அதன் அழகும் மிளிர்வும் தனித்தன்மையானது. முழுதான அதன் அழகிற்காவே நாம் அதைப் பார்க்கிறோம். கவிஞர்களை மொழியில் நாம் தொடர்வது மொழி எங்கனம் முழுதழகில் திகழ முடியும் எனும் சாத்தியங்களை அறியவும் எங்கள் மன உலகை அதனால் நிரப்பிக் கொள்ளவும். ஒவ்வொரு சொல்லும் தாங்க முடியாத நுண்மையுடன் தொடப்படும் வடிவம் அது.
மொழியைப் பயில ஒரு இளம் எழுத்தாளர் கவிதையைப் பயில வேண்டும். எவராவது வாய்க்கு வந்தபடி இது புதிய மொழி, புதிய உத்தியென உசுப்பேற்றினால் மயங்கி நம்பாமல் ஒரு சுயமதிப்பீட்டைச் செய்து கொள்ள கவிதையை வாசிப்பது அவசியம். நாம் ஒப்பிட்டுக்கொள்ள ஒரு சமகால வடிவம் அது. தமிழின் விரிந்த பரப்பில் சமகால எழுத்தாளர்களின் புனைவுகள் மீது மூத்தோர் கரிசனத்துடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்கிறார்கள். ஜெயமோகன் சொல்வது போல “என் கை எடை கூடிவிட்டது” எனச் சொல்லலாம். இப்பொழுது விமர்சித்தால் ஒரு இளைஞர் கடுமையாக பாதிப்படையக் கூடும்.
ஆனால் அவர்களின் காலத்தில் அவர்கள் செய்தது போலவே சமகால கட்டத்தினர், குறிப்பாக இளையவர்கள் இலக்கியம் தொடர்பான தங்கள் கருத்துகளை சிந்தனை ரீதியாகத் தொகுத்து வைத்து விவாதிக்கப் பயில வேண்டும். கடுமையான எதிர்வினைகள் கூட அற்புதமானவையே. அவையே கலைக்கான ஊக்கத்தைப் பரஸ்பரம் வைத்துக் கொள்கிறது. நான் ஒரு அழகியல் அளவுகோலை உங்கள் முன் நீட்டும் பொழுது எனக்கும் அதுவே அளவுகோலாகிறது. புனைவு தொடர்பில் நாம் கடுமையாக மோதிக்கொள்ளாமல் நம் மூத்தவர்களின் சாதனைகளைக் கடந்து செல்ல முடியாது.

