கவிதைகளின் புதிய வழி

கவிதைகளின் புதிய வழி



முற்குறிப்புகள்

1

கவிதைகளின் உருவாக்கம் மற்றும் பரிமாணங்கள் மிக விரிவானவை, மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று விசாலமான பகுப்புகளைக் கொண்டவை. ஆகவே இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட விரும்பும் கருத்துக்களின் எல்லைகள் என்பவை நவீனம் மற்றும் நவீனத்திற்குப் பிந்தைய கவிதைகள் எனும் பகுப்புகளிற்குள் வரக்கூடிய கவிதைகளின் தன்மைகள், அவற்றின் பொதுப்போக்குகள் பற்றியே. மேலும் கவிதைகள் கால, இட மாற்றங்களுக்கமைய கருத்தியல் உள்ளடக்க மாற்றங்களையும் பிரதிபலித்தும் உள்வாங்கியும் வளருகின்றன.

2

கலைக்கு மூளை மட்டும் போதுமானதில்லை. அது இதயத்தின் நிகழ்வும் கூட. நவீன கவிதைகளின் பிரதான அம்சங்களில் இரண்டு விடயங்கள் மேல் எனக்கு நம்பிக்கையுண்டு, ஒன்று, அதன் ஜனநாயகத்தன்மை. இரண்டு, அதன் அறிவார்ந்த தன்மை. இவை ஏற்கனவே நவீனம் பற்றிய உரையாடலில் இருப்பதால் அவற்றை  நான் இங்கு எனது நம்பிக்கையாகவும் குறிப்பிட விரும்புகிறேன்.
    

புதியது பற்றி

புதியது என்பது என்ன? புதிதாக நிகழ்தலென்பது எத்தகையது? அது நிகழ்வதைப் பொறுத்ததா? அல்லது நிகழ்வதைப் பார்ப்பவரைப் பொறுத்ததா? கடந்த காலத்திலிருந்து அல்லாத ஒன்றை, முற்றிலும் புதியதொன்றை நிகழ்த்துவது சாத்தியமா? ஏதோ ஒன்றின் மீது கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு அட்டையைப் போல, ஆயிரம் கால்களையும் ஒன்றுடுடன் இன்னொன்று மோதாமல், தடுக்குப்படாத பயணம் போல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா? இவற்றுள் எது உண்மை, அல்லது உண்மைகள்.

இப்படிப் பார்ப்போம், மனிதர்களின் அனுபவமும் வாழ்வும் உருவாக்கும் கலைகள் எல்லாமே மனிதரின் கண்டடைதல்கள் என்றால், காணாதது எதுவோ அது கலைக்குள் சேர்த்தியில்லை, அது இன்னமும் சொல்லப்படாமல் எஞ்சியிருக்கிறது. ஆக, எதை நாங்கள் புதியதொன்று சொல்லுகிறோம். நம்மிடம் ஏற்கனவே இருப்பதை, நிகழ்ந்து கொண்டிருப்பதை, மதமும், கலாசாரமும் இன்னமும் இன்னமும் ஆதிக்கங்களை, வரையறைகளை, மட்டுப்பாடுகளையெல்லாம்  உருவாக்கி குழுவாக வாழும் மனிதர்களுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் கால காலப் பொது நியமங்கள் என்று நம்பப்படுகின்றனவுக்கு எதிரான குரலை நாம் புதியதென்று கொள்ளலாமா? மொழிக்குள் இருக்கும் மறதிகளை, ஆதிக்கத்தை, பாலியல்பை, மீறலை நாம் புதியதென்று கொள்ளலாமா? அப்படிப் பார்த்தால் மொழியின் பதிவாக்கத்தில் தான் அது புது வரவே தவிர, மானுட அறிவில் அனுபவத்தில் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஆனால் இதிலும் சிக்கல் உண்டு, ஏதோ ஒரு கலை வடிவத்திலாவது இப்பொழுது சொல்லும் புதிய பார்வைகள் எல்லாம் வெளிப்பட்டு நிற்கின்றது. அல்லது அவற்றின் அர்த்தங்களை மறுவாசிப்புச் செய்யும் போது நிகழ்காலத்தின் கருத்தியல்கள் நமது பார்வைகளைத் துலக்குகின்றன.

இது இடையறாத விளையாட்டு, எந்த மொழியில் பகடி இல்லை. எந்த மொழியில் காமம் இல்லை. எந்த மொழியில் அரசியல் இல்லை. எந்த மொழியில் எதிர்ப்பு இல்லை, கலக்கம் இல்லை. எல்லாவற்றிற்குள்ளும் இவை ஊடும் பாவுமாய்க் கலந்திருப்பது தான்.

ஆகவே இந்தச் சிக்கலான புதியது என்ற கருத்தமைவை நாம் விரிவான அர்த்தத்தில் விளங்கிக்கொள்ள வேண்டும். நிகழ்வதா? பார்வையா? அர்த்தமா? அறிவீனமா? எதுவொன்று ஒன்றைப் புதியதாக்குகிறது. கவிதையில் இது எப்படி இயங்குகிறது?

* கவிதை பெருமளவில் தனது வடிவை(உடலை) , நவீனத்திற்குப் பின் மாற்றிக்கொள்ளவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உடைத்தும் பரவியும் எழுதும் வரிகளால் கவிதை நிகழ்வதாக என்னால் கருத முடியவில்லை. அவை உடைவுகள் மாத்திரமே.

* அப்படியென்றால் அதன் ஆன்மா மாறியிருக்கிறதா? கொஞ்சம் மாறியிருக்கிறது தான். கவிதையென்ற உடலுக்குள் புழங்கிக்கொண்டிருந்த ஆன்மாவில் கொஞ்சம் மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

இதை இன்னும் விரிவாக்கப் பார்க்கலாம். நவீன கவிதை – நாட்டுப்புறப் பாடல்கள், நவீன கவிதை – மரபுக்கவிதைகள், இந்த இரண்டையும் அண்ணளவான வகைப்பாடுகளாகக் கொண்டு, கவிதைகளின் தொனி மற்றும் இட மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளலாம்.

இந்தப் பிரிப்பில் போதாமைகள் உண்டு, உதாரணத்திற்கு நாட்டுப்புறப் பாடல்கள் என்பதற்குள்,கிராமியத் தெய்வத்திற்கு முன்னின்று கலையாடும் மனிதரின் நாவின் உச்சாடனமும் அது நவீன கவிதைக்குள் நின்று சுழலும் வெறி ஆட்டமாகவும் இருக்கும் அதே நேரம்  அடங்கிய குரலில், பார்க்கும் போது அசையாமல் நதி இருக்க முடியாது என்று தெரிந்தும், அசைவேயின்றிப் படுத்திருப்பது போல் கண்களை ஏமாற்றும் நதி போன்றதும் நவீன கவிதைக்குள் வரும். மரபிற்கு, சந்தங்களுண்டு தாளங்களுண்டு, நாட்டுப்புறவியலுக்கும் தனித்தன்மையான இசையமைப்புகளுண்டு. இவை மொழிக்குள் துள்ளி விழுகின்றன. எழும் மீன்களில் கலையாடியின் நாவின் தகிப்பும், ஆழும் மீன்களில் துறவியின் இதழ்களின் சிரிப்பும் வந்து சேருகின்றன.

இந்த வகையில், இவற்றை இன்னும் கொஞ்சம் ஆழமாக விளங்கிக்கொள்ள சிலரின் கவிதைப்போக்குகளை உதாரணமாகக் கொண்டு விளக்க விரும்புகிறேன். தேவதேவன், சபரிநாதன், அனார், பா. அகிலன், யோகி (தஜேந்திரன்) போன்றோரின் கவிதைகள் துறவி மீன்கள். என். டி. ராஜ்குமார், வெய்யில், நிலாந்தன் போன்றோரின் கவிதைகள் கலையாடி மீன்கள். இவையல்லாத இருட்டும் ரத்தமுமாய் கிடக்கும் யாழினி, பிரியாந்தி ஆகியோரின் கவிதைகள் விளறு மீன்கள். உக்கிரமும் காதலும் இழைந்து புதிய இசைத்தன்மையை மொழிக்குள் வரும் வ. ஐ. ச. ஜெயபாலன், எஸ் போஸ், சித்தாந்தன், ஆதி பார்த்திபன் போன்றோரின் உருகு மீன்கள். இந்தக் கடலில், இன்னும் பல வகை மீன்களிருக்கின்றன, என்னுடைய வலை கை வலை தான் என்பதையும் இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மேலும் இவர்களை உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டேன். இவர்கள் என்னுடைய தனிப்பட்ட தேர்வு. இதைப் பொருட்படுத்தி, பெயர் விட்டுப்போனவர்கள் என்ற பட்டியலைச் சொல்லி விவாதத்தை பட்டியலாக்கம் பற்றித் திருப்ப வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்ல விரும்பும் தொனிகளுக்கு அல்லது குரல்களுக்கு இவர்களின் கவிதைகள் எனக்கு உதவுகின்றன. அவ்வளவே. அதே நேரம் இதில் விடுப்பட்டுள்ள தொனிகளையும் குரல்களையும் முன்வைத்து உரையாட அனைவரையும் அழைத்துக்கொண்டு, எனது பார்வைகளை முன்வைக்கிறேன்.

இந்த மீன்களின் பாடலிலும் சன்னதத்திலிருந்தும் கவிதை, மொழியை உருப்போடுகிறது, அது மொழியும் காட்சிகளுமாய் உருவாகியிருக்கும் மனத்தின் ஆழ் தளங்களை உருமாற்றுகிறது. இது பல வழிகளிலும் மனித அறிவிற்குள்ளும் அனுபவத்திற்குள்ளும் பல்வேறு கலை வடிவங்களின் மூலமும் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பவை தான். அதில் ஒன்றாக கவிதையும் இயங்குகிறது.

இந்த கருத்துக்களின் தொடர்ச்சியாக நாம் பார்க்கும் போது, கவிதையின் தாளத்தையும் சந்தத்தையும், இசையையும் மொழி இழக்கவில்லை. மொழி, உச்சாடனத்தில் ஒளி கொள்ளும் பொருள். அதன் உச்சாடனங்கள் தான், தெய்வங்களாய், பெண்களாய், ஆண்களாய், ஒடுக்கப்பட்டவர்களாய், மரங்களாய், விலங்குகளாய், பொருட்களாய் என்று விரிந்து கொண்டே செல்லும் நதியைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த உரையில் நான், கவிதையின் தன்மைகள் தொடர்பிலான எனது கரிசனைகளையே குறிப்பிடுகிறேன். எதன் அடிப்படையில் ஒன்றை புதிதாக ஏற்றுக்கொள்கிறேன் என்பது எனது வாசிப்பின் மட்டுப்பாடுகளிற்குள் அடங்குவது, இருந்தாலும் நான்கு உதாரணங்களைக் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன்.

1

ஈழத்தமிழர்கள், அல்லது ஈழ விடுதலைப் போராட்டத்தையொட்டி உருவாகிய, எல்லா நேரத்திலும் நியாயப்படுத்திய, நியாயங்களுடன் விமர்சனத்திற்குட்படுத்திய, சாட்சியங்களாய் தம் குரலை முன்வைத்த தரப்புகளின் எழுத்துக்கள். ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் தமிழ் நவீன கவிதைக்குள் வரும் பொழுது, அதன் பெருமளவு பக்கத்தை ஈழ விடுதலைப் போர் எடுத்துக் கொண்டது. அவை ஜனநாயகம் பற்றி, வாழ்க்கை பற்றி, இறப்புப் பற்றி, விலகல் பற்றி, தியாகம் பற்றி, கொல்லுதல் பற்றியென்று இன்னும் பல்வேறு தன்மைகள் பற்றியும் நிலைமைகள் பற்றியும், கலைகளின் தளங்களில் ஏராளமான தாக்கங்களைச் செலுத்தியிருக்கிறது. அது கவிதையிலும் நிகழ்ந்திருக்கிறது. அது எவ்வளவுக்கெவ்வளவு அராஜகமான எழுத்துக்களை, வன்முறைகளைத் தூண்டும் எழுத்துக்களை, ஜனநாயகமற்ற கருத்துக்களை, அறிவற்ற தன்மையை கொண்டிருந்ததுவோ. அதை விட அதிகமாக நவீனத்தின் மிக முக்கியமான உள்ளடக்கமாக இருந்த ஜனநாயகத்தையும் அறிவார்ந்த தன்மையையும் அறத்தின் குரலாயிருப்பதையும் கொண்டிருந்தது. தனது சொந்த மக்களைக் கொன்ற பொழுது வாயை மூடியிருந்தவர்களும் இருந்தனர். அதை எதிர்த்தவர்களும் இருந்தனர். மக்களை வெளியேற்றியவர்களும் இருந்தனர். வெளியேற்றியது தவறென்று உரக்கச் சொன்னவர்களும் இருந்தனர். உயிர்கள் இறந்து கொண்டிருந்த போதும், எதையும் சிந்திக்க முடியாத படி மூளை மரணங்களால் நிரம்பி விட்ட போதும் நியாயத்தையும் அறத்தையும் கைவிடாத கலைகளும் இலக்கியங்களும், தமிழின் மொத்தப் பரப்பிலுமே புதியது.          

இந்த விமர்சனபூர்வப் பார்வை, விடுதலைப் போராட்டங்களின் எழுத்துக்கள் என்பவை மொழிபெயர்ப்புகள் வழியாக அதிக தாக்கத்தை கொண்டிருந்தவையென்று கருதுகிறேன். ரஷ்ய, பாலஸ்தீன, அரேபிய என்று இன்னும் இன்னும் அதிகமான பல்வேறு இன, மொழி மக்கள். தம் போராட்டங்களின் வழி, வாழ்ந்து பெற்ற அனுபவங்களும் தமிழுக்குள் நுழைந்ததன் விளைவுகள் அந்தத் தாக்கத்தை உண்டாக்கியிருக்கலாம்.  



பால் புதுமையினர் என்ற பாலியல் தேர்வு அடிப்படையில் உள்ள வேறுபாடுகள் காரணமாக ஒடுக்கப்படுபவர்களின் அல்லது வெறுக்கப்படுபவர்களின் குரல். அண்மையில் கிரீஷ் எழுதிய ‘விடுபட்டவை’ என்ற புதினத்தை வாசித்தேன். தமிழ் வாசிக்கத்தெரிந்த ஒருவரிடம் இதைக் காட்டி, இந்தக் கவிதை எப்படியிருக்கிறதென்று கேட்டிருந்தால், இதில் எழுத்துப்பிழை இருக்கிறது காதலிப்பவனும் ஆண், காதலிக்கப்படுபவனும் ஆண். அடுத்தடுத்து ‘அவன்’ என்றே வருகிறதே என்று குழம்பியிருப்பார். அதுவொரு இலக்கண விதியென்று பொதுப்புத்தியில் படிந்து போயிருக்கிறது. அதில் மெல்லிய கீறு போட்டு, சத்தமேயில்லாத ஒரு சத்திரசிகிச்சை நிகழ்ந்திருக்கிறது. இது புதியது. இது ஒரு மீறலில்லை. சன்னதமில்லை, துறவில்லை, விளறில்லை. எளிமையான ஒரு காதல். ஆனால் புதியது நிகழ்ந்திருக்கிறது. ஹரி இராசலெட்சுமியின் மொழியும் அதன் உருவ மற்றும் உருக்கி நெகிழ்த்தும் தன்மையும் இதே போல் கவனிக்கப்படத் தக்கது ஆனால் அவருடைய எழுத்துக்கள் வாசிக்கக் கிடைப்பது அரிதென்பதால் அவரின் எழுத்துக்களை பொதுத்தள உதாரணத்திற்கு இங்கு நான் பயன்படுத்தவில்லை. 


3

கவிதை, குறிப்பாக மரபார்ந்த கவிதை முறைகளுக்கும் நாட்டுப்புறத்திற்குமிடையில் ஒரு இடைவெளி இருந்திருக்கிறது, நவீன கவிதையின் தொடக்கத்திலேயே அதை சுருக்க ஆரம்பித்திருந்தார்கள், தொண்ணூறுகளின் பின் முன்னையதை விட, வீச்சுப் பெற்ற தலித் உரையாடல், உருவாக்கிய கவிஞர்கள் வேறொரு தொனியை கவிதைக்குள் கொண்டு வந்தார்கள், வேறொரு ஆட்டத்தை ஆடிப் பார்த்தார்கள், முதலில் உக்கிரமாய் கோபமாய் தொடங்கிய குரல் இப்போது கொண்டாட்டமாய் உறுதியானதாய் மாறியிருக்கிறது. கிராமத்து தெய்வங்களின் கள்ளும் மாமிசமும் துடிக்கத் துடிக்க தமிழ்க்கவிதைக்குள் பொங்குகிறது.              

4

இதே போன்றதொரு நிலவரத்தை பெண்கள் எழுதும் கவிதைகளிலும் பார்க்கலாம். இந்த வகைப்பிரிப்பை, அரசியல் ரீதியானதும், மொழியின் நீடித்த ஆதிக்கத் தரப்பிலிருந்து விலகித் தம் மொழிதலை அதற்குள் கொண்டு வரும் அரசியல் செயல்பாட்டின் அடிப்படையிலேயே முன்வைக்கிறேன். மிக்க கோபமாய், தெய்வத் சிலைகளின் மீது முலைகளை வெட்டி எறிவேன் என்றும், விடாய்க் குருதியை உக்கிரமாக மொழியின் மீது பிசிறி எறிந்ததுமான காலத்திலிருந்து இன்றைய கவனங்கள் மாறியிருக்கிறது, காதலின் நுண் அடுக்குகளை உள்ளங் காலில் கொடுக்கும் முத்தத்தைப் போல திறக்கும் கவிதைகள் வருகின்றன. தீபு ஹரியை இந்த இடத்தில் புதியவராகக் காண்கிறேன். அனார் எப்பொழுதோ இந்த மென்னணுக்களின் அடையாளமாகி விட்டார். அவரது காதல் தமிழ் நவீன கவிதைகளில் பெண்களின் பார்வையிலிருந்து வைக்கப்பட்ட, மிக நுட்பமான தொடுகை.

*  
இருந்ததிலிருந்தும், இன்னும் பலவற்றிலுமிருந்தும் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் மொழியின் மாறுதல் எனும் இயக்கம் இங்கு பழையது தான். புதியது என்பது, கேட்காததை, அல்லது கேட்க மறுக்கப்பட்டு வந்ததை கேட்பது தான் என்று நான் புரிந்து கொள்கிறேன்.  

(2018)

TAGS
Share This