தற்புனைவு : ஒரு கேள்வி

“உண்மைக்கும் புனைவுக்கும் இடையில ஒரு புது வெளிய உருவாக்கி அதை ஏன் இவ்வளவுக்கு justify பண்ணணும்? எனக்கு விளங்கல்ல” என்று நண்பரொருவர் கேள்வி அனுப்பியிருந்தார். தற்புனைவு பற்றி படுபட்சி தொடர்பில் உண்டாகியிருக்கும் விவாதத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வி வந்திருக்கிறது.
உண்மை, புனைவு இரண்டையும் இலக்கியத்தில் ஏன் கடுமையாக வெட்டி வகுக்கிறோம் என்பதிலிருந்து தொடங்கலாம். உண்மைக்கு தெளிவான தர்க்கம் மற்றும் ஆதார அடிப்படை இருக்க வேண்டும். புனைவு அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டு இயங்க முடியாது, ஆகவே புனைவில் உண்மையைத் தேடுவது அதன் அடிப்படையான வடிவத் தேவைக்கு எதிரானது. ஒரு கதையில் “டிசம்பர் மாதம், நத்தார். வைக்கோல் குடிசையின் மீது பெருமழை பெய்து கொண்டிருந்தது. மாயவன் தன் நினைவுகளை அலையவிட்டபடி கட்டிலில் படுத்திருந்தான்” என வரும் பொழுதே அது புனைவாகி விடுகிறது. அங்கு ஒருவன் அப்படி இருந்தானா? அவன் மனது நினைப்பதாக எழுத்தாளர் சொல்வது உண்மையா? என ஒருவர் யோசிக்கத் தொடங்கினால் என்னவாகும்? புனைவுகளே வாசிக்க முடியாதில்லையா?
அதற்கென புனைவில் நிகழ்பவை எல்லாம் உண்மை அல்ல, பொய் என எண்ணுவது புனைவுகளே வாசிக்கத் தேவையில்லை, அவை பொய்யும் புரட்டும் எனச் சொல்லிவிடலாம் அல்லவா? ஈழத்துச் சூழலில் உள்ள சிக்கல் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை. ஒரு மூத்த எழுத்தாளர் என்னிடம் ஒருமுறை “எல்லாரும் டூப்படிக்கிறாங்கள். நான் இப்ப நாவல்களே வாசிக்கிறேல்ல” என்று சொன்னார். இலக்கியமே டூப்படித்தல் தானே. இவர் எந்த உண்மையை இவ்வளவு நாளும் எதிர்பார்த்து இலக்கியம் வாசித்தார்!
ஆகவே புனைவுக்கு ஒரு சூழலில் மதிப்புத் தான் என்ன? அதை ஏன் ஒருவர் வாசிக்க வேண்டும்? என்ற கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாம்.
புனைவுகள் உண்மையான வாழ்வின் பாவனைகளை எடுத்துக் கொண்டு கற்பனையான நிகர் உலகமொன்றை உருவாக்கிக் கொள்கின்றது. அதை ஆக்குபவர் எழுத்தாளர். ஆகவே தான் அவரைப் படைப்பாளி என்று சொல்கிறார்கள். புனைவுலகம் என்ற சொல்லாட்சி அதைத் தான் குறிக்கிறது. ஒரு செய்திக்கும் கதைக்கும் இடையிலான பிரிவினையை நாம் ஏற்றுக் கொண்டு ஒரு புனைவை வாசிக்க முதன்மையான நோக்கங்கள் எவை?
பாடசாலைகளில் சொல்லிக் கொடுப்பது போல பயனுள்ள பொழுதுபோக்கு அல்ல இலக்கியம். அது ஒரு மனிதருக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான, புரிந்து கொள்வதற்கான அடிப்படைகளை அளிக்கிறது. ஆதாரமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பிக் கொள்ளச் செய்கிறது. இவற்றை அது எப்படிச் செய்கிறது?
நிகர்வாழ்வு போன்ற ஒன்றைப் புனைந்து கொண்டு கற்பனையில் அதை நிகழ்த்திக் காட்டுகிறது. கற்பனையில் வாழ்க்கையை நிகழ்த்திக் காட்ட சித்தரிப்பை பயன்படுத்துகிறது. ஒரு மையச்சிக்கலின் குழப்பமான பல முரண்களை கதாபாத்திரங்களாக்கி மோத வைக்கின்றது. அதற்கெனவே கதாபாத்திரங்கள் நிகழ்கின்றன. அவை மெய்யான மனிதர்கள் அல்ல. தூலமான கருத்துகளினதும் தரப்புகளினதும் உணர்ச்சிகளினதும் பிரதிநிதி. உண்மையான வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் பல்லாயிரம் வண்ண பேதங்களில் சில கூர்மையான அம்சங்களை மட்டுமே நாம் ஒருவருக்கு அளிக்கிறோம். அவற்றுக்கு இடையிலான ஆடலாகவே ஒரு புனைவு நிகழ்கிறது. அதன் வழி ஒரு நிகர் அனுபவ உச்சம் வாசகருக்குக் கிடைக்கிறது. அதன் உணர்வுச்சியில் அவருக்கு அந்த மையச்சிக்கல் பற்றிய விடைகள் கிடைப்பதில்லை.
மாறாக அந்த மையச்சிக்கலின் பிரமாண்டமும் வாழ்க்கையின் இழுவிசைகள் பற்றிய போதமும் அனுபவமாக நிகழ்கிறது. அவர் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறார், அல்லது திகைக்கிறார். அந்தப் புனைவின் வாசிப்பனுபவம் அவரது நிகர்வாழ்க்கைப் பார்வையை பாதிக்கிறது. அத்தகைய அழுத்தமான அனுபவப் பாதிப்பை ஒருவரில் நிகழ்த்தவே இலக்கிய உத்திகள் கையாளப்படுகின்றன.நமக்கு விரிவான அனுபவத்தை அளித்து வாழ்க்கை சார்ந்து பல்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்பவரையே நாம் நல்ல எழுத்தாளர் என்கிறோம். அதைத் திறமையாகத் தேர்ச்சியுடன் செய்பவர் காலகட்டத்தின் புதிய ஆளுமையாக உருவாகி வருவார்.
நமது அகக்கேள்விகள் சார்ந்து தன் புனைவுலகை கொண்டவருடன் நாம் அணுக்கமாகிறோம். அவரே நமக்குப் பிடித்த எழுத்தாளர், அல்லது நாம் பின் தொடரும் எழுத்தாளர். அத்தகைய பலரையும் நாம் கொண்டிருக்கலாம்.
புனைவு எனும் பெரும் தொகுப்பிற்குள் கவிதை, சிறுகதை, நாவல் எனும் வடிவங்களை நாம் முதன்மையான இலக்கிய வடிவங்களாகக் கொள்கிறோம். பழகியும் இருக்கிறோம். ஆனால் தன்வரலாறுகளும் சுயசரிதையும் கூட முழுமையும் உண்மை என்றா கொள்கிறோம், அல்ல. அவை எழுதுபவரின் உண்மைகள். ஆகவே அதிலும் நாம் அடைவது அதை எழுதியவரின் வாழ்க்கைப் பார்வையே.
தற்புனைவும் ஒரு புது வடிவம். ஆகவே தான் அது குறித்து விவாதிக்கப்படுகிறது. அது நியாயப்படுத்தப்படுவதென நண்பர் கருதுவது அதன் வரைவிலக்கணப்படுத்தலையே. வரைவிலக்கணத்தை விளக்குபவர் தன் நியாயங்களை முன் வைத்து விவாதிக்க முடியும். தற்புனைவு என்பது தன் சொந்தக் கதையில் சில அம்சங்களை புனைவினாலும் இட்டு நிரப்பி ஒரு வடிவத்தை உருவாக்குவது. அதில் உள்ள தன்கதையில் ஒரு புனைவு மயக்கத்தை அளிப்பது. அதற்கான தேவை என்ன?
ஒருவர் தன் கதையை மெய்யானதாக முன்வைக்க விரும்பும் அதேவேளை சில இடைவெளிகளை அல்லது அடுக்குகளை மேலும் அளிப்பதன் மூலம் தன் கதையைச் செறிவாக்கிக் கொள்கிறார். அதற்கான வடிவத் தெரிவு அவரின் சுதந்திரம். அவர் அதைத் தற்புனைவாக முன்வைத்தால் அது தற்புனைவாக எவ்வளவு தூரம் தான் எடுத்துக் கொண்ட கதையை வாசகர் வாழும் படியான புனைவனுபமாக ஆக்கியிருக்கிறது என்பதிலிருந்தே நாம் உரையாடத் தொடங்கலாம். அது ஏன் தற்புனைவு, அந்த வடிவம் பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தது இவை இவை தான் எனக் கேட்க முடியுமா?
நாவல், குறுநாவல், சிறுகதைகளுக்கு இடையிலான வடிவ பேதங்களை நாம் விளங்கிக் கொள்வதைப் போலவே தற்புனைவு எனும் வகைமையும் இருக்கிறது. அதில் எழுதப்பட்ட ஒரு பிரதி தான் படுபட்சி. அதில் செம்மையாக்கத்திற்கு உதவிய ஷோபா சக்தி ஒரு புனைவெழுத்தாளர். புனைவெழுத்தாளராக தன்னை நிறுவிக் கொண்டவர். அவரது புனைவுலகம் பெருமளவுக்கு உருவாகி வந்து விமர்சன மதிப்பீடுகளிலும் தேறியிருக்கிறது. காலம் கடந்து வாழக் கூடிய எழுத்துகளை அவர் எழுதியிருக்கிறார். அவரது புனைவு சார்ந்த தேர்ச்சியை டிலுக்சனுடன் பகிர்ந்திருக்கிறார். ஏற்கெனவே தனுஜாவுடன் பகிர்ந்ததைப் போல. தனுஜாவின் புத்தகத்தின் வடிவம் வேறு.
கொடிறொஸ் வெளிவந்த போது அதில் குறுநாவல் என்று போட்டிருந்தோம். ஏன் அப்படி போட்டிருக்கிறீர்கள், சிறுகதையை விட கொஞ்சம் பெரிதாக இருந்தாலே நாவல் தானே எனும் அசட்டுக் கேள்விகள் வந்தன. இந்த அசட்டுத்தனம் நம் சூழலில் இருப்பதை நன்கறிந்தே அதைக் குறுநாவல் எனச் சொல்லி வெளியிட்டிருந்தோம். சிறுகதைக்கு ஒரு வடிவத் தேவை இருப்பதைப் போலவே நாவலுக்கும் இருக்கிறது, குறுநாவலுக்கும் இருக்கிறது. இவை தவிர தொடர்கதை, நீள்கதை என பலவடிவங்கள் இலக்கியத்தில் உண்டு.
இறுதியாக நண்பரின் கேள்வியிலிருக்கும் சந்தேகத்திற்கான பதிலைச் சுருக்கிச் சொல்கிறேன். தற்புனைவு எனும் வடிவத்திற்கு நிலையானதும் இறுக்கமானதுமான வரைவிலக்கணங்கள் இல்லை. அதை இப்பொழுது உருவாக்கி அளிக்கிறோம். அந்த விவாதத்தின் பகுதியே அவரின் கேள்வியும். இந்த விவாதங்கள் அறிதல்கள் மூலம் தற்புனைவு பற்றிய ஒரு அறிமுகமும் அடிப்படைகள் பற்றியும் உரையாடுகிறோம். இதுவே இலக்கியத்தின் மரபும் வழமையும்.

