சிறிதினும் சிறிது : ஒரு கடிதம்

இப்போது தான் ஒளியுள்ள இருட்டு வாசித்து முடித்தேன். வாழ்வின் தூரங்கள் பல இருந்தாலும் தாயின் மறைவும் சகோதரன் மறைவும் உனக்கும் எனக்கும் இருப்பதும் இயற்கை தான். இயற்கையின் விசித்திரங்களுக்காக எங்களை பணயம் வைத்து நடக்கும் இந்த நாடகத்தின் கிட்டத்தட்ட ஒரே பாத்திரங்கள் போல தான் உணர்வு.
பிரசாந்தை நான் சிறுவயதில் அந்த பச்சை மரவெள்ளி உண்ட நினைவில் எடியூகெயாரில் கலந்து இருக்கிறேன். கட்டையை அதன் பின்பு பல காலம் கழித்து செங்குந்தா மைதானதில் சந்தித்த போது உன்னை விசாரித்து மீண்டும் அறிமுகப்படுத்தி கொண்டேன். வந்தும் வராததும் ஆக சொன்னது போல ஒரு இடதுகை துடுப்பாட்ட வீரனுக்கு உள்ள மரியாதை அவனுக்கு கிடைக்கும். பந்து வீசவும் பெரும்பாலும் கிடைப்பது உண்டு. இவன் பின்பு வீதிகளில் “கிரி அண்ணா” என்று விட்டு போவான். அந்தளவும் தான் நினைவும். ஆனால் உனது தம்பி என்றதாலோ என்னவோ உன்னை நான் நினைக்கும் போது இவனும் சேர்ந்து வந்து விடுவது வழமையான உணர்வுகள். தங்கை பற்றி தெரியாது. ஆனாலும் இன்று ஏதோ விசையில் உன் வலை தளம் தழுவிய எனக்கு இந்த கதை தந்த செய்தி சோகம் என்று சொல்வதை விட அதிர்ச்சி என்பது சரியான வார்த்தை.
அப்படி ஒரு இயல்பான கட்டைக்குள் இப்படி ஒரு கலைஞர் இருப்பதை பார்க்க, சொல்ல போனால் ஒரு ஆறு ஆண்டுகள் ஒரு பெரிய அளவிலான மாற்றங்களால் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது அதுவரை அவனை காணவில்லை என்ற உணர்வை கூட இல்லாமல் செய்யும் அளவுக்கு ஒரு நிலையான இருப்பை கட்டைக்கு ஒளியுள்ள இருட்டு 1,2 பதிவுகள் செய்துள்ளது. அதை முழுமையாக வாசித்து முடித்து இதை எழுதி கொண்டு இருக்கும் வரை என்னோடு ஒரு காலத்தில் இருந்த ஒரு உயிருக்கு நான் செய்ய கூடிய மிக உணர்வு பூர்வமான அஞ்சலியாக எழுதிக் கொண்டு போகிறேன். என் எழுத்திலும் அவன் உள்ளான். இடது கையால் இலகுவாக பந்தை அடித்துவிட்டு ஆவென்று பார்க்கும் நினைவுகள் அந்த பந்து அவன் துடுப்பில் அடிபட்டு அங்கிருந்து எல்லை தாண்டி ஓடி விட்டதை போல அவன் வலி கொண்டு போனான் என்றதும் ஒரு ஆழமான வாழ்வின் குணங்கள் தான். பிதுக்கிய வாய் கொண்டு சொற்களை இழுத்து கத்தும் தொண்டையும் அவன் பற்றி நீ இறுதியில் எழுதியது ஒரு புனைவு போல இருக்கிறது. அப்படி அது நடந்து இருக்குமா என்று அல்லது இயற்கை எப்போதுமே எம்மை ஒரு சப்பிறைஸ் மூடில் வைத்திருக்கிறது என்று தான் சொல்ல யோசிக்கிறது.
அதுவும் வாழ்வை அவன் புரிந்து கொண்டான் என்ற இடத்தில் அவனை நான் புரிந்து கொண்டேன். அதில் என்னையும் சேர்த்து வாழ்வை புரிய முனைகிறேன். ஒரு நெருடலான மனித உணர்வுடனான அவனது சுவாச போராட்டமும் அவனது வார்த்தைகளும் பற்றி நாம் வாழ்வது எம்மீது சமூக பொறுப்புகள் இல்லை என்ற போது வரக்கூடய முத்தி பற்றி இறப்பின் மீதான உண்மைகளை பேசும் வண்ணம், அவன் கடந்து போன இடத்தில் ஒரு ஓராமாய் நின்று இரயில்களை பார்க்கும் ஒருவனாக வாழ்வின் வேகத்தை உணர்கிறேன்.
கட்டையின் இழப்பு உன்னை நான் கேட்டால் சொல்லி கொண்டு இருப்பாய் அது உன் வேதனையை மீண்டும் என்று தான் death is not an end ..no more என்று எழுதி அதை நிறுத்தி கொள்ள வந்தேன்.ஆனால் ஒரு மரணத்தின் சாட்சி போல வலியின் புகைப்படங்கள் போல தம்பிதனக்காக வனத்த தனையோனே என்று எமக்குள் அவனை இட்டு நிரப்பி வழிந்து விட ஒரு கலை அஞ்சலிக்காய் எழுத்துகளை உதிர்ந்த போது மாண்டவர் போக மீண்டவர் மறுபடி மாண்டு போகும் கதையாக அவனை கொண்டு வருகிறது உன் எழுத்துகள்.
முத்தி தருவது நீறு
முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு….
பேரினை நீக்கியே பிணம் என பெயரிட்டு நீரினில் மூழ்க்கியே நினைவு அழிப்பார்களே…
*
சிறிதினும் சிறிது பற்றியது அதைதான் கட்டை என்று சொல்லவோம். பெரிதினும் பெரிதை நெடுவல் என்போம் அப்படி அந்த புத்தகத்தின் பின் பகுதி ஏற்கனவே சொல்லி விட்டேன்.
கு.பிரிந்தா எழுதிய எழுத்துகள் கலை என்பது பற்றிய புரிதல் என்னை பொறுத்தவரை வாசிப்பு கலையை பயில பயில கூட அதில் ஒரு சிறப்பு தேர்ச்சி வரும். அதாவது எனக்கு வாசிக்க கிடைத்த உங்கள் போன்றவர்களின் எழுத்து சிறிதினும் சிறிதாக இந்த உலகின் வாசிக்கும் பல கண்களுக்கு சென்றடையவில்லையா என்ற கேள்வி வருகிறது.
இந்த கூட்டு முயற்சி கட்டையை நினைவு கூர்ந்ததை தாண்டி கட்டைக்குள் மட்டும் இல்லை எந்த ஒரு புதியவனுக்கும் முதலில் கலை என்றால் என்ன என்பதை நான் புரிந்து கொண்டு வாழ்ந்த அத்தனை பரிமாணங்களையும் மாற்றி என்றுமே உள்ள மானுட சிக்கல்களை விளங்கி கொள்வதோடு இப்போது உள்ளவர்களுக்கு ஏற்றவகையில் மாற்றுவது கலை என்ற புதிய புரிதல் வருகிறது.
எனக்கு தெரிந்து கலை என்பது இப்போது எல்லாம் கலையாக தான் தெரிகிறது ஆனால் அதில் என் ஈடுபாட்டை பொறுத்து நான் கலைஞனா இல்லையா என்பது பயணப்படும் என்று விளக்கி நினைவுகளை உணர்வுகளுக்கு அப்பால் கொண்டு போய் தத்துவத்தை ஊட்டி விட்டு நழுவியது. ஒரு பெண்ணாக அப்படி எழுதியதை பார்க்க தைரியம் கூடிய எழுத்தாளர் என்று நினைக்கிறேன். ஒரு இழப்பு வந்து இருக்கிறது ஆனால் அந்த இழப்பின் வலிகள் அதில் போக வேண்டிய இடங்களை எல்லாம் தத்துவங்கள் நிரப்புகின்றன. பெண்களின் அதிதீவிர உணர்வுகள் குறிப்பாக ஏக்கங்கள் கவலைகள் பதியப்படாமல் மீளவும் என்னுடைய எழுத்து போருக்குள் போகுது என்று கூட என்னலாம். அவரின் எழுத்து ஒரு பெண் கட்டளை தளபதியின் களப்பலி பார்வை போல நிகழ்த்தி நகர்வது அசாத்தியம்.
Rtr kirishanth

