கிணற்றுத் தவளைகளும் சிறகுள்ள மீன்களும்

கிணற்றுத் தவளைகளும் சிறகுள்ள மீன்களும்

தன்னம்பிக்கையற்ற, அதிகாரத்திற்கு முன் ஒடுங்கி நிற்கும், சமூகம் பற்றிய அக்கறையென்பது வேறு யாருடையது என்று விளங்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களை நான் சந்த்தித்திருக்கிறேன். அக்கறையுள்ள மாணவர்களையும் பார்க்கிறேன். அக்கறையுள்ளவர்கள் வாழ்வில் அம்மாற்றத்தை ஏற்படுத்தியதால் ஆழமான பங்களிப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. அத்தகையவர்கள் மிகக் குறைவாக இருக்கின்றனர் என்பதே துயரம். சமூகத்தில் இணைந்து வாழத் தான் கல்வி, தான் அதில் உயர்ந்தவன் என்ற அகங்காரத்தின் மேல் ஏற்றிவைப்பதல்ல. அனைவருக்கும் சுயமரியாதையும் சமதர்மமுள்ள சமூக அமைப்பாக நம்முடைய சமூகம் இன்னமும் ஆகவில்லை, பெண்கள் இன்னமும் ஒடுக்கப்படுகிறார்கள், சாதி ரீதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இன்னமும் கல்வியை முழுமையாக பெற்று வெளியேறுவது குறைவு, அநேகமான பாடசாலை இடைவிலக்கல்களின் பின் உள்ள மிகமுக்கியமான சமூகக் காரணிகளில் அதுவும் ஒன்று, ஆனால் இவை பற்றி மாணவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. பெருமளவு மாணவர்கள் கிணற்றுத் தவளைகள் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. அவர்களை கிணற்றுக்குள்ளேயே வைத்திருக்காமல் வெளியே கொண்டு வர வேண்டியது தான் நம் முதற் கடமை. ஏற்கனவே உருவாக்கித்தந்திருக்கும் பாடத்திற்கு வெளியே, ஏற்கனவே உள்ள பள்ளிக்கூடம் என்ற கட்டடத்திற்கு வெளியே வாழ்க்கை என்பதை அனுபவம் கற்றுத்தரும், சமூகம் என்பது திறந்தவெளிப் பள்ளிக்கூடம் தான். கற்றுக்கொள்ளுதல் தான் நோக்கம் என்றால் மாணவர்களை பள்ளிக்கூடக் கதவுகளுக்கு வெளியே உள்ள வித்தியாமான வாழ்க்கைகளை, மனிதர்களின் அனுபவங்களை பிரதேசங்களின் வேறுபாடுகளை, மாணவர்களின் பிரச்சினைகளின் வேறுபாடுகளை, குடிநீர் அற்ற பிரதேசங்களை, பாதைகள் அற்ற கிராமங்களை, மீனவர்களை, விவசாயிகளை, துப்பரவுப் பணியாளர்களை, கலைஞர்களை… இன்னும் வெகு அகலமான வாழ்க்கையிடம் மாணவர்களை வெறுமனே அழைத்துச் செல்லுங்கள் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். சமூகம் கற்றுக் கொடுக்கும்.

மாற்றுக் கல்வியைப் பற்றிய ஓர் எளிய அறிமுகமாவது நம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் கல்விச் சூழலுக்கும் பெற்றோருக்கும் இருக்க வேண்டியது அவசியம். இரா. நடராசன் என்பவர் எழுதிய ‘ஆயிஷா’ என்ற சிறிய நூல் தான் கல்வி பற்றிய என் பார்வைகளை மேலும் தூண்டியது. ஒரு சிறுமி, அவள் பாடசாலைக்கு வருகிறாள், மிகவும் துடிப்பானவள், கேள்விகள் கேட்பவள், ஓர் பெண் ஆசிரியர் புதிதாக வருகிறார், ஆயிஷாவுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம், இந்தப் புது ஆசிரியர் அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கத் திரும்பப் படிக்க ஆரம்பிக்கிறார், அவளும் இவருடன் நேரம் செலவளிக்கிறாள், இவரையே சுற்றி வருகிறாள். பின்னொருநாள் ஆயிஷா ஓர் விஞ்ஞானப் பரிசோதனையைச் செய்யும் போது இறந்து விடுகிறாள். அவள் இவ்வாசியருக்குத் தான் தாயின் இடத்தை கொடுத்திருந்தாள், ஆனால் அந்த ஆசிரியர் அவளுக்குக் கொடுத்தது என்ன? மிகச் சின்ன விடயம் தான், அவள் கேள்விகளை மதிப்பது, அவளை அவளாகவே வளர உதவுவது. மாற்றுக்கல்வியின் அடிப்படையை இந்தப் பண்புகளின் மூலம் அடிப்படையாகச் சொல்லி விடலாம்,

ஓஷோ சொல்லு உதாரணம் ஒன்று உண்டு, நீங்கள் ஒரு தாமரையாக மலர வைக்க முடியாது. நாம் அதைத் தான் திரும்பத் திரும்பச் செய்கிறோம். மாணவர்களின் திறமையை கண்டுபிடிக்க அதை வளர்த்தெடுக்க ஆசிரியர்களுக்குத் திறமை வேண்டும், திறமை கூட இரண்டாம் பட்சம் தான். முதலில் மனது வேண்டும். தமிழில் இப்போது மாற்றுக்கல்வி தொடர்பில் புத்தகங்கள் கிடைக்கின்றன. வேறு நாடுகளில் மாற்றுக் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கான அற்புதமான திறமைகள் கொண்ட குழந்தைகள் மலருகிறார்கள். நாம் இன்னமும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் மாணவர்களை உருவாக்கும் லட்சியக் கனவுடன் மாணவர்களை வளர்க்கிறோம். நாம் வளர்த்தெடுக்க வேண்டியது மனிதர்களை, மனிதரென்பது சிந்திப்பதால் நிகழும் வேறுபாடு. இல்லையென்றால் நாமும் மிருகங்கள் தான்.

இன்னும் கொஞ்சம் விரிவாக மாற்றுக்கல்வி பற்றிய அறிமுகம் நம் பாடசாலைகளுக்கு, கல்வியாதிகாரிக்களுக்கு ஏன் கல்வியமைச்சர்களுக்குக் கூடத் தேவை. அவர்களின் கற்பனைச் சிறகுகளை வெட்டியெடுத்து, உனக்குச் சிறகுகளில்லை, கற்பனை செய்யாதே, இது சரிப்பட்டு வராது, இது உருப்படாது, என்ற எண்ணங்களிலிருந்து விலகி, அவர்களின் கற்பனைக்குள் செல்லும் இதயம் கொண்ட ஆசிரியர்கள் வேண்டும். நாங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் வாழ்க்கைக்குள் அவர்களைக் கொண்டு வந்து சரியாகப் பொருத்துவதல்ல கல்வி, மீனுக்குக் கால்கள் வரையும் குழந்தைக்கு, மீனுக்குக் கால்கள் இல்லை, இது தவறு என்று அவர்களை யதார்த்தம் என்று தாங்கள் நம்பும் உலகத்திற்குள் அவர்களைக் கொண்டு வராதீர்கள், மீன்களுக்குச் சிறகுகளும் மரங்களுக்குக் கால்களும் கொடுக்கும் அவர்களின் கற்பனைக்குள் செல்லக் கற்றுக் கொள்ளும் சமூகம் உருவாகும் போது, அந்த இரக்கத்தை மறுபடியும் சமூகத்திற்குள் கொண்டு வரும் ஏராளம் குழந்தைகளை மனிதர்களாக்கும் பணியை பள்ளிக்கூடங்கள் செய்யத் தொடங்கும். இயல்பை ஏற்றதால் அல்ல. மீறியதாலேயே நாம் மனிதர்கள்.

(2020)

TAGS
Share This