கவிதை வாசிப்பு – கடிதம்

கவிதை வாசிப்பு – கடிதம்

வணக்கம் கிரி,

கடந்த சில நாட்களாகதான் தினமும் கவிதை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இருந்தாலும் ஏதோ ஓர் புரிதல் தயக்கம் உள்ளது. இலக்கியம் வாசிப்பதால் அதே போல் கவிதையின் காட்சிகள் மட்டும் தோன்றுகிறதே தவிர அதை மீறி எதுவுமே யோசிக்க தோன்றுவதில்லை. கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு வழி முறைகள் ஏதும் உள்ளதா?

அன்புடன்
மாக்கி

*

வணக்கம்,

கவிதையை மொழியின் புறங்கழுத்து வளைவெனச் சொல்லலாம். மிகவும் நுண்மையான பகுதி. அதைத் தீண்டும் பொழுது முழு மொழி உடலையும் சிலிர்க்கச் செய்யக் கூடியது. நுண்மையானதை நாம் பயில வேண்டும். மிகச் சரியான இடத்தில் தொட்டெடுக்க வேண்டும். அப்பொழுதே அந்த நுணுக்கம் நிகழும்.

கவிதைகளைப் பயில்வற்கு மரபான முறைகளான சொல்லெண்ணிக் கற்றலோ, மனனம் செய்தலோ ஒரு வகை. நவீன கவிதை மனனஞ் செய்வதற்கு மாற்றாக தன் வடிவத்தை கொண்டிருக்கிறது. இருப்பினும் நல்ல கவிதையென்ற வார்த்தை செறிவான அதன் திரும்பச் சொல்லக் கூடிய, நினைவில் நிற்கும் வரிகளாலேயே தங்குவது. ஆகவே எந்த வகைக் கவிதையாயினும் அதற்கொரு அகத்தாளமுண்டு. அதை நாம் கேட்கப் பழக வேண்டும்.

மரபுக் கவிதைகளும் தேவாரங்களும் திருவாசகமும் திருப்புகழும் திருக்குறளும் என எதுவுமே நல்ல தொடக்கம் தான். முதலில் அதன் ஓசையைக் கவனியுங்கள். மொழியின் அழகு அது. நடக்கும் பொழுது சீர்மை கொண்ட ஒருவரிடம் தோன்றும் அழகு அதற்கு இருக்கும். திருப்புகழைப் பற்றி அண்மையில் நண்பரொருவர் உரையாடினார். அது தன்னை தனது நண்பனின் மரணத்தின் வேதனையை மறக்கடிக்கச் செய்தது என்றார். ஆனால் திருப்புகழ் ஒரு எளிய பக்திப் பாமாலை. அதன் மொழியழகால் முழுதெனத் திகழ்வது. அதற்கு ஆழமான தத்துவங்கள் இல்லை. ஆனால் சொல்லிச் சொல்லி இனிக்குமொன்று உண்டு. அதை கேட்கலாம்.

திருக்குறளும் அத்தகையதே. ஒரு நாளைக்கு ஒரு குறளைக் காலைக் குளுசை போல போட்டுக் கொள்ளலாம். எந்த நோக்கமுமின்றி பபிள்கம் போல மென்று கொண்டிருக்கலாம். அதற்கு இருக்கும் விளக்கங்களை வாசித்துப் பார்க்கலாம். கற்பனையில் நீட்ட முடியுமா என யோசிக்கலாம். சில குறள்கள் நம்முன் காட்சியாய் விரியக் கூடியவை. சில குறள்கள் நீதியின் குரலாய் இருப்பவை. இந்த பேதங்கள் எல்லாக் கவிதையிலும் இருக்கும். சில கவிதைகள் காட்சி பூர்வமாய் அமையும்.

உதாரணத்திற்கு மடலூர் கிழாரின் சங்கக் கவிதையொன்று இப்படியிருக்கும்.

“சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான்மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உண்ணோய் மல்கும்,
புல்லின் மாய்வது எவன் கொல்
அன்னாய்?”

தொலைவில் பரண் மீது உள்ள குறிஞ்சி நிலத்தவன் கொழுத்திய நறுமணப் புகை உடைய கொள்ளியானது ஆகாயத்தின் நட்சத்திரங்களைப் போல் திக்குத் திக்காய் எரிந்து சொரியும் மலையுடைய நாட்டைச் சேர்ந்த அவனை நினைத்தால் எனது காமம் பெருகும் அவனைக் கூடினால் அது அழியும், என்ன வியப்பு இது! என்பது பொருள்.

இதில் துண்டென ஒரு காட்சி. இதே போன்ற இன்னொரு காட்சி சபரிநாதன் எழுதிய நெடுங்கவிதையொன்றில் இப்படி வருகிறது,

“கராளன் இயற்றியது:

அவள் என் மேல்
பயணித்துக்கொண்டிருந்தாள்
யாருமற்ற நீண்ட பாதையில்

நானும் இல்லை அங்கே
வழியில்

உயிர் கமழும்
சதுப்பு நிலத்தின்
ஊற்றுகள்

கானகப் புடவில் மறைந்திருக்கும்
விதான முத்தின்
நீல ஒளி

எனக்கு பிடித்தது கூடல் முன்
கூடித் தேறல் குடிப்பது

இருட்டில்
அதைவிட இருட்டான இடத்தில்
முத்தமிடுவது

அவள் பாய்கிறாள்
என்னைக் கவ்வியபடி.
நான் பார்க்கிறேன்
அவள் பின்னே
விண்மீன்கள்
உதிர்வதை”

ஒரு நெருப்புப் பொறி நட்சத்திரமாக உதிரும் காட்சியை இரண்டாயிரம் வருட இடைவெளியில் கவிதை காட்டிக் கொண்டிருக்கிறது. அதை நாம் புனைவு வாசிப்பின் கவித்துவ கணங்களில் அறிந்திருப்போம். அவை அந்த தீப்பொறிகள் விண்மீன்களென மயங்கும் கணம்.

சில கவிதைகள் சித்தரிப்பாக மாறாது சொல்லிணைவில் நிற்கும். அதற்கு பண்பாட்டு பயிற்சியும் இணைந்தால் மேலும் ரசனை கூடும். நவீன கவிதையில் இப்படியான சொல்விளையாட்டின் அழகை உருவாக்குவது குறைவு. ஆனால் அதுவும் ஒரு அழகு.

“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக் கழுகொடு கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் த்ரிகடக
எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென
முதுகூகை

கொட்புற்றெழ நட்பற்றவுணரை
வெட்டிப் பலியிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே”

அருணகிரிநாதர் முருகனை இப்படி அழைத்துக் கொண்டேயிருப்பதில் நமக்கு காட்சியாக எதுவும் தோன்றுவதில்லை. ஆனால் ஒலியாக ஒரு தாளம் இருக்கிறது. வாய்விட்டுச் சொல்லிப் பார்க்கலாம். வேறு வேறு விசைகளுடன் சொல்லிப் பார்க்கும் பொழுது அகத்தாளத்தில் ஒருமை உண்டாகுவதை பார்க்க முடியும். அது மொழியை வைத்து விளையாடும் குழந்தையின் தீவிரம் அடையும் அழகு.

வேறு சில கவிதைகள் அதன் ஒப்புமையால் நிற்பது.

“சிறு கோட்டுப் பெரும் பழம்
தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது, காமமோ பெரிதே”

சிறிய காம்பில் தூங்கும் பெரிய பழம் தாழ்வதைப் போல உயிரை விடப் பெருத்து நிற்கும் காமம் சுட்டப்படுகிறது. காட்சியான ஒப்புமை என்றாலும் அது ஒரு நுண்தகவல். அது அளிக்கும் கிளர்வு நுண்மையானது. ஆகவே தலைமுறைகள் கடந்து நினைவில் நீடிக்கிறது. திரும்பச் சொல்லப்படுகிறது. அக்கவிதைகளை அச்சுவைக்கென வாசிக்கலாம்.

உங்களது கவிதை பற்றிய அறிமுகத்தை ஒவ்வொரு வகையில் நிகழ்த்திப் பார்க்க வேண்டும். தலையை மோதி முட்டி முட்டித் திறப்பது தான் இலக்கியம் என்பதை அறிவீர்கள். ஏதோவொரு கதவு திறக்கும். சங்கப்பாடல்களோ அல்லது நவீன கவிஞர்கள் எவரேனுமோ உங்களை ஆட்கொள்ளக் கூடும். தொடர்ந்து முயல வேண்டும், அதே நேரம் வேறு வேறு வகைகளை தொட்டெடுத்து பார்க்க வேண்டும். எதில் உங்கள் அகம் முதலில் கூடுகிறது, ரசிக்க முடிகிறதோ அதில் ஆழ்ந்து செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு நவீன கவிதையை வாசித்துப் பார்க்கலாம். கற்பனை செய்ய வாய்பிருப்பவற்றை காட்சியாக்கி பாருங்கள், இல்லையென்றால் அது உணர்த்தும் பொருளை அது எங்கனம் உணர்த்துகிறது எனப் பாருங்கள், மொழி விளையாட்டென்றால் அதை அதனழகிற்கென ரசியுங்கள். கவிதையை காட்சியாக மட்டும் அணுக முடியாது. அது ஓசையுடனும் தொடர்புபட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த ஓசையென்பது புறவயமானதல்ல, அகத்தாளம்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என சிலப்பதிகாரம் சொல்லும் நீதியுணர்ச்சியின் இன்னொரு குரலையே “எஞ்சியிருப்பவை கரித்துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்” எனும் செழியனின் வரிகளிலும் அகத்தாளமென ஒலிக்கிறது. அந்தச் சரட்டின் ஒலியென்பது நெருங்க நெருங்க நம் அகத்தினை கூர்மைப்படுத்தும். நாம் அதைக் கேட்க முடியும். அப்பொழுது தான் ஒரு சொல் எங்கனம் கவிதையாகிறது என விளங்கும்.

முதலில் நீங்கள் ஒரு பட்டியலை வாசித்து பார்க்கலாம். ஜெயமோகன் நவீன கவிதைகள் குறித்து சொன்ன பட்டியலொன்று இருக்கிறது. அதுவொரு நல்ல தொடக்கம். (அரியவை) கவிதைகளின் வகைமாதிரிகளை பார்க்கும் பொழுது கவிதையின் உணர்முறைகளை நாம் புரிந்து கொள்ளலாம். பிறகு கவிதைகள் பற்றிய வாசிப்பு அனுபவங்களை வாசிக்கும் பொழுது புதிய கோணங்கள் திறக்கும். அதற்கும் ஜெயமோகனின் ஒரு கட்டுரையை நல்ல உதாரணமெனச் சொல்வேன். இரண்டையும் இணைக்கிறேன். (பிரிவின் விஷம்)

கிரிசாந்

TAGS
Share This