அம்மை அப்பன் அயோனிகன்

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் பற்றிய ‘அம்மை அப்பன் அயோனிகன்’ எனும் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. தமிழின் தீவிர வாசிப்புச் சூழலில் அவரின் பெயரையும் வாழ்வையும் எழுத்தையும் ஒரு மிடறேனும் அனைவரும் அருந்தியிருப்பர். நான் அவரது கவிதைகளை சொல்லெண்ணி, சொல்லெண்ணிக் கற்றவன். இருபது வயதில் ஒரு கொப்பியில் அவரது கவிதைகளில் உள்ள நானறியாத புதிய சொற்களை மட்டும் எழுதி வைத்திருந்தேன். மொழியை உருட்டி விளையாடும் ஒரு பருத்த பூனைக்குட்டி அவர். அவரது தீவிரமே மொழியென அவருக்கு நிகழ்ந்தது.

இந்த ஆவணப்படம் விஷ்ணுபுரம் விருது விழாவிற்கென எடுக்கப்பட்டது. ஆவணப்படத்தினை எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கியிருக்கிறார். இதுவரையில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படங்களின் வரிசையில் தொழில்நுட்ப சாத்தியத்தையும் சொல்முறை உத்தியையும் பயன்படுத்திக் கொண்ட ஆவணப்படமாக இது வெளிவந்திருக்கிறது. ஒரு விறுவிறுப்பான கனவைப் போல இருந்தது. கவிதைகளை வாசிக்கவில்லை, உச்சாடனம் செய்வது போலிருந்தது. ஆவணப்படக் குழுவினருக்கும் அகரமுதல்வனுக்கும் வாழ்த்துகள்.

அண்மையில் எழுத்தாளர்கள் பற்றி வரும் ஆவணப்படங்கள் சிறப்பாகவும் ஆழமாகவும் வருவதற்கு முதன்மையான காரணமென நான் நினைப்பது, அதைச் செய்பவர்கள் எல்லோரும் அவர்களின் பங்களிப்பினை முழுதுணர்ந்து செய்யும் வாசகர்கள், இன்னும் திருத்தமாகச் சொன்னால், அவர்களின் காதலர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *