யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத் தப்புக் கடலைத் தான் நான் பார்த்து வளர்ந்தேன். எத்தனை மூர்க்கமற்ற எளிய நீர்ப்பரப்பென்றாலும் அது என் கடல் என்ற உணர்வு எனக்கிருக்கிறது.
கடந்த தேசிய தினத்தன்று தேசிய மக்கள் சக்தி அரசின் உள்ளூர் ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக எனது கடலில் அவர்கள் கொடியைக் குத்தியிருக்கிறார்கள் என நண்பர்கள் சொன்னார்கள். புதிய அரசாங்கத்தின் புதிய அடிமைகள் புதிய வழியில் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தங்கள் புதிய எஜமானரைக் கண்டதும் புதிய உற்சாகம் வருவது இயற்கை தான். ஆனால் அந்தச் சேட்டையை என் நிலத்திலும் என் கடலிலும் செய்வதை என்னால் ஏற்க முடியாது. அவர்கள் விரும்பினால் தங்கள் வீடுகளின் கூரைகளின் மேல் எஜமானர்களின் கோமணங்களைப் பறக்க விடட்டும். தேசியக் கொடியை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்ளட்டும். தங்கள் கன்னங்களில் வரைந்து கொண்டு நடு வீதியில் ஆடட்டும். அது அவர்களின் உரிமை, அதை நான் மதிக்கிறேன். ஆனால் இது கடல், எவர் அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லை.
எனக்கிருப்பது தமிழ்த்தேசிய நலனா என்றும் எண்ணிப் பார்த்தேன். இல்லை, நாளையே இந்த மகா புண்ணியவான்களைக் கொண்ட அரசு எல்லா நிலங்களையும் விடுவித்து, இனப்படுகொலை இங்கு நிகழ்ந்தது எனத் தீர்மானமெடுத்து, விசாரணை நடத்தி, போர்க்குற்றவாளிகளைத் தண்டித்து, மக்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து உலகமே அதிசயிக்கும் ஒரு அற்புதத்தை நிகழ்த்திய அடுத்த நாள் கடலில் வந்து கொடியைக் குற்றினாலும் நான் இதையே தான் சொல்வேன். அது கடல், அது எல்லா மனிதருக்குமானது, தேசத்தை ஏற்பவர், மறுப்பவர், அயோக்கியன், யோக்கியன் என எல்லோருக்குமானது. அங்கு இருக்க வேண்டியது அலைகளும் நீலமும் நாரைகளும் மீன்களும். அங்கு உங்கள் கெளபீனங்களைக் காய விடக் கூடாது.
எனக்குப் பிடித்த சேரனின் கவிதையொன்று “எனது நிலம்”.

எனது நிலம்
சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.
அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்……
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?
பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்…
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்….
அதன் கீழ் –
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.
துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;
நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒல்லிக்கிறது காற்று
“எனது நிலம்
எனது நிலம்”
இந்தக் கவிதையின் கடைசி வரிகளை இப்போது கொஞ்சம் இப்படி மாற்றி வாசிக்கலாம் எனத் தோன்றுகிறது.
“எனது நிலம்
எனது கடல்”
இயற்கையின் பேரிருப்பில் தேசமோ அரசுகளோ தலையிடக் கூடாது. அது தொல்தெய்வங்களைப் போன்றது. நாம் இங்கு வந்து இருப்பதற்கு பன்னெடுங்காலம் முன்னரே தோன்றி நாம் அழிந்தே போனாலும் இருக்கப் போவது. கடல், நதி, மலை, காடு என இயற்கையின் மூலப் பேருருக்களில் எந்தத் தேச அரசும் தலையிடக் கூடாது, அவர்களின் ஆதரவாளர்களின் மடக்கும்பல் மனநிலைக்கு இயற்கையை சீண்டக் கூடாது. அதன் அழகைக் குலைக்க எந்த உரிமையும் எவருக்குமில்லை. அது எங்கள் உரிமைகளுக்கும் அப்பாற்பட்ட இருப்பு. சுதந்திரத் தமிழீழ அரசு யாழ்ப்பாணப் பட்டினத்தில் அமைந்தாலும் அதுவே என் பார்வை. கடலில் புலிக்கொடியைப் பறக்க விடுவதும் கூட அநாகரிகம், அதையும் மடச்செயல் எனவே எழுதுவேன்.
அது கடல், உன்னையும் என்னையும் எங்கள் அரசுகள் கனவுகளையும் விட மூத்தது, பெரியது.
*
அந்த நாளின் காணொலி