விடுதலையில் கவிதை

விடுதலையில் கவிதை

நிலத்திலிருந்து வானென எழுந்த மாபெரும் பழங்காலப் பழுப்பு நிறச் சீலையொன்றில், புள்ளியிலிருந்து, எழுந்து, விரிந்து, பரவி, ஒளிர்ந்து, உதிர்ந்து, வீழும், நிறங்களாலான வரிகளை நான் கற்பனை செய்கிறேன். உதிரமிட்டு நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் இந்தத் தீவின் ஒவ்வொரு விளிம்பிலும் அலையடித்திருக்கிறது. எத்தனை மகத்தான கனவுகளின் கருப்பை இந்த மண். எத்தனை மகத்தான அழிவின் சாட்சி இந்த மண்.

ஒரு மண்புழுவின் வால் மிதித்தால் கூட அது சுழன்றசைந்து ஒரு கணம் தழல் நாகமென ஆகும். இச் சிறு மக்கள் கூட்டத்திலிருந்து அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் விளைவாகப் பெருக்கெடுத்த தாகம், குருதி கொண்டிருக்கிறது. அதன் ஆன்மாவில் கொண்டுள்ள எதிர்ப்பின் சிறு சுனை, பேராறெனத் திரண்டெழுந்திருக்கிறது. மக்கள் என்ற தொகுதியில் ஆயிரக்கணக்கான வித்தியாசங்களும் சிந்தனைகளும் வாழும். அது கூட்டியளித்த விளைவுகளின் வரலாறு ஒரு முடிவடையாத புதிர்வழிப்பாதையென ஆகும். அச்சுழலில் இருந்து சில நூற்கண்டுகளின் நுனிகளை இத் தொகுப்பில் இழுத்து வந்திருக்கிறேன். இதிலிருந்து நீண்டு சென்று வரலாறாகவும் கதைகளாகவும் நாடகங்களாகவும் ஓவியங்களாகவும் பாடல்களாவும் ஒளிப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும் திரைப்படங்களாகவும் விரிந்திருக்கும் விடுதலையின் கதையை எனது தலைமுறையும் எனது சந்ததிகளும் அறிந்து விவாதித்து முன் செல்ல, அகிம்சை கொள்ள, கருணை கூர இதைத் தொகுத்தேன்.

ஒவ்வொரு கலை வடிவங்களும் தன்னளவில் வெளிப்படுத்திக் கொள்ளும் மொழியுடல் வேறு வேறாகவே இருக்கும். சொல்லிலும் நிறத்திலும் காட்சிகளிலும் விரிவது ஒன்றின் பல பகுதிகள். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான நியாயங்களும் இழப்புகளும், அதன் போதான அறங்களும் அற மீறல்களும் ஒருங்கு வைத்து நோக்கப்பட வேண்டியவை. அதன் ஒரு துண்டை மட்டும் எடுத்துப் பிடித்தால் அதன் புரிபடுதன்மை குறைந்து செல்லும். இத் தொகுப்பு கவிதைகளின் சில நூறு வரிகளைத் தனக்கான அறிதற் கருவியாகக் கொண்டிருக்கிறது. இன்ன பிற வடிவங்களைப் பற்றியும் விரிவாகப் பலரும் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். அது ஓர் வரலாற்றுக் கடமையும் கூட. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள் என்று அனைவரும் தமது வடிவத்தினது வரலாற்றுப் பாத்திரத்தை முன் வைக்க வேண்டும். அது ஓர் உரையாடலாக வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு தரப்பினருக்கும் நியாயங்கள் இருக்கும், அதைக் கேட்பதற்கான செவிகள் வேண்டும். அதற்கான பதில்களும் இருக்கும், அதற்கான குரல்களும் வேண்டும். வரலாற்றைத் தொகுத்துக் கொள்ளாத மக்கள் முன்செல்ல இயலாது. வரலாற்றிலிருந்து வரலாற்றுணர்வை அடையாத மக்கள் தொடர்ந்து போராட முடியாது.

நம்பக் கடினமான சாகசங்களாலான நமது போராட்டம். கேட்கக் கடினமான உண்மைகளாலானதும் கூட. அதேயளவு குருதியானாலதும்.

ஒரு கவிஞரின் முதன்மையான சமூகப் பாத்திரமென்பது அம்மக்களின் அறத்தைச் சொல்லில் திகழ வைப்பது. அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் மறுத்து நிராகரித்தாலும் கூட அதைச் செய்தேயாக வேண்டும். மக்கள் கேட்க விரும்பாத உண்மைகள் வரலாற்றின் புதிர்வழிகளில் அவர்களைத் திக்கற்று அலைய வைக்கும். இக் கடுங்காற்றிடை, இடையறாத ஓலமிடை, பேரிருளிடை அணையாமல் ஒரு மெழுகுதிரியென ஒளிர்வது மட்டும் தான் கவிதை விடுதலையில் எழுவதன் ஒரே வரலாற்றுக் காரணம். பலநூறு வரிகளின் மூலமும் பலபேரின் குரல்களின் மூலமும் அது சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றென ஆவதும் அதனாற்தான். அவ்வொளிர்வைத் தேடும் கண்களுக்கு அவை சூரியனாவதாக.

ஓவியம்: சிவசுப்பிரமணியம் கஜேந்திரன்

TAGS
Share This