சூல் கொளல்: 02

சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன.

உலகெங்கும் அரசின் இராணுவங்கள் ஒரே போலேயே போராடும் கனவு கொண்ட மக்களை நடத்துகின்றது. ஓரிடத்தில் நிகழ்ந்த நாடகம் சில மாறுதல்களுடன் இன்னொரு நிலத்தில் நிகழ்கின்றது. அரசு அச்சமூட்டுகிறது, வேட்டையாடுகிறது, ஆன்ம பலத்தை அழிக்கிறது.

எம். ஏ. நுஃமான், முருகையன், அ. யேசுராசா ஆகியோரின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அரசியல் உள்ளடக்கமும் அழகியலும் கொண்டவை. வேறு பலரும் அவ்வேளையில் மொழிபெயர்ப்புகளைச் செய்திருந்தாலும் என்னளவில் பாலஸ்தீனக் கவிதைகள், பனிமழை ஆகிய இரண்டு தொகுப்புகளும் விடுதலையின் மொழிதலை அறியும் ஆடிகளாயின.

பாலஸ்தீனக் கவிதைகள் விடுதலைப் போரில் மக்களுக்கு நிகழ்பவற்றைக், கூரிய மொழியில் கொதிப்பு மிக்க பாவனையில் பெருந்திரளின் மனநிலையைப் பற்றியெரிய வைக்கக்கூடிய இயல்பைக் கொண்டிருப்பவை. 1981 இல் இந்தத் தொகுப்பு வெளியாகியது. நுஃமான், முருகையனின் மொழிபெயர்ப்பில் இக் கவிதைகள் சிறு தீச்சுள்ளிகள் காட்டைப் பற்றியெரிப்பது போல் ஈழத்தமிழ்க் கவிதைக்குள் நுழைந்து பரந்தன.

இம் மன உணர்வுகள் ஈழத்து இளம்தலைமுறைக் கவிஞர்களுக்கு விடுதலைப் போர் பற்றிய சொல்லெழுச்சிகளை வழங்கின. பலநூறு வரிகள் மொழிபெயர்க்கப்பட்டன. பல கவிஞர்களின் குரலும் ஒருங்கு திரட்டப்பட்டன. ஒரு விடுதலைப்போரிற்காகத் தயாராகும் மக்கள் திரளின் குரல்வளையாய்க் கவிதைகள் ஆகின.

மஹ்மூட் தர்வீஷின் கவிதைகள் உலகெங்கும் பிரபல்யமானவை. அவரது உணர்ச்சிகரமான மொழிதல், ஒடுக்குமுறைகளுக்கெதிராக மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கொண்டு வரப்பட்ட படிமங்கள், ரொட்டியாயும் ஆயுதமாயும் போராடும் மக்களின் கைகளில் கவிதைகளை வழங்கின.

நான் பிரகடனம் செய்கிறேன்

எனது நாட்டில் ஒருசாண் நிலம்
எஞ்சி இருக்கும் வரை
என்னிடம் ஒரு ஒலிவமரம் எஞ்சி இருக்கும் வரை
ஒரு எலுமிச்சை மரம்
ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும் வரை

ஒரு சிறு நினைவு
ஒரு சிறு நூலகம்
ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர் எஞ்சி இருக்கும் வரை
அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை
நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள்
அந்தர் அல் – அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும்
ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள்
எனது நாட்டில் இருக்கும் வரை

எனது கண்கள் இருக்கும் வரை
எனது உதடுகள், எனது கைகள்
எனது தன்னுணர்வு இருக்கும் வரை
விடுதலைக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில்
நான் பிரகடனம் செய்வேன்.

சுதந்திரமான மனிதர்கள் பெயரால்
தொழிலாளர்கள், மாணவர்கள், கவிஞர்கள் பெயரால்
நான் பிரகடனம் செய்வேன்
கோழைகள் சூரியனின் எதிரிகள்
அவமான ரொட்டியினல் ஊதிப் புடைக்கட்டும்
நான் வாழும் வரை எனது சொற்களும் வாழும்
சுதந்திரப் போராளிகளின் கைகளில் ரொட்டியாயும் ஆயுதமாயும்
என்றும் இருக்கும்.

*

விடுதலைப் போராட்டங்களின் போது கைதுகளும் சித்திரவதைகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கும், அரசு சட்டத்தின் மூலம் தனக்கான ஒடுக்குமுறைக் கருவிகளை உற்பத்தி செய்யும். இலங்கையில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், இராணுவத்திற்கும் பொலிசிற்கும் எல்லையில்லா அதிகாரத்தினை ஒவ்வொரு மனிதரின் மீதும் வழங்குகிறது. பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புபடக் கூடியதென சந்தேகிக்கும் எவரையும் கைது செய்யவும், விசாரணை செய்யவும் அதிகாரமளிக்கப்படுகிறது. இராணுவமும் பொலிசும் இவ்வதிகாரத்தை, போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் கொடூரமான சித்திரவதைகள் மூலமும் கைதுகள் மூலமும் செயற்படுத்தியது. அப்படித் தான் உலகெங்கும் இராணுவங்கள் சித்திரவதைகளை எளிய மக்கள் மேல் நிகழ்த்தி வருகின்றன.

தர்வீஷின் வாக்குமூலம் என்ற இக்கவிதை, அத்தகைய எதிர்த்தரப்புடன் நடக்கும் ஓர் உரையாடல்,

வாக்குமூலம்

எழுதிக்கொள் இதனை
நான் ஒர் அராபியன்,
எனது அட்டையின் இலக்கம் 50,000
எட்டுக் குழந்தைகள் உள்ளனர் எனக்கு
ஒன்பதாவது அடுத்த கோடையில்
கோபமா உனக்கு?

எழுதிக் கொள் இதனை
நான் ஓர் அராபியன்
தொழிலாளருடன்
கற்கள் உடைக்கிறேன் கற்பாறைகளைக் கசக்கிப் பிழிகிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்கும் ரொட்டித் துண்டினைப் பெறுவதற்காக
புத்தகம் ஒன்றைப் பெறுவதற்காக ஆயினும்
கருணை கேட்டு நான் இரந்திடமாட்டேன்
உன் அதிகாரத்தின் ஆளுகையின் கீழ் முழத்தாள் இட்டு நான் பணிந்திட மாட்டேன்
கோபமா உனக்கு?

எழுதிக்கொள் இதனை
நான் ஓர் அராபியன்
பேர்புகழ் அற்ற ஒருவனே நான் மூர்க்க உலகில் நிலைபேறுடையவன்.
யுகங்களுக்கப்பால்
காலத்துக்கப்பால்
எனது வேர்கள் ஆழச்செல்வன.

உழவர் குலத்தின் எளிய மகன் நான் வைக்கோல் குடிசையில் வாழ்பவன் நான்
எனது தலைமுடி மிகவும் கறுப்பு
எனது கண்கள்: மண்நிறமானவை எனது அரபுத் தலைஅணி
ஆக்கிரமிப்பாளரின் கைகளைப் பிறாண்டும்

அனைத்துக்கும் மேலே
தயவுசெய்து இதனையும் எழுது யாரையும் நான் வெறுப்பவன் அல்ல
யாரையும் கொள்ளை அடித்தவன் அல்ல
ஆயினும்
பட்டினி வருத்தும் போதிலோ, என்னைக் கொள்ளை அடித்தவன்
தசையினைப் புசிப்பேன்
கவனம்!
எனது பசியை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்
எனது சினத்தை அஞ்சிக்
கவனமாய் இருங்கள்.

இஸ்லாமிய மரபு அளித்த செழிப்பான படிமங்களாலான ஓர் உலகு தர்வீஷினுடையது. பல்லாயிரம் மனங்களின் வாக்குமூலமென உருத்திரண்ட சொற்கள் இவை.

*
தமிழ் மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களை அங்கேயே திருப்பி அனுப்ப வேண்டும் என்பது பல சிங்கள இனவாதிகள் மக்களிடம் உண்டாக்கிய நச்செண்ணம். கோடிக்கணக்கில் தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள், சிங்கள மக்களோ உலகத்திலேயே இந்தச் சிறு தீவில் மட்டுமே வாழ்பவர்கள். எங்களுக்கென்று இருக்கின்ற ஒரு நிலத்தையும் தமிழர்கள் பிரித்துக் கேட்கிறார்கள் என்ற வாதம் சாதராண சிங்கள மக்களை கொதிநிலையடையச் செய்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் மக்கள் மரபு வழியாகவும் பண்பாட்டை பகிர்ந்து கொண்டும் ஒற்றுமையுடன் வாழும் வரலாறும் இந்தத் தீவுக்கு உண்டு. அதன் நம்பிக்கை தரும் குரல்களை விட, வெறுப்பின் குரல்களே வேகமாகப் பரவுகின்றன.

வெறுப்பினால் உண்டாகும் இனவழிப்பின் போது தனது சகோதர இனத்தின் மனச்சாட்சியைக் கேட்கும் கேள்வியென, பௌசி அல் அஸ்மரின் இக் கவிதை பாலஸ்தீன மண்ணில் எழுகிறது.

ஒரு யூத நண்பனுக்கு

சாத்தியமற்றதை
என்னிடம் கேளாதே

நட்சத்திரங்களைக் கொண்டு வரும்படி
சூரியனிடம் நடந்து செல்லும்படி
என்னிடம் கேளாதே
கடலை வற்ற வைக்கும்படி
பகலொளியைத் துடைத்து விடும்படி
என்னைக் கேளாதே
எனது கண்களை
எனது காதலை
எனது இளமை நினைவுகளை
அழித்து விடும்படி
என்னைக் கேளாதே

நான் ஒரு வெறும் மனிதன்,
ஒர் ஒலிவ் மரத்தின் கீழ்
நான் வளர்ந்தேன்,
எனது தோட்டத்து கனிகளை
நான் புசித்தேன்.
திராட்சை வனங்களில்
அதன் சாறை நான் குடித்தேன்
பள்ளத்தாக்குகளில்
கள்ளிப் பழங்களை
அதிகம் நான் ருசி பார்த்தேன்.

எனது செவிகளில்
வானம்பாடிகளின் பாடல் இசைத்தன
நகரங்களிலும் வயல்வெளிகளிலும்
வீசிச் சென்ற சுதந்திரக்காற்று
எப்போதும் என்னை
சிலிர்ப்படைய வைத்தது….

எனது நண்பனே
எனது சொந்த நாட்டினை
விட்டுப் போகுமாறு
நீ
என்னைக் கேட்க முடியாது!

*

விடுதலைப் போராட்டங்களில் நீள் கவிதைகள் வரலாற்றைத் தொகுத்துக் கொள்ளும் நோக்குடனும் ஒடுக்குமுறைகளை விரிவான விபரிப்புகளின் வழி மக்களின் மனங்களில் உறைய வைக்கவும் எழுபவை. அரச ஒடுக்குமுறைகளின் விளைவாக அல்லது படையெடுப்புகளின் விளைவாக மக்களின் வாழ்க்கையடையும் அதிர்ச்சிகரமான மாற்றங்களை கவிதைகள் ஒரு பெருமரத்தில், மேலிருந்து கீழாகத் தொங்கும் ஒளிப்பட அல்பமென வடிவமைக்கின்றன. அக் காட்சிகள் சமூகத்தின் கூட்டு மனதில் தொங்கவைக்கப்படுகின்றன.

1937 மார்கழி 28, இன் இரவில்,
யப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருக்கையில் எழுதப்பட்ட இக் கவிதை 1979 ஆம் ஆண்டு அ. யேசுராசாவால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகிறது.

பனிமழை

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது…

துயர் நிறைந்த கிழவி போல்
காற்று
நெருக்கமாய்ப் பின் தொடர்கிறது
நீட்டிய அவளது நகங்கள்
கடந்து செல்லும் மக்களின்
உடைகளைப் பலமாய் இழுக்கின்றன.
பூமியைப் போல்
பழைமையான அவளது சொற்கள்
இடை விடாது
முறையிடுகின்றன…
காட்டினில் இருந்து
தம் வண்டிகளை ஓட்டியபடி,
சீனாவின் விவசாயிகள்
வருகின்றனர்.
உரோமத் தொப்பிகளை அணிந்தபடி
பனிமழையை எதிர்த்தபடி,
அவர்கள் எங்குசெல்ல விரும்புகின்றனர்?

உனக்குச் சொல்கிறேன்
நான்கூட
விவசாயப் பரம்பரைதான்.
துயரங்கள் ஆழமாய்க்
கோடிட்டுச் செதுக்கிய உன் முகத்திலிருந்து,
சமவெளியில் வசித்த
மக்களின்,
கொடிய ஆண்டுகளை
எனக்குப் புரிகிறது
மிக ஆழமாய்
எனக்குப் புரிகிறது.
இல்லை,
உன்னைவிட நான் மகிழ்ச்சியாய் இல்லை.
காலநதியில் மிதந்த என்னை
துயரஅலைகள் அடிக்கடி
முழுமையாயே அமிழ்த்தின.
அலைதலிலும்
சிறை அறைகளிலும்,
பெறுமதியான என் இளமை கழிந்தது.
எனது வாழ்வும்
உனது போலவே,
உலர்ந்தது.

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது…

பனியிரவில் ஆற்றோடு
பழசான கறுப்பு வள்ளத்தில்
சிறிய எண்ணெய் விளக்கு
மெதுவாய்,
இழுபட்டுச் செல்கிறது.
தலையைத் தொங்கவிட்டு,
விளக்கைப் பார்த்தபடி,
அங்கு இருப்பது யார்?
ஓ! நீ
குலைந்த தலையோடும்
அழுக்கு முகத்தோடும்
உள்ள இளம் பெண்ணே
பாதுகாப்பான உனது வீடு,
சூடான, மகிழ்ச்சியான உனது கூடு
ஆக்கிரமிப்பாளரால்
எரிக்கப்பட்டதா?
இதுபோன்ற ஓர் இரவில்
உனது கணவனின், பாதுகாப்பை இழந்தாயா?
எதிரிகளின் துப்பாக்கி முனையில்
மரண பயங்கரத்தில்
சித்திரவதை செய்யப்பட்டு
இழிவு படுத்தப்பட்டாயா?

இதுபோன்ற குளிர்ந்த இரவில்
கணக்கற்ற முதிய தாய்மார்,
நாளையின் சக்கரம் தம்மை
எங்கு எடுத்துச் செல்லும்
என்பதறியாது,
தமக்குச் சொந்தமில்லா வீடுகளில்
அந்நியர் போல்
கூனிக்குறுகி,
ஒடுங்கி இருந்தனர்.
சீனாவின் வீதிகள்
மிகக் கரடு முரடாய்…
சேறு நிறைந்ததாய்…

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது…

நீண்ட இரவில்
பனிபடர்ந்த சமவெளி நிலங்கள்
யுத்த நெருப்பினால்
அழிக்கப்பட்டன.
எண்ணற்ற உழைப்பாளிகள்
தாம் உணவூட்டிய தம் கால் நடைகளை
செழிப்பு நிறைந்த தம் வயல்களை
இழந்து,
அவநம்பிக்கையின் அழுக்கு ஒழுங்கைகளில்
நெருங்கித் திரண்டனர்.
பசித்த நிலம் நடுங்கும் கரங்களை நீட்டியபடி
இருண்ட வானைப் பார்த்தபடி,
மீட்சிக்காய்
இரந்தது.

சீனாவின் துயரமும் வலியும்,
இப் பனியிரவு போல்
நீண்டு பரந்தது.

சீன நிலத்தின்மீது
பனிமழை பெய்கிறது
குளிர்,
சீனாவைச் சூழ்கிறது…

ஓ! சீனா,
விளக்கற்ற இவ் இரவில்,
எனது பலவீன வரிகள்
உனக்குச்
சிறு,
உயிர்ப்பினைத் தருமா?

  • 1981 ஜூன் மாதம் முதலாம் திகதி, ஏற்கெனவே நிகழ்ந்து கொண்டிருந்த எரித்தழிப்புகள் படுகொலைகளின் நீட்சியாக ஈழநாடு தினசரியின் அலுவலகமும் பல வணிகத் தளங்களும் இரவில் எரிக்கப்பட்டன.

அதே இரவில் யாழ் பொது நூலகத்திற்குள் நுழைந்த சிங்களக் காடையர்கள், அரிய நூல்களின் காப்பகமாகவும் தமிழ் மக்களின் அறிவின் மூலதனமாகவுமிருந்த நூலகத்தையும் நூல்களையும் எரித்தழித்தனர். இச் செயல், திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பின் மாபெரும் குறிகாட்டி. இந்தத் தாக்குதல்களின் போது அரசு வேடிக்கை பார்த்து, தீயணைக்க வந்தவர்களைத் தடுத்து வெளியேற்றி, புத்தகங்கள் எரிவதைக் கொண்டாட்டத்துடன் அனுமதித்தது.

நுஃமானின் கவிதை, பவுத்த தர்மத்தின் அழிவைப் பாடிய மகத்தான அறக்குரலாக, ஒலித்து எதிர்ந்தது.

புத்தரின் படுகொலை

நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.

இரவில் இருளில்
அமைச்சர்கள் வந்தனர்.
‘எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?’
என்று சினந்தனர்.

‘இல்லை ஐயா,
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை
இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக் கூடச்
சுடமுடியாது போயிற்று எம்மால்
ஆகையினால்……
என்றனர் அவர்கள்.

‘சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை’
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோவாத சூத்திரத்தினைக்
கொழுத்தி எரித்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது.

*

சிங்கள அரசின் தாக்குதல்களும் வன்முறைகளும் ஆயுதம் தாங்கிய இளைஞர் குழுக்களைத் தூண்டியெரிய விட்டன. அடக்குமுறைகள் மேலும் பெரிய வன்முறைகளை நோக்கி நகர்ந்தன. பெரும்பான்மையாக சிங்களவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதும் அவர்கள் சொத்துகள் எரிக்கப்படுவதும் தொடர்ந்தது. காற்றில் இனவாதச் சொற்கள் மோதி மோதி சிங்கள மக்களில் பலரையும் நச்சிலூற வைத்தது. தமிழ் மக்களை அதற்கெதிரான விடமுறிவு மருந்தாக ஆயுதங்களை எண்ண வைத்தது. அன்றைக்கிருந்த உலகப் போக்குகளிலும், தனி நாடுகள் ஆயுத வழியில் அடையப்படும் கதைகளும் தமிழ் மக்களை ஆயுத ஏற்பை நோக்கி நகர்த்தின. யாழ். பல்கலைக்கழகம் அக் காலத்தில் முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. மாணவர்கள் பொதுநலனை முன்னிட்டு அரசியல் பேசினர். அரசை எதிர்த்தனர். தமிழ்ப்பண்பாட்டிலுள்ள பிற்போக்கான சாதி, பெண்ணொடுக்குமுறை ஆகியவற்றை எதிர்த்த உரையாடல்கள் வலுப்பெற்று தமிழ்த்தேசியம் ஒரு விடுதலைக் கருத்தியலாக முன்னெடுக்கப்பட்டது. இக் காலத்தில், 1981 இல் கவிதா நிகழ்வு என்ற நிகழ்த்திலக்கிய வடிவம் பல்கலைக்கழகத்தில் பரீட்சார்த்தமாக நிகழ்த்தப்பட்டது, “எங்கள் மண்ணும் இந்த நாட்களும்” என்பது இதன் தொடக்க முயற்சி. போராட்டச் சூழலின் தேவை கருதி பல கலைவடிவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் ஒட்டியும் ஒன்றை மேவி ஒன்றெனவும் உணர்வுகளுக்குள் ஊடுருவ இவ்வடிவம் உருவாகியது. நாடகம், இசை ஆகிய ஆற்றுகைக்கலைகளுடன் இணைந்து கவிதை வெளிப்படும் போது குரலின் ஏற்ற இறக்கங்கள், குரலின் தொனி, பாவனை என்பன நாடகீயத்துடன் ஒலிக்கும். இவை ஒத்த கருத்துகளோ அல்லது ஒரே குவிமையமான பிரச்சினைகளையோ பலரும் தமது குரல்களில் நிகழ்த்தும் பன்மைத்துவ நிகழ்த்திலக்கியக் கலையாக மலர்ந்தது.

ஒடுக்குமுறையின் விளைவாகவும் தமிழ்த்தேசியம் கொண்டிருந்த முற்போக்கான ஏற்புடமை காரணமாகவும் பலரும் தமிழ்த்தேசியத்தில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டார்கள். வன்முறைகளாலும் நெருக்கடிகளாலும் மக்கள் மனங்களில் கொதிப்பும் அச்சமும் மூண்டிருந்த நாட்களில், எழுந்து போரிடச் செய்யும், குரல்களாக கவிதைகள் எழுந்தன.

சேரன்

எரிக்கப்பட்ட வீடுகளிலிருந்தும், பாதியழிந்த உடல்களிலிருந்தும், சிதைக்கப்பட்ட வாழ்விலிருந்தும் எழுந்த புகைப்பெருநீள்வு மேகமெங்கும் விரிந்து, அவை பற்றியெரியும் வானத்தில் நிகழ்ந்தது சேரனின்,

இரண்டாவது சூரிய உதயம்

அன்றைக்கு காற்றே இல்லை;
அலைகளும் எழாது செத்துப் போயிற்று
கடல்.

மணலில் கால் புதைதல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்.

இம்முறை தெற்கிலே –

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது;
எனது மக்கள் முகங்களை இழந்தனர்,
எனது நிலம், எனது காற்று
எல்லாவற்றிலும்
அந்நியப் பதிவு.

கைகளைப் பின்புறம் இறுகக் கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது
நெருப்பு,
தன் சேதியை எழுதியாயிற்று!
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக.

(1982)

*

இக் காலத்தின் இளம் தலைமுறையின் முதன்மையான கவிதைக் குரல் சேரனுடையது. சேரனில் மொழி பலவிதங்களில் தன்னைப் பாவனை செய்து ஒடுக்குமுறைகளை விபரிக்கிறது. பலநூறு வரிகளில் சேரனின் இளங் குரல் மூர்க்கமும் கனலும் மூண்டெரிபவையென எழுந்திருக்கின்றன. நிலம் பற்றிய இளைஞர்களின் கனவை அவரது எழுத்துகள் அதன் உச்சமான கவித்துவ எல்லைகளில் இடமிட்டிருக்கின்றன.

எனது நிலம்

சிறகுவலை விரித்த பரவைக் கடல்.
மேலே மூச்செறியும் காற்று
கடல் நடுவில்,
கலையும் தலைமயிரை
விரல்களாலழுத்தி நிமிர்கையிலெல்லாம்
கரை தெரிகிறது,
பனைமரமும் இடையிடையே ஓடுகளும்.

அலையும், எஞ்சின் இரையும்பொழுது
சிதறும் துளியும்……
ஒன்றரை மணி நேரம்
எப்படி முடிந்ததாம்?

பிறகு, மணல் நிமிர்ந்த வெளி
அதனுள் புதைந்த பனைகள்,
ஒவ்வொன்றும் ஓராள் உயரமெனக்
கன்னி மணல் மீது தலைநீட்டும்…
மணலோ,
கண்ணாடி விதையிட்டுச்
சூரியன் போய்க் குடியிருந்த
பொன்னின் துகள்….
அதன் கீழ் –
இரண்டாயிரம் ஆண்டுகள்
முன்பாக, என்முன்னோர் நடந்த
நிலப்பரப்பு.
ஒரு காலடி ஆனால்
ஓராயிரம் ஆண்டு
எம்வேர் நீண்டுள்ளது.

துயிலாது, இந்த அலைகரையில்
நின்று
விண்மீன் சிதறிக் கடலுள்
விழுகின்றதைப் பார்த்திரங்கிய ஒருத்தியின்
அல்லது
தொடுவான் வெளி பிளந்து
கரை சேரும் நாவாய்க்குக்
காத்திருந்த இன்னொருத்தியின்
வெறும் மார்பில் புரண்ட மணி ஒன்றில்
பின்மாலை, அந்திப் பொழுது
புடமிட்ட
தென்னோலை காற்றாடும் வெளியின்
மண் மூடிய சுவடுகளில்,
என்முன்னோர்
விட்டுப் போயுள்ளார்கள்
எனக்கொரு செய்தி;
நூறுநூறாயிரம் தோள்களின்மீது
ஏறி நின்று
எனது நிலம் என உரத்துச் சொல்கிறேன்.
ஏழு சமுத்திர வெளிகளைத் தாண்டி
அதன் மேல் எழுகிற அலைகளை மீறி
அதனைக் கொண்டு போய்,
எங்கும் ஒலிக்கிறது காற்று

“எனது நிலம்
எனது நிலம்”

TAGS
Share This