சூல் கொளல்: 03

சூல் கொளல்: 03

1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை அழிக்கும் ஆவேசத்தை வழங்கியிருந்தன.

1986 இல் பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடாக வந்த சொல்லாத சேதிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் உண்டான பெண்ணிய நோக்கிலான விடுதலை பற்றிய குரல்களின் கவிதைக் குரல்களைத் தொகுத்தளித்தது. ஈழத்தின் முதலாவது பெண் கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பும் அதுவே.

அதில் சித்திரலேகா மௌனகுரு எழுதியிருக்கும் முன்னுரை மிக முக்கியமான அவதானிப்புகளைக் கொண்டது.

‘இன்று பெண்கள் மத்தியில் தமது சமூக இருப்பு, பங்கு, பணி குறித்தும் தமது ஆற்றல்கள் ஆர்வங்கள் குறித்தும் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் தமது அந்தஸ்து, சமூகம் தம்மை நோக்கும் முறைமை, பெண் என்ற உடலியல் அம்சம் ஒன்றினால் தமது வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்படுவது ஆகியவை பற்றிப் பெண்கள் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர். பொதுவாக மனிதனுக்குள்ள சமூக ஒடுக்குமுறைக்குப் பெண்கள் உள்ளாவதுடன் மேலதிகமாக ஆணாதிக்கம் என்னும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகின்றனர். இந்த ஆணாதிக்கமும், தந்தை வழிச் சமூக அமைப்பின் விழுமியங்களும் எமது கலை, கலாசாரம், ஆய்வுத்துறைகள் ஆகிய சகலவற்றிலும் வேர்விட்டுப் பரவியுள்ளன. இவையே பெண்ணைப் பாலியற் பண்டமாகவும், சந்ததி உற்பத்திச் சாதனமாகவும் மலிவான உழைப்புச் சக்தியாகவும் சமூகம் கருதுவதற்கு அடிப்படையாகவும் அமைகின்றன. உன்னதமான மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதம் அற்ப வெறும் இயந்திரங்களாகவும், கருவிகளாகவும் கருதும் நிலை மாற வேணும் என்பதும் இன்றைய பெண்நிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும்.

இந்நிலையில் பெண்கள் தமது உணர்வுகளையும் எண்ணங்களையும் கருத்துக்களையும் ஆற்றல்களையும் இயல்பாக வெளியிடுவதற்கும் தமது திறன்களை வளர்த்தெடுப்பதற்கும் தமது ஆக்கங்களைத் தனிப்படப் பிரித்து நோக்குவது அவசியம் என உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்களிடையே பெண் என்ற இந்த நிலைப்பாடு தோன்றியுள்ள இக்காலகட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கிய நெறியை உருவாக்குவது முக்கிய தேவையாகும். இப் பெண்ணிலைவாத நோக்கு நிலை பெண்விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.’

விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையுடன் பெண் கவிஞர்கள் எழுந்து வந்தனர். சமூகம் மாற்றமடைகிறது, அது எவ்விதம் மாற்றமடைய வேண்டும் என்பதில் பெண்களுடைய குரல் தீர்க்கமானது. நுட்பமான சிக்கல்கள் கொண்டது. அவற்றைக் கவனத்திலெடுக்காத எந்தப் போராட்டமும் முழுமையடையாது. இத்தகைய பின்னணியில் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள், காதலர்கள், நண்பர்கள், பொது மக்களென வாழ்வழியும் பொழுதினிலும் அதற்கெதிரான போராட்டத்திற்குச் செல்லும் போராளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலும் பல கவிதைகள் தீவிரமாக எழுந்த காலம் அது. செல்வி அக்காலத்தின் திரும்ப முடியாத பொழுதுகள் பற்றி இவ்விதம் எழுதினார்.

மீளாத பொழுதுகள்

அமைதியான காலைப் பொழுது
காலைச் செம்மை கண்களைக் கவரும்
காகம் கரைதலும் இனிமையாய் ஒலிக்கும்
நீண்டு பரந்த தோட்ட வெளிகளில்
தென்றல் தவழ்ந்து மேனியைத் தழுவும்
எங்கும் அமைதி! எதிலும் இனிமை!

நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.

பொழுது புலராக் கருமை வேளையில்
தட தடத்துறுமின வண்டிகள்
அவலக் குரல்கள்: “ஐயோ! அம்மா!”
தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
தாய்மையின் அழுகையும்
தங்கையின் விம்மலும்
பொழுது புலர்தலில்
அவலமாய்க் கேட்டன.

காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…..
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.

செல்வி

*
சகமனிதர்களின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் போராடுபவர்களின் மேலுள்ள காதல் நுணுக்கமான வாழ்வனுபவங்களால் வேறுபடுவது. அது ஏற்கெனவே உள்ள காதல் பற்றிய உவமைகளாலும் காட்சிகளாலும் உருப்பெறுவதல்ல. அது அன்று நிகழும் ஒடுக்குமுறைகளின் பிணக்காட்டில் மலர்ந்து ஒளிரும் பூ. போராளிகளைக் காதலிப்பது ஓரு சாகசம். அத்தகைய வாழ்க்கை நிச்சயமற்ற தினசரியை உடைத்துப் பரவி வைத்து, ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்பக் கோர்க்கும் ஆரம் போன்றது. 1982 இல் வெளிவந்த ஊர்வசியின் கவிதை,

இடையில் ஒரு நாள்

எப்பொழுதாவது ஒரு மாலையில்
அது நடக்கலாம் :

ஒரு மதகுரு
அல்லது முக்காடு அணிந்த
ஒரு மாது
ஒரு தாடி மீசைப் பிச்சைக்காரன்
இப்படி,
இன்னும் வேறு யாராவது
என் வீட்டு வாசலில்
கதவைத் தட்டலாம்…

நான் அவர்களைச்
சட்டென அடையாளம்
கண்டு கொள்கிறேன்…
அந்த இரவு முழுவதும்
நீ என்னருகில் இருப்பாய்…
வாய் திறந்து பேச விரும்பாத
மெளனம்
இடையே கவிந்துள்ளது…
உனக்கு மிகவும் பரிச்சயமான
துப்பாக்கியை, துண்டுப் பிரசுரங்களை,
அடர்ந்த காட்டை, இன்னும் எதையெதை யெல்லாமோ
மறந்து போய்
உனது உடலும், மனமும்
எனக்குள் அடைக்கலமாகும்

விடியலில்,
கருக்கல் கலைகிற பொழுதில்
எனக்குக் கிடைத்த
தற்காலிக அமைதியில்
நான் உறங்கும் போது,
ஒரு முரட்டுத்தனமான
கதவுத் தட்டலுக்குச் செவிகள்
விழிக்கும்.

ராணுவக் கும்பல் அல்லது
பொலிஸ் படை
பிறகு
கூந்தல் அவிழ்ந்து விழுகிற வரையில்
விசாரணை
என்னருகே அம்மாவும்
கூட்டிலிருந்து தவறி விழுந்துவிட்ட
ஒரு அணில் குஞ்சைப்போல…
நீ போய்விட்டாய்;
நாள் தொடர்கிறது…

  • 1983 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் உள்ள தபாற்கட்டைச் சந்தியில் வைத்து அவர்களுடைய ஆரம்ப கால உறுப்பினர் சீலன் கொல்லப்பட்டமைக்கும் பாடசாலைச் சிறுமிகள் இராணுவத்தினரால் கடத்தி வன்புணர்வு செய்யப்படுவதற்கும் எதிராக பலாலியிலிருந்து வந்த இராணுவத் தொடரணி ஒன்றின் மேல் கொரில்லாத் தாக்குதலை நடத்தினர். இத் தாக்குதலில் 13 இராணுவத்தினரும் சில போராளிகளும் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பழிவாங்கும் நோக்குடன் அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர். கடைகளை அடித்து நொறுக்கியும் மக்களைச் சுட்டும் அடித்தும் கொன்றனர். 51 பேர் இதில் உடனடியாகக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட இராணுவத்திற்கு பொரளையில் உள்ள கனத்தை மயானத்தில் இறுதி நிகழ்வு செய்வதாக அரசு அறிவித்ததும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வனாத்தமுல்லை சேரியைச் சேர்ந்த சிங்களவர்கள் ஒன்று திரண்டனர். அரசு இராணுவ வீரர்களின் உடலை அவர்கள் குடும்பங்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. மாலையில், கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்கள் கொண்டு வரப்பட்ட போது எட்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மயானத்தைச் சூழ்ந்திருந்தனர். அங்கு காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. கலகம் தடுக்கும் பிரிவு வந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடாத்தியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முனைந்தது.

இதன் விளைவாக இராணுவத்தின் உடல்களைக் குடும்பங்களிடம் ஒப்படைத்தது அரசு. அங்கிருந்து உடல்கள் சென்ற பின், கலையாத அக் கும்பல், பத்தாயிரத்துக்கும் அதிகமெனத் திரண்ட காடையர்களானது. கொழும்பெங்கும் கடைகளைக் கொழுத்தியும் உடமைகளை அழித்தும் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களைக் கொன்று குவித்தும் குருதி குடித்தனர். ஏழுநாட்கள் நாட்டின் பல பாகங்களிலும் இந்த இனவன்முறையின் தீ நாக்குகள் பரவிப் பற்றின. வீதியெங்கும் மக்கள் கொல்லப்பட்டனர். வாகனங்களில் போனால் வாகனத்தோடு கொழுத்தப்பட்டனர். ஒரு கடையைக் கொழுத்திய போது அதனுள்ளிருந்து வெளியே தப்பிக்க வந்த முதலாளியை, மீண்டும் அக்கடைக்குள் எறிந்து கொன்றனர். தமிழரை அடையாளங் காட்டு என்று மறிக்கப்பட்ட வாகனத்தில் குங்குமத்தை அழிக்க முயன்ற பெண்ணை உடைந்த போத்தலால் வயிறு கிழித்துக் குடலெடுத்துக் கொன்றனர். வீதிகளில் மனிதர்களைக் கொழுத்தினர். நிர்வாணமாக்கினர். பதினெட்டும் பதினொன்றும் வயதான இரண்டு தமிழ்ச் சகோதரிகளின், தலைகளை வெட்டி, வன்புணர்வு செய்து, உடல்களை எரித்தனர். பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்பட்டனர். பிக்குகள் பலரும் இந்தக் கும்பல்களுடன் இணைந்து இதனைப் பார்த்துக் களிநடனமிட்டனர். தமிழர்களைக் கொல்ல அழைப்பை விடுத்தனர். ஒன்றரை லட்சம் பேர் வீடுகளற்று அகதிகளாயினர். சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாகவும், கைதிகளாகவும் இருந்த தமிழர்கள் கொல்லப்பட்டனர். அரச அனுசரணையுடன் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இந்த நீண்ட இனவெறித் தாக்குதல் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் மனதை உதிரமிட்டு உருவேற்றிப் போருக்கழைத்தன.

சேரனின் இக் கவிதை அக்காலகட்டத்தின் மனசாட்சி,

எல்லாவற்றையும் மறந்து விடலாம்…

எல்லாவற்றையும் மறந்து விடலாம்;
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்த போது,

கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில்
வெளியே தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
‘டிக்மண்ட்ஸ்’ ரோட்டில்
தலைக் கறுப்புகளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத் துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய்க் கிடந்த
ஒரு இடது கையை,
எரிந்து கொன்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்-

உன் குழந்தைகளை ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளித்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க….?

*

பாஸில் ஃபர்ணாண்டோ என்ற சிங்களக் கவிஞரின் ஜூலை 1983, மேலும் ஒரு சம்பவம் என்ற கவிதையைச் சேரன் மொழிபெயர்த்துள்ளார். குருதி உறைந்து உடல் நடுங்கும்படியான ஏராளமான படுகொலைகள் ஜூலை வன்முறையில் நிகழ்ந்தன. பாஸிலின் இக் கவிதை அதற்கொரு சாட்சி.

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
காருக்குள் நாலு பேர்
பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
எந்த வேறுபாடும் இல்லை
குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
ஒரு சில கேள்விகள்
செய்வதைப் பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
காரின் கதவுகளைத் திறந்தான்
அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
அவன் எண்ணியிருக்கக்கூடும்
துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
கலைந்து போனார்கள் ஒரு சிலர்
காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்?
சமாதான விரும்பிகளாக மக்கள்
தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
செயற்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
கதவை மூடினார்
தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

*

ஜூலையில் இடம்பெற்ற வன்முறைகளும் அதன் பின்னரான போக்குகளும் போரை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றின. இந்திய அரசு
விடுதலை இயக்கங்களுக்குப் பயிற்சி அளித்தது. ஆயுதங்கள் வழங்கியது. வேறு நாடுகளிலும் விடுதலை இயக்கங்கள் ஆயுதப் பயிற்சிகளை எடுத்தன. 1985 இல் மரணத்துள் வாழ்வோம் என்ற ஈழத்துக் கவிஞர்களின் கூட்டுத் தொகுப்பு அவலங்களிடை எழுந்த கவிஞர்களின் கூட்டு மனசாட்சியை தொகுத்தளித்தது.

1984 இல் சண்முகம் சிவலிங்கத்தின் இக் கவிதை வெளிவந்தது, சாராம்சமாகத் திரண்டு வந்த மக்களின் எதிர்ப்பை, ஓராயிரம் உயிர்களின் ஒரு மூச்சென உள்ளிழுத்தபடி ஆழ்ந்த மெளனத்தில், காற்று உறைந்து நிற்க, உறுதியான, சன்னமான குரலில் இக்கவிதை வாசிக்கப்பட வேண்டும்.

ஆண்டாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறையின் முன் குனிந்து நின்று, சாட்டையால் அடிவாங்கிக்கொண்டே, படுகொலையாகிவரும் சக மனிதர்களைக் குனிந்தபடியே நிமிர்ந்து பார்க்கும் கவிஞனின் குரல்,

இன்று இல்லெங்கிலும் நாளை

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்துரிந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்.

அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

சண்முகம் சிவலிங்கம்

*

கைதிகளாகவும் விசாரணைக்கெனவும் நிகழும் சித்திரவதை முறைகள் பற்றி மக்களிடம் ஏராளமான கதைகள் உள்ளன. தலைகீழாகக் கட்டித் தொங்க வைத்து அடித்தல், குதவழியால் ஒரு பைப்பினை உள்ளே செலுத்தி அதற்குள்ளே முட்கம்பியை செலுத்தி, பின்னர் பைப்பினை வெளியே எடுத்துவிட்டு முட்கம்பியை இழுத்தெடுப்பார்கள், ஆணுறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்துவிட்டு இழுத்து மூடுதல்.. போன்ற பலவகையான சித்திரவதைகளைப் பயன்படுத்தியது அரசு. இதன் மூலம் போராடுபவர்களுக்கும் மக்களுக்கும் அச்சமுண்டாக்கும் தந்திரம் அது. ஆனால் அரசு நடத்திய வன்முறைகளும் படுகொலைகளும் வன்புணர்வுகளும், சித்திரவதைகளைத் தாண்டிய மன உறுதியையும் ஓர்மத்தையும் இளம் தலைமுறைக்கு வழங்கியது. ஊர்வசியின் இக் கவிதை, ஒரு சிறையதிகாரிக்கான விண்ணப்பமாக, சித்திரவதைகளின் உடலுடன் உறுதி பெற்று எழுந்து நிற்கும் குரல்,

சிறையதிகாரிக்கு ஒரு விண்ணப்பம்

ஜயா,
என்னை அடைத்து வைக்கிறீர்கள்
நான் ஆட்சேபிக்க முடியாது
சித்திரவதைகளையும்
என்னால் தடுக்க முடியாது
ஏனெனில்,
நான் கைதி.
நாங்கள் கோருவது விடுதலை எனினும்
உங்களது வார்த்தைகளில்
பயங்கரவாதி.

உரத்துக் கத்தி அல்லது முனகி
எனது வேதனையைக்
குறைக்கக்கூட முடியாதபோது
எனது புண்களில்
பெயர் தெரியாத எரிதிராவகம்
ஊற்றப்படும் போது
எதையும் எதிர்த்து
எனது சுண்டுவிரலும் அசையாது.
மேலும் அது
என்னால் முடியாதது என்பதும்
உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான் ஐயா,
ஒரு தாழ்மையான விண்ணப்பம்
என்னை அடைக்கிற இடத்தில்
எட்டாத உயரத்திலாயினும்
ஒரு சிறு சாளரம் வேண்டும்.
அல்லது, கூரையில்
இரண்டு கையகல துவாரம் வேண்டும்
சத்தியமான வார்த்தை இது.
தப்பிச்செல்லத் தேடும் மார்க்கமல்ல
தகிக்கும் எனது ரணங்களில்
காற்று வந்து சற்றே தடவட்டும்
சிறுதுண்டு மேகம்
மேலே ஊர்ந்து செல்வதில்
இன்னும்
மரக்கிளையின் நுனி அரும்பித் தளிர்ப்பதில்
எப்போதாவது ஒரு குருவி
நிலைகுத்திய என் பார்வைப்பரப்பைத்
தாண்டிப் பறப்பதில், நான்
இதுவரை வாழ்ந்த உலகில்
என் மனிதரைக் காண்பேன்
பைத்தியமென்று நீங்கள் நினைக்கலாம்
ஆனால்,
எதைத்தான் இழப்பினும்
ஊனிலும் உணர்விலும்
கொண்ட உறுதி தளராதிருக்க
அவர்களுக்கு நான் அனுப்பும் செய்தி
இவைகளிடம்தான் உள்ளது ஐயா.

*

தமிழ் மக்கள், ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரை ஏராளமான இனவன்முறைத் தாக்குதல்களைத் தாங்கியவர்கள். வீடுகளற்று அகதிமுகாம்களில் அலையவும், வணிகத் தளங்களும் சந்தை சதுக்கங்களும் நூலகங்களும் எரிக்கப்படவும், கல்வி வாய்ப்புகளை இழந்தும், சொத்துகளழிந்தும், உரிமைகள் கேட்டதற்காய், குண்டாந் தடிகளால் தாக்கப்படவும், முதுகு இரத்த விளறாக அடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவும், ஆண்குறிகள் சிதைக்கப்பட்டு அறுக்கப்படவும், பெண்குறிகள் வன்புணரப்பட்டு, தலையறுக்கப்பட்டோ, மலக்குழியிலோ, தெருவிலோ எறியப்படவும் வாய்த்த மக்கள், தங்கள் கனவுகளின் மீது அரசு நிகழ்த்தும் சித்திரவதைகளை அனுபவித்தபடியே அதற்கெதிரான விடுதலைக்கான வழிமுறையாக ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைந்தனர்.

இத்தகைய நீதிக்கான போரிற்குச் செல்லும் தன் புதல்வர்களை வழியனுப்பும் தாயின் குரல் ஒளவையினுடையது,

சொல்லாமல் போகும் புதல்வர்கள்

என் மகன்
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய்
பறந்து போனான்

இடி முழங்கி வான் அதிரும்
மழைக்காலக் குளிர் இரவில் – அருகிருந்து
தென்றல் சுமந்து வரும் மெல்லிசையை
கேட்டிருக்கும் என் மகன்.

முழு நிலவு பூத்து
நட்சத்திரங்கள் தெறித்திருக்கும்
இரவுகளில்
மஞ்சளாய் சணல்
பூத்து விரிந்திருக்கும் எம் வயலில்
காற்று வாங்கியபடி
அவனும் நானும்
தனித்திருக்கையில்
ஒரு நாள் அவன் கேட்டான்
அப்பா ஏன் இறந்தார்?
யுத்தம் ஏன் வருகிறது?
அக்காவுக்கு ஏன் தலை நரைத்து
விட்டது?
அன்று சின்னப்பயல் அவன்
மகனே!
ஆந்தைகள் அலறும் இரவுகளும்
விமானங்களின் குண்டு வீச்சும்
நெஞ்சைப் பிளக்கும்
அவலங்களும்
இங்கு நிறையவே நடக்கும்.

காலம் முழுவதும் உன் வரவைப் பார்த்து
சோர்ந்து படுத்து விட்டேன்
ஏதோ இனம் புரியாத சோகம்
நெஞ்சை அரிக்கிறது.

ஆனாலும் பார் மகனே!
எங்கோ தொலைவில்
நீ என்ன செய்வாய் என்பதும்
நீ நடக்கும் பாதையையும் நான் அறிவேன்.

இராணுவ வெறியரிடம்
அகப்படாதே!
கவனம் அதிகம் தேவை
அதைவிட மேலாக எமக்குள்
நூறு எதிரிகள்.
மக்களை நேசித்த
சின்னப் பயல்களெல்லாம்
இன்று மண்ணுள்.

மகனே
சிட்டுக் குருவி போலத்தான் பறந்தாய்!
ஆயினும்
காலம் உன்னை வளர்த்திருக்கும்
மனித நேயத்தை இழந்து விடாதே
மக்களை அதிகம் நேசிக்கப் பழகு”

ஒளவை

*
இவ்வெளிகளின் பின்னிருந்து ஆண்கள் அதிகமாகக் காட்டிய ஆயுதங்கள் மீதான போரார்வத்தைப் பெண்களும் பெற்றனர். போரிடச் சென்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொல்தமிழ் வரலாற்றில் முதற்தடவையாக பெண்கள் பேரளவில் போர் புரிந்த நிலம் இதுவே. அவர்களின் போர் சாகசங்கள் எழுதப்பட்ட மண்ணும் இதுவே. பெண்ணிலை நோக்கிலான கருத்துகளின் வளர்ச்சியின் விளைவுகளாலும் அரசின் எல்லையற்ற கொடூரங்களைச் சகிக்க முடியாமலும், கதறும் ஒவ்வொரு குழந்தையின் அழுகுரலும் செவியறைந்து அதிரப் போருக்கெழுந்தனர். ஊர்வசி காதலனுக்குச் சொல்லும் சேதி இக் கவிதை.

நான் எழுதுவது
புரிகிறதா உங்களுக்கு?

யாழ்ப்பாணம்
10-11-83

எனக்குத் தெரிந்த
எந்த விலாசத்திற்கும்
இக் கடிதத்தை அனுப்பிப் பிரயோசனமில்லை.
ஆனாலும் இதை எப்படியும்
உங்களிடம் சேர்ப்பித்தே ஆகவேண்டும்.
உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை
என்னுள் உறுதியாக உள்ளது.

இங்கே முற்றத்து மல்லிகை
நிறையவே பூத்துள்ளது.
பகலில் தேன் சிட்டுக்களும்
இரவுகளில் பூமணம் சுமக்கின்ற காற்றும்
எங்கள் அறை வரையிலும் வருகின்றன.
அடிக்கடி எனக்குத் தெரியாத யாரெல்லாமோ
வீட்டுப்பக்கம் வந்து போகிறார்கள்.
ஆயினும் இன்றுவரை
விசாரணை என்று யாரும் வரவில்லை.

சின்ன நாய்க்குட்டி காரணமில்லாமலே
வீட்டைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறது.
வாலைக் கிளப்பியபடி, எதையோ
பிடித்துவிடப் போவது போல.
விழித்திருக்க நேர்ந்துவிடுகிற இரவுகளில்
உங்களுடைய புத்தகங்களை
தூசி தட்டி வைக்கிறேன்.
அதிகமானவற்றைப் படித்தும் முடித்துவிட்டேன்.
உங்களுடைய அம்மாவின் கடிதங்களை
நான் பிரிக்கவேயில்லை.
அவை சுமந்துள்ள புத்திர சோகத்தை
என்னால் தாள முடியாது.

மேலும், அன்பே
எங்கள் மக்களின் மீட்சிக்காகவே
நீங்கள் பிரிந்திருக்க நேர்ந்துள்ளது
என்பதே எனக்கு ஆறுதல் தருவது.
இந்தத் தனிமைச் சிறை
தரும் துயர் பொழுது ஆயினும்
உங்களைப் பிரிந்தபின்
எதையும் தாங்கப் பழகியிருக்கிறேன்

மேலும் இன்னொன்று,
இதுதான் மிகவும் முக்கியமாக
நான் எழுத நினைத்தது
நான் ஒன்றும் மிகவும் மென்மையானவளல்ல
முன்புபோல் அவ்வளவு விஷயம் புரியாதவளுமல்ல
நடப்பு விஷயங்களும் எதுவும்
நல்ல அறிகுறிகளாக இல்லை.
நீண்ட காலம் நாங்கள்
பிரிந்திருக்க வேண்டும் என்பது என்னவோ
நிச்சயமானதே.
பின்னரும்
ஏன் இன்னமும் நான் வீட்டுக்குள்
இங்கே இருக்க வேண்டும்?
என்ன,
நான் எழுதுவது புரிகிறதா உங்களுக்கு?

(1985)

TAGS
Share This