எரியும் நெருப்பும் காற்றில்: 03

எரியும் நெருப்பும் காற்றில்: 03

அன்னா அக்மதோவா பற்றி நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அக்மதோவாவை வாசிக்கும் பொழுது சிவரமணி அக்காவும் புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட செல்வி அக்காவும் அவரது காதலரும் நினைவுக்கு வந்ததாக எழுதியிருந்தார். இந்த நினைவிலிருந்து ஒரு பொறி என்னில் ஒட்டியிருந்தது. நீண்ட காலம் கழித்து சிவரமணியின் இறுதிக்கால எழுத்துகளை வாசித்த போது நாம் நமது அன்னாவை இழந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. மகத்தான கூர்மையும் ஆழுள்ளத்தின் குரலை ஒலிக்கும் அவரது கவிதைகளும் நமது விடுதலைப் போராட்டத்தின் தூய அறக்குரல்.

இயக்கங்களின் தன்மை மாற்றங்களும் அதிகாரப் போட்டிகளும் ஆயுதகலாசாரமாக அது ஆகி வந்ததையும் அந்த நேரத்தில் கவிஞர்கள் கடுமையாக விமர்சித்து எழுதினர். இப்போராட்டத்தின் போக்கு, விடுதலைப் புலிகள் எடுத்த எதேச்சாதிகார நிலை, ஏனைய இயக்கங்களில் பல துணை இராணுவக் குழுக்களாக செயற்பட்டமை ஆகியன இணைந்து ஆயுதம் ஏந்திப் போராடுங்கள் என்று அறை கூவிய கவிஞர்களை குற்றவுணர்வுக்குள்ளாக்கி அவர்களின் போக்குகளையும் தன்மைகளையும் பாடாது விட்டொழிந்து யுத்தம் தமிழ்ச் சிறுவர்களையும், மக்களின் வாழ்வையும் எத்தகைய அவலத்தில் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறது என்பதை எழுத வைத்தது.
பூஞ்சிறகு முளைத்த சிட்டுக்குருவியாய் பறந்த ஒளவையின் புதல்வன், மக்களை நேசிக்கப் பழகுவதைமறந்தான். உத்தரவுக்குக் கட்டுப்பட்டு கொலைகள் புரிவனாய் ஆனான்.

வீடு திரும்பிய என் மகன்

இதயத்தை இரும்பாக்கி
மூளையைத் துவக்காக்கி
நண்பனைப் பகைவனாக்கி
என்னிடம் திரும்பினான்
இராணுவ வீரனாய் என் முன் நின்றான்
என் மகன்
ஊட்டி வளர்த்த அன்பு நேசமும்
ஆழப்புதைய
ஆடித்தான் போனேன்.

நண்பனைச் சுட்டுவிட்டு வந்து
வீரம் பேசினான்
தியாகம் பற்றி
ஆயுதம் பற்றி
எல்லைப்புற மக்களைக் கொல்வதைப் பற்றி
நிறையவே பேசினான்.
இப்போது நான் மெளனமாக இருந்தேன்
மனிதர்கள் பற்றி
விடுதலை பற்றி
மறந்தே போனான்

இப்போது நான்
தாயாக இருத்தல் முடியாது
என்று தோன்றுகிறது

துரோகி என்று
என்னையே புதைப்பானோ
ஒரு நாள்.

1986 அளவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த சகோதரப்படுகொலைகள் பற்றிய தீர்க்கமான குரல் இது. பெண் கவிஞர்கள் சுதாகரித்துக் கொண்டனர். விடுதலையின் பெயரில் தமது புதல்வர்கள் கொன்றழிக்கப்போகிற உயிர்களைத் தாய் அறிந்தாள்.


விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையில் உருவான அதிகாரப் போட்டி, வழிமுறை வித்தியாசங்கள், விடுதலையின் பெயரில் துரோகிகள் என்றும் சந்தேகத்தின் பெயரிலும் ஒருவரை ஒருவர் கொல்தல் போன்ற நடவடிக்கைகள் பெருகி வந்த காலமது. அவை சகோதரப் படுகொலைகளை நோக்கி இட்டுச் சென்றன. இயக்கங்கள் சொந்தச் சகோதரர்களைச் சித்திரவதை செய்து, கொன்று குவித்தார்கள்.

மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியது. கொல்லுதலில் அவரவர்க்குண்டான நியாயங்களில் கொலைக் கருவிகள் சுழன்றன. இப்படுகொலைகள் கொண்டு சேர்க்கப் போகும் புதைமேட்டின் தீர்க்கதரிசனம் தமயந்தியின் இக் கவிதை,

சூரியனைத் தின்றவர்கள்

சூரியனைப் பிய்த்து
தன் சீடர்களுக்கு அதை அளித்து
அவர் கூறியதாவது
அனைவரும்
இதனை வாங்கித் தின்னுங்கள்
இது
உங்களுக்காக் கையளிக்கப்படும்
என் அதிகாரங்கள்
இதனை உட்கொள்ளும் நிமித்தம்,
ஒளியின் மீதான ஆட்சியையும்
இருளின் மீதான ஆதிக்கத்தையும்
நீங்கள் அடைகிறீர்கள்

எனது ராஜ்ய பரிபாலனத்தின்
திறவுகோல்களை
உங்கள்
இடுப்பிலும் தோளிலுமாகச்
சுமத்துகிறேன்.

அவர்கள் எலும்புக் கூடுகளின் மேல்
உங்கள் இருப்பும்
உங்கள் அனைவரின்
எலும்புக் கூடுகளின் மேல்
எனது இருப்பும்
எனதேயான சித்தம்
ஒன்றை மட்டும்
நானுங்களுக்குச் சொல்கிறேன்
ஆயுதங்களின் மீதான
நம்பிக்கையையும்
அராஜகங்களின் மீதான விசுவாசத்தையும்
வலுப்படுத்துங்கள்

ஏனெனில் தண்டிக்கும் அதிகாரம் மட்டுமேயன்றி
மன்னிக்கும் அதிகாரம்
உங்களுக்கு வழங்கப்படவில்லை

எவனொருவனை நீங்கள்
மரணத்திற்கு தீர்வையிடுகிறீர்களோ
அவனது மரணம்
எனது நித்திய அரசின் ஓர்
செங்கல்லுக்குச் சமானமாகும்

நீங்கள் ஒவ்வொருவரும்
சுடுகுழலின் மீது
பிரமாணிக்கமாயிருங்கள்

உங்கள் தூக்கத்தின் துணையாக
துப்பாக்கிகளே
என்றென்றும் இருக்கக் கடவதாக!
துப்பாக்கியை இழக்கும்
எவனொருவனும்
எனது
மந்தைகளை மேய்க்கத்
திராணியற்றவன்

இயற்கை மரணம்
உங்களை அணுகாதபடிக்கு
செய்ய வேண்டியது
எனது
பேரரசின் கடமை என்பதை மறவாதீர்

பூமி எங்கும்
வானத்து மீன்களைப் போலவும்
கடற்கரை மணலைப் போலவும்
மானுடத்தின் பிணங்களை
பல்கிப் பெருகச் செய்யுங்கள்

எனது அரசின் வரலாறு
மனிதக் குருதியால்
எழுதப்படும் என்ற
தீர்க்கதரிசிகளின் வாக்கு
நிறைவேறக் கடவதாக!

(1990)

தமயந்தி

*
மகாபாரதத்தில் கீதை சொல்லப்படும் இடம் அதன் நாடகீயத் தருணத்திற்காக முக்கியமாகச் சொல்லப்படுவதுண்டு.
போர் முனையில் அர்ஜூனன் தனது சாரதியும் நண்பனுமாகிய கிருஷ்ணனிடம் ரதத்தை களத்தின் நடுவில் நிறுத்தச் சொல்கிறான். தன் முன்னால் அணி வகுத்து நிற்கும் எதிரிப் படையைப் பார்க்கிறான். தனது சொந்தச் சகோதரர்கள், விளையாட்டுத் தோழர்கள், ஆசிரியர்கள், குலமூத்தோர் என்று தனக்கு முன் நின்ற படையைக் கண்டதும், கிருஷ்ணா, எந்த ஆட்சியை தரப்போவதானாலும் இந்தப் போரை நான் புரிய மாட்டேன் என்று கைகள் துவண்டு வில்லிறக்கி நின்றான். அவ்வேளையில் கிருஷ்ணன், ‘ அர்ஜூனா நீ யுத்தம் புரிய வந்து விட்டாய். இனிப் பின்வாங்க முடியாது. நீ ஷஷ்திரியன், போரே உனது தர்மம். உன்னை நம்பியிருப்பவர்களைக் காப்பற்றப் போர் புரிவாயாக, எடு உன் வில்லை. தொடு உன் அம்பை. ஆகவே கொலை புரிக’ என்று சொல்லப்படும் கதை தமிழ் மக்களறிந்த பொதுவான கதை.

எதிரில் நிற்பது சொந்தச் சோதரர் ஆனாலும், விளையாட்டுத் தோழர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும், குலமூத்தோராய் ஆனாலும் போர் என்று வந்து விட்டால் நீ நம்பும் உன் தர்மத்தைக் நீ காக்க வேண்டும் என்ற கிருஷண்ணனின் குரல் சகோதரப்படுகொலைகளுக்கான நியாயத்தை வழங்கியிருக்குமா? அது அறமா?

*

விமர்சனங்களற்ற அதிகார மையமாக விடுதலைப் போர் மாறியதின் குறிகாட்டிக் கவிதையொன்றை 1989 இல் சிவரமணி இவ்விதம் எழுதுகிறார்.

புத்திசாலித்தனமான
கடைசி மனிதனும்
இறந்து கொண்டிருக்கிறான்…

கேள்வி கேட்பதற்கான
எல்லா வாசலும் அறையப்பட்ட பின்னர்
இருட்டின் உறுதியாக்கலில்
உங்கள் குழந்தைகளை விட்டுச் செல்லுங்கள்
அவர்களுக்குப் பின்னால் எதுவுமே இல்லை
சேலை கட்டிக் காப்பாற்றிய
சில நாகரிகங்களைத் தவிர…

வினாக்களுக்குரிய விடைகள் யாவும்
அச்சடிக்கப்பட்டுள்ளன.
முடிவுகளின் அடிப்படையில்
வெற்றி பெற்றவர் வரிசையில்
யாரை இங்கே நிறுத்துதல் வேண்டும்?
தேசத்தின் புத்திசாலிகள் யாவரும்
சந்திக்குச் சந்தி
தெருக்களில் காத்துள்ளனர்.
வினாக்களும், விடைகளும், முடிவுகளும்
யாவருக்கும் முக்கியத்துவமற்றுப் போனது.
” மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வை மறந்தோம்” என்பது
இன்றைய எமது
கடைசிப் பிரகடனமாயுள்ளது.

*

யாழ். பல்கலைக்கழகத்தில் சிவரமணி படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கிருந்த உரையாடல்களின் இரைச்சல் அவரை அமிழ்த்திக் கொண்டிருந்த பொழுதில். மூச்சு முட்டும் அந்த திராவகத்திலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல் அமிழ்ந்து கொண்டே எழுதினார்,

இடம்: யாழ் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை

நேரம்: பி. ப. 4. 30

தனித்து
பிரயாணிகள் அற்று மறக்கப்பட்ட
ஒரு சிறிய ரயில் நிலையம் போல
ஒவ்வொருக்கிடையிலும்
சிரிப்புடன் கூடவே எழும்
மதிற் சுவர்களிடையே…
ஒரு மாலை…

என்னுடைய நண்பர்களுடன் நான்
கதைத்துக் கொண்டிருக்கிறேன்.
எந்த விஷேசமுமற்ற
ஏராளமான காயங்களுக்கிடையில்
மகிழ்ச்சியாயிருக்க விரும்பும்
பொழுதுகள்
பேசுவதற்கு சொற்களற்று
மறக்கப்பட்ட பாடலுக்கு
தாளந்தட்டிய நண்பனும், விரல்களும்
நடுமேசையில் சிதறிக்கிடந்த
தேநீர்த் துளிகள்…
அவற்றைக் குடித்து அப்புறமாய்
மேலே கிடந்த ஒட்டறைகளில்
அகப்பட்டுக் கொண்ட இலையான்கள்…
தோள்கள் சிவக்க எனது நண்பி
தனக்குள் சிரித்தாள்
பகடி விட்டது யார்?
எனக்குத் தெரியாது.
கண்ணாடி ஓடுகளுக்கு மேலாய்
நகர்ந்த மேகங்கள்-
அதனுடன் கூடவே நேரமும், நிமிடமும்
முகரக்கூட சுவடுகளற்று எஞ்சிநின்ற
மேசையும் கதிரையும் –
வெற்றுக் கோப்பைகளையும் விட்டு…

கதவின் வழியாய் புகுந்த
மேற்கின் சூரியக் கதிர்கள் விரட்ட
நாங்கள் எழுந்தோம்-
உலகை மாற்ற அல்ல,
இன்னொரு இரவை நோக்கி.

(1989)

*
நம்பிக்கை ஒரு வால் நட்சத்திரமென எரிந்து பின்னர் வீழ்ந்து கொண்டிருந்த வானத்தின் கீழ், தானும் மற்றையவர்களும் கூட்டாக இழந்து கொண்டிருக்கும் மனிதத்தை உணர்ந்து அவலமூறிய கசப்பு மண்டிய சதையுடன் தோற்று நிற்பதை இப்படி எழுதினார்.

எனது பரம்பரையும் நானும்

எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கும்
இந்த இருட்டில்
எதுவுமே இல்லை என்பது நிச்சயமாகின்றது.

எனக்குப் பின்னால்
எல்லாப் பரம்பரைகளும்
கடந்து கொண்டிருந்த வெளியில்
நானும் விடப்பட்டுள்ளேன்.

சொர்க்கமும் நரகமும்
இல்லாதொழிக்கப்பட்ட பரப்பில்
ஆழம் காணப்படாத சேற்றில்
எனது கால்கள் புதைகின்றன.

ஒவ்வொருத்தனும்
தனக்குரிய சவப்பெட்டியைச் சுமந்தபடியே
தனது ஒவ்வொருவேளை
உணவையும் உண்கிறான்.

தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும்
தீர்க்கதரிசிகளுக்கும் உரிய
இடமும் காலமும் போதனையும் கூட
இல்லா தொழிக்கப்பட்டு விட்டது.
கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை.

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்க்கிடையே

நான்
எனது நம்பிக்கைகளுடன்
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.

(1989)

*

ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் மக்களிற்கு அசாதாரண நம்பிக்கைகளை ஊட்டிக் கொண்டிருந்த காலம். பிரச்சாரம் பீரங்கிகளை விட வலிமையான ஆயுதமாக வளர்ந்திருந்தது. ஆனால் உள்ளுணர்வில் அறியும் உண்மைகளின் பின்னே, ஆயுதம் நம்பிக்கையை அழித்தொழிக்கும் கருவியெனத் தோன்றிற்று சிவரமணிக்கு.

என்னிடம்
ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல
நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை.

இரவு:
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்;
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவை தான்.

இந்தச் சமூகத்தின் தொப்புள் கொடிக்கு
துப்பாக்கி நீட்டப்படும் போது
ஒரு மெல்லிய பூ நுனியில்
உக்காரக்கூடிய
வண்ணத்துப் பூச்சியின் கனவு
எனக்கு சம்பந்தமற்ற
ஒரு சம்பவிப்பு மட்டுமே.

நான் மனிதனாய் வாழும் முயற்சியில்
பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்.
எனக்கு
பகலால் உருவமைக்கப்பட்ட அழகிய இரவு
கனவாய் உள்ளது.

(1989)


*
சிவரமணி தனது முற்போக்கான பெண் விடுதலைக் கருத்துகளுக்காகவும் மனிதாபிமானப் பார்வைகளுக்காகவும் சொந்த மக்களாலேயே கேலி செய்யப்பட்டவர். பேரழிவின் தொடக்கத்தில் நிற்கும் தன் மக்களின் முன் தன்னுடைய நியாயங்களின் அடிப்படையை, பெண்களின் வரலாற்றுப் பாத்திரத்தை ஒரு சிறிய கல்லைப் போன்று எடுத்து வைத்தார்.

அவமானப்படுத்தப்பட்டவள்

உங்களின் வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ள முடியாது.
இதுவரை காலமும்,
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
என்னுடைய நாட்களை நீங்கள்
பறித்துக் கொள்ள முடியாது.
கண்களைப் பொத்திக் கொள்ளும்
உங்கள் விரல்களிடையே
தன்னைக் கீழிறக்கிக் கொள்ளும்
ஒரு குட்டி நட்சத்திரம் போன்று
எனது இருத்தல்
உறுதி பெற்றது.
நிராகரிக்கப்பட முடியாதவள் நான்
இனியும் என்ன
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்
நான்
பிரசன்னமாயுள்ளேன்
என்னை
அவமானங்களாலும்
அநாகரிக வார்த்தைகளாலும் போர்த்துங்கள்

ஆனால்,
உங்கள் எல்லோரினதும்
நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது
ஒரு அழுக்குக் குவியலாய்
பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை
அசுத்தம் செய்கிறேன்.

என்னுடைய நியாயங்கள்
நிராகரிக்கப்படும் வரை
உங்களின் எல்லாப் பாதைகளும்
அழுக்குப் படிந்தவையே.

(1990)

*
எல்லாக்காலகட்டத்திற்குமாக எழுந்த மானுட குலத்திற்கான மகத்தான அறக் குரலுக்காக, யாழ் பல்கலைக்கழகத்தில் செல்வியும் சிவரமணியும் ராஜினியும் ஒன்றாக அமர்ந்து பேசும் சிலைகள் அமைக்கப்பட வேண்டும். மனவிரக்தியிலும் படுகொலைகளிலும் கொல்லப்பட்ட பெண்களைத் தெய்வமாக்கி அவர்களின் நியாயங்களை வழிபடும் பண்பாடுள்ள சமூகமாகிய நாம் கண்ணகியும் நாச்சிமாரும் பிடாரியுமாக வணங்கும் தெய்வங்களின் இடம் அவர்களுக்கானது.

ராஜினி திராணகம

ராஜினியின் படுகொலை பற்றிய சேரனின் கவிதை,

ராஜினி

இன்னும் கொஞ்ச நேரத்தில்
சூரியன் மறைந்து விடுவான்.

இருள் கவிந்து விடும்

இனி வரப்போகிற இருள்
முன்பு போல அல்ல;
பிசாசு

நிலாவைக் கொலை செய்து
வெள்ளிகளைப் போட்டெரித்த
சாம்பல் பூசிய இரவு
இந்த இரவுக்கு முன்
ஒரு சிறு கை விளக்கை
அல்லது ஒரு மெழுகு திரியை
ஏற்றி விட வேண்டும் என்று விரைந்தாய்

அம்மா,
வேகம் அவர்க் கதிகம் இன்று
தென் திசை நின்று வந்தனர்
யமனின் தூதர்கள்;
கைத்துப்பாக்கி;
ஐந்து குண்டுகள்

நீ விழுந்த போது
சூரியனின் கடைசிக் கிரணங்கள்
சுவரில் விழுத்திய
உன் நிழல்
கைகளை வீசி மேலே ஓங்கிற்று

முடிவிலி வரை.

*

கைக்கெட்டியவரை என்னுடைய அடையாளம் எல்லாவற்றையும் அழித்து விட்டேன், நீங்கள் செய்யக்கூடியது மிச்சவற்றையும் அழித்து விடுவது.. என்று, தான் வாழுங் காலத்தின் தாங்கொணா உழல்வில் தன்னுயிரை மாய்த்த சிவரமணியின் இறுதிக் குறிப்பு,

” எந்தவிதப் பதட்டமுமின்றி
சிந்தித்து
நிதானமாக எடுத்த முடிவு இது:
எனினும்
எனக்கு இன்னும் வாழ்க்கை
அற்புதமாகவே உள்ளது.
எரியும் நெருப்பும் காற்றில்;
இந்த முடிவுக்காக என்னை மன்னித்து விடுங்கள்,
மன்னிக்காவிட்டாலும் பரவாயில்லை.
எனது கைக்கெட்டியவரை
எனது அடையாளங்கள் யாவற்றையும்
அழித்து விட்டேன்.
நீங்கள் செய்யக் கூடிய உதவி
ஏதும் எஞ்சியிருந்தால்
அவற்றையும் அழித்து விடுவதே.”

(19, மே, 1991)

TAGS
Share This