விண்கற் கிராமத்தில் ஒரு நாள்
குறிப்பு: இந்தக் குறிப்பினை நண்பர் கிஷோகர் தனது முகநூலில் எழுதியிருந்தார். அதீதமான உணர்ச்சிவசப்படும் மனிதர்களில், நானறிந்த தலைமகன்களில் ஒருவர். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அதேயளவு வெறுப்பும் கசப்பும் சூழ்ந்த இருளில் வாழவும் நேரக்கூடியவர். அவரது ஆரம்ப காலங்களில் இருந்தே அவரது எழுத்துக்களில் வெளிப்படும் நகைச்சுவையை ரசிப்பேன். சில நேரங்களில் எரிச்சலும் ஊட்டுவார். ஆனால் அவர் எழுதிய சில குறிப்புகள் அபூர்வமான வாழ்கணங்களைக் கொண்டவை. இக் குறிப்பும் அத்தகைய ஒன்று. முகநூலில் சில நாட்களிலேயே இது சென்று மறைந்து விடும். ஆகவே இணையத்தளத்தில் இதை சேகரமாக்குகிறேன்.
*
விக்டோரியா மாநிலத்தின் இந்த மிகச்சிறிய கிராமமான மேர்ச்சசன் விண்கல் நகரம் என்று அறியப்படுவது. அறுபதுகளில் மிக விசித்திரமான விண்கல் ஒன்று இங்கே விழுந்திருக்கிறது. அது ஒரு சுவாரசியமான கதை பின்னொருநாள் எழுதுகிறேன்.
சிறுநகரங்களோடு மெல்போர்ன் பெருநகரை இணைக்கும் பிரதானமான நெடுஞ்சாலையொன்று இந்தக் கிராமத்தை ஊடறுத்துப் போகிறது. மேர்ச்சசனில் வசிக்கின்ற மிகக்குறைந்த கிராமவாசிகளில் அனேகர் வயோதிகர்கள். தங்கள் ஓய்வுக்காலத்தை கழிக்க Goulburn ஆறு மெருகூட்டும் இந்தக் கிராமத்தை தேர்ந்தெடுத்திருப்பவர்கள். எஞ்சியிருப்போர் பண்ணைக்காரர்கள். இந்தக் கிராமத்தைச் சுற்றியும் கால்நடைத் தீவனத்துக்கான புற்கள் வளரும் விளைநிலங்கள் விரிந்து கிடக்கின்றன. இந்த இரண்டு பெரும் பிரிவினரும் போக தெட்டம் தெட்டமாக மூன்றாம் பிரிவினரும் உள்ளனர். பொருளாதார ரீதியில் வங்குரோத்தாகி பெருநகர் ஒன்றில் வாழ்க்கைச் செலவை சமாளிக்க இயலாமல், மேர்ச்சசனில் மிகக் குறைந்த வார வாடகையில் கிடைக்கும் வீடுகளுக்காகவும், இதர செலவீனங்களைச் சமாளிக்கவும் குடிபெயர்ந்தவர்கள். அப்படி ஒருவன் தான் ஜோஷ்.
தன் இணையரான ஜேடுடன் இரண்டு அமேரிக்கன் bully நாய்கள் சகிதம் நான் தங்கியிருக்கிற caravan park பக்கத்தில் இருக்கிற மைதானத்துக்கு வருவான். நாய்களை அவிழ்த்து விட்டு அவை விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் இருவரும். கிரிக்கெட் ஆடுவதைப் பராக்குப் பார்க்கப் போகும் எனக்கும் அவர்களுக்கும் அப்படித்தான் பழக்கமானது. முப்பத்தெட்டு வயதான ஜோஷ் மூன்று வருடம் சிறையில் இருந்திருக்கிறான். தனது சகோதரைத் தாக்கிய ஒருவனை இவனும் இவனது நான்கு நண்பர்களும் சேர்ந்து தாக்கிய வழக்கு அது. அதன் நீட்சியாக விவாகரத்தும் ஆகிறது. ஜோஷின் முன்னாள் மனைவிக்கும் ஜோஷுக்கும் ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். விவாகரத்தின் பின்னர் மகனைப் பார்ப்பதற்கு இவனுக்கு குறிப்பிட்ட நாட்கள் நீதிமன்று கொடுத்த சலுகை உண்டு. மகனின் ஏழாவது பிறந்த நாளிற்கு வாழ்த்தச்சென்ற ஜோஷ் மீது இரண்டாவது வழக்கும் பாய்ந்திருக்கிறது. அவன் போன தினம், நீதிமன்று சலுகை வழங்கிய நாள் கிடையாது. ஆகவே முன்னாள் மனைவியின் புகாரின் பெயரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மகனைப் பார்ப்பதற்கு வழக்கப்பட்ட சலுகையும் இரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.
வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதனாலேயே முறையான தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள சிரப்பட்ட ஜோஷ், இங்கொன்றும் அங்கொன்றுமாக அடிமாட்டு சம்பளத்தில் கிடைத்த வேலைகளில் கிடைத்த சொற்ப சம்பளத்தில் வாழ்க்கைச்செலவைச் சமாளிக்க இயலாமல் மெல்போர்னில் இருந்து இங்கே குடிவந்திருக்கிறான். பெருநகர் போல இங்கே வேலைகள் அவ்வளவு கிடைக்காது. வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் கட்டட வேலைகளுக்குப் போவதாய்ச் சொன்னான். அவனது இணையரான ஜேட் அருகில் உள்ள சிறிய பல்பொருள் அங்காடியில் வாரத்திற்கு மூன்று நாட்கள் வேலை செய்கிறாள்.
இன்றைக்கு மைதானத்திற்கு ஷோஷ் மட்டுமே வந்திருந்தான். Raptor என அவன் பெயர் சொல்லி அழைக்கும் கறுப்பு நிற ஆண் நாய் மட்டுமே அவனோடு இருந்தது. நான் அருகில் போய் நின்றபடியே ” ஜேட் எங்கே ?” என்று கேட்டேன்.
” அவள் போய்விட்டாள் “
” இன்றைக்கு அவளுக்கு வேலை நாளா?”
” இல்லை. அவள் என்னை விட்டு போய் விட்டாள் “
” No Shit”
” No Shit mate! நான் பொருளாதார ரீதியாக மிக நலிந்து போய் இருக்கிறேன். குடும்பத்துக்கு என்னால் சரியாகப் பொருள் ஈட்ட இயலவில்லை. இது கொஞ்ச நாட்களாகவே எங்களுக்குள் சச்சரவாக இருந்தது. நேற்று இரவு அது முற்றி வெடித்துவிட்டது. இனிமேல் என்னைச் சந்திப்பதாய் இல்லையெனச் சொல்லி மெல்போர்னிற்குப் போய் விட்டாள்”
” உனது மற்றய நாய் எங்கே ? “
” Bobo ஐ அவள் போகும் போது கொண்டு போய்விட்டாள் “
பழுப்பு நிறமான அந்தப் பெண்நாயின் பெயர் BoBo என்பது அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது. ஜோஷ் , சற்றுத் தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த Raptor ஐக் கூப்பிட்டான். புறப்படத் தயாரானவன் என்னிடம் விடைபெற்றான்.
” சரி! உனக்கு நல்ல நாளாகட்டும். நான் வீட்டிற்குப் போகிறேன். இவனுக்கு உணவு ஏதும் தேட வேண்டும் “
” நீ எப்போதும் Dry food தானே கொடுப்பாய் ?”
” ஆம். ஆனால் ஜேட் போகும் போது மொத்தத்தையும் தூக்கிக்கொண்டு போய்விட்டாள். அது அவள் வாங்கியது தான். கூடவே எனது வங்கி அட்டையையும் கொண்டு போய்விட்டாள்” என்று சொன்னவன் சிரித்தான். இருந்தும் பிரியோசனமில்லை. அதில் எட்டு டாலர்கள் தான் இருந்தது . சரி பார்க்கலாம். அதோ உன் டீம் ஆட்கள் வருகிறார்கள். Have fun “
ஜோஷ் எனக்கு முன்னே நடந்துகொண்டிருந்தான். நேற்று இரவு அல்லவா ஜேட் கிளம்பிப் போனதாய் சொன்னான். அப்படியானால் இன்று மாலை வரைக்கும் அந்த நாய் உணவில்லாமல் பசியோடு இருக்கிறது என்பது மண்டையில் அடித்தது. பாவம் வாயில்லாதது. ஒவ்வொரு முறையும் உணவு வரும் என்று தன் எஜமானன் முகத்தைப் பார்த்துப் பார்த்து ஏமாந்து போயிருக்கும் அல்லவா?
அவனை அழைத்தேன். நின்று திரும்பிப்பார்த்தான். ஓட்டமாய் அவன் அருகில் போனேன்.
” Raptor க்கு நான் உணவு வாங்கி தருகிறேன் “
” நன்றி. ஆனால் நீ அதைச் செய்யத்தேவையில்லை “
” No I mean it. இவனது உணவுக்கு என்ன செய்வாய்?”
” Donno mate! ஏதாவது மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டும் “
” நீ கண்டுபிடித்த மார்க்கமாய் இதை நினைத்துக்கொள். தவிர, அது வாயில்லாதது. பாவம். பட்டினியாய் இருக்கிறது. அதை எப்படி நீ பட்டினி போடலாம்?”
அவன் மௌனமாய் இருந்தான். வா போகலாம் என்று அவனது காரில் போய் அமர்ந்தேன். ஜேட் வேலை செய்யும் பல்பொருள் அங்காடியில் அவன் நாய்க்கான உணவை வாங்கினான். அந்த நேரத்தில் எனது நண்பரிடம் இருந்து எனக்குக் குறுஞ்செய்தி வந்தது. “இரவு சமைக்க வேண்டாம். நான் வரும் போது உணவு வாங்கி வருகிறேன் “. அதைப் படித்த மாத்திரத்தில் மிக சம்பிரதாயமாய் ” உனது இரவு உணவு என்ன மாதிரி ?” என்று கேட்டேன். ” நல்ல விதமாக அது பற்றிக் கவலை இல்லை. குளிரூட்டியில் பாண் இருக்கிறது. பின் வளவில் தக்காளிப் பழங்கள் பழுத்துக் கிடந்ததைக் கண்டேன்” என்றான். அந்த அங்காடியை ஒட்டியபடியே இருக்கும் மேர்ச்சனின் ஒரே ஒரு உணவகமான அந்த வெதுப்பகத்தில் ஒரு மாட்டிறைச்சி Pie வாங்கி அவனிடம் கொடுத்தேன். ” Fuck… Dont do it mate ” என்று மறுத்தான். கொண்டு போய் அவன் காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டேன். அவன் எதுவும் பேசவில்லை.
என்னைக் கொண்டு வந்து caravan park இல் இறக்கிவிட்டான். காரில் இருந்து வெளியாகியதும் சிறிய தொகை பணத்தாள் ஒன்றை அவன் கையில் வைத்துவிட்டு ” எரிபொருள் அடிக்கத் தேவையானால் வைத்துக்கொள்” என்றேன். ” எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை” என்பது மட்டுமே அவன் வாயில் இருந்து வந்தது. பார்க்கலாம் என்று சொல்லிப் பிரிந்து நான் என் cabin க்கு வந்த பின் சற்றைக்குள் கதவு தட்டப்பட்டது. வெளியில் கலங்கிய கண்களுடன் ஜோஷ் நின்றுகொண்டிருந்தான். நான் என்ன என்று கேட்க வாய் எடுக்கவே என்னை இறுக அணைத்து ஒருமுறை விசும்பி என்னிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான்.
” உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ” என்று ஆரம்பித்தவனை மறித்தேன். ” இல்லை ! அதெல்லாம் ஒன்றுமேயில்லை. நான் நெருக்கடியில் இருந்த போது உதவிய அனேகர் இருக்கிறார்கள். தவிர அது பெரிய தொகையும் அல்ல ” என்றேன்.
” இல்லை! நீ ஒரு பணத்தின் பெறுமதியில் இருந்து இந்த உதவியின் கனத்தைப் பார்க்கிறாய். முடிந்தால் இன்றிரவு நீ தூங்கப் போகும் போது பட்டினியாய் இன்று படுத்திருக்க வேண்டிய இரண்டு உயிர்களின் பக்கத்தில் இருந்து யோசித்துப் பார். போய் வருகிறேன் “
நான் அவனையே பார்த்துக்கொண்டு நின்றேன். இரண்டு அடிகள் நடந்தவன் திரும்பினான்.
” ஹேய் ஸ்ரனி! இதயத்தில் இருந்து சொல்கிறேன். நீ நல்ல மனிதன் ” சொல்லிவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
இப்போது எனக்குக் கண்கள் பொருமிக் கண்ணீர் கட்டியது. எனக்கு ஞாபகமிருக்க, என்னை நல்ல மனிதன் என யாரும் சொன்னதாய் நினைப்பு இல்லை. நானும் அப்படி நடந்து கொண்டதாகவும் நினைப்பில்லை. அவன் அப்படிச் சொன்னதும் நெஞ்செல்லாம் ஒரு மாதிரியாக இறுகிக் கண்ணீர் திரண்டு விட்டது. சுய கோபத்துடனும், கழிவிரக்கத்துடனும் கடக்கும் நாட்களாக எனக்குச் சமீபத்தைய நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறன. அது போக என்னைக் குறித்து என்னிடம் எப்போதும் நல்லபிப்பிராயம் இருந்ததே இல்லை. அவன் என்னை அப்படிச் சொன்னதும் ஒரு மாதிரியாக இருந்தது. நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. ஆனாலும் மனது ஆசுவாசமாக இருந்தது.
பார்க்கப்போனால் இங்கே உதவி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் செய்தது ஜோஷ், எனக்கு!
கிஷோகர் ஸ்ரனிஸ்லஸ்