தெய்வங்களும் பாதாள நாகங்களும்

தெய்வங்களும் பாதாள நாகங்களும்

காதலிலும் காமத்திலும் ஆண் மனம் கொள்ளும் எதிர்நிலைகள் கவிதையில் இருமுனையும் கூர் கொண்ட மீன்முள்ளுகள் போல. அது ஒன்றினது இரு திசைகளெனவும் ஒரே உலோகத்தின் குளிரும் வெப்பமுமென ஆகுபவை.

காதலும் காமமும் ஆண் மனதிற்குள் இரண்டு தனித்தனியான கதாப்பாத்திரங்களாகவே நிகழக்கூடியவை. அதற்கு அச்சமில்லை, குற்ற உணர்ச்சியில்லை, பல வேளைகளில் மானுட அடிப்படைகள் கூட இருப்பதில்லை. ஆண் காதலின் உலகம் கண்ணீரும் புனிதமும் பெருக்கெடுத்து ஓடுவதாக நிகழும் அதே வேளையில் அதன் காமத்தின் அகம் பாதள நாகங்கள் ஒளிரும் கண்களுடன் ஒன்றையொன்று வேட்டையாடும் ஆதி இருட் குகை. இரண்டுக்குமிடையில் உள்ள சமநிலைக் கல்லுகளில் இரண்டும் ஆண் மனதில் அசைந்து கொண்டிருக்கின்றன.

சதீஷ்குமார் சீனிவாசன் இந்த வகையான மனநிலைகளை அதன் வெற்றுடல்களுடன் எழுதும் கவிஞர். தெய்வங்களாயும் கண்ணீராயும் பெருக்கெடுக்கும் ஒரு தரப்பின் மறு முனை. ஆண் மனத்தின் பாதாள நாகங்களினை ஒவ்வொன்றாக எடுத்துத் தனது பெட்டிக்குளிருந்து வெளியே எடுத்துக் காட்டும் பாம்பாட்டி. இந்தத் தன்னிலை சமகாலக் கவிதைகளில் தனித்துவமான சீற்றம் கொண்டவையாக எழுவதற்குக் காரணம் அவர் எடுத்து அடுக்குவது அந் நாகங்களை என்பதால். தெய்வங்களாக்கும் கவிதைகள் பெண் என்ற எதிர்நிலையைக் கடப்பவை அல்ல. அது தன்னிலையின் கொடுங் கனவுகளிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ள முயல்பவை. அம்மனநிலைகளிருந்து எழும் நாகங்களை உறை சிற்பங்களென ஆக்குவதன் மூலம் தன்னஞ்சைத் தானே தன் தொண்டைக்குழியில் சேகரிப்பவை.

(சதீஷ்குமார் சீனிவாசன்)

அதே கோயிலின் நேரெதிர் வாசலில் சதீஷ்குமார் அசையும் உயிருள்ள உடல்களாக அதே நாகங்களைக் கையில் பிடித்து வைத்திருப்பவர். அதனாற் தான் அவற்றின் வழுக்கும் உடலின் மொழியும் விரிந்து படங் கொண்டெழும் தலையும் மண்ணில் கொத்தியே தன்னழியும் மூர்க்கமும் இக் கவிதைகளில் எழுகின்றன. அவர் தெய்வங்களுக்கும் பாதாள நாகங்களுக்கிடையிலும் அலையும் அந் நிலைகளை வெளிப்படுத்தும் சில கவிதைகள் இவை.

*

குறி

நான் எல்லோரையும் நேசித்தேன்
முக்கியமாக பெண்களை
அவள்கள் படுக்க வரமாட்டாள்கள்

மற்றபடி
அவள்கள்
தேவதைகள்
நீலிகள்
யட்சிகள்

நமக்கு குறி சூம்பிப் போனது.

*

அன்பே

அன்பே எப்படிப் பார்த்தாலும்
என்ன
ஓரிரவில்
ஓர் அறையில்
உன் உடல் பற்றுவேன்

பிறகு
உனைக்குறித்து
கவி பாடுவேன்

நீ பாடினால்
என் ஆண்மை சந்தி சிரிக்கும்
ஆதலால் பாடாதே
அன்பே
கனியே
அமுதே.

*

நான் பாடுவேன்

என் அரசர்களுக்குப் புரியாது
அதன் குடிகளுக்குப் புரியாது
அருகிலிருக்கும் சகாக்களுக்கும் புரியாது
ஆனாலும்
நான் பாடுவேன்

நீர்கள் பள்ளமிறங்குவதுபோல
மலர்கள் பூக்க நினைப்பதுபோல
வான் எல்லாத் திசையிலும் நிறைந்திருப்பதுபோல
சதா புதிதான தீ போல.

*

வெயிலறி மனது

நீ என்ன நினைத்தாய்
என்னைக்
காப்பாற்ற முடியும் என்றா

நிச்சயமாக அது முடியாது

திரும்பிப் போ

இந்த வெயில் அறியும்
மனதை
அழிவை.

*

கறுப்பு நதி

யானைகள் நடக்கும் சேலையை அணிந்தபடி

செல்கிறாள் அவள்

அருகில்

குட்டியானை போல அவளது மகள்

திருப்பூரில்

வனமில்லை

யானைகளில்லை

உஷா தியேட்டர் பாலம் கடக்கிறாளவள்

யானைகள் பிளிறுகின்றன

ஏற்றத்தில்

நதி

முன் எப்போதையோ அண்ணாந்து பார்த்து

கருப்பாக ஓடியது

மகள் பிளிறுகிறாள் காலத்தை.

*

உடலை வென்றபிறகு

நம்மிடம் எந்த
மிச்சமும் இல்லை
அலுப்பூட்டும் கற்பனைகள்
திரிந்துவிட்ட வரலாறுகள்
சதா விலக துடிக்கும் நினைப்பு

உடலை வென்ற பிறகு
நாம் திகைத்துபோனோம்

சொல்லவொண்ணா
பிறழ்வுகளின் நிழலில்
நமது எல்லா தெய்வங்களும்
எப்படி ஆசீர்வதிப்பதென
குழம்பி நின்றன.

சதீஷ்குமார் சீனிவாசன்

TAGS
Share This