பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02

வணக்கம்,

உங்களுடைய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற புனைவில் இருந்து சில கேள்விகள் எனக்கு,

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் இருக்க முடியும் என்ற விடயத்தை பலரும் விவாதித்து வருகின்ற வேளையில் அதை அடிப்படையாக வைத்து பல பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குவதும் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஆனால் சம்மந்தப்பட்ட எவரும் அவற்றை பொதுவெளியில் விவாதிக்கவோ பொறுப்புக்கூறவோ தயாராக இல்லை இது வெறும் கதைகளாகவும் கொசிப்பாகவுமே வெளிவருகின்றன இது பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?

இப்படியான ஒடுக்கு முறைகளை நிகழ்த்திக் கொண்டு, சமூகத்தில் இருக்கின்ற ஏனைய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்பது என்ன வகையான நிலைப்பாடு?
இதில் இருக்கின்ற இரட்டை நிலைப்பாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அல்லது ஒரு சமூகமாக நாங்கள் ஏதாவது உத்திகளைக் கையாள முடியுமா?

பெண்கள் இதனை முன்னெடுக்க முடியாத போது அவற்றை கலந்துரையாடுவதற்கான தளத்தை எவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்கலாம்?
சிலர் அதை ஒடுக்குமுறை என்று தெரிந்தும் கடந்து போகிறார்கள், சிலர் அவற்றை பேச முடியாமல் இருக்கின்ற நிலைமைகளும் இருக்கின்றன. பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரைக்கும் பெண்களின் குரல்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இதற்கான மாற்றுவழியை நாங்கள் எவ்வாறு கண்டடைவது?

ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களால் நிகழ்த்தப்படுகின்ற ஒடுக்குமுறைகளை எந்தத் தட்டில் வைத்து விளங்கிக் கொள்வது?

திசா

*

வணக்கம் திசா,

உங்கள் கேள்விகளின் சாராம்சத்திலிருந்து எனது பார்வைகளைச் சொல்கிறேன்.

பாலியல் சுதந்திரமும் அதன் வரையறைகளும் வரலாறு நெடுகிலும் மாறி வந்துகொண்டேயிருப்பது. காமத்தை ஒழுங்குபடுத்துதலின் வரலாற்றின் ஊடகவே ஒருவர் மானுட வரலாற்றின் படிநிலை மாற்றத்தை உளவியல் மாற்றத்தை விளங்கிக் கொள்ள முடியும். History of sexuality என்ற பூக்கோவின் நூல் மேற்குலகின் பாலியல் பற்றிய ஒடுக்குமுறை பற்றி விரிவாகப் பேசும் ஒரு நூல். அதே போல் கீழைத்தேய நாடுகளின் பாலியல் மதம், பண்பாடு, சாதி, வர்க்கம், மொழி ஆகியனவும் பல்வேறு நுண்ணலகுகளால் வேறுபடுபவை. எல்லோரும் உடலுறவே கொண்டாலும், காமம் பற்றிய கற்பனைகள் மற்றும் வரலாறுகள் வேறுபாடானவை.

பாலியல் சுதந்திரம் தமிழ்ச்சமூகத்தில் எத்தகைய பின்னணியைக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு காலத்திலும் அது எவ்விதம் மாறி வருகிறது. காதல் என்பதை எவ்விதம் அதன் பண்பாட்டு மனங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பவை குறித்து விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். அதே நேரம் காமத்தை ஒழுங்குபடுத்தும் செயல்வழியே தான் இன்றைய குடும்ப அமைப்பை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்தனுக்கு ஒருவன் அல்லது ஒருத்தனுக்கு ஒருத்தி, இந்த இருவர் இணைந்து உருவாக்கும் ஓருடலே உறவு என பெரும்போக்கான புரிதல் உள்ளது. வரலாறெங்கும் இதற்கு மாற்றான கூட்டுப் பாலியல் உறவுகள், பலதார மணங்கள் இருந்தே வருகின்றன. ஆனால் முற்காலத்தில் ஆண்களே அதிகளவிலான அதிகாரத்தை பெண் உடல்கள் தொடர்பிலும் அவர்களது பாலியல் தேர்வு குறித்தும் வரையறுக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்தனர். இதிலிருந்து மாற்றான பார்வைகள், சமத்துவம் ஆகியன உள் நுழையும் போது, பெண்களும் தம்முடலை, பாலியல் சுதந்திரத்தை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும் செய்தார்கள், செய்கிறார்கள்.

காமம் மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று, அதே நேரம் விலங்குத் தன்மை கொண்டதும். அதை வரையறுக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வது எப்படி, குழந்தைகள், 18 வயதிற்குக் கீழ்ப்பட்டோர், அவர்களுக்கு விருப்பமே இருந்தாலும் இன்னொருவருடன் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றம். இது ஒரு வகையென்றால், அதற்கு மேலுள்ளவர்கள் தங்கள் பாலியல் துணையை கண்டடைய கலாசாரம், மதம், சாதி, வர்க்கம் உண்டாக்கி வைத்திருக்கும் முன் தடைகள் எத்தனை. இன்று வாழும் எத்தனை பேர் தமக்கு மிக விரும்பிய துணையைக் கண்டடைந்திருக்கிறார்கள். முன்னிளமைக் காலத்திலும் வாலிபத்திலும் அனேகமானவர்கள் காதலிக்கிறார்கள், ஒரு பகுதியினர் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த இடைவெளியில் அவர்களுக்குக் காமம், காதல், வாழ்க்கை தொடர்பில் அளிக்கப்பட்டிருக்கும் சித்திரங்களையும் நம்பிக்கைகளையும் கற்பிப்பது யார்? நமது மதமா? ஆசிரியர்களா? கலையா ? இலக்கியமா? இல்லை. பெரும்பான்மையானோரின் புரிதல் சினிமாவிலிருந்தும் போர்னோகிராபியிலிருந்தும் பாலியல் கதைகளிலிருந்தும் உருவாகுபவை. நாங்கள் பாலியலை, காமத்தை உரையாடுவது மோசமான குற்றமாகக் கருதும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம்.

ஆகவே தான், பாலியல் சார்ந்த பிறழ்வுகளை அதன் நுட்பமான நெருங்குகையை அவதானிப்பதில் நானுட்பட பலரும் போதுமான அறிவற்றவர்களாகவே இருக்கிறோம். மீறல்கள் எந்தவொரு சமூகத்திலும் தவிர்க்க முடியாதவை. அவை நிகழ்ந்தே தீரும். அவை பொது நோக்கில் தவறென்றோ மோசமானதென்றோ கருதப்பட்டாலும் பிழை விட்டே இவ்வுறவுகள் குறித்த வரையறைகள் விரிவடையும். ஆகவே நபர்களையன்றி அந்த அகச் சிக்கலையே நான் முதன்மைப்படுத்தி, உரையாட விரும்புகிறேன்.

எனது அனுபவத்தில் ஒருவர் முற்போக்கா பிற்போக்கா என்பது போன்ற பிரிவுகளிலிருந்து பாலியல் சுரண்டல்களோ / வன்முறைகளோ நிகழ்வதில்லை. எல்லா இடங்களிலும் எல்லாப் பிரிவுகளிலும் அவை நிகழும். முன்னோக்கிச் செல்பவர்களிடமும் கூட அழுக்குகள் இருக்கும். அதை நெருங்கி அவரை மையப்படுத்தி அந்தச் சிந்தனையையோ கருத்தையோ நாங்கள் பாழ்படுத்திவிடக் கூடாது. பொது வெளியில் நிகழ்வது அத்தகைய சேறடிப்புகள் கருத்தியல் தோற்றகடிப்பு உத்திகள் தான். ஆகவே தான் நபர்கள் சார்ந்த பாலியல் சுரண்டல்கள் குறித்த விசாரணைகளை விவாதங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக, முழுமையாக உரையாடுவதின் முதற் தடை நிகழ்கிறது. அதே நேரம் அதைக் காரணம் காட்டி அந்த நபர் தனது சுரண்டல்களிலிருந்து தப்பிக்கவும் கூடாது. அவருக்குண்டான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும். அதுவே அறம்.

பாலியல் பற்றிய அல்லது சொந்தக் காமம் பற்றிய உரையாடல்களை பொது வெளியில் நிகழ்த்துவது உகந்ததல்ல. அதை ஒரு கலை வடிவமாக அல்லது ஆக்கமாகவோ முன்வைத்து அதற்குண்டான வாசகர்களுடனேயே உரையாடப்பட வேண்டும். ஒரு பிரச்சினையை நிதானமாக அணுகும் ஆயிரம் பேரையாவது நம் வாழ்நாளில் நாம் தொகுத்துக் கொள்ள வேண்டும். நான் இணையத்தளத்தில் உரையாடலைத் தொகுப்பதன் நோக்கமும் அது தான். உரையாடலில் அனைவரையும் பங்களிக்கும் படி கேட்பதும் அதற்குத் தான். நாம் முன்வைக்கும் ஒடுக்குமுறைகளைக் கொண்டே சமூக வலைத்தளத்தில் அக்கருத்தியலையே போட்டு நொறுக்கி விடுவார்கள். எதை எங்கு உரையாடத் தொடங்குவது என்பது முக்கியமானது. மேலும் பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஒருவர் உண்மைகளை எவ்வளவு தூரம் பேசுவார் என்பதும் அவ்வுரையாடல்களின் மீதான நம்பிகையின்மையை ஏற்படுத்துகிறது.

ஆகவே கருத்தியல் சார்ந்து இடம்பெறுகின்ற உரையாடல்கள் முதற் தளத்தில் இதழ்களிலோ அல்லது இணையத்தளங்களிலோ நேரிலோ கூட நிகழலாம். அதன் பின்னரே அது பொது வெளி உரையாடலாக ஆக வேண்டும். அது அக்கருத்தை ஓரளவு பாதுகாத்துக் கொண்டு ஒடுக்குமுறையைச் செய்தவரை அதிலிருந்து பிரித்துப் பார்க்க உதவும்.

மேலும், எந்தவொரு தனிநபரும் அவர் இதைச் செய்தார், அவர் மோசமானவர், பாலியல் குற்றவாளி என்பதில் பல்வேறு பார்வைகளும் உளநிலைகளும் நலன்களும் அக்கருத்தை இணைந்து உருவாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே இது சட்டபூர்வமாக முன்னகர்வது தற்போதைக்குப் பொருத்தமானது. பண்பாட்டில் இதற்கான ஆயத்தங்களாக எங்களது இவ்வகையான உரையாடல்களை விரித்துப் பலரதும் பார்வைகளைத் தொகுக்கலாம். முதலில் இணையத்தில் தொகுத்து பின்னர் புத்தகமாக ஆக்கலாம். அது ஒரு மூலக் கருவியாக ஆகும். அதிலிருந்து உரையாடலைப் பரந்துபட்ட மனிதர்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

(ப்ரீடா காலோவின் ஓவியம்)

இவை மேலுள்ள மனிதர்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல. மனிதர்களின் எல்லாத் தட்டுகளிலும் இவை இருக்கின்றன. இதில் ஒருவர் ஆண், பெண், இன்ன சாதி, முற்போக்கானவர், பிற்போக்கானவர் என்ற எதுவும் விதிவிலக்கல்ல. யாரும் சுரண்டலாம். குற்றம் இழைக்கப்படலாம். அதே நேரம் அவர்கள் அவர்களது தவறுகளை உணர்ந்து மீண்டு வாழ்வதற்கான வாய்ப்பைப் பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் அவர்களைத் திருத்த வேண்டும் என்பதை ஒரு சட்ட நீதிபோல் சொல்லவில்லை. நாங்கள் அவர்களது குற்றங்களை உணர்த்த, அதிலிருந்து மீள அவர்களுடன் தொடர்ந்து உரையாடியாக வேண்டும். அவர்களைச் சமூக நீக்கம் செய்வதை நான் செய்ய மாட்டேன். அவர்களுடனான உறவின் தன்மையை மாற்றிக் கொள்வேன். ஆனால் தீண்டாமையைக் கொள்ள மாட்டேன். அப்படியான மனநிலைகளிலிருந்து மீளவே இலக்கியமும் கலைகளும் மனித மனங்களைப் பண்படுத்த விழைகிறது என நம்புபவன். நான் ஒரு கவிஞன். இலக்கியத்தை வாழ்வின் கருவியாகக் கொண்டவன்.
உங்களைப் போலவே உரையாடலில் நம்பிக்கை கொண்டவன். ஆகவே பெண்களின் என்று மட்டுமல்ல, எல்லாத் தரப்பினதும் குரல்களையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை இந்தத் தளத்தில் வெளியடவும் செய்வேன். அவை அவற்றுக்கான விளைவுகளை உருவாக்கட்டும். பிறந்து, ஈரங் காயாத நாய்க்குட்டிகள் தாமே தமது திசைகளை அறிவது போல்.

TAGS
Share This