குமாரதேவன் வாசகர் வட்டம்

குமாரதேவன் வாசகர் வட்டம்

டிசம்பர் 10, 1960 அன்று காரைநகரிலுள்ள கோவளத்தில் பிறந்த குமாரசாமி குமாரதேவன் நவம்பர் 15, 2019 இயற்கை எய்தினார்.

குமாரதேவனை ஒரு வாசகராக இந்தச் சமூகம் அறியும். இது பிறிதொருவருக்கு நம் காலத்தில் கிடைக்க அரிதாயிருந்த இடம். வாசிப்பவர்களில் அரைவாசிப் பேர் எழுத்தாளர்கள், மிச்சமிருக்கும் வாசகர்களும் பத்திரிகை வாசிப்பதோடு சரி. அதற்கு மிஞ்சிய இலக்கிய, சமூக வாசிப்பென்பது ஒன்றாகக் கலந்த முதிர்ந்த வாசகர்களைக் காண்பது அரிது. இந்த நாட்டின் கடந்த காலமென்பது படுகொலைகளும் வாதைகளும் நிரம்பியது, இழப்புக்களையும் அவநம்பிக்களையும் பலருக்கும் தந்துவிட்டுப் போயிருப்பது. ஆனால் இவ்வளவற்றையும் கடந்து வந்த ஒரு முதிய மனிதர், இறுதி யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில், வாசகத் தரப்பின் முதன்மையான குரல்களில் ஒன்றாகத் தன்னுடையதை மாற்றினார். தன்னுடைய இருப்பிற்காகவோ அடையாளத்திற்காகவோ தான் அவர் இதெல்லாம் செய்தாரா என்றால், இல்லவே இல்லை. அவர் அந்தச் செயற்பாடுகளில் முழு முற்றான மனதுடன் பொருந்தியிருந்தார். அதுவொரு வாழ்வு முறை. குமாரதேவன் நம் சமூக இருப்பிற்குள் நிகழ்ந்த நெகிழ்ச்சி.

யோசித்துப் பார்த்தால், பள்ளிக்கல்வியை இடையிலே விட்டவர். கல்வி என்பது அறிதல் என்பதை உணர்ந்தவர். தீரா அறியும் ஆர்வம் கொண்டவர். குடும்பப் பின்னணியால் வியாபாரத்திற்கும் வந்து, பின்னர் நாட்டின் கலவரங்களால் விரட்டியடிக்கப்பட்டு, முப்பத்தி ஐந்து வருடங்களாக சண்முகம் கடையில் இருந்து, வாழ்ந்து, தன்னுடைய இறுதிக்காலம் முழுவதையுமே அனைத்துத் தரப்பினருடனுமான இணைவிற்கும் கருத்தைப் பகிர்வதற்குமான வாய்ப்பிற்குமாக மாற்றிக் கொண்ட ஒருவர், அவர் யாருடன் இருக்கிறாரோ அவர்களுக்கெல்லாம் பலமாயிருக்கும் முதிர்ந்த ஆத்மா அவருடையது. அவர் வழிகாட்டி மட்டுமல்ல, அவர் ஒரு சக பயணியும் என்பதே இங்கு மிக முக்கியமானது, அவர் தன்னுடையதல்லாத பிற வெளிகளையும் இணைக்கும் சக்தியாக இருந்தார்.

வயது முதிர்ந்ததும் வீட்டில் ஓய்வாக இருப்பதோ, அல்லது பழைய காலங்களை இரை மீட்டிக்கொண்டிருக்கவோ, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லவோ அவர் முயலவில்லை. மாறாக அவர் நிகழ்காலத்திற்குரிய மனிதர். கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உரையாடலுக்குள் எடுத்து வருவார். அவருடனான உரையாடல்கள் எங்களை சமூகம் பற்றி வேறு கோணங்களில் இருந்து சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அவருடைய வாதங்கள் அடிப்படை நிறைந்தவை. அதை எதிர்ப்பதென்பது உழைத்தே செய்யப்பட வேண்டியது. அவர் எந்த வாதங்களினதும் நிலைப்பாடுகளினதும் உழைப்பை வலியுறுத்தியவர். ” நீங்கள் சும்மா சொல்லிப்போட்டுப் போகேலாது தானே” என்பார். சமூகத்தில் எந்த ஒன்றை முன் கொண்டு செல்வதற்கும் தேவையான அறிவுழைப்பை அவர் கொண்டிருந்தார். தெரியவில்லை என்றால் யாரிடமும் கேட்டு அறியத் தயங்க மாட்டார். மற்றவர்களை மதிப்பதென்பதை சடங்காகச் செய்பவரில்லை. அவரது உள்ளத்தின் இயல்பு அது. அது நம் காலத்தில் நாம் இழந்து கொண்டிருக்கும் முக்கியமான பண்புகளில் ஒன்று. புதிய தொழிநுட்பங்களும் இந்த வாழ்க்கை முறையும் பெருமளவில் மாறிவிட்டிருக்கின்ற சூழலில், ஒவ்வொரும் தனித் தனி ஆளாக மாறிக்கொண்டு வரும் போது, தனக்கென்ற தனி உலகில் மூழ்காமல் அதிலிருந்து மீண்டு கூட்டு வாழ்க்கையையும் சேர்ந்து செயலாற்றுவதையும் அவர் நம்பினார். அவர் தன்னுடைய இறுதிக்காலம் வரை ஒரு சமூக மனிதராகவே தன்னை நிறுத்திக் கொண்டார். இப்போதிருக்கின்ற காலச் சூழலில் வேறு சமூக அடையாளங்களுடன் ஒருவர் இந்த இடத்திற்கு வந்து சேர்வதற்கு பல வழிகள் இருக்கலாம். அவர் வாசிப்பின் வழியும் அறிதலின் வழியும் வந்து சேர்ந்திருக்கிறார். அதன் சமகால அடையாளமாக மாறியிருந்தார்.

குமாரதேவன் ஏன் வாசிக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக வாழ்ந்த ஒரு உதாரணம். அவருடைய இறுதிக்காலத்தில் முன்னெப்போதையை விடவும் அதிகமாக, பலரும் அவரின் அறிவைப் பகிர்ந்து கொள்ள அவருடன் உரையாட ஆரம்பித்திருந்தனர். ஆனால் அவர் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. அவரை நம் குழந்தைகள் அறிய வேண்டும். இப்படி ஒருவர் வாழ்ந்தார், நிரம்ப வாசித்தார். ஜனநாயக பூர்வமாக உரையாடினார், முதுமை என்பது உடலுக்குத் தான் என்பதை நிரூபித்தார். சிந்தனையில் சமகாலத்தில் வாழ்ந்தார். தான் கற்றதை அறிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேயிருந்தார். தான் நம்பியவற்றுக்காகச் செயலாற்றத் தயங்கவில்லை. அதற்காகத் தன்னுடைய நம்பிக்கைகளிலேயே அடைபட்டுக் கொண்டிருக்கவும் இல்லை. இப்படியாக, ஓர் நல்ல ஆசிரியருக்குரிய பண்புகள் அவரிடமிருந்து பரவிக்கொண்டேயிருந்தன. எப்படிக் கற்பது, கற்றதை எப்படிப் பயனுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்வது என்பதை அவர் எங்களுக்கு கற்பித்திருக்கிறார். அதை அவர் வாயால் சொல்லவில்லை. வாழ்ந்தே சொன்னார். அழுத்தும் தொனியிருக்காது குரலில், சுவாரசியம் குறையாது. தான் சொல்லும் சொற்களாகவே முழுதாக மாறி உடலும் உயிருமாக அவர் விபரிக்கும் கதைகள் சலிப்புத் தட்டுவதேயில்லை. அவரின் உடல்மொழி ஒரு நடனம் போலிருக்கும். அது உரையாடும் பெருவிருப்பின் நடனம்.

இப்பொழுது குமாரதேவனின் ஞாபகார்த்தமாக வாசகர் வட்டம் ஒன்றை தொடங்குகிறேன். குமாரதேவன் மட்டுமல்ல, யாரையும் நாம் ஏன் சமகாலத்தில் நினைவு கூரவோ, ஆவணப்படுத்தவோ, அடுத்த தலைமுறைக்குக் கடத்தவோ வேண்டுமென்றால், சுகுமாரனின், “சொல்லித் தந்ததோ கற்றுக் கொண்டதோ போல இல்லை வாழ்க்கை” என்ற கவிதை வரியைப் போல், அது புதிதாக, முற்றிலும் புதிதாக வாழ்க்கையை வாழ முடியும் என்பதை வாழ்ந்து நிரூபிக்கிறவர்களை நினைவு கூர்வதனூடாக அதற்கான சாத்தியத்தினை மற்றவர்களுடன் பகிர்கிறார்கள். அதன் மூலம் நம் சமூக அறங்களை ஒழுங்குபடுத்துகிறார்கள். விழுமியங்களை ஆழப்படுத்துகிறார்கள். அதன் மூலமாக எதிர்காலத்திற்கானவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள். குமாரதேவன் அப்படி ஆகிய ஒருவர்.
வாசிப்பிலிருந்து ஒருவர் சமூக மனிதராக மாறும் பாத்திரம் அது.

மனிதர்கள் தனித்தனி ஆட்களாகச் சுருங்கி கொண்டு போகும் காலத்தில் குமாரதேவன் சேர்ந்து பயணிக்க அழைக்கும் குரலாயிருக்கிறார். மனிதர்கள் கருத்துக்களால் துருவங்களாகும் போது உரையாடலாம் என்று நம்பிக்கையளிக்கிறார். அறிவையும் வாழ்வின் சமூக அடைவுகளையும் பணத்தின் மூலம் அளவிடும் ஒரு சமூகத்தில் அதற்கு மாற்றான வேறொரு வாழ்விருக்கிறது, அதற்கு மேலான கொண்டாட்டங்கள் மிச்சமிருக்கிறதென்பதன் அடையாளமாக அவர் இருக்கிறார். மனித சமூகம் இன்றளவும் வந்து சேர்ந்திருக்கும் எல்லா நன்மைகளின் வழியிலும் குமாரதேவன் போன்றவர்களின் பங்களிப்பும் பயணமும் இணைந்தே இருக்கிறது. அவர் ஒரு விடுபட்ட உயிரினம். தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் ஒரு நம்பிக்கை. நம் சமூகங்களிற்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பை நம் வாழ்வாக ஆக்கிக் கொள்வதும், தொடர்ந்து வாசிப்பதும் செயற்படுதலும் அவருக்கான நினைவு கூரலாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாசகர் வட்டத் தொடக்கமும் நினைவும் பகிர்வுகளும் தொடர்பான இவ் அழைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் உள்ளபடியே மகிழ்ச்சி.

TAGS
Share This