என்ர மயில்க் குஞ்சே!

என்ர மயில்க் குஞ்சே!

கம்பஹாவுக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள விளிம்பிலிருக்கும் வெலிசர வைத்தியசாலையில் தம்பிக்கு ஒரு சத்திரசிகிச்சைக்காக நிக்கேக்க தான் ‘விடுதலையில் கவிதை’ தொகுப்பின் கடைசிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தன். நல்ல விதானமான ஆஸ்பத்திரி. எங்கும் சிங்கள நோயாளர்களும் தாதிகளுமே அதிகம். தமிழ் அரிது. கட்டுரையை எழுதச் சரியான இடம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை தொடர்பிலான விமர்சனங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தன். ஒரு நாளில் பத்து மணித்தியாலத்துக்கு மேல போனைச் சார்ஜ் போட்டுப் போட்டு எழுதியபடியே இருந்தன்.

ஆயுத வழிமுறைக்கு மாற்று அஹிம்சை தான். ஆனால் அஹிம்சையை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை எப்படிப் பெரும்பான்மை மக்களிடம் உருவாகி வந்தது எண்டதை ஏற்கெனவே எழுதிக் கொண்டிருந்தன்.

(வெலிசர ஆஸ்பத்திரி நடைபாதை)

ஓம். அது திலீபன். திலீபனின் அவலச்சா உண்டாக்கிய மாபெரும் அவநம்பிக்கை அது. இண்டைக்கு அவரை அஹிம்சையின் தோல்விக் குறியீடா மாத்தி வைச்சிருக்கிற அரசியற் தரப்புகள் ஊதி வளர்க்கிற நெருப்பு. திலீபனிலிருந்து அஹிம்சை பற்றிய அடிப்படைகள் வளர்த்தெடுக்கப்பட வேணும். அவரை ஒரு விதையா எடுத்துக் கொள்ள வேணும்.

2004, சமாதான காலகட்டம், ஐஞ்சாம் வகுப்புப் படிச்சுக் கொண்டிருந்தன். யாழ்ப்பாணத்தில திலீபனுக்கு நினைவஞ்சலி, பொங்கு தமிழ், மாவீரர் தினம் எண்டு எல்லாம் நடந்து கொண்டிருந்த காலம். பள்ளிக்கூடத்தில திலீபனின் படத்திற்கு அஞ்சலி செய்ய வேணும் நாளைக்கு வீட்ட இருந்து பூக்கொண்டு வாங்கோ எண்டு சிஸ்ட்டர்மார் சொல்லிச்சினம். அது ஒரு கிறிஸ்தவப் பள்ளிக்கூடம். என்னை வீட்டுக்கும் பள்ளிக்கூடத்திற்கும் கொண்டு செல்ல ஒருவர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அந்த நேரம் அது ஒரு சிறு தொழிலாக இருந்தது. சைக்கிளின் பின்னால் ஒரு பலகை, அதில் ரெண்டு பேர், அவசரமெண்டால் மூண்டு பேர், முன் கரியரில ஒராள் எண்டு ஏத்தி இறக்குவினம். என்னையும் இன்னும் ரெண்டு பேரையும் ஏத்திகொண்டு போய் வாறவரை ஏத்துற மாமா எண்டு தான் கூப்பிடுவினம். அவரிட்டக் கேட்டேன், ஆர் திலீபன்?

திலீபன் இந்தியன் ஆமிக்கெதிரா உண்ணாவிரதமிருந்து செத்தவரடா. அவருக்குக் குடல் இல்லை. ஆட்டுக் குடல் தான் வைச்சுத் தைச்சிருந்தது. தண்ணியும் குடிக்காமல் இருந்து செத்தவரடா எண்டு சொல்லி நல்லூரைக் கடந்து போய்க்கொண்டிருக்கேக்க, உதில தான் பந்தல் இருந்தது எண்டு காட்டினார். உண்மையாவா, தண்ணியும் குடிக்காமலா எண்டு ரெண்டு தரம் கேட்டன். ஓமடா எண்டு சொல்லி என்னை வீட்ட கொண்டு போய் விட்டார். அடுத்த நாள் விடிய, வீட்டில நிண்ட பூக்கள், குரோட்டன் கண்டுகள் எண்டு வெட்டி எடுத்துப் பெரிய பையில போட்டுப் பள்ளிக் கூடம் போய்க் குடுத்தன். அது ஒரு வரலாற்றுக் கடமை போல. அந்தப் படத்திற்குப் பூ வைக்கேக்க மனசில இருந்த உணர்வு, திருப்தி இன்னும் ஞாபகமிருக்குது.

சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்த பிரச்சினைக்காக நாங்கள் தண்ணியும் குடிக்காமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போறம், எண்டு தேர்ந்தெடுத்த வழிமுறைக்குப் பின்னால இருந்தது திலீபன். நல்லூரடியில தான் அந்தப் போராட்டம் நடத்திறது எண்டதையும் அப்பிடித் தான் தீர்மானிச்சம். அந்த இடத்துக்கொரு வரலாற்று மதிப்பிருக்கு. கன போராட்டங்கள் அங்க நடக்குதெண்டு கோயில் நிர்வாகம் வேலியப் போட்டு, போராட்டம் பண்ணத் தடையெண்டு போர்ட்டும் போட்டிருக்கிற இந்தக் காலத்தில அஹிம்சையைப் பற்றி எழுதிக் கொண்டிருகிறன் இதை.

விடுதலையில் கவிதை தொகுப்புக்காக நிறைய வாசிச்சுக் கொண்டு இருந்தனான். அதனால ஏதாவது இடத்தில தரவுகளினாலையோ வரலாற்றில அந்த நிகழ்வுகள் உண்டாக்கின விளைவுகளினாலேயோ, அது நடக்கேக்க இருந்த மனநிலைகள விளங்கிக் கொள்ளேலாமல் போயிடுவனோ எண்டு நினைச்சிருக்கிறன். அந்த நேரங்களில மனச அமைதிக்குக் கொண்டு வர, கவிதையோ கதையோ எடுத்து வாசிப்பன்.

திலீபனின்ர உயிரை மதிக்கிற அதே நேரத்தில அது அஹிம்சை பற்றி உண்டாக்கியிருக்கிற மதிப்பீடுகள் எவ்வளவு எளிமையானது எண்டதப் பற்றி விரிவா எழுதினன். அவரது போராட்டம் அஹிம்சையின் அடிப்படைகளை விளங்கிக் கொண்ட ஒண்டு இல்லை. திலீபன் தன்னைத், தன்ர அளவை விடப் பெரிய ஆயுதமாக்கிக் கொண்டார் எண்ட வரியோட நிப்பாட்டிப் போட்டு யோசிச்சன்.

இவ்வளவு இருந்தும் சனத்துக்கு, ஏன் அவரில இத்தினை மதிப்பு, எனெண்டால், அப்பிடிச் சாகிறது ஒரு வாதை. மனித வரலாற்றில அது அரிதான ஒரு நிகழ்வு. இளவயசுச் சாவு வேற. நிறையப் பேர் அவற்ற சாவைப் பற்றிச் சொன்ன கதைகளை நினைக்க, நினைக்க உணர்ச்சிகள் எரிமலைக் குழம்பு மாதிரி மூளைக்குள்ள வழிஞ்சு கொண்டு இருந்திச்சு. நிப்பாட்டிப் போட்டு, ஷோபா சக்தி, திலீபன்ர வாழ்க்கைய மையமா வைச்சு எழுதின மெய்யெழுத்து கதைய வெலிசர ஆஸ்பத்திரி ICU வாசல்ல இருந்து வாசிச்சன்.

முன்னுக்கு ரெண்டு சிங்கள நேர்ஸ்மார் இருந்தவை. அதில ஒருத்தர் கொஞ்சம் தமிழ் கதைப்பா. முதல் தரம் ICU க்கு உள்ளப்போய்க் கதைக்கேக்க, ஒருத்தருக்கும் தமிழும் தெரியேல்ல இங்கிலிசும் விளங்கேல்ல, அந்த நேரம், இவாவத் தான் அங்க நிண்ட இன்னொரு நேர்ஸ் கூட்டிக் கொண்டு வந்தா. தமிழ் கதைக்க வெட்கப்பட்டுச் சிரிச்சா, மற்றாக்களும் ஏதோ சிங்களத்தில சொல்லி நக்கலடிச்சாங்கள். நான் வாசிக்கத் தொடங்கேக்க அவாவும் இன்னொரு நேர்சும் எனக்கு முன்னால இருந்து கதைச்சுக் கொண்டிருந்தினம்.

*

கதை, நான் படிச்ச யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில படிச்ச இராசையா பார்த்தீபன் எண்ட திலீபனின் பள்ளிக்கூடக் காலத்தில தொடங்குது. அந்தக் கட்டடங்கள், மரங்கள் எல்லாம் ஞாபகம் வந்திச்சு. திலீபனின்ர துருத்தின பல்லு, அடர்த்தியான தலைமயிர், கண்ணாடிக்குள்ளால தெரியிற அந்தக் கிறக்கமான கண்கள் அந்தப் பெடியன எட்டாம் வகுப்புக்காரனா கண்ணுக்க நிக்க வைச்சுது. விஞ்ஞான சேர் கண்காட்சிக்காக புதுசா ஏதாவது செய்யச் சொல்ல, பத்தாம் வகுப்புக்காரர் ஐடியா இல்லாமல் நிக்க, ராகுலனைப் போய் எட்டாம் வகுப்பில போய் பார்த்தீபனக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லி சேர் சொல்லுவார். வந்த பார்த்தீபன், மயில் எலும்புக் கூட்டை விளக்கங்களோட வைச்சு கண்காட்சியில செய்யலாம் எண்டு சொன்னான். அவனைக் கூட்டி வந்த, ராகுலனின் பார்வையில் கதை நடக்குது. ராகுலன் கொழும்பில இருந்து இங்க வந்திருக்கிற பெடியன். ஆள் கொஞ்சம் கட்டையான, குண்டுத் தோற்றமுள்ளவர்.

இந்தப் பகுதிய வாசிக்கேக்க, அதே பள்ளிக்கூடத்தில பாடம் கட் அடிக்க நானும் இன்னொரு பெடியனும் தவளைய உயிரோட பிடிச்சுத் தோலை உரிச்சு நாலு காலிலையும் குண்டூசி குத்தி இதயம் துடிக்கிறத விஞ்ஞானக் கண்காட்சியில வைச்சது ஞாபகம் வந்திச்சுது.

ஊரெழு முருகன் கோயிலுக்குப் பின்னால செத்துப்போய்த் தாட்டு வைச்ச மயிலின்ர எலும்புக்கூட்டைப் பார்த்தீபன், ராகுலனுக்கு எடுத்துக் குடுப்பான். பள்ளிக்கூடத்தில தயக்கமும் விலக்கமுமா நிண்ட பெடியன், செத்துப் போன மயிலின்ர எலும்புக் கூட்டைத் தாட்ட இடத்தில இருந்து தோண்டி எடுக்கேக்க, ஒரு கட்டளைத் தளபதி போல, நிக்கிறான் எண்டு ராகுலன் நினைப்பான். திரும்ப அந்தப் பள்ளத்தை மூடிப்போட்டு கோயிலுக்கு பின்னால இருந்து, நிலவு எறிச்ச அந்த நாளில பனங்கூடலுக்குள்ளால நடந்து வெளியே வருவினம். அதில இருந்து ரெண்டு பேரும் வேலும் மயிலும் போல நல்ல நண்பர்களாகிட்டினம்.

பிறகு திலீபன்ர உண்ணாவிரத நேரம் ராகுலன் போய்ப் பார்க்கிறார், அங்க கதைக்கேக்க ராகுலன் தான் சின்ன வயசில பார்த்த அந்த பதின்னாலு வயதுப் பார்த்தீபன் உடம்பு முழுக்க வெள்ளைத் துணி சுத்திச் செத்துக் கிடக்கப் போறத நினைச்சுப் பதைபதைக்கிறார். ராகுலனுக்கு அரசியலில பெரிசா ஆர்வமும் நம்பிக்கையும் இருக்கேல்ல. ஆயுத வழியில நம்பிக்கை இல்லை. அந்த உண்ணாவிரத மேடையில ரெண்டு, பேரும் கதைக்கேக்க ராகுலன் சொல்லுவார், “உனக்கு நான் புத்திமதி சொல்ல ஏலாது பார்த்தீ… உனக்கு எல்லாமே தெரியும். ஆண்டு அனுபவிச்சு பிள்ள குட்டியப் பெத்துப்போட்டுத்தான் காந்தி உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் எண்டு கிழட்டு வயசில வெளிக்கிட்டவர். அழிய வேண்டிய வயசே உனக்கு? நீ இருந்து செய்ய வேண்டிய போராட்ட வேலையள் இன்னும் கனக்கக் கிடக்கெல்லே…”

அதுக்குத் திலீபன், ‘மச்சான் போராடுறது என்ர வேலையில்ல. அது என்ர குணம்’ எண்டு சொல்லுறதா ஒரு வசனம் வரும்.

கொஞ்ச நாளில திலீபன் செத்துப் போனதும், மருத்துவ பீடத்துக்கு அவற்ற உடம்பு போய்ச் சேருது. ராகுலன் அங்க விரிவுரையாளரானதுக்குப் பின்னால, திலீபன்ர உடம்பைப் பாதுகாக்கிற வேலையையும் பொறுப்பெடுத்துச் செய்வார். அவற்ற மனைவி கர்ப்பமா இருக்கிற காலத்தில, திலீபனோட தன்ர நட்பைப் பற்றி எழுத வேணும் எண்டு நினைச்சு எழுதிக்கொண்டிருப்பார்.

95 யாழ்ப்பாணத்தில இருந்து சனம் வன்னிக்கு புலிகளால் இடம்பெயர கட்டாயப்படுத்தப்பட்ட போது, புலிகள் திலீபன்ர உடம்பை வன்னிக்குக் கொண்டு போகக் கேக்க, தரேலாது எண்டு சொல்லி ராகுலன் சண்டை பிடிப்பார். நாங்கள் திரும்ப யாழ்ப்பாணத்தைப் பிடிச்சதும் கொண்டு வந்து மருத்துவபீடத்துக்குத் தாறம் எண்டு புலிகள் சொல்ல, கிழிச்சியள் எண்டு ராகுலன் மனதுக்கை நினைப்பார்.

பிறகு திலீபன்ர உடம்போட, மனைவிய விட்டுட்டு, ராகுலனும் வன்னிக்குப் போவார், அங்க திலீபன்ர உடம்பை ஓர் அற்புதச் செடியைப் போல் பேணினார். சண்டை முடியிற கட்டம், நந்திக்கடல் வரைக்கும் போறார். அங்க தொடந்து அந்த உடம்பைக் காப்பாத்தேலாமல் போக, மரியாதையோட முள்ளிவாய்க்காலில புதைப்பினம்.

பிறகு, தடுப்பு முகாமில ராணுவ அதிகாரி ஒருத்தன், ராகுலனை விசேரிக்கேக்க திலீபனைப் புதைச்சதப் பற்றிச் சொல்லிப்போடுவார். ஆமிக்காரங்கள் அவரைத் தாட்ட இடத்தைக் காட்டச் சொல்லிக் கேக்க. குத்துமதிப்பா, முள்ளிவாய்க்காலில ஏதாவதொரு இடத்தைக் காட்டுவம் அங்க எள்ளு விதைச்சது போல பொடிகள் கிடக்கும் எண்டு நினைச்சு வெளிக்கிடுவார். ஒரு இடத்தைக் காட்டுவார். அங்க ரெண்டு அடி தோண்ட கொஞ்ச எலும்புகள் கிடைக்கும், அவை ராணுவத்தின் வெற்றிச் சின்னத்தில மின்னப் போற நட்சத்திரங்கள். இவ்வளவு காலம் பதப்படுத்தி வைச்சிருந்ததால அந்த எலும்புகள் தேய்ஞ்சு போய்க் கிடக்கு எண்டு ஆமிக்காரனொருத்தன் மேலிடத்துக் எடுத்துச் சொல்ல, அந்த எலும்புகளப் பார்த்து அது என்னெண்டு கண்டுபிடிச்ச ராகுலன், தன்ர பெரிய உடம்ப மணலில இருத்தி, மணலை அள்ளித் தலையில போட்டுக் கொண்டு குழறி அழத் தொடங்கினதாக் கதை முடியும்.

அந்தத் தேய்ஞ்ச சின்ன எலும்புக்கூடுகள், ஒரு மயிலின்ர சிதைஞ்ச எலும்புகள்.

வாசிச்சு முடிய முன்னுக்கிருந்த நேர்ஸ்மார் என்னைப் பார்த்துக் கையக் காட்டினத உணர நிமிர்ந்து பார்த்தன். தொண்டைக்குள்ள உப்பு நனைஞ்சு ஏறிவர. அவங்கட முகம் கொஞ்சமும் தெரியாத அளவுக்கு கண் நிரம்பி ஓடி விழுந்து கொண்டிருந்திச்சுது.

என்ர மயில்க் குஞ்சே!

மெய்யெழுத்து கதைக்கான இணைப்பு:

மெய்யெழுத்து

TAGS
Share This