டக் டிக் டோஸ்

டக் டிக் டோஸ்

ஈழத்தில் சுயாதீன சினிமாக் கனவுடன் இளைஞர்கள் உருவாக ஆரம்பித்த காலங்களில் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். 2012 காலகட்டமது. யுத்தம் முடிவடைந்த பின் அதன் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் குறும்பட உருவாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எனது பள்ளிக்கூடத்திலிருந்தும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். AAA movies என்ற நிறுவனம், அப்போது பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மறைந்த இயக்குனர் கேசவராஜா அதனை உருவாக்கி இயக்கினார். அப்பொழுது தான் அப்படத்தின் உதவி இயக்குனர்களாக இருந்த ஷமிதன் மற்றும் சிவராஜ் அறிமுகமானார்கள். பிறகு அப்படம் தடைப்பட்டு, கேசவராஜாவே பின்னர் அப்படத்தை வெளியிட்டார்.

இந்தியாவில் விசுவல் கம்யூனிகேசன் படித்து விட்டு யாழ்ப்பாணத்தில் இருந்த சிவராஜ் எனது ஊர்க்காரர். திருநெல்வேலியில் எனது வீட்டிலிருந்து அரைக்கிலோமீட்டரில் அவரது வீடு. பழகுவதற்குப் பண்பும் இனிமையும் வேடிக்கையும் கொண்டவர். நான், ஒளிப்படக் கலைஞர் சாயி சங்கர், உமாகரன் போன்றோர் ஒரே தரத்தில் படித்து வந்தவர்கள். நானும் எனது நண்பர்களும் அந்தத் திரைப்பட சூட்டிங்குக்குச் செல்வது அந்த நிறுவனம் நடாத்திய குறும்பட விழாக்களுக்குச் செல்வது என்று அந்தச் சூழலில் சுற்றிக் கொண்டிருப்போம்.

சிவராஜ் தனது கனவுகளுக்காகக் கடுமையாக உழைப்பவர். தனக்கு என்ன தெரியும் என்பதைத் திட்டவட்டமாக வரையறுப்பவர். தானறியாத வாழ்வனுபவங்களைத் திரைப்படமாக்குவதில் அதிக காலம் எடுத்துக்கொண்டு அவதானிப்புகளூடாக அதைச் செம்மைப்படுத்தி மேம்படுத்துபவர். கூட்டு உழைப்புகளின் கலையாகிய சினிமாவை அந்த நம்பிக்கையுடனேயே கையாள்பவர். அவருடைய ஒவ்வொரு சினிமாவும் சமூகப் பிரச்சினைகளிலிருந்து ஒன்றைத் தெரிந்தெடுத்து அதைச் சுற்றிப் பின்னப்படும் வாழ்க்கைகளின் மனோநிலைகளை உரையாடும் தன்மை வாய்ந்தவை. வெகுசன உரையாடலை மையமாகக் கொண்டவை. கலைத் திரைப்படங்களுக்கும் வெகுசனத் திரைப்படங்களுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசம் ரசனை சார்ந்த புழங்கு மொழியை மாற்றுவது. கலைத்திரைப்படங்கள் ஏற்கெனவே உள்ள சினிமா மொழியை அதன் பார்க்கும் தன்மையை மாற்றியமைக்கும் வகையிலானவை. வெகுசன சினிமா, ஏற்கெனவே உள்ள மொழியில் தான் சொல்ல வரும் சிக்கலைப் பொருத்தி உரையாடுவது.

எனது ஞாபகத்திலிருந்து ஹர்த்தால் என்ற குறும்படம் சிவராஜின் முக்கியமான தொடக்கம். அரசியற் போராட்ட வடிவங்களில் ஒன்றாகக் கருதப்பட்டு நடாத்தப்படும் ஹர்த்தால்களில் தினக் கூலிகள், அன்றாடத் தொழிலாளர்கள் வாழ்க்கை எவ்விதம் பாதிக்கப்படுகின்றது என்பதை வடிவ நேர்த்தியுடன் முன் வைத்த படம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் ஒரு நாளின் சில நொடிகளை அவர் காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களை சலனப்படுத்தி எதிர்நிற்கும் அம்மனிதரின் வாழ்வுடன் உரையாடலை உண்டாக்கக் கூடியது.

பை என்ற இன்னொரு குறும் படம், போதையில் இருக்கும் இரு இளைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையுடனும் சமூக கரிசனத்துடனும் காட்சிப்படுத்திய ஒரு படம். அதில் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்ட சுலக்‌ஷன் ஒரு காதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர், அல்சர். இப்படிக் குறும்படங்களுடன் சென்றவரின் கனவு முழு நீளத் திரைப்படங்களே.

இசையமைப்பாளர் மதீசன், சிவராஜின் சிறு வயது ஊர் நண்பரான சபில் எனப் பலரையும் கொண்ட அணியென அவர் தனக்கான நண்பர்களைச் சேகரித்துப் படிப்படியாக முன்னேறினார்.

இடையில் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஒயில் கலந்தமை தொடர்பான பிரச்சினைக்காக விதை குழுமம் சார்பில் அப்பிரச்சினைக்கான கவனத்தை உண்டாக்கும் வகையில் சிறு காணொலி ஒன்றை எடுத்திருந்தோம். அதனை சிவராஜே எண்ணக்கருவை உருவாக்கி, ஒளிப்பதிவு செய்து எடிட் செய்து தந்திருந்தார். அதற்குப் பணம் கேட்பவரில்லை அவர். அவரது சமூக அக்கறையிலிருந்தும் நட்பிற்காகவும் அதனைச் செய்து தந்தார்.

(சிவராஜ்)

அவரது புத்தி கெட்ட மனிதரெல்லாம் என்ற திரைப்படம் ராகிங்கினால் நிகழும் உளவியல் வன்முறைகளை ஒரு பேய்ப்படமாக, நகைச்சுவையும் உணர்வும் கலந்து வெளிப்படுத்திய முக்கியமான வெகுசனப் படம். ஈழத்து வெகுசன சினிமாவில் அதுவோர் முக்கிய அடைவு. பெரும்பாலும் ஈழத்தில் வருகின்ற சினிமாக்கள் பெண்களை, உளவியல் வன்முறைகளைச் சித்தரிக்கும் போக்கிலிருந்து சிவராஜின் திரைப்படங்கள் மாறுபடுபவை. அப்பிரச்சினைகள் குறித்த பார்வை கொண்டவர். எப்படி ஒரு பிரச்சினையை சித்தரிக்க வேண்டுமென்பதில் அவரது அக்கறை பெரும்பாலானவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. இன்னுமொரு முக்கிய அம்சம், ஈழத்தின் பிரச்சினைகளைப் பேசுவதாகச் சொல்லி கொண்டு இருக்கின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே படத்தில் தீர்வைக் கொடுக்க விரும்பும் படங்களிலிருந்து மாறாக, ஒரு சினிமாவுக்கு உண்டான கதையம்ச அளவு, அதில் கரிசனை கொள்ளப்படும் ஒரு முக்கிய சிக்கல் என்று தெரிந்தெடுத்து, அதைச் சுற்றிக் கதையை உருவாக்கும் தன்மை.

இடையில் வேறு குறும்படங்கள், முழு நீளத் திரைப்படங்களுக்கான முயற்சிகளில் இருந்தவர், தற்போது டக், டிக், டோஸ் என்ற திரைப்படத்தை மார்ச் 8, மகளிர் தினத்தன்று வெளியிட இருக்கிறார். அது அவரதும் அவரது நண்பர்களதும் தொடர்ச்சியான கூட்டு உழைப்பினைக் கொண்டது.

இசையமைப்பாளர் மதீசன், சுயாதீன இசையாகவும் திரைப்படங்களுக்கான இசையாகவும் தொழில் முறையில் அதனை வெற்றிகரமாக ஆக்கிக் கொண்டு முன் செல்பவர். சமூக அக்கறை கொண்டவர். வாழ்வியலை இசைப்பவர். அவரது இசையும் சிவராஜுடனான நட்பும் ஒவ்வொரு படத்திலும் மெருகேறி வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மதீசனது உள்ளூர்த்தன்மையும் திரையிசையில் அவர் கையாளும் ஒலிகளும் வளர்ந்து வரும் அவர் போன்றோருக்கு முன் மாதிரியானவை.

சபில் என்ற நடிகரும் எங்களூரைச் சேர்ந்தவர். சிவராஜின் நண்பர், அவரது நகைச்சுவையுணர்வும் பாத்திர வெளிப்பாடும் ஒவ்வொரு படத்திற்கும் அவர்களது நகைச்சுவைக் காணொலிகளுக்கும் ஒவ்வொன்றாக முன்னேறி வருபவை. புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தில் அவரது entryயுடன் திரையரங்கில் சிரிப்பலைகள் இயல்பாக எழுந்து நிறந்தது. ஒரு சிறந்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரின் வருகையது. சபில் வெகுசன ஏற்பை அவரது இயல்பான உடல்மொழியாலும் பேச்சினாலும் உருவாக்கி வருகிறார்.

பிற நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது உழைப்பினாலும் அர்ப்பணிப்பினாலும் அவர்களது கூட்டுக் கனவை வெற்றி கொள்வார்கள் என்று நம்புகிறேன். எந்தத் தயக்கமுமில்லாமல் குடும்பத்துடன் சென்று கொண்டாடக் கூடிய சினிமாவை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள், மார்ச் 8, மகளிர் தினத்தில் வெளியாகப் போகும் டக், டிக், டோஸ் வெகுசனக் கலையாகவும் வணிக ரீதியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

TAGS
Share This