சுரண்டலெனும் கலை

சுரண்டலெனும் கலை

(இக் குறிப்பு முகநூலில் சிவா மாலதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தளத்தில் வெளியாகிய எனது புனைவுக்கு வந்த வாசகர் கடிதமொன்றினை அடிப்படையாக வைத்தே இக் கேள்விகள் அமைந்துள்ளன. அவ்வாசகரின் பெயரை அவரது அனுமதியின்றி முகநூலில் பயன்படுத்துவது தவறானது. எனக்கு வரும் கடிதங்களில் ஒருவர் பெயரைப் பயன்படுத்துவதன் முன் அவரின் அனுமதியைக் கேட்பதுண்டு. அவ்வாறு இல்லையென்றால் மாற்றுப்பெயரைப் பயன்படுத்துவதுண்டு. இணையத் தளத்தில் உள்ள வாசக உரையாடலுக்கும் முகநூலுக்கும் இடையில் நெறிமுறை வித்தியாசங்கள் உண்டு. மேலும், அக்குறிப்பில் உள்ள கேள்விகள் நேரடியாகவே ஒருவரால் இன்னொருவரது கேள்விகளின் துணையின்றிக் கேட்கப்படக் கூடியவை. எனது தளத்தில் அவரது பெயரை இக்குறிப்பில் பாவிப்பதற்கு அவர் உடன்படவில்லை. ஆகவே பெயரை ‘அவர்’ என்பதாகச் சுட்டியிருக்கிறேன். ஒரு பாலியல் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்த நிலையிலும் குற்றவாளி என்று அவ்வமைப்பினால் உறுதியாக அறிக்கை வெளியிடப்படாத ஒருவரின் பெயரையும் இங்கு பயன்படுத்தவில்லை.

மின்னஞ்சல் மூலம் இக்குறிப்பினை அனுப்பிவைக்க சிவாமாலதியின் முகநூல் கருத்துப்பெட்டியில் கேட்டிருந்தேன். அவர் அதனை முகநூல் குறிப்பாக பகிர்ந்து விட்டு, மின்னஞ்சலை அனுப்ப மறுத்துவிட்டார். ஆகவே அவரது முகநூலில் இருந்தே இக்குறிப்பு பயன்படுத்தப்படுகிறது. இக் குறிப்புத் தொடர்பிலோ இதற்காக வெளிவருகின்ற எனது பதில் தொடர்பிலோ அல்லது வேறு எந்த உரையாடல்கள் தொடர்பிலுமோ எனது இணையத்தளத்தில் மட்டுமே பதிலளிப்பேன். Kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலிற்கு அபிப்பிராயங்களை அனுப்பி வைக்கலாம். எனது நெறிமுறைகளுக்கு உட்பட்டு அவற்றை வெளியிடுவேன். முகநூலிலோ அல்லது வேறு சமூக வலைத்தளங்களிலோ பாலியல் சார்ந்த சிக்கல்களை இனி நான் உரையாடப் போவதில்லை)

*

சுரண்டல்வாதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் கிரிசாந்

கிரிசாந்தின் பிரியத்துக்குரிய பெண்ணுக்கு எனும் புனைவை முன்வைத்து ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கான(அக்கேள்விகளை நான் புரிந்துகொண்டதன்படி) கிரிசாந்தின் பதில் தொடர்பில் :

கேள்வி

“வணக்கம்,

உங்களுடைய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற புனைவில் இருந்து சில கேள்விகள் எனக்கு,
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் இருக்க முடியும் என்ற விடயத்தை பலரும் விவாதித்து வருகின்ற வேளையில் அதை அடிப்படையாக வைத்து பல பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குவதும் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சம்மந்தப்பட்ட எவரும் அவற்றை பொதுவெளியில் விவாதிக்கவோ பொறுப்புக்கூறவோ தயாராக இல்லை. இவை வெறும் கதைகளாகவும் கொசிப்பாகவுமே வெளிவருகின்றன இது பற்றிய உங்களுடைய நிலைப்பாடு என்ன?

இப்படியான ஒடுக்கு முறைகளை நிகழ்த்திக் கொண்டு, சமூகத்தில் இருக்கின்ற ஏனைய ஒடுக்குமுறைகளை கேள்வி கேட்பது என்ன வகையான நிலைப்பாடு?

இதில் இருக்கின்ற இரட்டை நிலைப்பாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அல்லது ஒரு சமூகமாக நாங்கள் ஏதாவது உத்திகளைக் கையாள முடியுமா?
பெண்கள் இதனை முன்னெடுக்க முடியாத போது அவற்றை கலந்துரையாடுவதற்கான தளத்தை எவ்வாறு ஏற்படுத்திக் கொடுக்கலாம்?

சிலர் அதை ஒடுக்குமுறை என்று தெரிந்தும் கடந்து போகிறார்கள், சிலர் அவற்றை பேச முடியாமல் இருக்கின்ற நிலைமைகளும் இருக்கின்றன. பாடசாலை தொடங்கி பல்கலைக்கழகம் வரைக்கும் பெண்களின் குரல்கள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இதற்கான மாற்றுவழியை நாங்கள் எவ்வாறு கண்டடைவது?

ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களால் நிகழ்த்தப்படுகின்ற ஒடுக்குமுறைகளை எந்தத் தட்டில் வைத்து விளங்கிக் கொள்வது?

(வாசகர் கடிதம் 02)”

//பாலியல் சுதந்திரமும் அதன் வரையறைகளும் வரலாறு நெடுகிலும் மாறி வந்துகொண்டேயிருப்பது. காமத்தை ஒழுங்குபடுத்துதலின் வரலாற்றின் ஊடகவே ஒருவர் மானுட வரலாற்றின் படிநிலை மாற்றத்தை உளவியல் மாற்றத்தை விளங்கிக் கொள்ள முடியும். History of sexuality என்ற பூக்கோவின் நூல் மேற்குலகின் பாலியல் பற்றிய ஒடுக்குமுறை பற்றி விரிவாகப் பேசும் ஒரு நூல். அதே போல் கீழைத்தேய நாடுகளின் பாலியல் மதம், பண்பாடு, சாதி, வர்க்கம், மொழி ஆகியனவும் பல்வேறு நுண்ணலகுகளால் வேறுபடுபவை. எல்லோரும் உடலுறவே கொண்டாலும், காமம் பற்றிய கற்பனைகள் மற்றும் வரலாறுகள் வேறுபாடானவை.//

அன்புள்ள கிரிசாந், முதலில் கேள்விகளை ஒன்றிற்குப் பல தடவை தெளிவாக வாசியுங்கள். அவரின் கேள்விகளை உங்கள் அறிவாதிக்கத்தினைப் பயன்படுத்தி மடைமாற்றம் செய்ய முயற்சிக்காதீர்கள்.

கேள்விகள் பாலியல் சுதந்திரம், அதன் வரையறை தொடர்பான ஒடுக்குமுறைகளைப் பற்றியதல்ல. மாறாக, அது சமூகத்தில் ஏதோவோர் தளத்தில் செயற்பாட்டாளர்களாக தம்மை முன்னிறுத்துபவர்கள் மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகள் பற்றியது. இதுதொடர்பான உரையாடலென்பது உரிமைகளின் அடிப்படையான பொறுப்புணர்ச்சி, அதிகார உறவுகளின் அடிப்படையான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றினை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

இங்கு பல காதலென்பதை அவர் பிரச்சனையாக முன்வைக்கவில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அக்காதல்களின் பெயரால் நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்களையே அவர் பிரச்சனையாக முன்வைக்கின்றார். இக்கேள்வியினை பொறுப்புக்கூறல், பொறுப்புணர்ச்சி, வெளிப்படைத்தன்மை என்பவற்றின் அடிப்படையிலும் செயற்பாட்டாளர்களின் சுரண்டலுடன் தொடர்புபடுத்தியும் அணுகுவதைத் தவிர்த்து வெறும் பாலியல் ஒடுக்குமுறை தொடர்பான கேள்விகளாகத் திட்டமிட்டே திசை திருப்புவதோடு ஒடுக்குமுறையினை மேற்கொள்பவர்களாக கேள்வியில் கூறுபவர்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்தவும் பாடுபடுகின்றீர்கள்.

அவரின் கேள்விகள் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சமூக ஒடுக்குமறைகளைப் பற்றியதல்ல என்பது உங்களுக்கும் தெரிந்திருந்தும் அடுத்த பந்தியிலும் இத்தகைய திரிபுபடுத்தப்பட்ட பதில்களையே தொடர்கின்றீர்கள்.

நீங்கள் உங்கள் கட்டுரையின் ஆரம்பத்திலேயே பூக்கோவின் (Michel Foucault) The history of sexuality இனை மேற்குலகில் பாலியல் ஒடுக்முறை தொடர்பில் விரிவாகப் பேசும் நூலாகக் குறிப்பிடுகின்றீர்கள். தனது நூலின் பாகம் ஒன்றில் கடந்த முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பாலியல்பின் வரலாறென்பது அடக்குமுறையின் வரலாறு என்பதையும் அக்கருத்தியல் அக்கால அறநெறிகளைப் புறந்தள்ளுகையில் மீண்டும் இயல்பான, இயற்கையான பாலியல்பிற்கு மீளலாம் என்பதனையும் நிராகரிக்கும் பூக்கோ மாறாக, பாலியல்பு எனும் சொல்லாடல் எவ்வாறு தோற்றம் பெறுகின்றது, அதனூடாக நவீன உலகில் பாலியல்புகள் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் விரிவாக ஆராய்வதுடன் பாலியல்பு சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதென (Social construct) கூறுகின்றார். அதனூடாக, மனிதர்களை பாலியல்பின் அடிப்படையில் வகைப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், கட்டுப்படுத்துதல் என்பன தொடர்பிலும் எழுதியிருக்கின்றார். உண்மையில் பூக்கோவின் ஆய்வுகள் நவீன உலகில் அதிகாரம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது தொடக்கம் பாலியல்பு வரை பலவற்றினை அறிந்துகொள்ள உதவினாலும் பூக்;கோவின் எழுத்துகளையும் பிற அறிஞர்களையும் தத்துவங்களையும் கருத்தியல்களையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுவதுபோலவே அணுகவேண்டும்.

//பாலியல் சுதந்திரம் தமிழ்ச் சமூகத்தில் எத்தகைய பின்னணியைக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு காலத்திலும் அது எவ்விதம் மாறி வருகிறது. காதல் என்பதை எவ்விதம் அதன் பண்பாட்டு மனங்கள் விளங்கிக் கொண்டிருக்கிறது என்பவை குறித்து விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். அதே நேரம் காமத்தை ஒழுங்குபடுத்தும் செயல்வழியே தான் இன்றைய குடும்ப அமைப்பை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்தனுக்கு ஒருவன் அல்லது ஒருத்தனுக்கு ஒருத்தி, இந்த இருவர் இணைந்து உருவாக்கும் ஓருடலே உறவு என பெரும்போக்கான புரிதல் உள்ளது. வரலாறெங்கும் இதற்கு மாற்றான கூட்டுப் பாலியல் உறவுகள், பலதார மணங்கள் இருந்தே வருகின்றன.//

நீங்கள் கேள்விகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டிப்பீர்கள் எனக்கருதி உங்கள் பதிலினை வாசித்தால் நீங்களோ பொறுப்புணர்ச்சியற்ற, வெளிப்படைத்தன்மையற்ற, பொறுப்புக்கூறலற்ற முறையில் பதிலிறுத்திருக்கிறீர்கள். ஒருவரின் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியும் ஏமாற்றியும் நிகழ்த்தப்படும்போது அதனைக் கேள்விக்குட்படுத்துவதைவிடுத்து அத்தகைய பாலியல் வக்கிரத்தையும் பாலியல் சுதந்திரத்தின் பெயரில் தமிழ்ச் சமூகம் உள்ளீர்த்து தங்களை மாற்றத்திற்குட்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ என்ற சமூகப் பொதுப்புத்தியின் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட காதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவுள்ள நிலைப்பாடு தொடர்பிலேயே நீங்கள் பேசுகிறீர்கள் என்பது இங்கு தெளிவாகின்றது. பாலியல் சுதந்திரத்தின் வடிவங்களாக இருக்கக்கூடிய கூட்டுப்பாலியல் உறவுகளோ பலதார மணங்களோ வரலாறு முழுவதும் இருந்துவரலாம். ஆனால் கேள்விகள் தெளிவாக அவை சார்ந்தவையல்ல. சுரண்டலுக்கு எதிராக அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் பாலியல் சுதந்திரத்தின் வடிவங்களான பல காதல், கூட்டுப் பாலியல் உறவுகள், பலதாரமணங்கள் சார்ந்த உறவுகளில் ஈடுபடுபவர்களின் சுதந்திரத்துடன் மட்டுமே தொடர்புபட்ட விடயங்களாக முன்வைப்பதோடு அவற்றை ஆதரித்து வாதிடுவதற்கும் முன்னுரிமையளிக்கின்றீர்கள். ஆக, ஒடுக்குமுறைகளைப் பற்றி, குறிப்பாக, பெண்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் அக்கறையற்ற நிலைப்பாட்டினை தெளிவாக வெளிப்படுத்துகிறீர்கள் அல்லது அது தொடர்பில் பேசுவதனை வேண்டுமென்றே தவிர்க்கின்றீர்கள். இவ்வாறாக வெளிப்படுத்துவதனூடாக அவ்வொடுக்முறைகளையும் பாலியல் சுரண்டலையும் மேற்கொள்வதென்பது வெறுமனே பாலியல் சுதந்திரம் சார்ந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றீர்கள்.

//ஆனால் முற்காலத்தில் ஆண்களே அதிகளவிலான அதிகாரத்தை பெண் உடல்கள் தொடர்பிலும் அவர்களது பாலியல் தேர்வு குறித்தும் வரையறுக்கும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டிருந்தனர். இதிலிருந்து மாற்றான பார்வைகள், சமத்துவம் ஆகியன உள் நுழையும் போது, பெண்களும் தம்முடலை, பாலியல் சுதந்திரத்தை வரையறுக்கவும் விரிவுபடுத்தவும் செய்தார்கள், செய்கிறார்கள்.//

தற்போதும் எமது சமூகங்களில் பெரும்பாலும் ஆண்களே பெண் உடல்கள், அவர்களது பாலியற் தேர்வு என்பன குறித்து வரையறுக்கும், கட்டுப்படுத்தும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைக் கவனத்திற் கொள்ளவும். மாற்றுப் பார்வைகள், சமத்துவம் ஆகியன உள்நுழைவதனூடாக தம்முடலை, தமது பாலியல் சுதந்திரத்தை வறையறுத்து விரிவுபடுத்தும் போக்கு சில பெண்களுக்கு அவர்களின் சுயதெரிவாக வாய்த்திருக்கின்றது. ஆனால் கேள்விகள் சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் கேள்விக்குட்படுத்துவர்களே கட்டற்ற பாலியல் சுதந்திரத்தினை பெண்விடுதலையின் ஓர் அம்சமாக தந்திரமாக பரிந்துரைசெய்தும் மூளைச்சலவைசெய்தும் பாலியற் சுரண்டலில் ஈடுபடுவது பற்றியதாகும். ஆண், பெண்ணுக்கிடையில் அதிகார ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில், பெண்களை பாலியல் பண்டமாகப் பார்க்கும் சமூகத்தில் சாதாரண ஆண்களிடம் எச்சரிக்கையுணர்வுடனும், பாதுகாப்புசார் முன்னாயத்தங்களுடனும் அணுகும் பெண்களை தமது போலியான பாதுகாப்புணர்வினை வெளிப்படுத்தி அவ்வெச்சரிக்கையுணர்வையும்; பாதுகாப்புசார் முன்னாயத்தங்களையும் நிர்மூலமாக்கி வஞ்சித்து பாலியல் சுரண்டல்களிலீடுபடுவது மலினமாகியுள்ளதையும் நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. தமது பாலியல் தேவைகளுக்கான பெண்கள் கிடைப்பனவை அதிகரிப்பதற்கான நவீன உத்தியாகவும் பெண்ணுடல், பெண்சுதந்திரம், பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் போன்ற சொல்லாடல்கள் கருவிகளாக்கப்பட்டுவருவது தொடர்பில் நீங்கள் அறிந்திராவிட்டால் தயவுசெய்து உங்கள் ஆண்மைய மனநிலையிலிருந்து சற்றுக் கண்முழித்து சுற்றிவரப்பாருங்கள். Psychopath, Sociopath, Narcissistic abuse போன்றவை தொடர்பிலும் தேடல்களை மேற்கொள்ளுங்கள். அதற்குரிய புத்தகங்களை வாசித்தறியுங்கள். அதனை முன்முடிவுகளுடனும் எவ்வாறு நம்பத்தக்க விதத்தில் திரிவுபடுத்தி குற்றமிழப்பவர்களைப் பாதுகாக்கலாம் என்பதனை மையப்படுத்தியும் மேற்கொள்ளாமல் திறந்த மனதுடன் செய்யுங்கள்.

மேற்கத்தைய நாடுகளிலும் இந்த நிலையில் பாரிய மாற்றங்களெவையுமில்லை. இது தொடர்பான உரையாடல்கள் அங்கும் நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறானதோர் ஆரோக்கியமான உரையாடலுக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளை பாதிப்பேற்படுத்துபவர்களை பாதிப்பிற்குட்படுபவர்களாக நிறுவுவதற்குப் பயன்படுத்துகின்றீர்கள். இதற்குப் பின்னுள்ள தன்னலம், உள்நோக்கம் என்ன? இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் சுரண்டல் நவீனமுறையில் மிகவும் நுட்பமாக – பாதிக்கப்படும் பெண்களுக்கே பல சந்தர்ப்பங்களில் தாம் சுரண்டப்படுகின்றோம், ஒடுக்கப்படுகின்றோம் என்பது தெரியாதளவிற்கு நுட்பமாக – மேற்கொள்ளப்படுமொன்றாக மாறியுள்ளது என்பது தொடர்பிலும் நீங்கள் வாசித்தறிவது நல்லது.
ஆக, பெண்சுதந்திரம், பெண்விடுதலை போன்றவை ஆண்களால் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் குறிப்பாக செயற்பாட்டாளர்களாக இருக்கக்கூடிய ஆண்கள் அதனை முன்வைக்கையில் அதனை சந்தேகத்துடன் நோக்குவதற்கும் அதில் அவர்களுக்கு இருக்கக்கூடிய தன்னலம் சார்ந்து சிந்திப்பதற்குப் பெண்களைப் பழக்கப்படுத்துவதும் காலத்தின் தேவை கருதி எச்சரிக்கை செய்வதும் தேவையானவையாக உள்ளன.

//காமம் மனிதர்களின் ஆதார உணர்ச்சிகளில் ஒன்று, அதே நேரம் விலங்குத் தன்மை கொண்டதும். அதை வரையறுக்க வேண்டும். ஆனால் அதைச் செய்வது எப்படி, குழந்தைகள், 18 வயதிற்குக் கீழ்ப்பட்டோர், அவர்களுக்கு விருப்பமே இருந்தாலும் இன்னொருவருடன் உடலுறவு கொள்வது சட்டப்படி குற்றம்.//

காமம் விலங்குத்தன்மை கொண்டது? என்ன சொல்ல வருகின்றீர்கள் கிரிசாந்? மனிதத்தன்மையுடன் காமத்திலீடுபடமுடியாததாக இருப்பதென்பது இயல்பாய் வருவதென்றும் அதனை அடிப்படையிலேயே மனிதத்தன்மைகொண்ட ஒரு உணர்வாகக் கருதமுடியாதெனவும் கூறுகின்றீர்களா? ஆண்களின் மனப்பிறழ்வுசார் விடயங்களைப்பற்றிப் பேசாமல் உணர்வுகளை மனிதத்தன்மையிலிருந்து மிருகத்தன்மைக்குரியதாகவும் அவ்வாறிருப்பதென்பது இயல்பானது என்பதாகவும் வரைவிலக்கணப்படுத்தி அதனை சமூகத்தின் பொதுப்புத்தியில் விதைப்பதன் காரணம் என்ன? அதாவது காமத்தில் மனிதத்தன்மையினை எதிர்பார்க்க முடியாது ஏனென்றால் அது இயல்பிலேயே விலங்குத்தன்மை கொண்டது எனக்கூறுவதன்மூலம் பெண்களை பாலியல் சுரண்டலுக்குட்படுத்தும் – உங்கள் மொழியில் வேட்டை விலங்குகளை – பொறுப்புக்கூறலிலிருந்து இயல்பாகவே தப்பித்துக்கொள்ளச் செய்வதற்கான சமூகப் பண்படுத்தலினை மேற்கொள்கின்றீர்கள்.
அத்தகைய விலங்குத்தன்மையினைக் கொண்டிருப்பதால் அதை நாம் வரையறுக்கவேண்டும் என்கிறீர்கள். இவ்வாறான வரையறைகளுக்கு அடிப்படையாக இருக்கவேண்டியவை எவை எனக் கூறமுடியுமா? இவை முன்னரே வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு தளங்களிலும் வடிவங்களிலும் பெரும்பாலும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மனிதனின் சுதந்திரமும் உரிமையும் மற்றொருவரைப் பாதிக்காமல் இருக்கவேண்டும் எனும் அடிப்படையில்தான் உரிமைகளைப் பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்துவது தொடர்பில் ஆவணங்கள் பல உருவாக்கப்பட்டு கொள்கைகளாக, பிரகடனங்களாக முன்வைகக்கப்பட்டு அவை நாடுகளாலும் அரசாங்கங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கையொப்பமிடப்பட்டிருக்கின்றன. அவ்வாறிருக்க பொறுப்புணர்ச்சி தொடர்பான எந்தவொரு வெளிப்பாட்டினையும் மேற்கொள்வதைத் தவிர்த்து காமம் விலங்குத்தன்மை கொண்டது அதனை நாம் வரையறுக்கவேண்டும் என்பதனூடாக அதுதொடர்பில் இதுவரை இருக்கக்கூடிய அடிப்படைகளைப் புறந்தள்ளுவது மட்டுமல்லாது பாலியல் சுரண்டலை மேற்கொள்பவர்களைக் காக்கும் பொருட்டும் அவர்களை நியாயப்படுத்தும் வகையிலும் அதனை ஓர் புதிய பார்வையாக முன்வைக்க விழைகின்றீர்கள்.

பாலியல் சுதந்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான முனைப்புக்களின் அடிப்படைகளாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பவை இருக்கும்வரை மட்டுமே நலிவுற்றவர்கள் சுரண்டலினால் பாதிக்கப்படுவதனை தடுக்கமுடியும். மனிதர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படாதபோதும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாதபோதும் அவையும் பாலியல் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக அமைகின்றன என்பதனை அங்கீகரிப்பதன் காரணமாகவே அவற்றை மேற்கொள்பவர்களை பொறுப்புக்கூறச் செய்யவேண்டும் என்கின்ற கருத்தியல் வலுப்பெறுகின்றது. அவ்வாறிருக்க, பொறுப்புக்கூறல் தொடர்பில் அவர் கேள்வியின் ஆரம்பத்திலேயே தெளிவாக குறிப்பிட்டிருந்தும் உங்கள் பதிவு முழுவதிலுமே நீங்கள் அவ்வார்த்தையினையோ அதன் தேவையினையோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

//இது ஒரு வகையென்றால், அதற்கு மேலுள்ளவர்கள் தங்கள் பாலியல் துணையை கண்டடைய கலாசாரம், மதம், சாதி, வர்க்கம் உண்டாக்கி வைத்திருக்கும் முன் தடைகள் எத்தனை. இன்று வாழும் எத்தனை பேர் தமக்கு மிக விரும்பிய துணையைக் கண்டடைந்திருக்கிறார்கள். முன்னிளமைக் காலத்திலும் வாலிபத்திலும் அனேகமானவர்கள் காதலிக்கிறார்கள், ஒரு பகுதியினர் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த இடைவெளியில் அவர்களுக்குக் காமம், காதல், வாழ்க்கை தொடர்பில் அளிக்கப்பட்டிருக்கும் சித்திரங்களையும் நம்பிக்கைகளையும் கற்பிப்பது யார்? நமது மதமா? ஆசிரியர்களா? கலையா ? இலக்கியமா? இல்லை. பெரும்பான்மையானோரின் புரிதல் சினிமாவிலிருந்தும் போர்னோகிராபியிலிருந்தும் பாலியல் கதைகளிலிருந்தும் உருவாகுபவை. நாங்கள் பாலியலை, காமத்தை உரையாடுவது மோசமான குற்றமாகக் கருதும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம். நாங்கள் பாலியலை, காமத்தை உரையாடுவது மோசமான குற்றமாகக் கருதும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம்.//

ஒடுக்குமுறைகளை மேற்கொள்பவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவேண்டும் என்பதற்கு மாற்றாக அவர்களின் பிறழ்வான நடத்தை இயல்பானதொன்றுதான் என்பதாக நிறுவமுற்பட்ட நீங்கள் இப்போது தனிநபர்களிலிருந்து மீண்டும் சமூகம்சார்ந்தாக அதனை மடைமாற்றம் செய்கின்றீர்கள். இங்கு நாம் பேசுவது சாதாரண மக்களைப் பற்றியல்ல. மாறாக, சாதி, இனம், வர்க்கம் போன்ற பல்வேறு தளங்களில் வெவ்வேறுபட்ட நுட்பமான ஒடுக்குமுறைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு எதிராகக் குரல்கொடுப்பவர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்களைப்பற்றி. அவர்களுக்கு காதல், காமம், வாழ்க்கை தொடர்பில் அளிக்கப்பட்ட சித்திரங்களும் நம்பிக்கைகளும் சாதாரண மக்களைப்போல சினிமாவிலிருந்தும் ஆபாசப்படங்களிலிருந்தும் வந்திருப்பினும் அதன் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளும் எப்போதும் இருந்திருக்கின்றன. அவ்வாறிருக்க இப்போதாமைகளினால் பாதிக்கப்பட்டவர்களாக பாலியல் சுரண்டலினைச் செய்யும் செயற்பாட்டாளர்களை முன்வைக்கின்றீர்கள்.
அதற்குக் காரணமாக சமூகத்தை குற்றஞ்சொல்கின்றீர்கள். அது மிகவும் இலகுவானதும்கூட. ஏனெனில் அங்கு பொறுப்புக்கூறுவதற்கான எந்தக்கட்டமைப்புகளும் இல்லை. அதனால் பொறுப்புக்கூறல் என்பதிலிருந்து தனிப்பட்ட நபரை விடுவிப்பதற்கு சமூகத்தினைக் குற்றஞ்சாட்டுவது இலகுவானதொன்றுதான். குறிப்பாக பாரபட்சமான, அதிகார ஏற்றத்தாழ்வுகளைக்கொண்ட சமூகமும் ஒரு குற்றவாளியாக இருப்பதனால் இது மேலும் இலகுவானதாக இருப்பதுடன் நியாயமானவாதமாகவும்கூட தோன்றலாம். அது இத்தகைய நடத்தைகளை நியாயப்படுத்துவதற்கான உத்தியும்கூட. அது ஒருபுறமிருக்க பெருந்திரளான சமூகத்தை பொறுப்புக்கூறச்செய்வது எவ்வாறு என்பதையும் உங்கள் புரட்சிகர சிந்தனையின் மூலம் முன்மொழியுங்கள் பார்க்கலாம்.

//ஆகவே தான், பாலியல் சார்ந்த பிறழ்வுகளை அதன் நுட்பமான நெருங்குகையை அவதானிப்பதில் நானுட்பட பலரும் போதுமான அறிவற்றவர்களாகவே இருக்கிறோம். மீறல்கள் எந்தவொரு சமூகத்திலும் தவிர்க்க முடியாதவை. அவை நிகழ்ந்தே தீரும். அவை பொது நோக்கில் தவறென்றோ மோசமானதென்றோ கருதப்பட்டாலும் பிழை விட்டே இவ்வுறவுகள் குறித்த வரையறைகள் விரிவடையும். //

பாலியல்சார் பிறழ்வுகளை அதன் நுட்பமான நெருங்குகையை அவதானிப்பதில் நிச்சயமாக உங்களுக்கு அறிவு போதாது என்பதற்கு உங்களது பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02 சாட்சி. அந்த நுட்பங்களை அறிவதில் உண்மையிலேயே ஆர்வமிருப்பின் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசுங்கள். மேற்கத்தைய நாடுகளில் இதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்ற ஆய்வுகள், உரையாடல்கள், பதிவுகள் போன்றவை தொடர்பில் தேடியறிந்துகொள்ளுங்கள். அறிவுபோதாமையாக இருந்தால் அதனை ஈடுசெய்ய வழிகள் இருக்கின்றன. ஆனால் உண்மையிலேயே அவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வமும் இப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து சுரண்டலுக்குள்ளாகும் பெண்களை பாதுகாக்கும் இதயசுத்தியும் உங்களிடமிருந்திருந்தால் உங்கள் அறிவின் போதாமையைக் காரணங்காட்டிக் பாதிப்புக்குட்படுத்துபவர்களைப் பாதுகாப்பதற்கான முழுமுயற்சியில் தெளிவாக இறங்கியிருக்கமாட்டீர்கள்.
இங்கு பிழைவிட்டுக் கற்றுக்கொள்வதற்கு இது எழுத வாசிக்கப் பழகுவது பற்றியதல்ல மாறாக பெண்கள்மீது நிகழ்த்தப்படும் பாலியல் சுரண்டல்களையும் அத்துமீறல்களையும் ஒடுக்குமுறைகளையும் பற்றியது. இவற்றையெல்லாம் நிகழ்த்தித்தான் பாலியல் எல்லைகளை விரிவுபடுத்தி சமூகத்திற்கான பாலியல் அறிவினைப் புகட்ட வேண்டும் எனும் தேவை யாருடையது கிரிசாந்? இது ஆணாதிக்க தடித்த மனநிலையன்றி வேறேது? சமத்துவம் பேசுபவராக சமூகநீதி பேசுபவராக இதுவரை நீங்கள் புற உலகிற்குக் காட்டிவந்த விம்பத்தினை உடைத்து பெண் வெறுப்பாளராக ஆணாதிக்கத்தின் ஏகபிரதிநிதியாக உங்களின் சுயத்தினை நீங்களாகவே அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள்.

//ஆகவே நபர்களையன்றி அந்த அகச் சிக்கலையே நான் முதன்மைப்படுத்தி, உரையாட விரும்புகிறேன்.//
இங்கு நீங்கள் வெளிப்படுத்தும் விருப்பமானது இதுவரைதோறும் நீங்கள் செய்துவந்த செயற்பாடுகளுக்கு முரணானதாக இருக்கின்றதே கிரிசாந். இதுவரைதோறும் நீங்கள் தனிப்பட்டவர்களை முன்னிறுத்தியபோதெல்லாம் அவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டதாக நாம் கருதியவையெல்லாம் உங்களதும் உங்கள் சகாக்களதும் தனிப்பட்ட வன்மங்களைத் தீர்த்துக்கொள்வதற்கான முனைப்புகளா? அல்லாவிட்டால் இந்தவிடயத்தில் பல்டி அடித்து தனிப்பட்ட நபர்களை முதன்மைப்படுத்தாது அகச்சிக்கலை முதன்மைப்படுத்த விழைந்தது எதற்காக? உங்களைச் சார்ந்தோரின் பாலியல் சுரண்டல்கள் வெளிவருகையில் நீங்கள் எத்தகைய நிலைப்பாட்டினை மேற்கொள்வீர்கள் என்பதை நுட்பமாக வெளிப்படுத்துவதிலிருந்து உங்களது இரட்டைநிலைப்பாடும் கபடத்தனமும் சுயநலமும் தௌpவாகப் பல்லிளிக்கின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விடயத்தில் 2021ம் ஆண்டு விதை குழுமம் வெளியிட்ட அறிக்கைக்கு முரணானதோர் நிலைப்பாட்டினை 2024ம் ஆண்டு பெப்ரவரியில் முன்வைக்கின்றீர்கள். காலம் நகர்கிறது நீங்கள் காலத்தைவிட பின்னோக்கிச்சென்று காப்பாற்ற முனைவது யாரை? உங்களையா அல்லது உங்களைச்சார்ந்தோரையா?

//எனது அனுபவத்தில் ஒருவர் முற்போக்கா பிற்போக்கா என்பது போன்ற பிரிவுகளிலிருந்து பாலியல் சுரண்டல்களோ / வன்முறைகளோ நிகழ்வதில்லை. எல்லா இடங்களிலும் எல்லாப் பிரிவுகளிலும் அவை நிகழும். முன்னோக்கிச் செல்பவர்களிடமும் கூட அழுக்குகள் இருக்கும். அதை நெருங்கி அவரை மையப்படுத்தி அந்தச் சிந்தனையையோ கருத்தையோ நாங்கள் பாழ்படுத்திவிடக் கூடாது. பொது வெளியில் நிகழ்வது அத்தகைய சேறடிப்புகள் கருத்தியல் தோற்றகடிப்பு உத்திகள் தான்.//

எங்கிருந்து இந்த நவீன புரட்சிகர சிந்தனைகளைக் கற்றுக்கொள்கின்றீர்கள் கிரிசாந்? பாலியல் சுரண்டலிலீடுபடும் ஒருவரை பொதுவெளியில் அம்பலப்படுத்துவது சேறடிப்பு முயற்சியென்றால் இதுவரை ‘மீ டூ’ இயக்கம் தொடர்பில் விதை குழுமம் எழுதியவை தொடர்பில் நீங்கள் உங்கள் எதிர்க் கருத்தை இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லையே. அல்லது விதை குழுமத்தின் முக்கிய உறுப்பினரான உங்களுக்கு உடன்பாடில்லாத ஒரு கட்டுரை விதை குழுமத்தின் வலைத்தளத்தில் பதியப்பட்டு முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டது எவ்வாறு? அதுதவிர பாதிக்கப்பட்டவரைப் பலிகொடுத்து கருத்தியல்களை வெளிப்படுத்துவதனை முன்னுரிமைப்படுத்தக் கூறுகின்றீர்கள். இந்த அதிகாரம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது? பாதிக்கப்பட்ட நபரொருவர் தனக்கான நீதியினை எத்தளத்தில் எந்த வடிவத்தில் பெற்றுக்கொள்ள விழைகிறார் என்பது அவரைப் பொறுத்தது. அதில் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை பயமுறுத்தவும் குற்றஞ் சுமத்தவும் முனைகின்றீர்களல்லவா?

//ஆகவே தான் நபர்கள் சார்ந்த பாலியல் சுரண்டல்கள் குறித்த விசாரணைகளை விவாதங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக, முழுமையாக உரையாடுவதின் முதற் தடை நிகழ்கிறது. அதே நேரம் அதைக் காரணம் காட்டி அந்த நபர் தனது சுரண்டல்களிலிருந்து தப்பிக்கவும் கூடாது. அவருக்குண்டான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும். அதுவே அறம்.//

உண்மையில் மேலுள்ள உங்களின் பதிவுகளினூடாக நீங்கள்தான் நபர்கள் சார்ந்த பாலியல் சுரண்டல்களை வெளிப்படையாகவும் முழுவதுமாகவும் உரையாடுவதற்குத் தடையான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் எழுதிய பதிவை மீண்டுமொருமுறை வாசியுங்கள் கிரிசாந். அந்த நபர் தனது சுரண்டல்களிலிருந்து தப்பிக்கவும்கூடாது எனக்கூறும் நீங்கள் அவருக்குண்டான சட்ட நடவடிக்கையினை எடுக்கவேண்டுமென்கின்றீர்கள்.

ஆகவே தான், பாலியல் சார்ந்த பிறழ்வுகளை அதன் நுட்பமான நெருங்குகையை அவதானிப்பதில் நானுட்பட பலரும் போதுமான அறிவற்றவர்களாகவே இருக்கிறோம்/ என அவதானிப்பதற்கே போதுமான அறிவற்றவர்களாக பலர் இருப்பதைக் கூறிவிட்டு இத்தகைய நுட்பமான சுரண்டல்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கூறுவதானது சட்டம் பற்றிய உங்களின் அறிவுப் போதாமையினை வெளிப்படா? அல்லது இவ்விடயம் சார்ந்து சட்ட நிவாரணங்களும் நீதியும் வலுவானதாக இல்லையென்பதை அறிந்து பாதிக்கப்பட்ட நபரின் நேரத்தினையும் உழைப்பினையும் விரயம் செய்யத்தூண்டுவதன்மூலம் இச்சுரண்டல்களை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியா?
இருந்தாலும், உங்களது அறிவும் ஆளுமையும் குறைத்து மதிப்பிடத்தக்கவையல்ல என்பதனால் தயவுசெய்து இவ்விடயம் தொடர்பில் இருக்கக்கூடிய சட்டநிவாரணங்கள் தொடர்பில் எமக்கு எடுத்துரைப்பீர்களானால் நாமும் எமது அறிவுப்பரப்பினை விரிவுபடுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

இதுவரை பாதிப்புக்குட்படுத்துபவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களை நியாயப்படுத்துவதற்கும் பல பந்திகளை ஒதுக்கிய நீங்கள் இப்பதிவிற்கு நியாயம் செய்ய நினைத்து சப்பைக்கட்டுக்காகவேனும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் பக்கம் நிற்கவேண்டும். அதுவே அறம் எனக் கூறுவது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகின்றது.

//பாலியல் பற்றிய அல்லது சொந்தக் காமம் பற்றிய உரையாடல்களை பொது வெளியில் நிகழ்த்துவது உகந்ததல்ல.//

மிகச்சரியாகச் சொன்னீர்கள். தங்களது மனப்பிறழ்வுகளையும் வக்கிரங்களையும் பொதுவெளியில் வாக்குமூலங்களாக தவறுதலாகத்தன்னும் எவரும் பதிவிட்டுவிடக்கூடாதல்லவா? ஒருவேளை நீங்கள் கூறுவதுபோல சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டால் அவை ஆதரங்களாகவும் அமைந்துவிடும் வாய்ப்புகள் உள்ளன. அல்லது சமூகத்தின்முன் அவர்களின் பிறழ்வுகள் அம்பலமாகிவிடும். எப்படியோ காமம் தொடர்பில் உரையாடவேண்டும் எனக்கூறும் நீங்கள் பாலியல் அல்லது சொந்தக் காமம் தொடர்பில் பொதுவெளி உரையாடல்களை நிகழ்த்துவது உகந்ததல்ல எனக் கூறுவதற்கான காரணங்களை விபரிக்கமுடியுமா?

தனிப்பட்ட வாழ்க்கை அதாவது personal என்பதை ஆண்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பெண்களை அன்பு, காதல், குடும்பம் போன்றவற்றின் பெயரால் வன்முறைக்குட்படுத்தல், சுரண்டுதல், ஒடுக்குமுறைக்குட்படுத்தல் என்பன ஆணாதிக்க சமூகப் பொதுப்புத்தியாக தோற்றம் பெற்றதாலேயே பெண்ணிலைவாதிகள் personal is political என்ற கருத்தியலை முன்வைத்து பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளை தனிப்பட்ட விடயம் என்கின்ற போர்வையில் மூடிமறைப்பதற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பெண்ணிலைவாத அலைகள் தொடர்பில் புதியசொல்லில் வெளிவந்த கட்டுரையினை அதன் ஆசிரியரான நீங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை. சற்று நேரமெடுத்து அதனைப் படிப்பது உங்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கின்றோம்.

//ஒரு பிரச்சினையை நிதானமாக அணுகும் ஆயிரம் பேரையாவது நம் வாழ்நாளில் நாம் தொகுத்துக் கொள்ள வேண்டும். நான் இணையத்தளத்தில் உரையாடலைத் தொகுப்பதன் நோக்கமும் அது தான். உரையாடலில் அனைவரையும் பங்களிக்கும்படி கேட்பதும் அதற்குத்தான். நாம் முன்வைக்கும் ஒடுக்குமுறைகளைக் கொண்டே சமூக வலைத்தளத்தில் அக்கருத்தியலையே போட்டு நொறுக்கி விடுவார்கள்.//

உண்மைதான் கிரிசாந். இதுவரை எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என பொதுவெளிகளில் இயங்குபவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டபோது அவர்களின் ஆதரவாளர்கள் அடித்து நொருக்குவதைத்தான் செய்தார்கள். இது நீங்கள் யாருக்கு வழங்குகின்ற எச்சரிக்கை? பாதிக்கப்பட்ட நபருக்குத்தானே?. இது எச்சரிக்கையா அல்லது பாதிக்கப்பட்டவரை பயமுறுத்தி அமைதியினைப் பேணச் செய்யவைப்பதற்கான உங்களது உத்தியா? ஒடுக்குமுறை தொடர்பில் சமூகவலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டால் அக்கருத்தியலை அடித்து நொருக்கிவிடுவார்கள் அதனால் ஒடுக்குமுறைக்குட்பட்டாலும் சமூகவலைத்தளத்தில் அதனைப் பதிவிடாதீர்கள் எனக் கூறவிழைகின்றீர்களா?

//எதை எங்கு உரையாடத் தொடங்குவது என்பது முக்கியமானது. மேலும் பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஒருவர் உண்மைகளை எவ்வளவு தூரம் பேசுவார் என்பதும் அவ்வுரையாடல்களின் மீதான நம்பிகையின்மையை ஏற்படுத்துகிறது.//

இதற்கு அர்த்தம் என்ன?

//மேலும், எந்தவொரு தனிநபரும் அவர் இதைச் செய்தார், அவர் மோசமானவர், பாலியல் குற்றவாளி என்பதில் பல்வேறு பார்வைகளும் உளநிலைகளும் நலன்களும் அக்கருத்தை இணைந்து உருவாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே இது சட்டபூர்வமாக முன்னகர்வது தற்போதைக்குப் பொருத்தமானது.//

பாலியல் ஒடுக்குமுறை எனத் தெரிந்தே அதனை மேற்கொள்பவர்கள் தமது குற்றத்தினை ஏற்றுக்கொள்வதென்பது அரிது அல்லது இல்லை எனக்கூறலாம். இவ்வாறிருக்க பாலியல்ரீதியான குற்றங்களில் ஒருவர் உண்மைகளை எவ்வளவு தூரம் பேசுவார் என நீங்கள் குறிப்பிடுவது பாதிக்கப்பட்டவரின் வெளிப்பாடுகள் அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பில்தானே?. பாதிக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினை, ஒடுக்குமுறையினை வெளிப்படுத்தாமல் தடுக்கும் பல காரணிகளில் பாதிக்கப்பட்டவரை குற்றஞ்சாட்டுதலும் அவர்களது நம்பகத்தன்மையினை கேள்விக்குட்படுத்துவதும் காரணங்களாக இருந்துவருகின்ற நிலையில் இத்தகைய செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் சுரண்டல்களும் பல்வேறு காரணங்களால் பேசப்படாத நிலை உள்ளது அவர் தனது கேள்வியிலேயே குறிப்பிட்டிருக்கின்றபோதும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் முன்வந்துவிடக்கூடாதெனக் கங்கணங்கட்டிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் குற்றஞ்சாட்டுவதிலும் அவர்களின் நம்பகத்தன்மையினைக் கேள்விக்குட்படுத்துவதிலும் ஈடுபடுவதுடன் பாதிப்புக்குள்ளாபவர்கள் தொடர்பில் முன்முடிவுகளுடனும் அணுகுகின்றீர்கள்.

//ஆகவே கருத்தியல் சார்ந்து இடம்பெறுகின்ற உரையாடல்கள் முதற் தளத்தில் இதழ்களிலோ அல்லது இணையத்தளங்களிலோ நேரிலோ கூட நிகழலாம். அதன் பின்னரே அது பொது வெளி உரையாடலாக ஆக வேண்டும். அது அக்கருத்தை ஓரளவு பாதுகாத்துக் கொண்டு ஒடுக்குமுறையைச் செய்தவரை அதிலிருந்து பிரித்துப் பார்க்க உதவும்.//

இங்கு நீங்கள் பொதுவெளி எனக் கருதுவது எதனை? எவராலும் பார்வையிடக்கூடிய அல்லது திறந்த இணையத்தளங்கள் பொதுவெளிகள் இல்லையா? சாதாரண ஒரு பிரஜை ஒடுக்குமுறையை நிகழ்த்துகையில் அவரைக் கருத்தியலிலிருந்து வேறுபடுத்தி உரையாடலினை மேற்கொள்வதையும் பொதுத்தளங்களில் ஏனைய ஒடுக்குமுறைகளைக் கேள்விக்குட்படுத்திக்கொண்டு தமது சமூக அந்தஸ்தினையும் அறிவினையும் பயன்படுத்தி தெரிந்தே பெண்களை சுரண்டுபவர்களிலிருந்து கருத்தியலைப் பிரித்துப் பார்ப்பதையும் சமமாக அணுகமுடியுமா? அவர்கள் தமது பொதுவெளி விம்பத்தினை ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கான உத்தியாகக் கையாளும்போது அப்பிறழ்வான பொதுவெளி விம்பத்தினை வெளிப்படுத்தவேண்டிய தேவை இல்லையா?

//இவை மேலுள்ள மனிதர்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல. மனிதர்களின் எல்லாத் தட்டுகளிலும் இவை இருக்கின்றன. இதில் ஒருவர் ஆண், பெண், இன்ன சாதி, முற்போக்கானவர், பிற்போக்கானவர் என்ற எதுவும் விதிவிலக்கல்ல. யாரும் சுரண்டலாம். குற்றம் இழைக்கப்படலாம். அதே நேரம் அவர்கள் அவர்களது தவறுகளை உணர்ந்து மீண்டு வாழ்வதற்கான வாய்ப்பைப் பற்றியும் நாங்கள் சிந்திக்க வேண்டும். நாங்கள் அவர்களைத் திருத்த வேண்டும் என்பதை ஒரு சட்ட நீதிபோல் சொல்லவில்லை. நாங்கள் அவர்களது குற்றங்களை உணர்த்த, அதிலிருந்து மீள அவர்களுடன் தொடர்ந்து உரையாடியாக வேண்டும். அவர்களைச் சமூக நீக்கம் செய்வதை நான் செய்ய மாட்டேன். அவர்களுடனான உறவின் தன்மையை மாற்றிக் கொள்வேன். ஆனால் தீண்டாமையைக் கொள்ள மாட்டேன். அப்படியான மனநிலைகளிலிருந்து மீளவே இலக்கியமும் கலைகளும் மனித மனங்களைப் பண்படுத்த விழைகிறது என நம்புபவன். நான் ஒரு கவிஞன். இலக்கியத்தை வாழ்வின் கருவியாகக் கொண்டவன்.
உங்களைப் போலவே உரையாடலில் நம்பிக்கை கொண்டவன். ஆகவே பெண்களின் என்று மட்டுமல்ல, எல்லாத் தரப்பினதும் குரல்களையும் நான் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை இந்தத் தளத்தில் வெளியடவும் செய்வேன். அவை அவற்றுக்கான விளைவுகளை உருவாக்கட்டும். பிறந்து, ஈரங் காயாத நாய்க்குட்டிகள் தாமே தமது திசைகளை அறிவது போல்.//

தவறுகளை உணர்ந்து மீண்டுவருதல் என்பதும் பாதிக்கப்பட்டவரை மையப்படுத்தியதாக அமையவேண்டும். ஆனால், தவறுகளை உணர்ந்து மீண்டுவாழத்தயாராக இருக்கும் பாதிப்பேற்படுத்துவோர் தொடர்பில் எமக்கும் தயைகூர்ந்து தெரியப்படுத்துங்கள். பல்லாண்டுகாலமாக இத்தகைய உரையாடல்களை வழிநடாத்தும் செயற்பாட்டாளர்கள் மற்றும்/அல்லது இலக்கியவாதிகளால் இவ்வொடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகையில் பாலியல் சுரண்டல்கள் தொடர்பில் செயற்படுவதற்கு உரையாடல் எனும் உத்தியின் போதாமையை இன்னுமா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?

செயற்பாட்டாளர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது அறிக்கை வெளியிட்ட விதை குழுமத்தின் பிரதான உறுப்பினரான நீங்கள் இன்று அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடான தனிநபரிலிருந்து பாலியல் சுரண்டல்களை பிரித்துப்பார்க்க வேண்டுமெனப் பரிந்துரை செய்வதும் எதிர்காலத்தில் இத்தகைய சுரண்டல்களிலீடுபடுவோர் வெளிப்படுத்தப்படுகையில் நீங்கள் எவ்வாறான நிலைப்பாட்டினை மேற்கொள்வீர்கள் என முன்கூட்டியே வெளிப்படுத்துவதும் ஒரு முன்னேற்பாடேயன்றி வேறில்லை.

ஒட்டுமொத்தமாக உங்களது பதிவில் நீங்கள் கேள்விகளை மடைமாற்றம்செய்து அணுகியுள்ளதுடன் ஆணாதிக்க, ஆண்மைய மனநிலையிலிருந்து செயற்பாட்டாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளைக் காப்பாற்றுவதற்கான செயற்பாட்டினை முன்கூட்டியே மேற்கொண்டிருக்கின்றீர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நீங்கள் உங்களது அறிவையும் ஆளுமையினையும் பயன்படுத்தி எவ்வாறு நுட்பமான முறையில் பாலியல் சுரண்டல்வாதிகளுக்கு அரணமைத்து வைக்க முயற்சிக்கின்றீர்களோ அதேமாதிரியான நுட்பத்துடன் அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய அறிவும் திறமையும் பெண்களுக்கும் பெண்விடுதலைக்காக இதயசுத்தியுடன் செயலாற்றக்கூடிய பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ளதென்பதை இப்போதாவது புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்ப்பதுடன் நீங்கள் உங்களது கருத்தியல்களையும் சுயத்தையும் இவ்விடயம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

சிவா மாலதி

TAGS
Share This