ஆசிரியரின் சொற் கேட்டல்
ஒரு பண்பாட்டில் அறிவியக்கம் எதன் வழியாக விரிந்து வளரும்? அதற்கான எல்லைகளை தீர்மானிப்பார்கள் எவர்?
எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இன்றிக் கலைகளினாலும் இலக்கியங்களினாலும் அறிவுத் துறைச் சிந்தனையாளர்களினாலுமே பண்பாட்டின் அறிவியக்கம் முன்னகர முடியும். அதற்கான எல்லைகளை மறுவரையறை செய்பவர்கள் அவர்களே. அவர்களின் பங்களிப்பைச் சிந்தனைத் தளம் சார்ந்தே நாங்கள் கவனங்கொள்ள வேண்டும். அவர்கள் வழியாகவே பண்பாடு விரிவடைய முடியும் என்ற தன்னுணர்வு எந்தவொரு பண்பாட்டினதும் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தாக வேண்டும். அத்தகைய சமூகங்களே முன்னேற முடியும். கலைஞர்களும் சிந்தனையாளர்களுமே எச்சமூகத்தினதும் ஆசிரியர்கள். அவர்களுக்கு அவ்விடத்தை அளித்து அவர்களைக் கவனித்துத் தன் சுயசிந்தனையை வளர்த்துக் கொள்பவர்களே ஏதேனுமொரு வகையில் பயனுறும் வாழ்வை வாழ முடியும். அவர்களே நம் அகத்தை விரிவு செய்யும் பணியை ஆற்றுகிறார்கள். அதற்காக அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ வழிபாட்டிற்கு உரியவர்களோ அல்ல. அவர்கள் முன்னோடிகள். மானுடம் என்னும் தேரின் அச்சாணிகள்.
சராசரிகளுடன் உரையாடுதல் என்ற கட்டுரையை ஒட்டி, சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களில் நான் ஜெயமோகனின் சீடன் என்று பலரும் சொல்லி வருகிறார்கள், ஈழத்து ஆசானா அல்லது சின்ன ஆசானா எப்படி இனி உங்களை அழைத்துக் கொள்வது என்று நண்பர் ஒருவர் போனில் கேட்டார். இதை ஒரு குற்றச்சாட்டு என்றோ அவதூறு என்றோ நான் கொள்ள மாட்டேன்.
சராசரிகளின் வன்முறை பற்றி அவரே தமிழில் அதிகமும் எழுதியவர் உரையாடியவர். மக்கள், பாமரர் எனும் சொற்கள் உருவாக்கம் பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.
நான் ஜெயமோகன் போல் செயற்படுகிறேன் என்றொருவர் சொல்வது வசையல்ல. என்னளவில் அது ஒரு பாராட்டே. அதற்கு இன்னும் என்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாள் அவரைத் தாண்டிச் செல்ல வேண்டும். அவர் எனது சவால்.
ஜெயமோகன் தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். தனக்கு முன் உதாரணமேயற்ற ஒரு முன்னோடி. என் இளவயதில் இருந்தே அவரை வாசித்து வருகிறேன். இணையம் உருவாக முதல், ஒரு வீட்டு நூலகத்தின் றாக்கையிலிருந்து நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் பற்றி அவரது மதிப்பீடுகளை எழுதிய புத்தகத் தொடரை வாசித்தேன். அதுவரை வாசித்த எந்த எழுத்தாளரையும் விட சுய குரல் கொண்ட, அசல் சிந்தனை கொண்ட ஒருவராகவே அன்று முதல் இன்று வரை திகழ்கிறார். அவருடைய ஏராளமான புனைவெழுத்துகளையும் பிற நூல்களையும் வாசித்திருக்கிறேன். மானுட அகத்தினை இத்தனை விரிவாக விசாரணை செய்த இன்னொரு எழுத்தாளர் தமிழில் இல்லை. இனி இருக்கப்போவதும் அரிது. அவர் தமிழ்ப்பண்பாடு உருவாக்கியளித்த உச்சங்களில் ஒருவர்.
எந்த ஒரு முன்னோடியும் சிந்தனையாளரும் அவர்களுடைய முழுச் சொற்களும் சிந்தனைகளும் அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. அவர்களது சிந்தனைகளிலும் குறைபாடுகள் இருக்கும். விமர்சனங்களும் இருக்கும். அப்படியில்லாத ஒரேயொரு மானுடச் சிந்தனையாளர் கூட மண்ணில் இதுவரை நிகழவில்லை. அவர்களது பிரமண்டமான சிந்தனைப் பங்களிப்பின் பகுதிகளாக அந்த விமர்சனங்களும் இருக்கும். திருவள்ளுவரோ பெரியாரோ அல்லது எந்த மானுடச் சிந்தனையாளரும் நான் சொல்வதை நம்பாதே. நீயே சுயாமாகச் சிந்தி, ஆனால் நான் சொல்வதைக் கேள். கவனி. அதன் வழி நீயொரு தனியாளுமையாக உருவாகு. வாழ்வை உன் சொந்த உண்மையால் பொருள் கொள், வாழ். என்று சொல்லியே எங்களுடன் உரையாடுகிறார்கள்.
அத்தகைய முன்னோடிகளின் மீதும் சிந்தனையாளர்கள் மேலும் எனக்கு நீங்காத மதிப்புண்டு. பலரிடம் இருந்தும் கற்றே நான் வளர்கிறேன். அது காந்தியோ அம்பேத்கரோ கிராம்ஷியோ ஓஷோவோ ஜெயமோகனோ, எல்லோரும் என் ஆசிரியர்களே. கலைஞர்களில் குறைபாடுகள்கொண்ட ஏராளமானவர்கள் உண்டு. அவர்கள் ஆக்கியளித்த மதிப்பு மிக்க ஆக்கங்களை அவர்களுடைய ஏனைய குறைபாடான செயற்பாடுகளுக்காக நான் நிராகரிக்க மாட்டேன். உதாரணத்திற்கு, நட்சத்திரன் செவ்விந்தியன் நான் மிக மதிக்கும் கவிஞர். அவரும் சமீபத்திய உரையாடல்களில் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து எழுதி வருகிறார். அவர் கருத்துத் தளத்தில் முன்வைக்கும் பலவிடயங்கள் பற்றி எனக்கு உடன்பாடின்மைகள் உண்டு. என் மீது அவர் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகள் அவரது மிகையான கற்பனைகள். சமூக அமைப்புகள் எவ்விதம் உருவாகும் இயங்கும் என்பன பற்றிய எளிய புரிதல்கள் கூட்ச் இல்லாதவை.
ஆனால் வாழ்நாள் முழுக்க அவரது கவிதைகள் என் நெஞ்சில் வாழும். அவை என் நிழல் போல்க் கூட வரும். அவை அவரது எத்தகைய செயற்பாடுகளாலும் என்னை விட்டு அகலப்போவதில்லை. என்றும் என்னுடைய டியர் கவிஞன் அவர். அவருடைய கருத்துக்களைத் தனிப்பட்டதாக எடுத்துக் கொண்டு அவரை மறுதலிப்பதோ புறக்கணிப்போ செய்வது என்னால் இயலக்கூடியதல்ல. எந்த ஐயமும் இல்லாமல் கவிதையில் அவரும் எனக்கு ஆசிரியரே. முன்னோடியே.
ஆக்கியவராலேயே கூடக் கலை இன்னொருவரின் சொந்தமாவதைக் கட்டுப்படுத்த முடியாது.
சராசரிகளை எதிர்கொள்தல் பற்றி நான் எழுதிய கட்டுரை பல எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கிறது. இலக்கியத்திலும் பண்பாட்டிலும் பாமரர்களாக இருக்கும் பலர் தங்களைப் பாமரர் என்று சுட்டியதால் சீண்டப்பட்டிருக்கிறார்கள். இது எவ்விதம் நிகழும் என்பதை அக்கட்டுரையிலேயே எழுதியுமிருந்தேன். அவர்களுக்கு அறிவுக் கூச்சம் உருவாகாது. கும்பலாக நின்று கொண்டு, நான் சாமனியர், சராசரி என்று அவர்கள் தொப்பியை அவர்களே அணிந்து கொண்டுவிட்டார்கள்.
என் மீதானதும் எனது குடும்பம் மீதும் தனிப்பட்ட கதாப்பாத்திரப் படுகொலையையும் திரிபுகளையும் உருவாக்க ஆரம்பித்து விட்டார்கள். இனி யாரொருவர் சொல்வதும் உண்மை தான். ஒவ்வொருவருக்கும் சென்று நானப்படியில்லை என்று நிரூபித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த நேரத்தில் என் குடும்பம் சார்ந்தவர்கள் மீதும் வேறு பெண்கள் மீதும் போர்த்தப்படும் அவதூறுகளுக்கு யாரும் அறச் சீற்றம் கொள்ளப் போவதில்லை. உள்ளூர இப்படி நடக்கும் போது மகிழவே செய்வார்கள். இவ்வளவும் தான் அவர்களின் அறம். இது தான் சமூக வலைத்தளங்களில் உரையாடுவதன் சிக்கல்களுக்கான உதாரணம். மீண்டும் ஒரு முறை நானே படுகொலை செய்யப்பட்டு அறையப்பட வேண்டிய சிலுவை ஆக்கி அளிக்கப்பட்டிருக்கிறது.
*
சமூகத்தில் ஒருவர் அனைத்தும் அறிந்தவரல்ல. ஒரு துறையில் முன்னோடியாகவோ மேதையாகவோ இருக்கும் ஒருவர் அவரறியாத இன்னொரு துறையில் பாமரர் தான். அதை எண்ணிக் கூச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அந்தச் சிந்தனைத் தளம் தொடர்பில் கருத்துச் சொல்ல முதல் அதை அறிய ஒருவர் அறிவுழைப்பைச் செலுத்தியாக வேண்டும். இலக்கியம் தெரியும் என்பதற்காக ஒருவர் தொழில்நுட்பம் பற்றிக் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அத்துறையில் அவரும் பாமரரே என்ற தன்னுணர்வு இருக்க வேண்டும். அது தொடர்பில் அறிவுள்ள ஒருவரின் அல்லது நிபுணரின் கருத்தையே கவனிக்க வேண்டும். அவரைப் பின்தொடர வேண்டும். இல்லை, நான் எதையும் கற்றுக் கொள்ள மாட்டேன். நான் சொல்வதை நீ கேள் என்று அங்கு சென்று முறையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது.
சராரியாய் ஒருவர் இருப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை. அது உழைத்து அடைய வேண்டிய இடமேயில்லை. ஒரு சராசரி பிறந்தாலே போதுமானது, அவரை இந்தச் சமூகம் சராசரியாக்கிவிடும். அதில் ஒருவகை நிம்மதி இருக்கிறது. அது அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை. அதன் மேல் நின்று கொண்டு அவர்கள் எந்த எல்லை வரை சென்றும் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை அள்ளியிறைப்பார்கள். காசா பணமா, இந்தா வைத்துக்கொள், நீ ஒரு ஆணாதிக்கவாதி, சுரண்டல்காரன், சுரண்டல்காரர்களைப் பாதுகாப்பவன், இலக்கிய மேட்டிமைவாதி, தீண்டமைக்காரன், ஊழல்வாதி.. இன்னும் கையில் கிடைக்கும் கண்ணில் தெரியும் எல்லாவற்றையும் சொன்னால் தான் அவர்களால் அவர்களது புண்பட்ட மனத்தை ஆற்ற முடியும்.
ஒரு எழுத்தாளரோ சிந்தனையாளரோ அகப்பட்டுக்கொள்ளவே கூடாத புதைசேறு அக்கருத்துகள். சமூக வலைத்தளங்கள் எதிர்மனநிலை கொண்ட மனிதர்களை உருவாக்குவதில் வெற்றியடைந்திருக்கின்றன. கேளிக்கை அளிப்பவர்கள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சமூக அக்கறை, கொஞ்சம் சமூகநீதி, சுயபுலம்பல், டிப்பிரசன், வாழ்க்கைத் தீர்வுகள் என்று பலவகையான இலவச வழிகாட்டிகள் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் ஒரு நிகர் வாழ்க்கையென ஆகியிருக்கிறது. அங்கு விழித்து, அங்கு வாழ்ந்து, அதிலேயே துயில்வது. ஒருவர் தான் விழித்திருக்கும் நேரத்தில் எவ்வளவு குறைவாக சமூக வலைத்தளங்களைப் பார்க்க முடியுமோ அவ்வளவு பார்ப்பது அவர்களின் மனநிறைவுக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் செயலூக்கத்துக்கும் அடிப்படையானது. நிகர் வாழ்க்கையை வாழ்வதே முதன்மையானது. அதிலுள்ள மனிதர்களே முக்கியமானவர்கள். அவர்களது வாழ்க்கைகள், மகிழ்ச்சிகள், துயர்கள், சிக்கல்களே முதன்மையாவனவை. சமூக வலைத்தளம் ஒரு கேளிக்கைத் தளம். அதில் சில கருத்துக்களைப் பகிரலாம். அதன் வழி எங்கோ உள்ள நுண்ணுணர்வுள்ள மனத்துடனும் ஒரு எழுத்தாளர் அல்லது கலைஞர் உரையாடலாம். இதை வாசிக்கும் கண்கள் ஒவ்வொன்றுடனும் அதற்குள் இருக்கும் பார்வையுடனும் நான் இடைவிடாது பேச விரும்புகிறேன். ஆனால் எனக்குரிய வழியில். அதை ஒரு மேட்டிமைத்தனம் என்றுணரும் ஒருவர் இழப்பது எதை என்பதை அவர் ஒருபோதும் அறியப்போவதில்லை. மண்ணில் அவ்விதம் கோடானுகோடி உயிர்கள் பிறந்து மடியும். அவர்களில் ஒருவராக வாழ்வது ஒருவரின் தெரிவு.
அன்றாட வாழ்வில் உள்ள சமத்துவமும், மனித உரிமைகள் தொடர்பில் உள்ள சமத்துவமும் அறிவியக்கத்தில் செல்லுபடியற்றது. நான் தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினைகளை விளங்கிக் கொள்ள சராசரிகளுடன் உரையாடலை எழுதினேன். ஜெயமோகன் மிக விரிவாகவே பல ஆண்டுகாலம் அறிவியக்கத்தில் இப்பிரிவுகளின் இடம் என்ன என்பதைப் பற்றி எழுதி வருகிறார்.
அவர் அந்த வகையில் என் சிந்தனை முன்னோடி. இப்படிச் சொன்னதும் நான் எழுதுவதும் சிந்திப்பதும் ஜெயமோகன் மூலமே என்றொரு கூட்டம் வாழ்நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியும். அவர்களின் அந்த எண்ணத்தை மாற்றுவது கடினம். ஏனென்றால் அவர்கள் ஜெயமோகனையும் வாசிக்கப்போவதில்லை. என்னையும் வாசிக்கப்போவதில்லை. மேலும், அவர்களுக்கு இலக்கியம் பண்பாடு பற்றி இருக்கும் விரிவுகளை விளங்கிக் கொள்ள மனமும் இருக்கப்போவதில்லை.
ஜெயமோகன் மின்னஞ்சல் மூலம் கடித உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துபவர். வேறு யாருக்கும் அத்தகையதொரு நீண்ட உரையாடல் கொண்ட வாசகர் தரப்பு தமிழ்ச்
சமூகத்தில் உருவாகி வரவில்லை. ஏராளமான துறைகள் குறித்து அவர் தனது பார்வைகளை எழுதியுள்ளார். ஈழம் தொடர்பான இலக்கியப் பார்வைகளில் அவரிடம் போதாமைகள் உள்ளன. அதேநேரம் அவரளவுக்கு ஈழ இலக்கியத்தின் மீது அறிவுத் தொடர்போ முரணியக்கமோ கொண்ட தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் மிகக் குறைவானவர்கள். ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய முக்கியமான மதிப்பீடுகளை அவர் எழுதியிருக்கிறார். அதன் வழி என்னைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டியிருக்கிறார்.
இலக்கியம் ஒரு வாழ்முறையென, வாழ்வை அறியும் கனவென்ற என் தன்னுணர்வைப் பல்வேறு கருத்துக்களின் வழி அவர் உருவாக்கியிருக்கிறார். அது ஒரு கொடை. அதை மறுப்பதோ மறைப்பதோ எனக்கு அவசியமில்லை. அவர் என் இலக்கிய ஆசிரியர். எல்லா ஆசிரியர்க்கும் உள்ள இடத்தை அவருக்கு என்னுலகில் நான் கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவரிடம் கடிதத் தொடர்புகளோ வேறெதுவும் அறிமுகங்களோ செய்து கொண்டதில்லை. அதற்கு அவசியமும் இருந்திருக்கவில்லை. ஓர் ஆசிரியர் எவ்விதமும் தனது உரையாடலையும் பாதிப்பையும் நிகழ்த்த இயலும். ஆசிரியரின் சொற் கேட்டல் ஒருவரை நல்வழிப்படுத்தும். அதுவே நம் பண்பாடு. அவரை வழிபடத் தேவையில்லை. சொற் கேட்கலாம்.
ஜெயமோகன் ஒரு நேர்காணலில் சமூக வலைத்தளங்களுக்குச் செல்வது எழுத்தாளர்களுக்குத் தற்கொலை என்று சொல்லியிருப்பார்.
சொற் கேட்டிருக்கலாம்😉