சிறு நாவுகளின் தொடுகை

சிறு நாவுகளின் தொடுகை

கறையான்கள் தன் எச்சிலால் உண்டாக்கும் புற்றின் மண்ணைத் தொட்டெடுக்கும் ஈரம் பல்லாயிரம் சிறு நாவுகளின் தொடுகை. அதிலிருந்து ஒரு மாபெரும் புற்று உருவாகிறது. அதனுள் பல்லாயிரம் உயிர்கள் வாழும். அது உறைந்து நின்று மண் மேல் சிற்றுயிர்கள் ஆக்கிய மலையென வளரும்.

ஒரு மொழியில் கவிதை பல்லாயிரம் நாவுகளின் தொடுகையால் ஈரம் கொள்ளும் சொற்களை உறைய வைத்து உண்டாகும் சொல்மலை. அதன் ஒவ்வொரு அமைப்பையும் அங்குள்ள மனிதர்களின் தன்மைகளும் தேர்வுகளுமே தீர்மானிக்கும். ஒரு நிலத்திற்கும் இன்னொரு நிலத்திற்கும் கவிதை வேறுபட அதுவொரு முக்கிய அம்சம்.

ஒரு மொழியடுக்கு முழுமையாகத் திறக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து உதிர்ந்து இன்னுமொரு வண்ணத்துப்பூச்சி மிதக்கத் தொடங்கும். எஸ் போசின் மொழியடுக்கிலிருந்து வண்ணத்துப்பூச்சியாகிய கூட்டுப்புழு சித்தாந்தன். அவரது மொழிக்கூடு எஸ் போசிடமிருந்து உருவாவது. அதிலிருந்து அவர் எவ்வளவு தூரம் மிதந்து முன் சென்றார் என்பது முக்கியமானது. வடக்கிலிருந்து கதிர்காமத்துக்குக் காட்டு வழிகளை ஊடுருவி மேலும் கீழும் தாழ்ந்து மிதக்கும் வெண்ணிற வண்ணத்துப்பூச்சிகள் போல் தனது சொற்களின் நீண்ட பயணத்தை ஒவ்வொரு சொல் உதிர ஒவ்வொன்றாக உயிர் மாற்றி அளிக்கும் வித்தை கூடியவர்.

சித்தாந்தனது சொற்கள் அரசியல் கவிதைகளுள் பெறும் கூரலகும் அறமும் அவரது கவிதைகளின் அடிப்படையான விசை. அவர் பல்வேறு மனிதர்களினதும் உயிரிகளினதும் இருத்தல் வழி எதிர்க்க அஞ்சும் அரசினதும் விடுதலைப் போராட்ட இயக்கத்தினதும் அரசியல் அற மீறல்களை வன்முறைகளை தூலமான சொற்களால் மொழிநிலத்தில் ஊன்றியிருக்கிறார்.

வாழ்வின் இழைகளை எழுதும் அவரது கவிதைகள் உரையாடும் தன்மை வாய்ந்தவை. அரசியல் கவிதைகள் கவிதையாக்கமாக மேம்பட்டவை. அவரது உணர்ச்சிக் கொதிநிலைகள் நிதானமாகி உக்கிரம் கொண்டு திரளும் போது, எளிமையாக இரண்டு பூக்களை எடுத்து வைப்பது போல், மொத்த நினைவின் அரசியலையும் ஆக்கியளித்தார். அக் கவிதை மொத்த விடுதலைப் போராடத்தினதும் கவிதைகளில் மகத்தான ஆக்கங்களில் ஒன்று. பிடாரனின் கனவிலிருந்து தப்பிக்கும் அவரது குரல் அவ்வச்சத்தை எதிர் கொள்ளும் ஒரு எளிய கறையான் ஆயிரம் கறையான்களின் நாவிலிருந்து தொட்ட எச்சிலிலிருந்து சொற்களை எடுத்து மண் நிகழ் மலையென ஆக்கியிருக்கிறது.

(சித்தாந்தன்)

*

நெய் உறிஞ்சிய தீபத்தின் ஒளி
பெருவெளிக்குத் திரும்புகின்றது

புதைக்கப்பட்டவர் யார்?
காற்றில் கரைந்துபோனவர் யார்?
புதிரின் ஆழ் இடுக்குகளில்
சொருகப்பட்டிருக்கின்றன சாவுகள்

இனி வரப்போவது யாருமில்லை
ஆயினும்
நினைவுகளின் புதைவிடத்தில்
நான் இரண்டு பூக்களை வைக்கின்றேன்

நினைவு கூரக்கூடிய
நினைவு கூர முடியாத
எல்லோருக்குமாகவும்.

*

கடற்கரை வெளி

1

சாவுகளால் ஓலமிடும்
கடற்கரை வெளியில் முளையிடுகின்றன
குழந்தைகளின் விரல்கள்.

2

காகங்களும் கரையாது
வெறித்து நீளும் கடலில்
அலைகளும் செத்தபின்
துயரங்களால் நிறைந்த காற்று
மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது.

3

பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது
அந்திச் சூரியன்.
குருதியின் நிறத்தை காறியுமிழ்ந்து போயின
நாட்கள்
போர் நாட்கள்.

4

சுட்டுவிரல் துண்டிக்கப்பட்டவனின் துப்பாக்கி
துருவேறித் துருவேறி
உப்பு மணலில் புதைகின்றது.

5

மரணம் நிரம்பிய கடற்கரை முற்றத்தில்
கால்களுக்குள் மிதிபட்டுச் சிதைந்துபோயிற்று
அவசரத்தில் மணமுடித்தவனின் கனவுகள்.

6

மாபெரும் பறை
தோல் கிழிந்து கிடக்கிறது.
வெற்றிக் களிப்பின் கீதங்களை
முணுமுணுக்கவியலாது
வயிறு பொருமித் துடிக்கிறது காற்று.

7

இலைகள் புலுண்டி மணக்க
மரங்களில் செத்துத் தொங்குகின்றன பறவைகள்.
பிணங்களை எரியூட்டிய தீயில்
புகைப்பிடிக்கிறான் படைவீரன்.

8

ஒப்பாரிகளும் ஓலங்களும் அடங்கிய நிலத்தில்
கொலையாளிகளின்
வெற்றிக் கூச்சலென இரைகிறது கடல்.

9

யாரும் திரும்பாத நிலத்தில்
பாலையை விரித்தபடி
கோபுரங்கள் உயர்கின்றன.
நினைவுகளை அழிக்க முடியாதவனின் குரலோ
அந்தரத்தில்…

10

சிதம்பிய கடலின் நுரைகளிலெல்லாம்
புழுக்கள்.

11

வானம்
கடல்
தரை
யாவுமே
கைகளற்றவனின் கனவுகளுக்கும் தொலைவில்.

12

கள்ளிகளும்
இன்னும் முட்செடிகளுமாய்
நினைவுகளின் புதரடர்ந்த நிலம்.

*

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

அழகிய எமது நகரத்தில்
பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில்
அவனது ஒளிரும் கண்களில்
உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள்

பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பிடாரன் முதலில் வாழ்ந்தானென
கதைகள் வளர்ந்தென ஊர்கள் முழுவதும்

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்

எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது

எனது அழகிய குடிசையில்
ஒரு முறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்

சபிக்கப்பட்ட காலங்களில்
நான் வாழ்ந்தேன்
நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக
எனக்குள் பெருகியபடியிருந்தது

பிறகு வந்த நாட்களிலெல்லாம்
பிடாரனின் புதல்வர்களின்
காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்துகிடந்தன
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன

பிடாரன் நகரம் முழுவதும்
சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு
துர்நெடியோடிருந்தது

அவனின் வாசகங்களாக
“இந்தப் பூமியில் தானும்
தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல
துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்”
எழுதப்பட்டிருந்தது

சனங்கள் முதலில் நம்பவில்லை
நகரில் பிணங்கள் திடீர் திடீரென முளைத்தபோது
அதிர்ந்து போயினர்

பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை
“பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை”
கிழித்தெறிந்தனர்

மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்

பிடாரனின்
திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து
நான் தப்பிச்செல்கிறேன்.

*

இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்

யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்
உமது சிடர்களோ
தாகத்தாலும்
பசியாலும் தலை தாழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்

கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த
உமது சொற்களில்
இருளின் வலி படர்ந்திருந்தது
சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை
நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது
பிறகுதானே
இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி

மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை
ஏன் விலங்குகளிடம் விட்டுச்சென்றீர்

அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம்
நின் தந்தையின் வனத்திலிருந்து
சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில்
உமது பற்களுமிருந்தனவாம்
பார்த்தீரா
காடுகளுக்கிடையில் மூடுண்ட
சரித்திரங்களிலெல்லாம் காய மறுக்கும்
உமது குருதியை

யேசுவே
மனிதர்களேயில்லாத உலகில்
தீர்க்கதரிசனமிக்க
உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர்
என்றுமே வற்றாத
கண்ணீர் நதிகளை ஏன் பெருகவிட்டீர்

எதுவுமே வேண்டாம்
யேசுவே
உமது பாவங்களைக் கழுவக்கூட
ஒரு நதியையெனினும்
அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா

மனிதர்களின் மொத்தப் பாவங்களையும்
முதுகுவளைய ஏன் சுமந்தீர்
பாவங்கள் முடிந்து போயினவா
உம்மைச் சூழ்ந்து துரத்துகிற
மனிதர்களின் பாவவினைகளிலிருந்து
நீர் ஒருபோதும்
தப்பிச் செல்லவே முடியாது.

*

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

(2008)

TAGS
Share This