உடுக்கொலியும் பறையும்
விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூர்த் தன்மையும் பரிசோதனையும் இணையும் வெளியில் நிலாந்தனின் மொழி கருக்கொண்டது.
நிலாந்தனது கவிதைகள் பெரும்பாலும் நெடியவை. மனிதர்களுடைய அலைச்சலையும் துயரையும் போலவே.
அவரது நெடுங்கவிதைகள் நெடுக உருவேற்றும் மொழிச்சந்தமொன்று நிகழ்ந்தபடியே இருக்கும். அது ஓடும் குதிரைகளின் தசைக் கால்களின் உறுதி கொண்டது. அம்மொழி அளிக்க விரும்பும் நம்பிக்கை, அத்தனைக்கும் பின்னர் எது எஞ்சுகிறதோ அதன் சாம்பலிலிருந்து முளைத்தெழும் ஒரு துளிருக்கானது.
மொழி தன்னைக் கரைத்து தான் பிறரென்ற கடலின் ஒரு துளி உப்பென உணரும் போது கொள்ளும் மனம் நிலாந்தனின் கவிதை மொழி. அதற்குத் தனியகம் என்பதொன்றில்லை. அதற்குள் எல்லோரும் வசிக்கும் கனவொன்று உள்ளது. அரசியல் கவிதைகள் இழக்கக் கூடிய காலவழுக்கள் நிலாந்தனிலும் நிகழ்வதுண்டு. அவை தன்னை இழப்பதினால் அடையும் ஒன்றினால் மதிக்கப்படும்.
*
நந்திக்கடல் – 2012 ஆவணி
மிஞ்சியிருப்பது
இரும்பும் சாம்பலுமே,
மாமிசத்தாலானதும்
சுவாசிப்பதுமாகிய
அனைத்தையும் சுட்டெரித்த பின்
தங்கத்தாலானதும்
துருப்பிடிக்காததுமாகிய
அனைத்தையும் கவர்ந்து சென்றுவிட்டார்கள்.
மாமிசத்தாலாகாததும்
துருப்பிடிக்கக் கூடியதுமாகிய
இரும்பையெல்லாம் சேகரித்து
உப்புக்களியில்
குவித்து வைத்திருக்கிறார்கள்.
உப்புக்களியில்
இருபோக மழையில்
துருவேறிக் கிடக்கிறது
கனவு.
காடுகளின் சூரியன்
நந்திக் கடலில்
உருகி வீழ்கிறான்.
கானாங்கோழி
காணாமற்போனவரின்
கடைசிச் சொற்களை
அடைகாத்திருக்கிறது.
(2012)
*
மழைக் குருவியின்
குளிர்ந்த பாரமற்ற குரல்
வீரர்களைப் புதைத்த காட்டில் சலித்தலைகிறது.
ஈமத்தாழியுட்
கார்த்திகை நிலவு
ஒளியூறிக்கிடக்கிறது.
வழிபாடில்லை
வணக்கப்பாடலும் இல்லை
நாயகர் இல்லை
பேருரை இல்லை
நனைந்த காற்றில்
உருகிக் கரையும்
தீச்சுடர் வாசமும் இல்லை.
பெயர்க்கப்பட்டது நடுகல் துயிலாதலைகிறது
பெருங்கனவு.
இரும்பு வணிகர்
உலவும் காட்டில்
பூத்திருக்கிறது
கார்த்திகைப்பூ.
*
கஞ்சிப் பாடல் 01
மாட்டு வண்டியைக் கொத்தி
விறகாக்கிய ஓர் ஊரிலே
அரிசியிருந்தது; நெல்லிருந்தது
அன்னமிருக்கவில்லை
மலத்துக்கும் பிணத்துக்கும்
விலகிநடந்தவொரு நெய்தல் நிலத்திலே
கடலிருந்தது படகிருந்தது
மீனிருக்கவில்லை
ஆலமிலை பாலையிலை பனையோலை தவிர
பச்சையாக இருந்த எல்லாவற்றையும்
சமைத்த ஒரூரிலே
கஞ்சி இருந்தது; வாய்ப்பன் இருந்தது
பசி இருக்கவில்லை
நீரிலே தொடங்கி
ஒரு நீரேரியில் முடிந்த ஒரு போரிலே
கடைசி மூன்று நாட்களும்
நீர் இருக்கவில்லை
தாகமிருந்தது.