சுய அழிவு

சுய அழிவு

எது கடைசியில்
மிக மிக ஆழமான பள்ளத்தாக்கோ
அதில் நான் வீழ்வேன்

மீண்டும் எழ முடியாதபடி
காயம்பட்ட உடலுடன்
கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில் கைவிடப்படுவேன்
கால் நுனிகள் அசையமுடியாதபடி தறையப்படுவேன்.

விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடி
தைக்கப்பட்ட இமைகளுடன்

கழுகுகள் கொத்திப் பார்வை மறைவதை
சூரியன் அப்படி ஒரே ஒருமுறை என்றெய்க்குமாக அஸ்தமிப்பதைப் பார்ப்பேன்.

பாவங்களின் சாம்பற் தணலில் உடல் வேக.

யாரும் கவனிக்காத வகையில் சிறுகச் சிறுகச் சாவேன்
ஒரு அழைப்புப் போல அல்ல
ஒரு பாவத்தைப் போல நிராகரிக்கப்படுவேன்.

சாகட்டும். சாகத் தான் வேண்டும் என்பது நிச்சயமாக மனங்களில் உரக்கக்
களித்துச் சாவேன். ஓர் ஒப்பில்லாத் துயரின் எந்த அசுமாத்தமுமின்றி
உப்பின் நீரின்றி

வேண்டி நிற்கும் மரணம் போல.

அழியட்டும் இப் பாவி.
அழியட்டும் அச் சாம்பலும்.

கண்ணீருடன் விடை கொடுக்க யாருமின்றிச் சாவது துக்கமல்ல.

ஒரு விருப்பம் போல சாவு
ஒரு முழு வாழ்க்கையையும் போன்றது.

(2022)

TAGS
Share This