விலங்கும் மனிதரும்
மனிதர்கள் என்ற தன்னிலையையும் விலங்குகள் என்ற பிறர்நிலையையும் மனிதர்களாகவே உருவாக்கிக் கொண்டவை. இயற்கையில் அனைத்தும் உயிர்களே. மனிதர் இவ்வுலகையாளும் கட்டுப்படுத்தும் உயிர்களாக வளர்ந்த போதே மனிதர் எதிர் விலங்குகள் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மனிதரைச் சிந்திக்கத் தெரிந்த விலங்குகளாகவே நான் அணுகுகிறேன். விலங்கு என்பதைக் கீழானதாகவோ போதமற்றதோகவோ நான் கருதவில்லை. அவற்றுக்கிருக்கும் உயிரியல்பின் தன்மைகள் சார்ந்து அவையும் மனிதர்கள் போலேயே தமக்கான தனித்தனி வாழ் முறைகளை இந்தக் கிரகத்தில் உருவாக்கியிருக்கின்றன. வாழிடம், உறவு முறைமுறை, உணவு, தொடர்பாடல், மகிழ்ச்சி, துயரம், காமம் அனைத்தும் அவற்றுக்கும் உண்டு.
Netflix இல் வெளியிடப்பட்ட டேவிட் அட்டன்பேர்க்கின் Our planet என்ற ஆவணப்படத் தொடர் உலகின் உயிரியல்புகளை அரிய காட்சிகள் வழியாகவும் அட்டன்பேர்க்கின் குரல் வழியாகவும் விளங்கிக் கொள்ளவும் அனுபவிக்கவும் கூடியது. பூமியில் வாழும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படத் தொடர். உதாரணத்திற்கு ஒரு படத்தில், தொலைவிலுள்ள சூரியனிலிருந்து எழுந்து வரும் ஒளித்துளிகள் தாவரங்களில் கனிந்து விலங்குகளில் திரண்டு இரண்டின் வழியாகவும் மனிதர்களிலும் நிறைந்து பூமியில் வாழ்வை எப்படிச் சாத்தியப்படுத்துகிறது என்பதைக் காட்டியிருக்கும். பசி, வேட்கை, வாழ்வின் நிச்சயமின்மைக்கு எதிரான உயிர்களின் போராட்டமும் அதன் வழி அவை அடையும் அனுபவங்களும் அவற்றை எவ்விதம் தகவமைத்துக் கொள்ள வைக்கிறது என்பது காட்சிகளின் மூலம் நம்மில் தொற்ற வைக்கும். அவ்வாவணத்தொடர் மேற்குலகின் இயற்கை மீதான பார்வைகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்திலெடுக்க வேண்டும்.
*
மின்னஞ்சலில் வந்த கடிதமொன்றில் நண்பரொருவர் “காமம் விலங்குணர்ச்சி என்கிறீர்கள். ஆம் மனிதர் விலங்கில்லை என்றால் அதெப்படி விலங்குணர்ச்சி? உயிரின் இயல்பும் இயற்கையின் வடிவமைப்பும் இனவிருத்தி என்பதனால் காமம் இயல்பான ஒரு உணர்வு தானே மனிதருக்கும்” என்று கேட்டிருந்தார்.
மனிதர் என்ற வரைவிலக்கணத்தை நாம் குழந்தைகளுக்கு எவ்விதம் வேறுபடுத்தி அளிக்கிறோம்?
மனிதர்களுக்கு ஆறாவது அறிவொன்றுள்ளது. அது பகுத்தறிவு. எது நல்லது எது தீயது என்பதை விலத்தி அதன் வழி மனிதர்கள் தம்மை விலங்கிலிருந்து பிரித்துக் கொண்டார்கள்.
இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொன்னால் மனிதர்கள் தங்கள் கற்பனையின் ஆற்றலின் மூலமே விலங்கிலிருந்து மேலெழுந்து அதிகாரம் மிக்க உயிர்த்தொகுதியாகத் தம்மை நிறுவினார்கள். விலங்குகளையும் மனிதர்களையுன் பிரிக்கும் முக்கியமான அம்சமாக இதையே நான் பார்க்கிறேன்.
பசி போல், தாகம் போல், காமமும் ஒரு ஆதார உணர்ச்சி, மனிதரிலும் விலங்கிலும் கூட. அது தனியே இனவிருத்தி சாதனமாக மட்டும் பயன்பாட்டிலில்லை. காமத்தில் உடல் சார்ந்து உண்டாகும் மகிழ்ச்சியே பிரதானமானது. இனவிருத்தி என்பது ஒரு உப செயல். உதாரணத்திற்குத் தற்பாலீர்ப்பாளர்கள் சந்ததி உற்பத்தியில் ஈடுபடும் வாய்ப்பில்லை. ஆகவே சந்ததி உற்பத்தியே இயற்கையானது, இயல்பானது என்ற பொதுவான புரிதலுடன் நாம் காமத்தை அணுக முடியுமா? காமம் கற்பனையில் பலநூறு வகைகளெனப் பிறந்து கொண்டேயிருக்கிறது.
உயிர்கள் தம் உயிர்வகைமையைக் காக்க அவை இனவிருத்தியைச் செய்து கொள்கின்றன. ஆனால் இனவிருத்தி நிபந்தனை அல்ல. ஒரு தெரிவு. எல்லா வகையான ஆதார உணர்ச்சிகளிலும் ஒருவகை விலங்குத்தன்மை உண்டு. அவை கட்டுப்படுத்தப்படும் பொழுதும் ஒழுங்குபடுத்தப்படும் பொழுதும் பகுத்தறிவு இயங்காத உள்ளடுக்குகளுக்குச் செல்வதுண்டு. அவை மீறல்களையும் தமது உணர்ச்சிகளின் தேவைகளையும் அடைய புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும். விலங்குகளுக்குக் காமம் ஒரு உயிரியல்பு. மனிதருக்கும் அப்படியே. இதில் பெண்களை விட ஆண்களுக்கே விலங்குத்தன்மை மிகுதி. ஏதோவொரு வகையில் பெண்களை விட சுதந்திரம் வாய்க்கப்பெற்ற உடல்களாக அவர்கள் இருப்பதனாலும் காமத்தைப் பெரும்பாலான ஆண்கள் உடல் சார்ந்ததாகவே மட்டுப்படுத்துவதனால் அது மிகவும் விலங்குத் தன்மை வாய்ந்ததாகிறது, மகத்தான கற்பனைகளின் வழி நுண்மையாக்கம் செய்யப்பட வேண்டியது ஆண் காமம். யானைகளில் ஆண் யானைகள் தான் மதநீர் சுரப்பவை. மதம் கொண்டலைபவை. அதனாலேயே காமம் தொடர்பில் கீழைப் பண்பாடுகளில் நாகங்களுக்கு நிகரான குறியீட்டு முக்கியத்துவம் யானைகளுக்கும் இருக்கிறது.
சம நேரத்தில் பெரும்பாலான பெண் உடல்களும் காமத்தை உடலெனும் அளவிலேயே சுருக்கிக் கொள்கின்றன. அதுவும் கீழைத்தேய மரபுகளில் மதங்கள் வழியும் இலக்கியங்கள் வழியும் உண்டாக்கி நிறுத்தப்பட்ட புனிதங்களின் எடை கொண்ட உடல்கள். இந்தப் புனிதம் மிகையான சுமையையும் அழுத்தத்தையும் பெண்களுக்கு அளிக்கிறது. அதனால் உண்டாகும் உடல் தனக்கு நிகழும் அநீதிகளை எது சிறிதோ பெரிதோ, கடக்க முடியாத படி ஆக்கிவிடுகிறது. அல்லது நமது பண்பாடு அக் காயங்களை ஆற விடாமல் பராமரிக்கிறது. காமம் உடல் சார்ந்தது மட்டுமல்ல, அது கற்பனை சார்ந்ததும், மகிழ்ச்சியும் துயரும் சார்ந்ததும் கூட. இவை விரிவாக உரையாடப்பட வேண்டியவை. நான் சில அவதானங்களைச் சுட்டியிருக்கிறேன்.
மனிதர் கற்பனையின் ஆற்றலின் மூலம் காமத்தின் மகிழ்ச்சியைப் பலமடங்கு உருப்பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். கற்பனையில் வறட்சியும் மிதமும் அதீதமும் நிகழலாம். வறண்டதும் அதீதமானதுமான கற்பனைகள் காமத்தை விலங்காக்கும். மிதமானதே நாம் பொதுவில் கருதும் மனித உணர்ச்சி. ஆனால் மானுடம் எனும் பெருக்கில் பாலையும் உண்டு, பனிமலைகளும் உண்டு. வாழ்வு அங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
மானுடரின் காமத்திற்கு என்ன எல்லைகள், எது காமத்தைக் கற்பிக்கிறது. உயிரியல்பாய் உள்ள உடலுந்துதலும் நாம் உருவாக்கியுள்ள சமூக, மத, கலாசார அமைப்புகள் கொண்டிருக்கும் நெறிமுறைகளும் தான் காமத்தை மனிதருக்குக் கற்பிக்கும் பெரும்பான்மைக் கருவிகள். இதில் கலை இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
நமது விலங்குத்தன்மைகளிலிருந்து கற்பனையே நம்மை விடுதலை செய்யும் கருவி. அதன் பணி ஆதார உணர்ச்சிகளை நுண்மையாக்குவதன் மூலம் இதுவரை மானுடம் உருவாக்கிய மனிதரை மேலும் விரிவாக்குதலும் செம்மைப்படுத்துதலும். உதாரணத்திற்குப் பசி ஒரு ஆதார உணர்ச்சி. ஒரு உணவளிக்காத மனிதரோ உயிரினமோ தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தி உணவை நாடும். ஆனால் நமது அற இலக்கியங்கள் உணவு இல்லையென்றால் கூட களவு செய்யாதே, கொல்லாதே என வகுப்பவை. அதே நேரம் தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று மூர்க்கமும் கொள்ளக் கூடியது. இதுவொரு முரணியக்கம்.
இயல்பு என்ற தன்மை இயற்கையானது என்பதாகவே புரிந்து கொள்கிறேன். இந்த இயற்கையானதினை அடையும் வழியினை நாம் கற்பனையினாலும் சிந்தனைகளாலும் விரிவாக்கிக் கொண்டும் ஒருங்கிணைத்துக் கொண்டும் செல்கிறோம், ஒருவகையில் விலங்குணர்ச்சியிலிருந்து நாம் கற்பனை செய்யும் மனித உணர்ச்சிக்கு நகர்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி மானுட உயிர்களின் பெருக்கில் ஒழுகிக் கொண்டு செல்கிறோம்.
கலை இலக்கியக்கங்களின் பணி அவற்றினை இயற்கையின் மூலத்திற்கு நுண்மையாக்கம் செய்வது. இயற்கையின் மூலத்துடன் இவ்வுயிர்த் தொகுதியை இணைத்துத் தகவமைப்பது.
காதல் ஒரு மானுட உணர்ச்சி, அது மனிதர்களாலேயே ஆக்கியளிக்கப்பட்டது, விலங்குகளில் இணைத்தேர்வு நடக்கும் செயல்முறைகள் தான் மனிதருக்கும். சில அடிப்படைகளில் ஒற்றுமைகள் இருக்கும், அதே நேரம் மனிதர்களின் தெரிவுகள் இன்னமும் விரிவுபடுத்தவும் நெறிமுறைப்படுத்தப்படவும் வேண்டும். மனதின் ஆழத்தில் உள்ள ஆதிவிலங்கின் கட்டற்ற தன்மையை மனிதர் எதிர்கொண்டாக வேண்டும். பாலியலில் கட்டற்ற சுதந்திரம் என்பது கிடையாது.
மனம் கட்டற்ற தன்மையை விழைவது, ஆகவே தான் அதன் தன்மையை விலங்கென்று கருதுதல், அதன் மேல் மானுடர் உருவாக்கியுள்ள பொது நெறிமுறைகளின் போதாமையை உணர்த்த்தும் சொல். மானுடக் காமம், மானுடக் காதலால் நெறிகொள்கிறது. மானுடக் காதல் காலத்திற்குக் காலம் தன்னை விரிவுபடுத்தி வருகிறது. அது ஒரு வளரும் உயிர்நிலை.
மேற்குலகம் காமத்தினைக் குற்றவுணர்ச்சியின் மூலம் கட்டுப்படுத்த முனைந்தது, கீழைத்தேய நாகரீகங்கள் அவற்றைக் கொண்டாட்டத்தின் மூலமும் ஆன்மீகத்தின் மூலமும் வெல்லும் கருவிகளை உருவாக்கியது. கீழைத்தேயத்தின் ஆலயங்களில் காமத்தின் பல்வகைமைகள் இன்னமும் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் அப்படியே உருவாகி வந்தன. அது ஒரு மாபெரும் பண்பாட்டின் பல்வேறு தன்னிலைகள் எனக் கொள்ளக் கூடியவை.
சுருக்கமாக, கலையும் இலக்கியமும் காமம் என்ற ஆதி விலங்கை மானுடக் கனவின் மூலம் விடுவிக்கும் கருவிகள்.