வசைவெளிக் கண்ணிகள்
புத்தர் தன் சீடர்களுடன் ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார். அந்தக் கிராம மக்கள் இனிப்புகளையும் சுவையான உணவுகளையும் கொணர்ந்து புத்தருக்கு அளிக்க முயன்றனர். புத்தர் அவற்றை ஏற்க மறுத்தார். அம்மக்கள் அவற்றைத் தாங்களே திரும்ப எடுத்துக்கொண்டு சென்றனர். அடுத்த கிராமத்திற்குள் நுழைந்த போது அங்கிருந்த மக்கள் புத்தரை வசைகளாலும் கெட்ட வார்த்தைகளாலும் ஏசிக் கொண்டிருந்தனர். புத்தர் அமைதியாகச் சென்று கொண்டிருந்தார். அவரது சீடர்களுக்குத் தாங்க முடியாத கோபம் ஏழுந்தது. அவர்கள் புத்தரிடம் சென்று அம்மக்களிடம் இவை எதற்காக என்று கேட்கப் போகிறோம் என்று சொன்னார்கள். முன்னர் சென்ற கிராமத்தில் அந்த மக்கள் இனிப்புகளும் உணவுகளும் தந்தனர். அதை நாம் ஏற்கவில்லை என்றதும் என்ன செய்தனர்? என்று கேட்டார் புத்தர், அவர்களே திரும்ப எடுத்துச் சென்றனர் என்றனர் சீடர்கள். அதேபோலத் தான் இவர்கள் சொல்வதையும் நாம் ஏற்கத்தேவையில்லை. அவர்களே அச் சொற்களைத் திரும்பத் தமக்குள் எடுத்துச் செல்வார்கள். ஓஷோ சொன்ன குட்டிக் கதையிது.
அவதூறுகளையும் வசைகளையும் நான் எப்படி எதிர் கொள்கிறேன் என்று பலநண்பர்கள் கேட்டிருந்தனர்.
என் மீது வசைகளையும் அவதூறுகளையும் விரும்பியபடி இறைத்த பலருடையதும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் நிம்மதிக்கும் நான் என்னவெல்லாம் செய்தேன் என்பதை நினைத்துப் பார்த்தேன். ஒரு எல்லைக்கு மேல் அங்கு நின்று பார்ப்பது அவர்களது சிறுமையின் நிழல் என்மேலும் படர்ந்துவிடுமோ என அஞ்ச வைத்தது. அதில் பலரும் என் மீது ஆளுக்கொரு கல்லை எறிந்து விட்டு மகிழ்வதைப் பார்த்தேன். மனிதர்கள் சிறுமைகள் மீது ஏன் இவ்வளவு களியாட்டம் கொள்கிறார்கள் என்பதன் சலிப்புத் தீரவே போவதில்லை என்பதை அறிவேன். மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்பதல்லவா, இலக்கியம் சொல்லித் தரும் அடிப்படைப் பாடம்.
ஒவ்வொரு வாய்ப்பிலும் இன்னொருவரைக் கீழிறக்கும் கீழ்மை மானுட அகத்தில் எங்கு குடிகொண்டுள்ளது. அதன் இருள் நிழலென வீழ்ந்து தரையில் அலைய, யாரைத் திருப்தி செய்ய இந்த அவச்சொற்கள்?
உண்மையில் பலரும் தம் சொந்தத் தாழ்வுணர்ச்சிகளிலிருந்தே எழுந்து வருவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய எளிய வாழ்வு அளிக்காத மகிழ்ச்சியை ஒரு சிறு வெளிச்சத்தை இன்னொருவர் பெறும் போது உள்ளூர அகம் காந்துகிறது. கொஞ்சம் வாழ்வில் முன்னேறுபவர்களை, பெறுமதி கொள் வாழ்க்கையை வாழ்பவர்களை அடித்து வீழ்த்தும் யுத்தத்தில் தானாகவே சென்று வாள்களாகவும் கேடயங்களாகவும் ஆகுவார்கள். தம்மை முழுமூச்சுடன் செயற்பட வைப்பது எது என்பதை அவர்களறியவே போவதில்லை. இதை வாசித்தாலும் கூட மேலும் அவர்கள் மந்தத்தனமும் தாழ்வுணர்ச்சியும் அகங்காரமும் புண்படுமே ஒழிய, மாறிக்கொள்வது கடினம். அதற்கு ஒருவருக்கு வாழ்வை முற்றிலும் வாழ்ந்து முன்செல்லப் பாதை இருந்தாக வேண்டும். அதில் யாருமறியாத இருட்டில் துணையின்றி நடக்கும் துணிவிருக்க வேண்டும். எனது வாழ்வை நான் ஆக்கிக் கொள்ள என் முழுதையும் அளித்திருக்கிறேன் என்ற தன்னுணர்வு என்னிடமிருக்கிறது. அதன் சிறுசாரல் கூட விழாத மானுட உள்ளங்களின் ஏக்கங்களைப் புரிந்து கொள்கிறேன். அதற்காக அவர்களுடன் இடையறாது உரையாடிக் கொண்டிருப்பது என்னை என் எல்லைகள் விரித்துச் செல்ல எவ்வகையிலும் உதவப்போவதில்லை. என்னை கவனிக்கும் இடத்திலிருப்பவர்கள் அவர்களே. நானில்லை. என்னை விமர்சித்து மதிப்பிட எனக்கான பாதைகளை நான் அவர்களுக்கு அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் அதைத் தேர்ந்தெடுக்க விரும்ப மாட்டார்கள். அதற்கான உழைப்போ நிதானமோ அற்றவர்கள்.
இந்த வசைவெளியைக் காணும் ஒரு இளம் எழுத்தாளர் அல்லது கலைஞர் தனக்குள்ளே சுருண்டுவிழவே வாய்ப்பிருக்கிறது. அரசியல் சரிநிலைகளின் சுருக்குக் கயிற்றில் அவர்கள் தங்கள் தலைகளைக் கொண்டே பொருத்திக் கொள்ள முனையக்கூடாது. அவற்றை மீறியெழும் மகத்தான மானுடக் கனவுகளையே அவர்கள் பொருட்படுத்த வேண்டும், ஆக்கியளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் கற்பை நிரூபித்துக் கொண்டிருக்கவோ, தீக்குழி மிதிக்கவோ அவசியமில்லை.
இந்த மந்தர்களும் இல்லையென்றால் நம்மை அன்றாடம் நினைவில் கொள்வது யார் என்ற பரிவு இருக்க வேண்டும்.
ஒரு எழுத்தாளர் அல்லது கலைஞர் வசைகளினதும் திரிபுகளினதும் கடுங்காற்றுகளுக்கு அஞ்சி ஒரு போதும் தம் செயலாற்றலை இழக்கக் கூடாது என்பதே நம் மரபின் மூத்தவர்கள் அளிக்கும் வாழ்சொல்.
எந்த வம்புக்கும் போகாமல் இலக்கியமோ கலையோ புரியும் தரப்பினர் கூட மறுவளமாக மனிதர்களின் மந்தத்தனங்களைச் சுட்டியபடியே இருக்கிறார்கள். மந்தர்கள் அறியாத மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதால் பிழைத்துக் கொள்கிறார்கள்.
அறிவுச் செயற்பாடுகள் எதுவுமே ஏற்கெனவே உள்ளவற்றை விரிவாக்கி அவற்றின் இடைவெளிகளை நிரப்பியபடி ஒழுக்கிச் செல்லும் பேராறு.
தனிநபர் வசைகளினதும் கேலிகளினதும் ஊற்றுமுகம் சொந்த அகத்தின் இழிவுகளை இட்டுநிரப்பும் காக்கை போட்ட கல்லுகள் மூலம் நீருயரும் கலம். நீருக்குப் பதில் குருதி குடிப்பதே மந்தர்களின் தாகம் தீர உதவும். அதன் மூலம் அவர்கள் ஒருவரை மெய்நிகர் வெளியில் கொன்றுவிட்ட குரூர திருப்தியை அடைகிறார்கள். இருந்தால் எங்களோடு இரு. இல்லையென்றால் நீ இருக்கவே கூடாது என்பது தான் மந்தர்கள் மனதின் எளிய தர்க்கம்.
தம் வாழ்வில் சமூகம் பொருட்படுத்தும் எந்தச் செயல்களையும் மந்தர்கள் ஆற்றுவதில்லை.
பொருள்கொள்ளும் செயல்களைப் புரிபவர்களுக்கு இத்தகைய அவதூறுகளுக்கும் திரிபுகளுக்கும் ஒதுக்கிக் கொள்ள நேரமிருக்குமா? ஆகவே தான் மந்த யுத்தத்தில் அவர்கள் ஈடுபடுவதில்லை. ஆகவே அனைவரும் தம் யுத்தத்தில் எதிரியின் பக்கத்தில் நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை மந்தர்கள் உருவாக்குவார்கள்.
அறிவூக்கம் கொண்டவர்கள் பற்றியோ அவர்கள் ஆற்றும் பணிகள் பற்றியோ அடிப்படைப் புரிதல்கள் கூட மந்தர்களிடம் இல்லை. எந்தவொரு சமூக செயல்பாடும் அறிவுத்தள விவாதமும் முதலில் கோரக்கூடியது நிதானம் எனும் உணர்வையே. வசைவிரும்பிகளின் ஆதார விசை தாம் நம்புவது நீதியானது என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் வாழ்வின் மீதான சலிப்பும் ஊக்கமின்மையும்.
தம் தவறுகளை அவர்கள் சொந்த உள்ளுணர்வால் மீண்டுவரப் பெரும் உழைப்பைச் செலுத்த வேண்டியதிருக்கும். தாங்கள் நம்புபவற்றைச் சந்தேகிக்கும், மாற்றிக்கொள்ளும் மனவிரிவு உருவாக வேண்டும். சிலராவது தம்மைச் சீர்திருத்தி வெளிவந்து பொருள்படும் செயல்களை ஆற்றுவதன் மூலம் தமது சொந்த அகச்சிக்கல்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
வசைவெளியில் உண்மையில் ஒருவர் வீழ்ச்சியடையும் இடம் என்பது தனது சொந்த செயலூக்கம் குன்றுமளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை உள்ளெடுப்பதினால் மட்டுமே உண்டாகும். அதன் மூலம் ஒருவர் தன்னை இழப்பது தான் மந்தர்கள் அடைய நினைக்கும் வெற்றி. எதிர்மறை மனநிலை கொண்டவர்களின் எக்காலத்திற்குமான நோக்கம், ஒன்றை அழிப்பது மட்டுமே. அதற்கு மாறாக ஆக்குபவர் என்ற நிமிர்வை அவர்கள் முன் ஒரு எழுத்தாளர் முன்வைத்தே ஆக வேண்டும்.
என்மீது எந்தவித அடிப்படை அறங்களையும் கொள்ளாமல் ஒருவரால் எந்த எல்லை வரையும் சென்று அழிக்கும் குரூரமும் வன்முறை எண்ணமும் கொள்வாரென்றால், அத்தகையவர்களைப் பொருட்படுத்தாமல் முன்செல்லும் குறைந்தபட்ச உரிமையாவது எனக்கும் இருக்கிறது.
வெறுப்பின் நாவுகள் தீண்டாத இடத்தில் என்னை நிறுத்திக் கொள்ளும் உரிமையும் எனக்கிருக்கிறது. அத்தனை கசப்பும் வெறுப்புமான வசவுகளையும் திரிபுகளையுமே பெரும்பாலானவர்கள் முன்வைத்துள்ளனர். அவற்றுக்கான எனது தரப்பினை அளிக்கத் தொடங்கியதும் மேலும் மேலும் குப்பைகளென என் மேல் இறைத்துக்கொண்டே இருந்தார்கள். ஒருபடி மேலே போய் எனது கட்டுரைகளைப் பகிர்பவர்கள் வரை சென்று இவன் எழுதியதை எதற்குப் பகிர்கிறீர்கள், இவன் ஒரு கொடூரன் என்னுமளவிற்கு மெய்நிகர் வெளியிலும் இன்பொக்சுகளிலும் விழுந்து புரண்டிருக்கிறார்கள். எனது எழுத்துக்களைப் பகிர்வது ஒருவரது சொந்த விருப்பம். அதற்காக ஒருவரைத் தாக்குவது எவ்வகையான கருத்துச் சுதந்திரம்? அதுசரி, சராசரிகளுக்குக் கருத்துச் சுதந்திரம் பற்றி ஏதாவது போதமிருக்குமா என்ன?
பலருக்கும் எனது கருத்துகளில் உடன்பாடுகள் இருந்தாலும் இந்த மந்தர்களுக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டவர்களிடம் இந்த வம்பளப்புகளிற்குள் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியான அன்றாடத்தை இழக்க வேண்டாம். அவர்கள் உங்களிடம் மாற்றுக்கருத்தே இல்லாத, ஏற்பையே விரும்புகிறார்கள். அவர்களிடம் உங்களால் உரையாட முடியாது. ஆனால் அவர்களின் பார்வைகள் எவ்வளவு குறைபாடுகள் உடையவை என்பதை அவர்களே நிரூபித்துக் கொண்டுமிருக்கிறார்கள். இவர்களுண்டாக்கும் எதிர்மனநிலைகளுக்குள் சிக்கிக் கொள்ள வேண்டாம். பகிர்வதைத் தவிருங்கள் என்றே சொல்லி வருகிறேன்.
அதே நேரம் இத்தகைய சராசரி மந்தர்களிடமிருந்து கருத்துவெளியைக் காப்பாற்ற வேண்டிய பங்கும் குன்றாத செயலூக்கம் கொண்டவர்களுக்கு இருந்தாகவேண்டிய குணநலன். ஆனால் எத்தனை பேருக்கு அத்தகைய வாய்ப்புகள் இருக்கும். மூர்க்கரொடு முயல்வானேன் என எண்ணுவதன் மனநிலையை முற்றிலும் புரிந்து கொள்கிறேன். இது ஒரு எழுத்தாளராக நான் எதிர்கொள்ள வேண்டிய அவச்சொற்களும் வசைகளும். அது எல்லாக் காலத்தினதும் முன்னோடிகளுக்கும் நிகழ்ந்திருப்பது. நீ என்ன அறிவாளியா, உனக்கு என்ன தெரியும் என்று கேட்பவர்கள், தமக்குள் தாம் கேட்கும் சொந்தக் கேள்வியுடனேயே, வெளிவருகிறார்கள். ஒரு முன்னோடி அனைத்தையும் தழுவிச் செல்லும் பெருநதி என்கிற உருவகம். அதில் பூக்களும் மிதக்கும் சருகுகளும் உதிரும் மலமும் தாழும். ஆனால் நதியியல்பு தனது கரைகளைப் புரவியென மோதிச் சுழன்றெழுந்து பெருகுவதே.
*
மனுஷ்யபுத்திரன் சொன்ன கூற்று ஒன்று உண்டு, “நான் ஒரு தெருச் சண்டைக்காரன். நான் யாருடன் சண்டை போட்டுக்
கொண்டிருக்கிறேன். எங்கள் எதிரிகள் என்பவர்கள் யார்? உண்மையில் மிகப்பெரிய எதிரிகளுடன் சண்டை போட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். மிகப்பெரிய அதிகாரத்தோடு, மிகப்பெரிய சக்திகளோடு, ஆனால் நிறைய நேரம் தெருப்பொறுக்கிகளோடு சண்டை போடவேண்டியிருக்கிறது. இது தான் எமது காலத்தின் பெரிய அவலமாக நினைக்கிறேன். ஒரு எழுத்தாளன் யாருடன் எல்லாம் சரி சமமாக இருந்து சண்டை போடக் கூடாதோ, யாருடன் எல்லாம் சமனாக இருந்து பேசக் கூடாதோ அவர்களிடமெல்லாம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்”.
*
வெறுப்பும் கசப்பும் ஒளிந்து கொள்ள இடம் தேடிக்கொள்வது. அன்பும் பரிவும் எவ்விருளிலும் மின்னி வெளிப்படும் ஒளி. தானே நினைத்தாலும் தன்னை ஒழித்துக்கொள்ள முடியாதது.
றமணரிடம் ஒருவர் கேட்கிறார், நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்று. அதற்கு அவர் மற்றவர்கள் என்று யாருமே இல்லை என்கிறார்.
வெறுப்பு நாம் மற்றவர்கள் மேல் கொள்வதல்ல. அது நமது சொந்த ஆன்மாவில் விழும் நஞ்சின் துளி. அதனை விழாமல் காத்து முன்னகர்வது நம் காலத்தின் அன்றாடப் பணி.
குறிப்பு: நிழல் வலைக் கண்ணிகள் என்பது பிரமிளின் வரியொன்று, ஜெயமோகன் அவதூறுகளின் வெளியை, வசைவெளி என்று சுட்டுகிறார். இரண்டினதும் இணைவே இக்கட்டுரையின் தலைப்பு.