இளங் கோதல்

இளங் கோதல்

மொழிக்குள் துணிச்சலுடன் நுழைந்து விட்ட திருடனொருவன் அதன் யாருமறியாத பொக்கிஷங்களை அள்ளித் தன் குகைக்குள் சேர்ப்பது போல் தமிழுக்குள் நுழைந்த கள்வன் இசை.

அநாயசமான தோற்றம் கொண்ட எளிமையான கள்வன் என்ற தோற்றமே இசையின் கவிதைகளை வாசிக்கும் போது எழுவது. இன்னொரு தருணத்தில் மொழிக்குள் புகுந்து அதன் உடலைக் கோதிவிடும் இளங்கோதலின் சிலிர்ப்பு.

நவீன தமிழ்க் கவிதையில் கொஞ்சம் அசால்டான தேர்ந்த பஸ் ட்ரைவரின் பாடல் தெரிவுகள் போல் நுட்பமும் உள்ளிணைவும் சங்கீதமும் கொண்டவை இசையின் கவிதைகள். மானுட உணர்வுகளின் என்றைக்குமுள்ள தோற்ற மயக்கங்கள் இன்றைய நிகழுலகின் போக்கில் எத்தகைய நுண்ணுர்வுள்ள மாற்றங்களை உருவாக்கியுள்ளன என்பதை இசையின் கவிதைகள் பாடுகின்றன.

துக்கமும் பாவமும் என்றுமுள்ளதைப் போலவே விட்டேற்றி மனங்களும் கொண்டாட்டங்களும் என்றுமுள்ளவை. அவை ஒரு சமூக இருப்பின் அடிப்படை விதிகள். அக் குரல்களின் திரளுரு என்று நிகழ்ந்த வருகை இசையினுடையது.

(இசை)

*

டெஸ்க்கில் தாளமிடும் பையன்கள்

உங்களுக்கு டெஸ்கில் தாளமிடும்
அந்தப் பையனை
நினைவிருக்கிறதா?

அவன்
ஒவ்வொரு வகுப்பிலும் உண்டு
பெரும்பாலும்
கடைசி பெஞ்சில் ஒளிந்து கொண்டு

டெஸ்கில் தாளமிடும் பையன்
என்றொருவன் இருந்தால்
அவனுக்குக் காதலி
என்றொருத்தி கட்டாயம் இருப்பாள்

மதிப்பெண் அட்டை வழங்கப்படும் நாட்களில்
எல்லா மதிப்பெண்களையும்
ஒன்றாக்க வேண்டி
அவர்கள்
கட்டாயம் இசைப்பார்கள்

டெஸ்கில் தாளமிடும் பையன்கள்
டிரம்ஸ்சைத் தொடாமல்
பறையைத் தொடாமல்
தாளத்தைத் தொட்டார்கள்

பிறகு

அவர்கள்
தாளத்திலிருந்து எழுந்து

கல்லூரிக்குப் போனார்கள்

அலுவலகம் போனார்கள்

வீட்டுக்குப் போனார்கள்

ஷமத்துக்குப் போனார்கள்

தந்தைக்குப் போனார்கள்

டெஸ்கில் தாளமிட்ட பையன்கள்
டெஸ்கில் தாளமிடும் பையன்களைக் காண்கிறார்கள்
ஒரு நினைவும் இல்லாமல்.

*

தேநீர்க் கடைச்சந்தனம்

முதல் முறை பார்த்த போது
ஊரும், பேரும் விசாரித்தேன்
என்பது தவிர
உறவேதுமில்லை

இப்போது ஊர் மட்டும் நினைவிருக்கிறது

இடையில் சில மாதங்கள் காணாமல் போய்விட்ட அந்த வளரிளம் சிறுவன்
இன்று
மீண்டும் தென்படுகிறான்

கருத்த வதனத்தின்
நெற்றிப் பொட்டில்
சந்தனத்தின் பொன் ஊஞ்சல்
அன்று போலவே
ஆடிக் கொண்டிருக்கிறது

என்னை தூரத்தில் கண்டதும்
முகம் முழுக்க அரும்பி
நெளிந்து
குழைந்து
நெருங்கி வந்து
“சாப்பிட்டீங்களாண்ணே…?”
என்றான்.

நேரம் அப்போது
முற்பகல் 11: 30

ஆகவே

அது காலை உணவைக் குறிக்காது

மதிய உணவைக் குறிக்காது

உணவையே குறிக்காது.

*

நான் கர்ணன்

சாரங்கி கேவத் துவங்குகிறது.

பால்ய நண்பனோடு பழங்கதைகள் பேசியபடியே
டேபிளுக்குக் கீழே
அவன் மனைவியின் தொடை மீது
கைவைத்துள்ள ஒருவன்
தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான்

கழுத்துச் சங்கிலிக்காக
தாயின் தலைமீது
பெரிய கல்லைத் தூக்கிப் போட்ட
ஒரு செல்வன்
தானும் சேர்ந்து விம்மத் துவங்குகிறான்

விம்மிச் செழித்த முலைகளால்
முதலாளியின்
மாந்தோப்புகளை
வளைத்துப் போட்டுக் கொண்ட ஒருத்தி
தானும் சேர்ந்து
விம்மத் துவங்குகிறாள்

கொஞ்சமே இருக்கும் மதுவை
சமமாகப் பகிர வேண்டிய
இக்கட்டான தருணத்தில்
எதிரே இருக்கும் மனிதனுக்கு
விட்டத்துப் பல்லியை வேடிக்கை காட்டுவேன்

ஆயினும்
நான் கர்ணன்

சாரங்கி வில்லும்
ஒரு குடிகாரக் கவிஞனும் சேர்ந்து
போகிற போக்கில்
ஒரு உள்ளம் விடாமல்
எல்லா உள்ளத்தையும்
‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’
ஆக்கி வைத்தார்கள்.

*

உனக்கு நீயே தான்

உனக்கு நீயே தான்
சொக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மிஸ்டுகாலில் விளையாடிக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
வாழ்த்து தெரிவித்துக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
மறந்த பொருட்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்
உனக்கு நீயே தான்
பின்னால் வந்து கட்டிக் கொள்ள வேண்டும்
உனக்கு நீயே தான் நிலா காட்டிக் கொள்ள வேண்டும்
நீயே தான் உன் காதில் கிசுகிசுத்துக் கொள்ளவேண்டும்
நாலாவது ரெளண்டில்
உனக்கு நீயே தான் கண்டித்துக் கொள்ளவேண்டும்
உன் கண்ணில் நீர் வழிந்து உன் நெஞ்சிலேயே தான் உதிரமும் கொட்டவேண்டும்
உன் தலையை அரிந்து
உன் மடியில் போட்டுக் கொண்டு
நீயே தான் கோதிவிட வேண்டும்.

*

அமர காதல் கவிதை

இந்தச் சொற்கள் யார் மீது பாடப்பட்டதோ
அவள்
அதற்குத் துளியும் அருகதையற்றவள்

இந்தச் சொற்களை எவன் பாடினானோ
அவன்
இதற்குமுன் இப்படி
பலபேரைப் பாடியவன்

ஆயினும்
இரு ஈனர்களுக்கிடையே
வந்து அமர்கிறது
ஒரு அமர காதல் கவிதை

அதைக்
காதலின் தெய்வீகம் எழுதுகிறது
அதுவேதான்
வாசித்தும் கொள்கிறது.

*

ஸ்தலம்

மண்ணில் இருந்த கையை எடுத்து
மடியில் ஏந்திப் பற்றிக் கொண்ட பின்
ஆழ்ந்த குரலில் மெல்லக் கேட்கிறாய்…

” இப்போது சொல்… எங்கு செல்லலாம்?”

இல்லை…
இல்லவே இல்லை…
உன் கைகளைப் பற்றிக் கொண்ட பின்
இனி
போவதற்கென்று
இந்த உலகில்
இன்னொரு இடம் இல்லை.

*

மானிடர்

அவசரத்தில் இருக்கும் இளம் பெண்
ஸ்கூட்டியை விட்டு இறங்காமலேயே
மாகாளியம்மனின் வாசலில்
காலூன்றிப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு அவசரமுமின்றி
ஆடி அசைந்து
வெளிவரும் ஒரு மூதாட்டி
தன் கைக்குழியை ஒற்றி எடுத்து
பூசி விடுகிறாள்
அவளுக்கு.

பிசிறை
கண் மறைத்து
ஊதியும் விட்டாள்

அந்த ஊதலில் வந்த இசை
தூரத்தில் இருந்த
ஒருவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

யாரோ யாருக்கோ
தீற்றி விடும் திருநீரில்
யாரோ ஒருவனின்
ஏதோ ஒன்று குணமடைகிறது

தன் கை ஒன்றுமில்லாத
இந்தக் காரியத்தைக் காணும் தேவியின் வதனத்தில்
ஒரு பூரித்த புன்னகை.

*

ஆசையில் படுதல்

நான் பலஹீனமான கவிதைகளை எழுத ஆசைப்படுகிறேன்.

அகராதிப் பூச்சிகள்
அப்படியே
ஆழ்ந்து ஊரும் படிக்கு

அடுக்குமாடிக் கட்டிடங்களை
கட்டி எழுப்புவது போல்
ராட்சத இயந்திரங்கள்
உறுமிக் கதறாதபடிக்கு

உள்ளதிலேயே வலுவான சொல்லின் தலையில்
ஆணியடித்து
என் கவிதையைத் தொங்க விடாதபடிக்கு

ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் புரட்டி
அதனடியில் ஒருவர்
எதையெதையோ தேடும் படிக்கு

தொட்டால் சரிந்துவிடும்படிக்கு

“எங்கு தொடுவேன்… ” என்று
என் வாசகர்
ஆனந்தத்தில் திகைக்கும்படிக்கு.

*

ஆறுதல் கலையில் வல்லபி

“நல்லதே நடக்கும்” என்று
நீ
சொல்கையில்
நான் எண்ணிய நல்லது அல்ல எனினும்
அங்கு
வேறொரு நல்லது நடந்து விடுகிறது.

“தெய்வங்கள் துணை நிற்கும்” என்று
நீ
சொல்கையில்
ஒன்றுமே அருளாத போதும்
அங்கு
தெய்வங்கள் தோன்றி விடுகின்றன.

*

கல்யாணத் தேன்னிலா

இளையராஜா கேட்காமல்

ஜேசுதாசோ, சித்ராவோ கேட்காமல்

கச்சேரித் திரளில் யாரும் கேட்காமல்

என் ஒன்பது காதலிகளில் ஒருத்தியும் கேட்காமல்

கேலி செய்யும் நண்பர் கூட்டத்தில் ஒருவரும் கேட்காமல்

என்னை விரட்டிவிட்ட குருநாதர் கேட்காத போது

தாலாட்டாக்க
முயன்று முயன்று தோற்ற
என் குழந்தையும் கேட்காத போது

நிலவும், நட்சத்திரங்களும் கூட இல்லாத
நடு நிசியில்
மொட்டைமாடியில் நின்று கொண்டு
கரங்களிரண்டையும் அகல விரித்தபடியே
அந்த கமகத்தில் நான் சரியாக மின்னிவிட்டேன்.

*

உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை

என் மூன்றாவது காதலி
ஆத்திரமும் அழுகையும் பொங்க
முகத்துக்கு நேரே விரல் நீட்டிக் கேட்டாள்…

“உண்மையாகவே நீ என்னை நேசித்தாயா?”

உண்மையைச் சொல்ல சிந்திக்க வேண்டியதில்லை.

மறுகணமே சொன்னேன்

“அன்னை மீது ஆணையாக அவ்வளவு நேசித்தேன்!”

“பிறகெப்படி ஒன்பதாவதுக்குப் போனாய்?”

“நேசித்துக் கொண்டேதான் அன்பே!”

*

நீயற்ற நீ

உன்னை ஒரு முறை ஆழ முத்தமிட வேண்டும்
பாடுகிற போது இருக்கிற உன்னை.

பாடுகிற போது இருக்கிற நீ
மொத்த உலகிற்கும்
முழு எஜமானி.
நீ
எங்கேயும் கை நீட்டி
எதையும் எடுத்துக் கொள்ளலாம்.

பாடுகிற போது இருக்கிற உன்னை
பாடும் போதும் தவிர
வேறெப்போதும் பார்க்கவே முடிவதில்லை.

பாடும் போது இருக்கிற உன்னை
தனியே
வடித்தெடுப்பேன்.
அதில்
ஆக்குவேன்
ஆயிரம் தெய்வங்களை.

*

குரலுக்கு ஒரு உடலுண்டு
அதற்கு ஒரு மடியுண்டு
அதில் கிடந்து விம்மினேன்.

TAGS
Share This