விடுதலையின் மாஇசை

விடுதலையின் மாஇசை

தமிழின் கவியுலகிற்குள் பெண் குரல்கள் தங்கள் நுட்பமானதும் தீவிரமானதுமான வாழ்வை முன்வைக்கக் காரணமானவர்களில் சுகிர்தராணி முதன்மையானவர். சமூக ஒடுக்குமுறைகளின் சுவர்களை இடித்துத் தள்ளி முன்னகரும் கவிப்பெரும் இசை அவருடையது.

சுகிர்தராணியின் கவிதைகள் தீண்டப்படாதவற்றின் மேல் கரிசனம் கொள்பவை. தீண்டாமையின் பல்வேறு தருணங்களைத் தீண்டி மொழிக்குள் நிலைக்க வைப்பவை. பளீரென்ற வாள் வீச்சுப் போல் விழும் வரிகள் சமூக மனசாட்சியை அறுத்து அதன் கடலளவு இரத்தம் கால்களின் கீழ் திரள அதன் முன் தெய்வமென வீற்றிருப்பவர். உக்கிரமும் தீராக் கோபமும் கொண்ட தெய்வம்.

பெண்களின் உடலரசியலின் சமூகப் புனிதங்களை உதறியெழுந்த கவிதைகள் சுகிர்தராணியுடையவை. பெண் வேட்கையின் திசைகளை மொழிக்குள் வெய்யிலின் நிறமெனவும் இருளின் கனமெனவும் உருவாக்கியவர். அவரது கவிதைகள் உறுதியின் தாளம் குலையாதவை. நிமிர்வும் பொலிவும் கொண்டவை.

தமிழின் நெடும் பரப்பில் தனது கவிதைகளால் சமூக விடுதலையின் மாஇசையை ஒலித்தெழுபவர் சுகிர்தராணி.

(சுகிர்தராணி)

*

தீண்டப்படாத முத்தம்

எம் வாய்களில் திணிக்கப்பட்ட
மலத்தையெல்லாம் திணித்தவர்கள்மீதே
துப்பத் தெரிந்துகொண்டோம்
எம் வயிறுகளுக்குச்
சாணிப்பால் புகட்டிய கரங்களை
நரம்பறுக்கவும் கற்றுக்கொண்டோம்
மறுக்கப்பட்ட தெருக்களில்கூடச்
செருப்பணிந்து செல்லும்
செருக்கினைப் பெற்றுவிட்டோம்
ஆண்டைகள் முன் அடிபணிந்தே
வளைந்துபோன முதுகெலும்புகளை
நிமிர்த்திப் போடவும் அறிந்துகொண்டோம்
நீரற்ற ஓடைகளில் நிகழும்
கௌரவக் கொலைகளிலிருந்து
உயிர்த்தெழவும் உணர்ந்துகொண்டோம்
கைநாட்டுகளைத் தடமழித்து
ஏடெடுக்கவும் எழுந்துநின்றோம்
ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து
விடுதலையின் மாஇசையை
மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்
என்றாலும்
என் கருத்த உடல்களிலிருந்து
சிந்தப்படுகின்ற இரத்தமெல்லாம்
இத்தேசத்தில் தீப்பற்றி எரிகின்றன
தீண்டப்படாத முத்தங்களாக.

*

உடலெழுத்து

வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.

*

பறக்கடவுள்

சொல்லுகிறீர்கள்
முதுகு விரியக் காய்ந்தால்
அதன்பெயர் பறவெயில்
உலரும் புழுத்த தானியத்தை
அலகு கொத்தி விரையும்
அது பறக்காகம்
கையிலிருப்பதை
மணிக்கட்டோடு
பறித்துச் சென்றால்
அது பறநாய்
நிலத்தை உழுது
வியர்வை விதைத்தால்
அது பறப்பாடு
சகலத்திற்கும் இப்படியே
பெயர் என்றால்
இரத்த வெறியில் திளைக்கும்
எது அந்த பறக்கடவுள்.

*

சாம்பல் பூக்காத முத்தங்கள்

நதிகள் பாய்கின்ற ஈரநிலத்தில்
பரிவாரங்களோடு காத்திருக்கிறாய்
வனாந்தரத்தில் வழிதவறிய பெண்ணை
நீளவாக்கில் உரித்த தோலாலானது
உன் கூடாரம்
தொங்கும் அவள் முலைகள்
சரவிளக்குகளைப் போல
வெளிச்சத்தை வீசுகின்றன
அறுக்கப்பட்ட தொப்புள்கொடியை
மதுவருந்தும் குவளையாக்கி
என்னை வீழ்த்திடத் துடிக்கிறாய்
நிலவு சயனிக்கின்ற சாமத்தில்
கீழேவிழும் நட்சத்திரங்கள்
மீண்டும் வானமேகா என்பதையும்
குளிச்சி பொருந்திய அரும்பினை
அவிழ்த்துவிட்டுச் செல்வது
தென்றலாக இராது என்பதையும்
நீ கண்டடைந்திருக்கலாம்
என் மார்பிலிருந்து பெருகிய
காதல் நீரோட்டங்கள்
உன்னிலிருந்து விலகும் பொழுதில்
வெம்மை படர்ந்த விருட்சத்தின்
உரிகின்ற பட்டையைப் போல்
என் உதட்டிலிருந்து சுழன்றுவிழுகின்றன
சில சாம்பல் பூக்காத முத்தங்கள்.

*

கவிதைப் பனிக்குடம்

பின்பனிக் காலத்துக் குளிர் இரவு
நிறம் உலராத பிரம்பு மேசையில்
படபடக்கிறது ஒரு வெள்ளைத் தாள்
காற்றின் கள்ளம்பட்டு
உரசிக்கொள்ளும் மூங்கில்களென
நானும் கவிதையும் தனித்திருக்கிறோம்
என்னுள்ளிருந்து அது பிறப்பதைத்
தன் குவளைக் கண்களால் காண
கலவிக் கால விலங்கினைப் போல்
என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது
ஒரு பிரசவத்தை நிகழ்த்திக்கொள்ளும்
பரவசம் என்னுள் வேர்பிடிக்கிறது
இயல்பு கூடியவளாக நிற்கையில்
வெடித்த பருத்தியின் விதையென
நினைவு தப்புகிறது
உன் மகன் சான்றோன் என
உரைத்தபடி யாரோ ஓடுகிறார்கள்
தலைவியை வரைவு கடாய
வலிய மலைநாடனிடம் கெஞ்சுகிறேன்
பாடுபொருள் ஆகின்றன
என் தேமல்சூழ் அல்குலும் மாமையும்
முச்சந்தியில் வீசப்படும் சவுக்கடிகள்
முதுகை ஓவியக் களமாக்குகின்றன
ஆணொருவன் வன்புணர்வு செய்கையில்
உடைகிறது என் பனிக்குடம்
கண் விழித்துப் பார்க்கிறேன்
கவிதைக்குள்ளிருந்து கழிவுகளோடு
வெளிப்படுகிறது என் தலை.

*

கடலளவு

இருள் குடித்த புறநகர் ஒன்றின்
கடைசி இரயில் நிறுத்தத்தில்
காத்துக் கொண்டிருக்கிறேன்
அதிவிரைவு வண்டிகள்
என்னைக்
கடந்த வண்ணமிருக்கின்றன
அவற்றிலிருந்து கிழிந்த வெளிச்சமும்
கெட்டித்துப் போன இருட்டும்
புலியின் வரிகளாய்
என் மீது படிந்து நகர்கின்றன
முந்தைய நிறுத்தத்திலிருந்து
கடத்தி வரப்பட்ட காற்று
என் மேலாடையை
அலைக்கழித்த படி செல்கிறது
நான் நிற்பதன் பிரக்ஞையற்று
எதிரும் புதிருமாய்
இயங்குகின்றன பல வண்டிகள்
போதையில் சிக்கிய கண்ணாடி வண்டென
அகப்படாமல்
பறந்து செல்கிறது பச்சையொளி
இரயிலை நிறுத்தும் வழியறியாது
கல்லிருக்கையில் அமர்ந்து கண்மூடுகிறேன்
காலடியில் உறைந்து கிடக்கிறது
கடலளவு இரத்தம்.

*

இரவு மிருகம்

பருவப்பெண்ணின் பசலையைப் போல
கவிழத் தொடங்கியிருந்தது இருள்
கதவடைத்து விட்டு
மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளியில்
தனியாக அமர்ந்திருந்தேன்
அப்போது தான் தினமும் விரும்பாத
அதன் வருகை நிகழ்ந்தது
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
என்னை உருவி எடுத்துவிட்டு
இன்னொரு என்னை வெளிக்கொணர்ந்தது
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட புத்தகத்தையே
படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என்னுடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயப்புணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்.

*

செத்துப்போன மாட்டைத்
தோலுரிக்கும்போது
காகம் விரட்டுவேன்
வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு
சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.
தம்பட்டை மாட்டிய அப்பா
தெருவில் எதிர்ப்படும்போது
முகம் மறைத்து கடந்துவிடுவேன்
அப்பாவின் தொழிலும் ஆண்டுவருமானமும்
சொல்ல முடியாமல்
வாத்தியாரிடம் அடிவாங்குவேன்.
தோழிகளற்ற
பின்வரிசையிலமர்ந்து
தெரியாமல் அழுவேன்.
இப்போது
யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.

TAGS
Share This