கள்ளி மலர்ச்செண்டு

கள்ளி மலர்ச்செண்டு

பெண் தன்னிலைகள் மொழியின் சுக்கானைப் பிடித்து தங்கள் சொந்தப் புயல்களின் சுழல் விளிம்பிலிருந்து மீண்டெழுவதென எழுந்த 90 களின் பின்னால், உருவான மாலுமிகளில் சல்மாவும் முதன்மையானவர். அவரது கவிதைகள் மொழிப்பெருக்கில் கசப்பெனவும் நிர்வாணமான உண்மைகளினதும் சுழல் விளிம்பில் நீந்திக் கரையேறுபவை.

பெண்ணுலகின் பருவங்கள், உளத் துவர்ப்புகள், வேட்கைகள், நிராசைகள், ஆற்றாத கேள்விகள் என்பன சல்மாவின் கவிதைகளை ஊடறுத்து ஒலிப்பவை. அவரது கவிதைகளில் முன்வைக்கப்பட்ட பெண் தன்னிலைகளின் உலகென்பது பெண்ணுடலின் வித்தியாசங்களை, அதன் மீது நெருக்கடிகளை உண்டாக்கும் புறவுலகை அதிலிருந்து வெளியேறும் வேட்கையின் உந்துதல்களைக் கொண்டவை. உரையாடும் தன்மையும் உரையாடிக் கொண்டே வந்த வழியில் அக்கதையின் மூர்க்கமும் சோகமும் தாளாமல் திடீரென்று மெளனம் கொள்ளும் தன்மையும் அவரது கவிதைகளில் எதிர்ப்படும் முக்கிய அம்சம்.

அவரது கவிதைகளின் இசை மகவுடன் கதைத்துக்கொண்டே உடலில் மெல்லத் தட்டியபடி தனது சோகத்தையும் வாழ்வின் உறுதியையும் சொல்லும் தாயின் கரத்தின் தாளங் கொண்டவை.

வாழ்வின் நெருக்கடிகள் புயலெனச் சூழும் பெருங்கடலின் சுழல் விளிம்பில் தங்கள் கப்பல்களைக் காப்பாற்றிவிடும் தீரம் மிக்க மாலுமிகளின் உறுதியும் ஓர்மமும் கொண்டவை சல்மாவின் கவிதைகள்.

*

(சல்மா)

*

இரண்டாம் ஜாமத்துக்கதை

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை

பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும் தான் அருவருப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மை தான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்

இதற்கு முன்னும் கூட
உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்

நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்து தானே தொடங்குகிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை

முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்

சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில் தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

*

என் பூர்வீக வீடு 2

முன்கூட்டிக் குறிக்கப்பட்ட
காலமொன்றில்

உலர்ந்த திராட்சையென
சுருங்கிய சருமத்தோடு
நினைவு தப்பிச் சரிந்திருந்த
அவளிடமிருந்து கருப்பையை
மருத்துவர்கள் பிரித்தெடுக்கின்றனர்
சலனமற்ற கவனத்துடன்

தண்ணீர் நிரம்பிய
பாத்திரத்தின் மெளன வெளியெங்கும்
கனத்த ஈரல் துண்டெனத்
தளும்பும் அது
துலங்கிய தன் மர்மத்தோடு

எனதுயிர் ஒடுங்கியிருந்த
அச்சதைத் துண்டை நோக்கி
இதயத்தின் மத்தியிலிருந்து
பீரிட்டெழும் கிளர்ச்சி
பின் பெரும் துக்கமாய் மாறும்

எத்தனைமுறை
உயிர் சுமந்திருந்தாலென்ன
கழிப்பறையில் உருவாகித்
தகிக்கும் வெப்பமெனச்
சபிக்கப்பட்டதாகத்தானே இருந்திருக்கும்
அவ்வுறுப்பு அவளுக்கும்

தொடர்ச்சியான வேட்டையாடலுக்குப்பின்
சக்கையாய் மாறிய அதன் ஆன்மா
இனியேனும் அமைதி பெறக்கூடும்
குறிக்கப்பட்ட நேரத்திற்குச்
சற்று முன் தனதறைக்கு வெளியே
வலைப் பின்னலின் கீழே
ஒளி நொறுங்கிக் கிடப்பதை
உற்றுப்பார்த்துக் கொண்டிருந்து விட்டுப்
பயமற்ற குரலில் சொன்னாள்

‘நான் இனிப் பாதி மனுஷி’
அவ்வார்த்தைகளில் கனன்றிருந்த
இழப்புணர்வின் வன்மம்
பிறகு என்னை
அமைதி கொள்ளவிடவேயில்லை.

*

பட வீட்டின் தனிமை

சுவரில் தொங்கும்
வரைபட மர நிழலும்
ஒற்றைக் குடிசையும்
கொஞ்சம் பூக்களும்
ஒரு வானமும்.

கண்கள் பூக்கள் மீதிருக்க
மனம் தேடிப் போகிறது
வரைபட வீட்டின்
தனிமையை.

*

விலகிப் போகும் வாழ்க்கை

இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது

இப்படியே
நம் நண்பர்களை
நினைவுகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது.

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்.

இந்த வாசலில்
மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்.

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகளாய்
அனுப்பப்படுகின்றன.

*

மாலை நேரக்காற்று

முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்.

*

கனிவின் திசை

என் கனிவின் மொத்தமும் வேண்டி
அபகரிக்கக் காத்திருக்கிறது
ஒற்றைப் பூவரசு
ஜன்னல் வழி எட்டிஎட்டித் தளும்பும்
ஏங்கிய முகம் நீட்டி
தன்னிடமில்லாக் காய்களை
மலர்களைத்
தேடி வேறிடம் செல்வேனா என்கிற
தவிப்புடன்
தன் அடர்பசும்நிறம்
குவித்துவைத்திருக்கும் குளுமை
சன்னப் பொத்தல்களோடிருந்தாலும்
தன் நிழல் நெய்த
இருட்கம்பளம் என எல்லாமும் காட்டும்
மரத்தின் உடலெங்கும்
ஓடித்திரிகிறது ஓணான் என்மீது
மணிக் கண்களை உருட்டி
வண்டுகளும் அதுவும் அங்கேயே
உறங்கவிடுகின்றன
தினமும் அலகில் கவ்விய
துண்டுக் குச்சிகளோடு
இடம் பார்த்துச் செல்கின்றன
சில பறவைகள்
இத்தனைக்குப் பிறகும்
என் கனிவின் திசையை
வரையறுத்துக் கொள்ளாப் புழுக்கத்தில்
அது மறுகி மறுகித் தீய்க்கிறது
தன் பசுமையை.

*

ஒப்பந்தம்

ஒவ்வொரு முறையும்
அம்மா நாசூக்காய்ச் சொல்வதை
அக்கா கோபமாய்ச் சொல்வாள்
படுக்கையறையின்
தவறுகளெல்லாம்
என்னுடையதென

தினமும் படுக்கையறையில்
எதிர்கொள்ளும் முதல் பேச்சு
‘இன்றைக்கு என்ன?’
அநேகமாக
இறுதிப்பேச்சும்
இதுவாகவே இருக்கும்

வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல்
ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து நீள
நடுங்கும் இரவுகளில்
மிதக்கும் அறிவுரைகள்

குட்டிக்கு உணவூட்ட
இயலாப் பூனையின்
தேம்பியழும் குழந்தைக்குரல்
கவ்விப்பிடிக்கிறது ஈரலை

உனக்கும் கூடப்
புகார்கள் இருக்கலாம்
என் நிலைப்பாடு
காலத்தாலும்
வரலாற்றாலும்
தெளிவாக்கப்பட்டிருக்கிறது

உன்னிடமிருந்து
கலங்கானதே எனினும்
சிறிது அன்பைப்பெற

வெளியுலகில் இருந்து
சானிட்டரி நாப்கின்களையும்
கருத்தடை சாதனங்களையும் பெற
இன்னும் சிறு சிறு உதவிகள் வேண்டி

முடியுமானால்
உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய

நான் சிறிதளவு அதிகாரத்தை
ஸ்திரப்படுத்திக்கொள்ள

எல்லா அறிதல்களுடன்
விரிகிறதென் யோனி.

*

சல்மாவின் நூல்கள்:

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் – காலச்சுவடு பதிப்பகம்

பச்சை தேவதை – காலச்சுவடு பதிப்பகம்

தானுமானவள் – காலச்சுவடு பதிப்பகம்

TAGS
Share This