தொடக்கம்

தொடக்கம்

குமாரதேவன் வாசகர் வட்டத்தின் தொடக்க நிகழ்வும் அவரது நினைவுப் பகிர்வும் கன்னாதிட்டியில் உள்ள சண்முகம் சைவக் கடையில், அவரது பிறந்த தினமான 10. 12. 2023, மாலை 5.30 மணி தொடக்கம் 7 மணி வரை, அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், நண்பர்கள் இணைந்து இடம்பெற்றது. குன்றாத ஆர்வம் கொண்ட வாசகரான அவரது நினைவுகளின் பொருட்டு இவ் வட்டம் இயங்கும்.

வாசகர் வட்டத்தின் முதல் நிகழ்வுத் தொடராக ‘மீளச் சொல்லுதல்’ என்னும் நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்த அனுபவப் பகிர்வுகள் இடம்பெறும். எனது தேர்வின் அடிப்படையில் பத்துப்பேரின் மொத்தக் கவிதைகளிலிருந்து தமக்கு நெருக்கமான கவிதைகளின் அகவயமான அனுபவங்களை மாதம் தோறும் ஒவ்வொருவரினதாகவும் இடம்பெற இருக்கிறது. இதனையொட்டி அவர்களின் கவிதைகள் குறித்த அடுத்த தலைமுறை வாசகர்களின் பார்வைகளை உருவாக்கிக் கொள்ளும் முயற்சி இது. மேலும் ஒரு சிறு நினைவூட்டலையும் பரவலையும் செய்ய முடியும்.

முதல் நிகழ்வாக ஜனவரி 20 ஆம் திகதி, சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதைகள் குறித்தான அனுபவப் பகிர்வு இடம்பெறும். நிகழ்வு தொடர்பான ஏனைய விபரங்களைப் பின்னர் பகிர்கிறேன்.

சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதை ஒன்றுடன் இக் குறிப்பை முடிக்கிறேன்.

அற்பங்கள்

அற்ப நிகழ்வும்
அர்த்தம் அற்றதும்
என்னுடன் வருக.

உதிரும் மணலும்
உருவழியும் நீர்வரையும்
எனது உவப்புகள்.

மங்கல் நிலவும்
மாலைக் கருக்கலும்
விடியற் கலங்கலும்
எனது விருந்துகள்.

ஒன்றுமிலா வெளியும்
உதிர்ந்து விழும் இலையும்
நெஞ்சை முழுதும் நிரப்பும்.

பாதையின் ஓரம்படரும் சிறுபுல்லும்
கானகத்தில் எங்கோ கண்மலரும் ஓர் பூவும்
போதும் எனக்கு.
(மற்றதெல்லாம் போக)

அற்ப நிகழ்வும்
அர்த்தம் அற்றதும்
என்னுடன் வருக.

  • சண்முகம் சிவலிங்கம் –

இந் நிகழ்வை ஒருங்கிணைக்க உதவிய உறவினர்கள், சண்முகம் அண்ணை, கடை ஊழியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். நிறைவானதொரு தொடக்கம்.

ஒளிப்படங்கள் : ஆதி பார்த்திபன்

TAGS
Share This