எப்பொழுதும் கவிஞன்

எப்பொழுதும் கவிஞன்

ஒரு கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். பொதுவாக கலை சார்ந்த செயல்களை பகுதி நேரமாகவே தேர்வு செய்கையில் அதற்கு மறுதலையாக கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தது பெரிய விடயம். ஆனால் சில காலங்கள் உங்கள் இலக்கிய செயற்பாட்டை காணவில்லை. இடைப்பட்ட இந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்?

லலிதகோபன்

*

வணக்கம் லலிதகோபன்,

உங்கள் தொடர்ச்சியான கேள்விகள் மகிழ்ச்சியையும் தொடர்ந்து விவாதிக்கும் ஊக்கத்தையும் அளிக்கின்றன.

நான் கவிஞனாகுவது அல்லது எழுத்தாளராகுவது என்று முடிவெடுத்தது எனது பதினேழாவது வயதில். உயர்தரத்தில் முதலாம் வருடம் படித்துக் கொண்டிருந்த பொழுது பள்ளிக்கூடக் கல்வி எனக்கு உவக்கவில்லை. ஓரளவுக்கு மேல் வாழ்வு குறித்த தீவிரமும் கனவும் அதில் இல்லை. நான் உயர்தரம் வணிகபாடம் கற்றேன். இன்று சொன்னால் எவ்வளவு நம்பமுடியுமோ தெரியவில்லை. எனது அனேகமான நண்பர்கள் அந்தப் பாடத்தைக் கற்கிறார்கள் என்பதும், கலைப்பாடத்தை எங்கள் பாடசாலையில் ஆறோ ஏழோ பேர் தான் கற்றார்கள் என்பதையும் தவிர வணிகம் கற்றதற்குப் பெரிய காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. இதில் சிறு வயது முதலே கணிதம் சார்ந்த எதுவும் எனக்கு அடிப்படைகளுக்கு மேல் தெரியாது. கணக்கீடும் பொருளியலும் கல்வி மேலான ஈடுபாட்டை மிகச் சுருக்கின. எண்களுடன் என் மனதிற்கு எப்பொழுதும் ஒவ்வாமை உண்டு.

இந்தக் காலப் பகுதியில் உலக இலக்கியங்களைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன். விடிய விடிய, பகலும் இரவுமென முழுவாழ்வையும் அளித்து வாசித்தேன். எனது ஆர்வம் இலக்கியத்தில் தான் எப்பொழுதும் முழுமை கூடி வந்திருக்கிறது. மனம் ஒன்றி பிறிதொருவர் அல்லாமல் நானே நிகழும் வாய்ப்பை இலக்கியம் எனக்கு வழங்கியது. அதுவொரு அருள். அது நிகழாத ஆயிரக்கணக்கானவர்களைத் தான் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். அவர்களுடைய வாழ்க்கை குறித்த புரிதல் என்ன? அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சாதாரணமானது என்பது நம்முன் திரும்பத் திரும்பக் கரையை மோதும் முடிவற்ற அலைகரங்களென நிகழ்ந்துகொண்டேயிருப்பது. இக்கும்பலில் நான் ஒரு அலையல்ல எனும் தன்னுணர்வு எனக்கு இக்காலகட்டத்தில் உருவாகியது.

நான் கவிஞன். சொல்லில் திகழ்பவன். என் கற்பனையின் மூலம் ஆயிரம் நிகர் வாழ்க்கைகளின் உள்ளே சென்று மீளும் வாய்ப்புப் பெற்றவன். என்னால் மொழியில் ஆகக் கூடியவை என்று சிலதுண்டு. அவற்றை எதன் பொருட்டும் கைவிடுவது என்னை நானே கைவிடுவது. அதை நான் செய்யக்கூடாது. ஆனால் கவிஞரோ எழுத்தாளரோ அதுவொரு பணமீட்டும் தொழிலல்ல. பொருளாதர அடித்தளத்திற்கு ஒரு தொழில் தேவையாக இருக்கிறது. அதன் பொருட்டு நான் எழுத்தாளர் ஆகுவதென்பது எனது அன்றாட வேலைகளுக்கும் குடும்ப நேரங்களுக்கும் அப்பால் எனக்கென்றொரு செயற்குவிவை உருவாக்கிக் கொள்வது. அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்வது.
அதில் முழுமையாக ஈடுபடுவது. குன்றாது எரிவது.

நான் சமூக வலைத்தளங்களில் நீங்கள் குறிப்பிடும் கடந்த இரண்டு வருடங்களில் சில காலம் பெரிதாக அதைப் பாவிக்காமலும் சில காலம் முழுமையாகத் துண்டித்தும் இருந்தேன். தற்போதும் முழுமையான துண்டிப்பில் இருக்கிறேன். அதுவொரு மோசமான தளம் என்பதன் அடிப்படையிலானது அல்ல எனது விலகல். அது எனது நேரத்தையும் உழைப்பையும் விழுங்கிவிடும் வெளி என்பதாலேயே தவிர்க்கிறேன். நான் ஒரு எழுத்தாளராகத் தொடர்ந்து எனது சிந்தனைகளையும் ஆக்கங்களையும் தொகுத்துக் கொள்ள சமூகவலைத்தளங்களில் இருப்பது கெடுதியானது. மூளைக்குள் இரத்தமுறிஞ்சும் அட்டைகள் இருப்பது போல் அங்குள்ள பலநூறு கருத்துகள் எனது மூளைக்குள் ஒட்டியபடி இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆகவே சமூகவலைத்தள வெளியேற்றமும் எழுத்தின் மீது தீவிர ஈடுபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒருநாளில் சமூக வலைத்தளங்களில் இருந்து நாலு நல்ல விடயங்களைத் தெரிந்து கொள்பவர்கள். நாற்பது தேவையற்ற குப்பைகளையும் தலைக்குள் போட வேண்டியிருக்கும். அந்தத் தளத்தின் இயல்பு அது. முற்றுமுழுதான ஒரு கேளிக்கைத் தளம். நுண்ணுணர்வுள்ள ஒருவர் அதில் இயங்குவது அவரைச் செயலூக்கமற்ற மந்தத்தனத்திற்குள் தள்ளிவிடும்.

குறிப்பிட்ட இடைப்பட்ட காலமென்பது எனது மூளையிலிருந்த இரத்தமுறிஞ்சும் அட்டைகளை நெருப்புக்காட்டி விலக்கி விட்ட காலம். அக்காலத்தில் மீளவும் இலக்கியங்கள் வாசித்தேன். ஏற்கெனவே அறிந்த பலவற்றை அந்த நெருப்பில் போட்டு எரித்தேன். என்னை மீட்டெடுத்தேன். தீவிர பண்பாட்டு அரசியல் களங்களில் செயலாற்றும் பொழுது, ஒரு கவிஞனாக நான் செய்துகொண்டே செல்லும் சமரசங்கள் ஏராளம் இருந்தன. ஆனால் அவை எனது அன்றாடத்தை அவற்றின் சங்கிலிகளால் இறுக்குவதை நான் அனுமதிக்கப்போவதில்லை. எனக்கு வேறெதையும் விட கவிதையும் இலக்கியமும் முக்கியமானது. அதுவே நான் நம்பும் விடுதலைக்கான கருவி. சமூகத்தில் ஒருசிலருக்கே அவை பயன்பட்டாலும் கூட ஒன்றும் குறையில்லை. என்னால் ஆகக் கூடியது அது மட்டுமே. ஆகவே எனது விலகல் காலமென்பது மீள என்னை ஒருங்கிணைத்த காலம். பெருமளவு தனிமையிலே இருந்தேன். ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு வேலைக்குச் சென்று வந்தேன். அக்காலத்தில் மக்களின் வாழ்வு, அவர்களின் கரிசனைகள், பிரச்சினைகள் பற்றி அவதானித்துக் கொண்டும் சிறிதளவில் பங்களித்துக் கொண்டும் அந்தப் பிரதேசத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்தக் காலகட்டம் தான் வாழ்க்கைக்குத் திரும்புதல் என்ற என் கவிதை நூலிற்கான தலைப்பாகவும் ஆகியது.

பண்பாட்டுச் செயற்பாடுகளில் முதன்மைப் பாத்திரமேற்றல் என்பது ஒருவரின் மீது எடைக்கு அதிகமான சுமையை வைத்து அழுத்திவிடக் கூடியது. எனது இயல்புகளுக்கு அத்தகைய தன்மைகள் பொருந்தி வரவில்லை. ஆகவே மீள வாழ்க்கையிலிருந்து பண்பாட்டையோ கலை இலக்கியங்களையோ அணுகும் போக்கே முப்பது வயதில் நான் கண்டடைந்திருப்பது. ஒரு எழுத்தாளர் என்னும் ஆளுமை வேறு சமூக செயற்பாட்டாளர் என்னும் ஆளுமை வேறு. இரண்டும் கோரக்கூடிய உளவமைப்புகள் முற்றிலும் வேறானவை. ஒரு சிலரின் ஆளுமைகளுக்கு அப்பாத்திரங்கள் பொருந்தக் கூடியதாய் இருக்கலாம். ஆனால் நான் அதுவல்ல. நான் கொஞ்சம் பைத்தியக்காரன். கொஞ்சம் குழந்தை. கொஞ்சம் ஞானி. எப்பொழுதும் கவிஞன்.

TAGS
Share This