நனைந்து கொண்டிருக்கும் மழை

நனைந்து கொண்டிருக்கும் மழை

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் வெளிப்பட்டாலும் அவரது வாழ்வை அணுகும் பார்வைக்குள் ஊடிழையும் பரிவும் கரிசனமும் மானுடப் பெருக்கின் மையவிசைகளுடன் இணைவு கொள்வது.

ஃபஹீமா ஜஹானின் கவியுலகில் ஒரு வித நனைந்து கொண்டிருக்கும் மழையின் இயல்பு இருக்கிறது. தான் எதுவோ அதிலேயே அது திகழ்ந்து கொண்டிருக்கும் இயல்பு என்றும் கூறலாம்.  ஃபஹீமா ஜஹான்  அரசினதும் ஆணாதிக்கத்தினதும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அதேவேளை அவரது அகம் நுண்ணுணர்வு கொள்ளும் வாழ்வின் சில கீற்றுகள் கவிதைக்குள் விழும் போது அவை நீராழத்தில் மின்னும் மீன்களின் கண்களென வாழ்வை நோக்கி நெருங்கி வருவன.

அவரது கவிதைகளின் சங்கீதம் சொல்லிணைவுகள் ஒரே தாவலில் சமநிலையடையும் போது கூர்மை கொள்பவை. உணர்வும் சொல்லும் இருகால்களென ஆகுபவை. அவற்றின் காட்சிச் சித்தரிப்புகளில் உண்டாகும் ஓவியத்தன்மையால் கதைகளினைச் சொல்லும் முதுவாயின் இசைமையும் கூடியவை.

(ஃபஹீமா ஜஹான்)

*

காலுடைந்த ஆட்டுக்குட்டியும் சிறுமியும்

நொந்து போன நாட்களைத் தனது
சின்னஞ்சிறு தோள்களில்
சுமந்தலைந்த சிறுமி
காலுடைந்த ஆட்டுக்குட்டியைக்
கீழிறக்கி வைத்துவிட்டு
மண்தெருவில் சிந்திக் கிடக்கும்
நெல் மணிகளைக்
குடிசைக்குள்
காவிச் சென்றிட நினைக்கிறாள்

முன்பெனில்
வயல் வரப்பொன்றில் குந்தியிருந்து
அவளது பிஞ்சுக் குரலெட்டாத்
தொலைவு வரை திரிந்து
உதிரி நெற்கதிர் பொறுக்கி வரும்
அம்மாவுக்காகக் காத்திருப்பாள்.
அம்மா திரும்பி வரும் வேளை
ஒரு முயல் குட்டியை
ஒரு செம்மறியாட்டு மந்தையை
ஒரு அபூர்வப் பறவையை
விழிகளால் துரத்தியவாறு
மாபெரிய வானத்தில் முகில் கூட்டங்களிடையே
அலைந்து கொண்டிருப்பாள்
அல்லது
நாரைக் கூட்டங்களுக்குக்
கையசைத்து விடைகொடுத்தவாறு
அவை சென்று மறையும்
மலைத்தொடர்களின் மறுபுறத்தே
என்ன இருக்குமென்ற
புதிரொன்றால் அலைக்கழிவாள்

சிறுமியின் நினைவுகளிலிருந்து
மெதுவாக நழுவுகின்றன
அந்த நாட்டுப் புறப் பாடல்களும்
பெண்கள் கூடி அறுத்தெடுக்கும் கதிர்களை
பிணையல் மாடுகள் சுற்றிச் சுழன்று
சூடடித்துக் கொடுக்கும் இரவுகளும்,

இன்று
வயல்வெளிதனில் இறக்கிவிடப்பட்ட
இயந்திரப் பூதம்
வைக்கோலைத் துகள்களாக்கி
வரிசையாய்ப் பரப்பிய பின்
விதைத்தோர் கைகளில்
நெல் மூடைகளைக்
கொடுத்துப் போன கணப்பொழுதில்
சிறுமியின் அம்மாவிடம்
ஒரு பானை நிரம்பிவழிந்தது
ஏமாற்றம்.

பச்சை அலைகளெனப்
பறந்து வந்த கிளிக்கூட்டங்கள்
வான் பரப்பில்
தாளமுடியா ஏமாற்றத்தைத் தீட்டித்
தொலைதூரச் சோலைகளுக்கே
திரும்பலாயின.
பூதத்தின்
பல்வரிசைக்குள்
அரைபட்டுச் சிதைந்தது
நெற் குருவியொன்றின்
கடைசி அலறல்.

உறையொன்றிலிருந்து
சிந்திவிட்டுச் சென்ற
நெல்மணிகளைக் கண்டதும்
சர்க்கரைத் துண்டு கிடைத்த
எறும்பொன்றைப் போல
எப்பாடுபட்டேனும்
எடுத்துச் சென்றிட
மொய்த்துவிட்டாள் சிறுமி.
புது அரிசிச் சோற்றின்
ஆவிபறந்திடும் கனவு
அவளது சின்னப் பீங்கானிலும்.

அள்ளிடும் தருணமெலாம்
மண்ணையும்
குறுணிக்கற்களையும்
அவள் கரங்களில்
எஞ்சவைத்து விட்டு
நெல் மணிகளோடு
நிலத்தில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம்

வீதி வழியேபோன
முதிய பெண்ணின்
ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவளாக
குடிசைக்குள் ஓடிப்போய்
சிறிய கரங்களில் நம்பிக்கை அசைந்தாடிடச்
சிரட்டையும் பையுமாக
வந்தாள் சிறுமி

தப்பிக்கமுடியாத நெல்மணிகளெல்லாம்
அவளுடன் போகலாயின
எளிய குடிசை நோக்கி

அவள் பின்னே
நொண்டிய படி செல்கிறது
காலுடைந்த ஆட்டுக்குட்டி.

*

நோய் நீங்கிய அதிகாலை

உனது சொர்க்கமென அமைந்த வீட்டில்
அவள் நோய் வாய்ப்பட்டிருக்கிறாள்
நீ வளர்த்த எல்லாச் செடிகளும்
அவளுடன் வாடிக் கிடக்கின்றன

ஆனந்தமும் அன்பின் பரிமாற்றங்களும்
துள்ளிக் குதிக்கும் அறையெங்கும்
படிந்து போயுள்ளன
அவளது வருத்தங்கள்

கவிழ்ந்து தூங்குகிறது படுக்கைதனில்
கசப்பானதொரு வேதனை
உனை நகரவிடாது
அருகே அமர்த்தியுள்ளன
அவளது எளிய தேவைகள்

எந்தக் குறுக்கிடல்களும்
அமைதியைக் குலைத்துவிடக் கூடாதெனத்
தொலைபேசிகளைத்
துண்டித்து வைத்துவிட்டுத்
தூக்கம் விழித்திருக்கிறாய்

அபூர்வமாக
இன்றைய அதிகாலைப் பொழுதில்
அலாரத்துக்கு முன்பாக விழித்து
அமைதியாகக் காத்திருக்கிறாள்
உடலைவிட்டு விலகிப்போன
வலிகளை நினைத்துப் பார்க்கிறாள்
ஒரு கொடிபோல
ஆதாரத்தைத் தேடும் தூண்டலுடன்
உனைச் சுற்றியுள்ளது ஒரு கரம்

மென் நீல ஒளி சிந்தும்
இரவு விளக்கின் கீழே
மின்விசிறிக் காற்றிலசையும்
தலைமுடியைக் கோதிவிடுகிறாய்
உன் விரல்களிடையே தோய்கிறது
கருணையின் பரிதவிப்பு
தேவதையைப் போல
அசைகின்றன திரைச் சீலைகள்
இனி
அவளது நடமாட்டம்
இறுகிப் போயுள்ள வீட்டை
மீண்டும் தளர்த்தி வைக்கும்.

*

உயிர் வேலி

சூரியன் தனது வெக்கை மிகு கதிர்களால்
இலைகளை வீழ்த்திக் கொண்டிருந்த
மரமொன்றில் வந்தமர்ந்தது
பிரளயத்திலிருந்து தப்பித்து வந்த பறவை

கனிகளோ வித்துக்களோ இன்றி
ஒரு சத்திரம் போல
நின்றிருந்த மரத்திடம்
சின்னஞ்சிறு பறவைக்குக் கொடுத்திட
எதுவுமே இருக்கவில்லை

குருவி குந்தியிருந்த மரத்தின் கீழே
வீழ்ந்து கிடந்தது
இற்றுப் போன ஒரு நிழல்
தொலை தூர ஆற்றுப் படுகையில்
மறைந்து கொண்டிருந்தது கடைசிச் சூரியன்

அசைந்து வரும் கரிய யானைகளைப்
பார்த்தவாறு
கைவிடப்பட்ட தனது கூட்டை எண்ணிக்
கண்ணீர் உகுத்திடலாயிற்று

அடைகாத்த முட்டைகளைப்
பெருங்காற்றில் போட்டுடைத்த கரங்களில்
எல்லா அதிகாரங்களும் இருந்தது
“ஏன் செய்தாய்” எனக் கேட்க முடியாத
அடக்கு முறையில் காலம் சிக்கியிருந்தது

குருவியை உறங்க வைத்திட முடியாமல்
கிளைகளினூடே
பதுங்கிப் பதுங்கி அசைந்து கொண்டிருந்தது
இருண்ட இரவு

உள்ளேயொரு சூனியத்தை வைத்து
உயிர் வேலியொன்றைச் சுமந்தவாறு
முடிவற்ற இருளொன்றினூடாக
அந்தச் சிறு பறவை
பறந்து போயிற்று.

*

மழை

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களை
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை.

*

கடைசிச் சொல்

நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்

இன்று
மீளவும் பழைய ஆரோக்கியத்திடம்
மீண்டுள்ளேன்
முதன் முறையாக
நிறைவு செய்யப்பட்ட வசனமொன்றை
உன்னிடம் ஒப்பிக்கிறேன்
அதே புன்னகையை மறுபடியும்
எடுத்து வைக்க முடியாமல்
விலகிச் செல்கிறேன்

மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று

நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்

இப்பொழுதும்
ஆதித்திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது
ஒரு சொல்
விதி தனது கண்ணீரை வழிய விட்டசொல்
நாம் நமக்குக் கிடைத்திடக் காத்திருந்த
கடைசிச் சொல்.

*

அவள் வளர்க்கும் செடிகள்

தான் மாத்திரம் உணரக் கூடிய மொழியில்
கதைத்துக் கொண்டிருந்த
சின்னஞ்சிறு நாற்றுக்களைச்
சிறுமி
குழந்தையைத் தூளியில் கிடத்தும் பக்குவத்தோடு
குழிகளில் நட்டிருந்தாள்
ஆற்றோர மூங்கில்களின் கீதங்களைக் கேட்டவாறு
கதை பேசிப் பேசி அவளுடன்
அவைகள் வளர்ந்தன

“காலையில் வா
அற்புதமொன்றுடன் காத்திருப்போம்’
எனக் கூறி
ஒவ்வொரு மாலையிலும்
அவளை வழியனுப்பி வைத்தன

சூரியனுக்கு முன்னால் அவள் எழுவாள்
பின்னர்
நீள நீள நிழல்களை விழவிடும்
மஞ்சள் வண்ணக் கிரணங்களுடன்
தோப்பினுள் நுழைவாள்
தூர வரும் போதே கண்டு கொள்ளும்
மூங்கில் புதர்களெல்லாம்
தாளத்துடன் அசைந்தாடி
அவளை வரவேற்கும்
ஒரு தளிரையோ
பூவையோ பிஞ்சையோ
அவளுக்குக் காட்டிடவே
செடிகளெலாம் காத்திருக்கும்

தாள முடியாத இன்பம் பொங்கிட
ஆற்றை நோக்கி ஓடுவாள் சிறுமி
சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்

செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்

பின் அவை
பூக்களில் கவிதைகளை வரைந்தவாறு
அவள் போலவே வளரும்.

*

மலைகளின் மூதாட்டி

எப்பொழுதும்
நீ
கதைசொல்ல ஆரம்பிக்கும் இரவுகளின் முடிவில்
மலைகளிலிருந்து
இறங்கி வரத் தொடங்கும்
துயரத்தின் ஓடையொன்று

தாங்க முடியாச் சுமைகளின்
கனம் வலுக்கும் தருணங்களில்
பற்றியிருக்கும் பாறைகளை ஒவ்வொன்றாய் நழுவவிடுவாய்
உணர்ச்சியின் விளிம்பில்
மரணத்தை அழைத்திடும் சரிவுகளைத் தாங்கி
நீ
அமைதியில் உறைந்திருப்பாய்

பூர்விக குடிகள் விட்டுச் சென்ற தடயங்களைப்
பாறை இடுக்குகளில்
மூலிகைச் செடிகளிடையே பத்திரப் படுத்தியிருப்பாய்
வழிதவறிய ஆடுகளைத் தேடி வரும் சிறுவரிடம்
அற்புதங்களை மடியவிழ்ப்பாய்

நட்சத்திரங்கள்
வழிகாட்டும் இரவுகளில்
போகவிடாது பிணைத்திருக்கும்
ஆதி வேர்களை அசைத்துப் பார்ப்பாய்
உனையே பார்த்தவாறு ஓயாமல் கையசைக்கும்
வயல்காட்டு வெருளியோடு
மீறமுடியாத விதியதன்
நெடுங்கால வேதனையைப் பகிர்வாய்

ஈரத்தைக் குடிக்கவரும்
நிழல்தராச் சூரியனின் தண்டனைகளுக்குத்
தினந்தோறும் பயந்திருப்பாய்
மலையடிவாரத்து நீர்தேங்கிய கழனிகளில்
வீழ்ந்து நடுநடுங்கும்
மாபெரிய உன் விம்பம்.

*

சிறுமியின் கோழிக்குஞ்சு

சின்னஞ் சிறு வெண் சிறகிரண்டிலும்
புழுதி படியலாயிற்று:
பஞ்சு போன்ற அதன் உடலம்
ஒடுங்கிச் சிறுத்திற்று:
கூடி விளையாடிய அவளது பாதம்
தவறுதலாகக் குஞ்சின் தலை மீதேறியது:
கால்களும் உடலும் நெடுநேரம் நடுங்கிடச் சிறுமி
தனது பிரியம் துடிப்பதைப் பார்த்திருந்தாள்!

கரு முகிலே! உன் துளிகள் தூவி
அதன் மேனிக்கு வலுவூட்டு!
நீல விசும்பே!உன் குரல் கொண்டு
மீளாத் துயிலிலிருந்து அதையெழுப்பு!
வீசும் பவனமே!உனது மென் கரங்களால்
மூடிய இரு கண் மூடிகளைத் திறந்து விடு!
இனிய குஞ்சே ! வலிகளைக் காலடியில் விட்டு
குணமடைந்து எழுந்து விடு:
முறையிட்டாள் சிறுமி ஆகாயம் நோக்கி.

உயிர் பிழைத்த குங்சு
ஒரு கண் பார்வையிழந்து தவித்தது!
இடையில் தவறிய வழி தேடிக் கீச்சிட்டவாறு
எங்கோ எங்கோ பார்த்திருந்தது

மரணத்தின் நிழல் அதன் தலைக்கு மேலே
கவிழ்திருந்த காலைப் பொழுதில்
கடும் பிரயத்தனத்துடன் ஒரு சொண்டுத் தண்ணீரை
அண்ணாந்து குடித்தது
உலகில் அதற்கென ஆண்டவன் வைத்திருந்த
கடைசி நீர்த் துளி அது!

குஞ்சுடன் முன்னும் பின்னும் அலைந்து
சுpறுமியின் பார்வைக்குத் தப்பித் திரிந்த மரணம்
முதலில் அதன் சின்னஞ் சிறு சிறகிரண்டிலும் வந்தமர்ந்தது:
சிறகுகள் கீழே தொங்கிட மெல்ல மெல்ல நகர்ந்தது குஞ்சு:
அந்திப் பொழுதில் சாவு அதன் கழுத்தின் மீதேறி நின்றது:
ஒரு மூதாட்டி போலச் சிறகு போர்த்தி
அசைவற்றுப் படுத்தது குஞ்சு!

இரவு நெடு நேரம் வரை காத்திருந்த மரணத்தின் கரங்கள்
சிறுமி தூங்கிய பின்னர்
துண்டு நிலவும் மறைந்து வானம் இருண்ட பொழுதில்
அந்தச் சிறு உயிரைப் பறித்துப் போயிற்று!

*

ஒரு கடல் நீரூற்றி

நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை!
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம்!

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம்!

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய்!

பரணி…
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய்!

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை!
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட…
மழைப் புகாரினூடே மறைந்து போனாய்!

திரைகடல் சென்ற திரவியமானாய்!
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை!

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது!
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே!
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

பஹீமா ஜஹானின் வலைப்பூ: https://faheemapoems.blogspot.com/?m=1

பஹீமா ஜஹானின் நூல்கள்:

ஒரு கடல் நீரூற்றி – பனிக்குடம் பதிப்பகம்

அபராதி – வடலி பதிப்பகம்

ஆதித் துயர் – காலச்சுவடு பதிப்பகம்

TAGS
Share This