எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்
மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் மனநிலம்.
ச. துரையின் கவிதைகள் கடலின் மனிதர்களை வாழ்வாக்கி அளிப்பவை. அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அலையடிக்கும் பெருங்கடலின் வற்றாத சிறகடிப்பை எழுதுபவை. துரையின் கவிதைகள் கடலிடம் எப்பொழுதும் முடிவுறாமல் கரையை நாநீட்டித் தொடும் வேட்கையைப் போல வாழ்வைத் தீண்டிக்கொண்டேயிருப்பவை. அந்த நாச்சுவை பொருந்திய கவிதைகள் அவரிடமிருந்து பெருகியபடியிருக்கின்றன.
உள்ளோடும் சங்கீதம் நுரைச் சீறலெனவும் கரையமைதியெனவும் இரண்டு எல்லைகளுக்கும் நகர்ந்து மீள்பவை. அவரது கவியுலகு உப்பின் மனிதர்களையும் அதனுள் ஊடும் உயிர்களையும் ஒரு சிறுவனின் கண்ணாடிப் போத்தலுக்குள் வாழும் மீன்களென கவிதைக்குள் பிடித்து வைத்திருப்பவை. பிறகு அதை மொழியின் கடலுக்குள் திறந்து விடுபவை.
*
இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்
காலணியின் விரல்பகுதியை
தரையில் குத்தி நின்றவளை சுற்றிவிடுகிறாள்
பலமாகச் சுற்றியதில்
காலத்தில் பின்னோக்கிப் போய்விடுகிறாள்
இப்போது வயது பதினேழாகிவிட்டது
அப்பா நீங்கள் சாகவில்லையா?
அப்படிக்கேள் மகளே
அப்பாக்கள் எப்போதும் சாகமாட்டார்கள்
உங்களின் இடது காலை நீட்டமுடியுமா?
வேண்டாம் மகளே
தும்பைப்பூ மாதிரியான உன் கைகளில்
தைலவாடை குடிபுகும்
என் காதலனை நீங்கள் சந்திப்பீர்களா?
நிச்சயம் மகளே
விலாங்குமீன்கள் வாங்கி வருகிறேன்
உணவில் கலந்தாடலாம்
அவள் இடுப்பில் கைகளைப் புதைத்து
உலுப்பியபடியே அவளின் வலதுகாலை
தலைக்குமேல் தூக்குகிறான்
சற்றே அழுத்தித் தூக்கிவிட்டான்
தொங்கிய அவள் பார்வைக்கு எல்லாமே தலைகீழாகிவிட்டது
இசைத்தட்டின் சுழற்சிக்குள் இருந்து
பணியாளன் நெருங்க நெருங்க பெரிதாகிறான்
சுவரில் அறைந்திருந்த தலைகீழ் மோனாலிசா நேராகிவிட்டாள்
டைனோசர் எலும்பைப்போல கிடார் மிதக்கிறது
ஐஸ்கட்டிக்குள் மீன்கள் நீந்துகின்றன
காலத்தின் பின்னணிக்கும்
தலைகீழ் நடமாட்டத்திற்கும் இடையே
கைகளைப்பின்னி மது அருந்துகிறார்கள்
பதினேழுவயது அப்பா
தரையில் முடிச்சிட்ட கயிற்றுக்குள் தலையை நுழைத்து
மேல்கூரையை கால்களால் தொட முயற்சிக்கிறார்
அப்பா இவர்தான் என் காதலர்
சந்தோஷம் மகளே
அந்தக் கயிறை தரையில் முடிச்சிட்டு
என்னோடு அமருங்கள்.
*
எங்களின் உவர் நிலத்தில்
வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள்
ஏழடி இருப்பாள் எனக்குத் தெரிய முக்கால் ஆண்டுகளாக
ஒரே இடத்தில் அலைபாய்கிறாள்
காற்று வாங்குகிறாள்
நீராடுகிறாள்
எப்போதாவது புரண்டு படுப்பாள்
அப்போதெல்லாம் கடலும்
எதிர்திசைக்கு மாறிக்கொள்ளும்.
*
தவளையொன்று
இருளுக்குள் பாய்ந்தது
இருளுக்குள் நுழைய கதவுகளே இல்லை என்றார்கள்
உண்மைதான் வெளிச்சத்திலிருந்து
இருளுக்குள் நுழைய கதவுகளேயில்லை
ஆனால் இருளுக்குள் இருந்து
இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு
நிறைய தடுப்புகள் இருக்கிறது.
*
காட்டில் வழி தவறியவன்
விளக்கு மட்டும் எரியும்
கோவில் ஒன்றை பார்த்தான்
அழைத்துப் போக ஆள்வருமென்று
ஆலய தூணுக்கடியிலே
அமர்ந்து விட்டான்
நேரம் போகிறது
காகங்கள் கரைகின்றன
பொழுதும் சாய்ந்துவிட்டது
யாரும் வரவில்லை
மரப்பட்டைகள் முறிகிறது
மழைப்பொழிகிறது
யாரும் வரவில்லை
தாடி வளர்கிறது
நரை விழுகிறது
யாரும் வரவில்லை
கிளைகள் அடர்ந்து
சருகுகள் நிறைய
பாதை மறைகிறது
யாரும் வரவில்லை
ஆலய தூணுக்கடியிலே அமர்ந்தவன்
தினம் ஒரு சர்ப்பம் கூடுவதை பார்க்கிறான்
பதறிக்கூட எழத் தெம்பில்லாமல்
வழிதவறவில்லையென்று
தனக்குள்ளே பினாத்துகிறான்
விளக்கு மட்டும் அணையாமல் எரிகிறது.
*
விலாசம்
நான் யாருடைய குழந்தை தெரியுமா
நெற்றியில் விழும் சிலுவைக்காக
முக்காடிட்டபடி நீண்ட வரிசையில் நிற்கிறாளே
அவளுடைய குழந்தை
நான் யாருடைய வார்த்தை தெரியுமா
உச்சிக்கொம்பு முறியும் போது
முதலில் எதை நினைத்து
என்ன சொல்லிக் கத்தினேனோ
அதனுடைய வார்த்தை
நான் யாருடைய பாவம் தெரியுமா
நூறு சவுக்கடி கொடுத்து
ஒரேயொரு சொட்டு தண்ணீரை கொடுத்தானே
அவனுடைய பாவம்
நான் யாருடைய உடல் தெரியுமா
நீள சவக்கிடங்கில் கிடந்தவனை
முற்றிலும் மூடியபிறகும் ஓடிவிடுவானோ
என சந்தேகித்து சமாதியிலே
பெரிய கல்லைத் தூக்கி வைத்தானே
அவனுடைய உடல்.
*
நிறைய ஆசைப்படக் கூடியவனாக
புதைநிலையை விரும்பக் கூடியவனாக
முகத்தை மூடியபடியே
அவ்வளவு பெரிய ஏகாந்தத்திலிருந்து
அம்மாவின் கைகளில் விழுந்தபோது
அவள் என்னைக் கட்டியணைத்தாள்
சிவந்த என் கன்னங்களைக் கிள்ளி உயிர் சோதித்தாள்
எனக்கான எந்தக் கனவுகளையும் அவள் காணக்கூடாது
அதை நானும் விரும்பமாட்டேன் என்பதை
தெரிவித்த போதே வேகவேகமாக கீழிறக்கி
ஓங்கி உதையொன்று வைத்தாள்
நெடுநெடுவென வயது இருபத்தியேழாகிவிட்டது .
01
எனக்குச் சேவகம் செய்யவே
அப்பா படைக்கப்பட்டவரானார்
அப்போதெல்லாம் அம்மாக்கு அடிவிழும்
நீங்கள் என்ன நினைத்தாலும் அதுதான் உண்மை
அவர் என் குண்டு கன்னங்களை
கிள்ளியதாக நினைவில்லை
ஆனால் எல்லோரும் சொல்வார்கள்
“வெகு சிறுவயதில் நீ அவர்
மடியைவிட்டு இறங்கவே மாட்டாய்”
நம்பிக்கையற்றவனாக அவரைப் பார்ப்பேன்
அவரது காலில் எஸ் வடிவில் ஆழமான தழும்பிருக்கும்
“இது உன்னால்தான் மகனே ” என்றார்
எனக்குள் அத்தனை பெரிய விசும்பல்
அவ்விடத்தில் அழுதுவிடக் கூடாதென்று ஓடினேன்
நன்கு நினைவிருக்கிறது
அன்றைக்கு மட்டும் அந்த வீதியில்
பதிமூன்று எஸ் வளைவுகள்.
02
நல்ல மழைப்பொழுதொன்றில்
இடுப்பிலிருந்த என்னை
அம்மா கீழிறக்கினாள்
நான் அழவில்லை நடந்தேன்
கூடவே அவளும்,
அவளுடைய கம்பு பையும்
நான் நடப்பதை விரும்பக் கூடியவளாக இருந்தாள்
அதைவிட என்னோடு நடப்பதை
நாங்கள் ஒரு மலையை அடைந்தோம்
அதான் உச்சிக்கு ஏறினோம்
எனக்காக அதன் உயரத்தைக் குறைத்தாள்
நான் பொருட்படுத்தாத போதும்
தொடந்து என்னை இலகுவாக்கினாள்
வெகு சமீபத்தில் கூட
அவளது எண்பத்து மூன்று வயதை
ஐந்தால் வகுத்து
மூன்றால் பெருக்கிக் கொடுத்தாள்.
03
அடிக்கடி யாராவது இறந்துவிடுவது
நல்ல வேடிக்கைதான்
அம்மாவுக்குத் தெரிந்த டிவியில்
கண்ணீர் நாயகிகள் தோன்றுவார்கள்
அவள்கள் அம்மாவுக்கும் சேர்த்து அழுவார்கள்
அத்தனை நயம்பட அழுகிற கண்களை ஆராதிப்பாள்
எப்போதும் எரிகிற
காமாட்சி விளக்கொன்று வீட்டிலிருக்கும்
அதற்கு எப்போது எண்ணெய் ஊற்றுவாள்
என்பது யாருக்கும் தெரியாது
அது நீரைப் பிடித்த அல்லித்தண்டு வெடிக்காத
மொட்டைப் பிரகாசிப்பது மாதிரியே எப்போதும் எரியும்.
04
என்னை எல்லோரும் பைத்தியம் என்று
சொன்னபோது அம்மா அத்தனை
அக்கறையற்ற பார்வையைக் கொடுத்தாள்
சொல்லப்போனால் அது அவளுக்கு
அலுத்துப்போயிருக்க வேண்டும்
நான் முட்டாள்தனமாக அழும்போதெல்லாம்
கேசரி செய்வாள்
அதற்கான இரண்டு நிறங்களை
எப்போதும் மாற்றியதேயில்லை
ஒரு பைத்தியத்தை நிறத்தால்
குணப்படுத்த முயலுபவளாக இருந்தாள்
சாமனியமற்ற இரவில்
ஏதேதோ பெயர் சொல்லி அழுதபோது
நிறமற்ற கேசரி சமைத்துத் தந்தாள்
உண்மையிலே எனக்கு அப்போதுதான்
பைத்தியம் பிடிக்கத் தொடங்கியது.
ச. துரையின் நூல்கள்:
மத்தி – சால்ட் வெளியீடு
சங்காயம் – எதிர் வெளியீடு