முதுமரபின் பெரும்பாணன்

முதுமரபின் பெரும்பாணன்

மரபும் நவீனமும் சேரும் கழிமுகத்தின் நீர்ச்சுழியில் பண்ணெடுத்து மீட்டிய முதுமரபின் பெரும்பாணன் சு. வில்வரத்தினம். தமிழின் பழஞ்சுரங்கத்திலிருந்து மொழி ஆபரணங்களை நவீன வாழ்வின் ஆன்மீகமென அணிவித்தவர்.

மரபான ஆன்மீகமும் அதிலிருந்து உதிரும் உள்வெளி மீதான கவனமும் மு. தளையசிங்கத்தின் மாணவனாகிய சு. வில்வரத்தினத்துக்குள் சுடர்கிறது. நவீன தமிழின் ஆன்மீகமான கவிதையுலகில் சு. வில்வரத்தினம் கவிதைகள் மகத்தான முன்னசைவுகளை உண்டாக்கியவை. குறியீடுகளாலும் படிமங்களாலாலுமாகிய ஆன்மீக நிலவெளி சு.வியினுடையது. ஈழநிலத்தின் புறக்காட்சிகளும் அகத்தீவிரங்களும் சு.வியின் கவியுலகில் பெரும்பாறையில் ஓவியங்களெனத் தீட்டப்பட்டிருக்கின்றன.

தமிழ்க்குடியின் குலப்பாடக நீள்மரபின் பெருந்தாளம் நிகழ்ந்த அரிதான பாணன் சு.வி. அவரது அரசியலும் அன்றாட வாழ்வும் ஆன்மீகமும் சேரும் கழிமுகம் தன் உள்ளோடும் லயத்தாலும் சுருதியாலும் மொழியைத் தீநடனமென ஆட்டுகின்றன. தாளில் தீநெளிவென அவரின் கவிச்சொற்கள் தோன்றுவது அதனாற்தான்.

*

(சு. வில்வரத்தினம்)

*

நீள நடக்கின்றேன்!
நீள நடக்கின்றேன்!
கீற்றுநிலா பொன்விளக்கேற்றிய பொழுதில்,
கிளர்வுற எங்கள் தெருக்களின் மீதில்,
காதல் உலா வந்த காலமதில்,
நீள நடக்கின்றேன்.

தேரசைகின்றது போலே
இளந்தென்றல் நடக்கையிலே,
இதயக் கூடல் நரம்புகளில்
தேன்பிழி யாழினை மீட்டியதார்
தேறல் பருகி நின்றேன்;
அடடா! தித்திப்பின் சுகமென்ன சொல்வேன்;

இளங்கீற்று நிலா
பொன்விளக்கேற்றிய பொழுதில்
நீள நடக்கின்றேன்.

மெல்லிது மெல்லிது காதல்!
இசைவுற மீட்டிவிட்டால்
இன்பக் கூடல்!
கூடல் வெளியினிலே,
நிமிர்ந்த பனைகளின் கூந்தலிலே,
காற்றின் விரல்கள் கோதும்
கனவுகள் குருத்தீனும்;

இளங்கீற்று நிலா
பொன்விளக்கேற்றிய பொழுதில்
நீள நடக்கின்றேன்.

முன்னாளின் நினைவுகள் கிளர,
மண்ணில் காதல் உலா வந்த காலமதில்,
நீள நடக்கின்றேன்.

(இசைப்பா)

(முதுபாணனின் குரலும் பாடலும் தோற்றமும்)

*

கூத்து

வெளிவாசல்
முன்அமர்வு

யாசித்திருந்த அழகின்
திரள்வெனப்
பூரித்த நிலா
தூரத்துக் கனிப்பொருள்
கண்முன்னே
விரைந்து
வெள்ளித் தட்டொன்றில்
ஏந்துகிறேன்

ஒளிக்கனி!
தனித்து உணல் தகுமா?
பிறை நறுக்குகளாய்
பிறர்க்கும் ஈகிறேன்.

ஒளிநறுக்குண்டவர்
உயிர் முறுக்கேறப்
பித்தாகி, பிறை சூடிகளாகி
சித்தம்பலத்துச் சிவநடத்தை
இங்காட
அட என்னாயிற்று?

உடல் பொன்னாயிற்று!
உயிர் மின்னாயிற்று!
வெளியெலாம் மின்அலை விசிறிட
ஒளிநடம்! ஒளிநடம்!
அடிமுடியற்றதன் ஆடரங்காகப்
புவிதலம்.

ஆடி முடிகையில்
ஒவ்வொருவர் காலடிக்கீழும்
காண்கிறேன்
அவரவர் வேரறுந்த
பிணங்கள்.

*

மெய்த்தலம்

மூண்டெழுகிறது நெருப்பு
முடுகி முடுகி எரிகின்றது
ஒருபொறிதான் உள்விழுந்தது
உலகே பற்றி எரிவதென
ஓங்கி எரிகின்றது

கீழிருந்து மேலெழுகிற சோதி
ஆளுகின்றதா? எனது
போக்கும் வரவும்
புணர்வுமெரிகின்றதா?
சிற்றறிவாளும் நினைவுகளை
சீண்டியழித்துச் செயலை முடுக்கி
தூண்டும் சுடரொளியான
சுதந்திரப் பிழம்பாய்
மூண்டெழுகிறது
நெருப்பு

மேலே மேலே இன்னும் மேலே
வாலின் நுனியை ஊன்றியெழுந்து
வளர்பிறை நிலவைக் குறிவைத்து
தூவெளி வானில் சோதி சுடர்த்தி
நீலநிறத்துச் சுவாலையை வீசி
சீறியெழுகின்ற அரவென நெளிதரு
நடனம் நடனம் தீயளி நடனம்!
நர்த்தனமாடும் அக்கினி வீச்சம்

அக்கினியாளே அக்கினியாளே
நர்த்தனமாடிடும் அக்கினியாளே
சிற்பரமென மெய்த்திரள் நிலவை
சுடர் நா நீட்டி கொத்திய கொத்தில்
பொத்தல் விழுந்து பொழியுது பொழியுது
முட்டி நிரம்பிய மூவா அமிழ்தம்
மெய்த்தவமாகி மிளிருது உலகம்.

*

நெற்றிமண்

அம்மா
விழாக்காலங்களிலும்
விரத நாட்களிலும்
கோயில்களில்
அடியழித்துத் தொழுவது
ஓர் அழகு.

கோயில் வீதிகளைச் சுற்றிசுற்றி
நெற்றிப்பிறை மண்ணில்
ஒற்றிடத் தொழுது எழுவாள்
மண்துகள்கள்
மின்னும்
புடமிட்ட பொன்னாக
பூமிப்பிறையாக.

என் அம்மை
ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே
வழிவழி நினதடி தொழுதவர்
உழுதவர் விதைத்தவர்
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே
உனக்கு பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு…

*

தியானம்

உலகமே
இருளினுள் மூழ்கித் துயிலும்
ஒரு கரீய பெரீய முட்டையாய்.

உறங்காது
நானோ
உள்விழித்திருப்பேன்.

உள்திரளும் பரிதிக் குஞ்சின்
உதயம் தியானித்து.

*

குறி

குறிதப்பியதுன் அம்பென்றாய்
கோணிப்போனது யாரின் கை?
கோணிப்போனதுன் கையென்றால்
குவிய மறுத்த உன் மனதைத்தை.

*

கோடை

ஒரு கோடை நடுப்பகல்.
நடுப் பகலின்
வெக்கையின் தாக்கம்
விளைவிக்கும் வெறுமை.

எங்கோ இருந்தொரு காக்கை
வெறுமைக்குக் குரல் கொடுக்கும்.
கோடை உமிழும் குரல்.

எரிச்சல் பற்றி வர
எழுந்து போய்
காக்கையைக் கலைந்தால்
கலைகிறதா வெறுமை?

சுருதியறுந்த தந்தியின்
அதிர்வாய் அதே
வெறுமையின் மீட்டல்.

வலம்வந்தொருகால் மீண்டும்
கொல்லை அமர்ந்ததுகாக்கை.
மீட்டும் குரல் மாறிலது
அதே வெறுமை எடுத்தகுரல்.

வெளியில்
காற்றின் விழுக்காடு
சோர்ந்து வழிகின்ற தென்னைகள்,
வெறிச் சோடிப் போன தெரு.
கானல் அரவுகள் நெளிதரும்வயல் வெளி
மேய்தலிலாது வெறுமையை இரைமீட்டபடி
காய்தலுறும் மாடுகள்.

இவற்றுக் கெல்லாம் ஒட்டுமொத்தமாக
குத்தகை எடுத்ததாய் ஓர் குரலில்
கோடை வறுக்கிறது காக்கை.

கானல் திரைவெளியில் வெறுமை
நிழல் விழுத்தி உலர
கண்கள் வெயில்கிறது.
மூடி விழித்தால் கானலின் ஒவியம்
கூடவே காக்கையின் குரலின்
பின்னணி ராகம்.

கல்லெறிந்து மீண்டும் அதைக்
கலைப் போமெனின் சாய்மனையோடு
மல்லுக்கட்டி மாழுகிறது மனம்.

சொல்லெறிந்து மீண்டும் காக்கை
சுற்றிச் சுற்றி எதையோ குத்திக் காட்டுவதாய்
முற்றும் இலையுதிர்ந்த வொரு
முள் முருக்கில் உலர் குரலில்….

சீ சனியன், நரகம்.

நிச்சயமாக நான் வெறுக்கிறேன்.
இந்தக் கோடையை
வெறுமை தின்னும் கோடை நடுப்பகலை.
குரல் கறுத்த காக்கையை.

நிச்சயமாக என்னையும்
நான் சாய்ந்து கிடக்கும் சாய்வு நாற்காலியையுங்கூடவே.

*

வீழ்ச்சி

என்னுள் எழுந்து
பிளிறிற்று யானை

மதம் வழிய முகம் பிய்ந்து
தும்பிக்கையால் விகாரமாய்
பீறிற்று காமம்.

மூச்சிறைக்க மதநீர் நுரைத்திழிய
மோப்பம் பிடித்தலைந்தேன்
தும்பிக்கை நீட்டி.

வேலி மீறினேன்
கீறிய முட்கள்.
தடித்த காமத் தோலில்
தைக்குமா என்ன?

வேகநடை.
வேலியினுள் விதைத்திருக்க
பண்பாட்டுப் பயிர்கள்
காலடியில் துவம்சமாச்சு.

குலைபோட்டிருந்த தெங்கின் இளநீர்மை
வளைத் தெடுத்துத் தழுவ
வழிந்த மதநீர்
வடிகால் தேடிக் கலந்தது.

தின வடங்கிற்றா?

தும்பிக்கை உட்சுருள
பூசி மெழுகிப் பண்பாடு காத்த
உருத்திராட்சப் பூனையாய் மெல்லப்
பதுங்கிப் பதுங்கி
வேலி ஓரமாய் ஓசைகாத்து
வீடு சேர்ந்து படுக்கையில் வீழவும்
கீறியது மீண்டும் முட்களா?

மனையாளின் கூரிய விழிகள்
குத்திக் குதறின.
மனச் சாட்சியை ஊடுருவி.

அவள் முகத்தில்
வெடித்துச் சிதறின முன்னைநாள் ஒருத்தி
உடைத்த சிலம்பின் உக்கிர மணிகள்.

படைவீடிருந்த சிம்மாசனம்
குடைசாய
குப்புற வீழ்ந்தேன்
கூடவே குரல் ஒன்று
அதிர்கிறது.
“யானோ அரசன்? யானே கள்வன்.”

*

புள்வாய்த் தூது!

இம்முறை
பெருங்குடமுழுக்குக் காட்டுவது போல கொட்டிற்று வானம்
புலம் பெயர்ந்து வந்த பறவைகள்
நிரம்பி வழிந்த நீர்த்துறையெங்கும்
முங்கிக் குளித்தன; முத்தெடுத்துதறின
கூரலகால் பிறகெடுத்துக் கோப்பன போல்வன.

எடுத்தூதிய வெண்சங்கென எழுகின்ற கொக்குகள்
அசை நடை நாரைகள்,
கன்னங்கரேலென நீர்க்காகங்கள் என
வண்ணம் பலப்பல-
இயற்கையெடுத்த விழாக் கோலம் போல.

இனிய பறவைகாள்
உங்களைப் போலவே வண்ணம் பலவுடைய மக்களின்
விழாக் கோல வாழ்விருந்த கிராமம்தான் இதுவும்.
எதற்கோ வியூகம் வகுத்தவர்க்கஞ்சியவர்
வேரற விட்டுப் போய் நாளாயிற்று.

நவராத்திரியின் கும்பச்சரிவோடு போனவர்கள்தான்
மீளக் கொலுவேறவில்லை
கொலுவிருந்த வாழ்வு குலைந்து போய்க் கிடக்கிறது.
கூடி வாழ்தல் என்பது அழகிய கொலுநேர்த்தியல்லவா?
எத்தனை நவராத்திரிகள் வந்தேகின.
கும்பப் பொலிவும், கூட்டுக்களியும், விழாக் கோலமும்தான்
இல்லையாயிற்று.

மார்கழி எம்பாவை வந்தாள்
மழைக்கண் திறந்து பொழிந்தவாறே.
வந்தவளை பட்டுக் குடையெடுத்து வரவேற்று
“ஏலோரெம்பாவாய்”என ஊர்கோலமாய்ப் போகவும்
ஆளணியற்ற தவக்குறைவு எமக்காச்சு.
பாவம் எம் பாவை போயினாள்
பண்ணிழந்த தெருவழியே.

மாரி வந்ததென்ன?
ஏரழகின்றிக் கிடந்தன வயல்கள்
தை மகள் வந்தாள்.
கைநிரம்ப வெறுமையுடன் கந்தலுடை பூண்டிருந்தது கிராமம்.
பொங்கல், படையலென பூரிப்பின் ஓரவிழும்
உண்டிலள் போனாள் ஒளியிழந்த முகத்தினளாய்.

“ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை”
வெண்தாடிப் புலவனது பாட்டோசை
“கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே”
என் செயலாம்
கூழை நினைத்தானே வாயூறத்தான் செய்கிறது.
ஊதிக் குடிக்க உதடும் குவிகிறது.
ஒடியலுக்கும் ஏது குறை?
போனவரியத்தானும் கிடந்துளுத்துக் கொட்டுது.
கூடிக்கலந்துண்ணச் சாதிசனம்?
இந்த ஆடிப் பிறப்பிற்கும் விடுதலை ஆனந்தம் இல்லையாச்சு.

விழாக்காலத் தேதி விவரங்களே
மறந்து போய்க் கிடக்கும் கிராமமிதில்
ஓசை, ஒலியெலாமாகி நிறைந்த பறவைகாள்
உங்கள் உயிர்த்துடிப்புகள் இனியவை.

வயல்வெளி நடப்புகள், சிறகடிப்புகள்,
வெளிநிரம்பிடும் சங்கீதம், யாவுமே
இனியவை என்பேன் எனினும்
சிறு துயரம்
நீராம்பலெனத் தலைநீட்டும்.

மாரிகழிய மறுபடியும் வருகின்ற
கோடை வறள்வில் இக் குதூகலங்கள்
சிறகை மடக்கி விடைபெறுதல் கூடும் அல்லவோ,
நினைகையில் சிறுதுயர் எழும்
எனினும் உமை நோகேன்
அற்ற குளத்து அறுநீர்ப்பறவையென
கேலியாடும் எண்ணம் சிறிதுமிலை.
நானறிவேன்
தாயக மீள்வில் இருக்கும் தனிச்சுகம்.

பெரு வெளியில் தலைநீட்டும்
உயர்மரக் கொம்பரில்தானே உங்கள் கூடுகள் உள்ளன.
அறிவேன்
குஞ்சு பொரித்தலும், குதலைகட்கு உவந்து
ஊட்டலும், காத்தலும், இங்காகலாம்
சிறகு முளைத்தவற்றை
கூட்டிச்செல்வதாய குதூகல நிகழ்வெலாம்
தாயக வெளிநோக்கியல்லவோ
நானறிவேன்

நீரறிவீரோ
என் நெஞ்சிலும்
கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு
கூடிழந்து போனவரின்
நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு
நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்
கோடைவழிப் போக்கில்
குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை
எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?
சற்றெமக்கு இரங்குங்கள்
நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை
முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்.

“கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவிக்”
கதியிற் கலங்கிய புலவரென கைவிடப்பட்ட முதியவர்
கிழித்துப் போட்ட ஒடியல் கிழங்கென
வாடிச் சுருங்கி மனம் மெலிந்து
கடைசி ஒரு சொல்லாடலில் விடைபெறக்
காத்திருப்பதை சொல்லுங்கள்.

மாண்டோரும் மற்றும் தென்புலத்தோரும்
தாழ்வாரத் தவமியற்றிக் காத்திருந்தும்
திவசச் சோறுமின்றி, பரிந்துவக்கும் படையலுமின்றி
வெற்றுப் பாத்திரராய் மீளுவதைச் சொல்லுங்கள்

காலப்புற்றெழுந்து படர்ந்தாலும்
உட்கனலவியாத் தவ முனிவரென
ஒளியேற்றக் காத்திருக்கின்றன வீடுகள் ஒவ்வொன்றுமென
உரக்கவே அழுத்துங்கள்.

வேறென்ன விளம்ப இருக்கிறது
நீங்கள் மீளுகையில்
விட்டு விட்டுச் செல்லுகின்ற ஆனந்த வித்துகள்
முளை கொள்ளும் நாள்வரையும்
நாங்கள் இருப்போமா
நன்னிலத்தின் காவலராம்
எங்களுடைச் சந்ததிக்கேனும் இதன்
வேரடியில் வாழ்வு சிலிர்க்கட்டும்.

*

சு. வில்வரத்தினத்தின் நூல்கள்:

அகங்களும் முகங்களும் – அலை வெளியீடு

காற்றுவழிக்கிராமம் – ஆகவே பதிப்பகம்

காலத்துயர் –  வி. ஜே. பதிப்பகம்

நெற்றிமண் – விடியல் பதிப்பகம்

உயிர்த்தெழும் காலத்துக்காக – விடியல் பதிப்பகம்

நூலக இணைப்பு:

https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81.&uselang=en

TAGS
Share This